2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

தலைமறைவான சந்தேகநபர் கைது

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன சாளம்பன் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை கொடூரமாக தாக்கிவிட்டு தலைமறைவான நபரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (03) வியாழக்கிழமை ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று பொலிஸாரிடம் வலியுறுத்தியிருந்தார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொன்றில் பணியாற்றும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு அடுத்து, பெண்ணொருவரின் கணவர், மற்றைய பெண்ணை வீதியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இந் நிலையில் இவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, குறித்த பெண்ணைத் தாக்கிய நபர் தலைமறைவாகி இருந்தார்.

இத்தகைய சூழலில் குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கிய நபரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பெண்ணை தாக்கிய நபரைக் கைது செய்ய வலியுறுத்தி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்குமுன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பெண்ணை கொடூரமாகத் தாக்கிய குறித்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டுமென பொலிஸாரிடம் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய 24 மணி நேரத்திற்குள் குறித்த நபர் கைது செய்யப்படுவார் என ஒட்டுசுட்டான் பொலிஸார் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடமும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் உத்தரவாதம் அளித்திருந்தனர்.

அந்த வகையில் குறித்த நபர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களை தொடர்பு கொண்டு தெரிவித்திருந்தமை யும் குறிப்பிடத்தக்கது.

விஜயரத்தினம் சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X