Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ச. விமல்
இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடரை இந்திய அணி 5-1 என்ற ரீதியில் தென்னாபிரிக்காவில் வைத்துக் கைப்பற்றியதன் மூலம் தாங்கள் பலமான முதலிட அணிதான் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது.
இத்தொடர் ஆரம்பிக்கும்போது தென்னாபிரிக்க அணி தரப்படுத்தல்களில் முதலிடத்திலும் இந்திய அணி தரப்படுத்தலில் இரண்டாமிடத்திலும் காணப்பட்டன. முதலிரு அணிகளுக்கிடையிலான கடுமையான போட்டி நிகழும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மறுபக்கமாக மாறிப்போனது. இந்தியா அணியின் தொடராக மாறிப் போனது. அண்மைக் காலங்களில் இந்தியாவில் வைத்துக் கூட இந்தியா அணி இந்தளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை.
தென்னாபிரிக்காவில் வைத்து முதற் தடவையாக இந்தியா அணி தொடரை வென்றது. 1992ஆம் ஆண்டு முதற் தடவையாக இந்தியா அணி தென்னாபிரிக்காவுக்குச் சென்றது. இரண்டு அணிகளுக்குமிடையிலான தொடர், தென்னாபிரிக்காவில் 1992ஆம் ஆண்டு ஆரம்பித்து நிறைவடைந்த தொடருடன் இரண்டு அணிகளும் மோதிய தொடர்கள் ஐந்து தென்னாபிரிக்காவில் நடைபெற்றுள்ளன. இவற்றுள் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரே இறுக்கமான தொடராக அமைந்தது. தென்னாபிரிக்கா அணி 3-2 என வெற்றி பெற்றது.
இறுதியாக, 2013 ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற மூன்று போட்டிகளடங்கிய தொடரை 2-0 என தென்னாபிரிக்க அணி வென்றது. இந்நிலையில், இம்முறை விராத் கோலியின் தலைமையில் அவரின் சாதனைமிகு ஓட்டங்களுடன் இந்தியா அணி தென்னாபிரிக்கா அணியை அவர்கள் நாட்டில் வைத்து வீழ்த்தி 2018ஆம் ஆண்டை முதற் தர ஒரு நாள் சர்வதேசப் போட்டி அணியாக ஆரம்பித்துள்ளது.
தென்னாபிரிக்க அணியின் மாற்றங்கள் அவர்களுக்கு பின்னடைவை வழங்கியுள்ளன. ஆனாலும் இந்தளவுக்கு மோசமாக தோல்விகளை சந்திக்குமளவுக்கு அந்த மாற்றங்கள் அமைந்தனவா அல்லது இந்தியா அணியின் அசாத்திய திறமையா என்பது கேள்வியாகவே உள்ளது.
தென்னாபிரிக்க அணி முழுமையான அணியாக விளையாடியிருந்தால் இந்திய அணி இந்த வெற்றிகளைப் பெற்றுத் தொடரை கைப்பற்றியிருக்குமா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. எனவே எதிர்வுகூறல்கள் அல்லது கணிப்புகளைத் தாண்டி போட்டிகளின் முடிவுகளே இங்கே முக்கியமானவை. அதை இந்திய அணி வெற்றியாக மாற்றியுள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு என்ன காரணம் தென்னாபிரிக்கா அணியின் தோல்விக்கு என்ன காரணம். இதுவே இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
இந்திய அணியின் வழமையான பலமான அவர்களின் துடுப்பாட்ட பலம் இநத்தொடரில் கை கொடுத்துள்ளது. குறிப்பாக விராத் கோலியின் மிக அபாரமான போர்ம் இத்தொடரின் வெற்றிக்கு மிகப்பெரியளவில் கை கொடுத்துள்ளது. அதன் காரணமாகவே பலமான தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சை எதிர் கொண்டு இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
கோலி அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினார். மற்றைய போட்டிகளில் ஷீகர் தவான், ரோகித் ஷர்மா சதங்களைப் பெற்றனர். எனவே முதல் மூன்று வீரர்களும் இந்திய அணிக்கான ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து விட்டனர். ஆனால், இத்தொடரில் இந்திய அணியின் மத்திய வரிசை பெரியளவில் சாதிக்கவில்லை. நான்காமிடத்துக்கான தேடலில் அஜின்கையா ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் சரியாக வாய்ப்பை பாவிக்கவில்லை. ஆனால் முதற் போட்டியில் பெற்றுக்கொண்ட 79 ஓட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்ட 34 ஓட்டங்கள் என்பன இவருக்கு கை கொடுக்கும் என நம்பலாம். இந்தியா அணியின் மத்திய வரிசை கவனமெடுக்கப்படவேண்டும். இத்தொடர் ஆரம்பிக்க முன்னர் நான்காமிடத்துக்கான வீரர் ஒருவர் நிரந்தரமாக தெரிவு செய்யப்படுவார் என தெரிவுக்குழுவின் தலைவர் கூறியிருந்தார்.
தென்னாபிரிக்கா அணியின் பலவீனமாகவும் இந்தியா அணியின் பலமாகவும் அமைந்தது சுழற்பந்துவீச்சு. வேகப்பந்துவீச்சுக்கு சாதகத் தன்மையை அதிகமாக வழங்கும் தென்னாபிரிக்கா போன்ற ஆடுகளங்களில் யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் எவ்வாறு பந்து வீசப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. இவர்கள் இந்திய, இந்திய உப கண்ட ஆடுகளங்களிலேயே அதிகம் பந்துவீசியுள்ளார்கள். எனவே இவர்கள் சிறப்பாக பந்துவீசினால்தான் இவர்கள் அணியில் நம்பிக்கையாகத் தொடர முடியும்.
அதேவேளை இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா ஆகியோரை வெளியேற்றி அணிக்குள் இடம்பிடித்தவர்கள். இத்தொடர் மூலமாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக மாறிவிட்டார்கள். அஷ்வின், ஜடேஜாவை நீக்கி இவர்களை அணியில் சேர்த்தமை சரியான முடிவு என்பதையும் அவர்கள் நிரூபித்து விட்டார்கள். இவர்கள் இருவரும் 33 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்கள். தொடரில் கூடுதல் விக்கெட்களை கைப்பற்றிய முதல் இருவரும் இவர்களே.
இந்த ஜோடியின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறிப்போனார்கள். தென்னாபிரிக்க அணியின் உபாதைகளும் அவர்களுக்கு பின்னடைவை வழங்கியுள்ளன. குறிப்பாக அணியின் தலைவர் பப் டு பிளெஸிஸ் இல்லாமல் போனது அவர்களுக்கு பின்னடைவே. அதன்பின்னர் அவர்களின் முக்கிய ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளின் வீரரான குயின்டன் டி கொக் உபாதையடைந்தமையும் பின்னடைவே. ஆனாலும் ஹஷிம் அம்லா, ஏ.பி டி வில்லியர்ஸ் போன்ற அனுபவம் வாய்ந்த நல்ல துடுப்பாட்ட வீரர்களாலும் எதுவும் செய்ய முடியாமல் போனமையும் கூட தென்னாபிரிக்க அணிக்கு பின்னடைவை வழங்கியுள்ளன.
சரி துடுப்பாட்டம் பலமிழந்து போனாலும் தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சு மிகவும் பலமானது. அவர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று பார்த்தல் அதுவும் நடக்கவில்லை. இந்தியா அணியின் துடுப்பாட்ட வீரர்களை அவ்வளவாக அவர்கள் அச்சுறுத்தவில்லை. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தில் காணப்படும் இம்ரான் தாகீர் கூட இந்தியா அணியின் துடுப்பாட்ட வீரர்களால் பதம் பார்க்கப்பட்டார்.
ஒட்டுமொத்தத்தில் இத்தொடரில் தென்னாபிரிக்க அணி மிகவும் குழம்பிப் போனது. அணியின் சமநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இநிலையில் இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்த எய்டன் மார்க்ரமை தலைவராக நியமித்து அவரையும் தடுமாற வைத்து விட்டார்கள். அவரின் துடுப்பாட்டம் சரியாக அமையவில்லை. தென்னாபிரிக்க அணி இந்த அடியிலிருந்து மீளுமா? வீரர்களின் தெரிவுகள் சரியாக அமையுமா என பல கேள்விகள் ஆரம்பமாகியுள்ளன. அடுத்து அவுஸ்திரேலியா அணியுடன் விளையாடவுள்ள தொடர் பல கேள்விகளுக்கு பதில்களை வழங்கும் என நம்பலாம்.
விராத் கோலி
இத்தொடரில் மூன்று சதங்கள் அடங்கலாக 558 ஓட்டங்களை பெற்று இரண்டு அணிகள் மட்டும் விளையாடும் தொடரில் பெறப்பட்ட கூடுதலான ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார். இத்தொடர் அவர் பற்றி இன்னமும் அதிகம் பேச வைத்துள்ளது. தென்னாபிரிக்காவில் வைத்து இந்த அடியா என ஆச்சரியப்பட வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் அவரைப் பார்த்து எதிரணிகள் பயப்படக்கூடிய நிலை ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வாண்டு இவருக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது. சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது கிடைத்தது. 2018ஆம் ஆண்டு ஆரம்பமே அதிரடியாக அமைந்துள்ளது. இந்தாண்டில் இன்னமும் எத்தனை சாதனைகள் முறியடிக்கப்படப்போகிறதோ என்ற நிலையையும் உருவாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் சர்வதேசப் போட்டி தரப்படுத்தல்களில் 909 புள்ளிகளை பெற்று, ஒரு நாள் சர்வதேசப் போட்டி வரலாற்றின் ஏழாவது தரப்படுத்தல் இடத்தை பெற்றுள்ளார்.
இரு அணிகளுக்கான தொடரில் பெறப்பட்ட கூடுதல் ஓட்ட எண்ணிக்கை
விராத் கோலி 6 558 தென்னாபிரிக்கா (தென்னாபிரிக்காவில் 2017/18)
ரோகித் ஷர்மா 6 491 அவுஸ்திரேலியா (இந்தியாவில் 2013/14)
ஜோர்ஜ் பெய்லி 6 478 இந்தியா (இந்தியாவில் 2013/14)
ஹமில்டன் மசகட்ஸா 5 467 கென்யா (சிம்பாவேயில் 2009/10)
க்றிஸ் கெய்ல் 7 455 இந்தியா (இந்தியாவில் 2002/03)
தொடரில் 100 ஓட்டங்களைத் தாண்டியவர்கள்
விராத் கோலி 6 6 3 558 160* 186.00 99.46 3 1
ஷீகர் தவான் 6 6 1 323 109 64.60 104.19 1 2
ரோகித் ஷர்மா 6 6 0 170 115 28.33 82.92 1 0
ஹஷிம் அம்லா 6 6 0 154 71 25.66 76.23 0 1
அஜின்கியா ரஹானே 6 5 1 140 79 35.00 76.92 0 1
ஏய்டன் மார்க்ராம் 6 6 0 127 32 21.16 79.87 0 0
பப் டு பிளெஸிஸ் 1 1 0 120 120 120.00 107.14 1 0
ஹென்றிச் கிளாஸன் 4 4 1 110 43* 36.66 90.90 0 0
டேவிட் மில்லர் 5 5 0 107 39 21.40 81.06 0 0
(போட்டி, இன்னிங்ஸ், ஆட்டமிழக்காமை, மொத்த ஓட்டங்கள், கூடுதல் ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதம், அரைச்சதம்)
தொடரில் கூடுதல் விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்கள்.
குல்தீப் யாதவ் 6 6 51.0 1 236 17 4/23 13.88 4.62
யுஸ்வேந்திர சஹால் 6 6 52.1 1 262 16 5/22 16.37 5.02
ஜஸ்பிரிட் பும்ரா 6 6 42.0 2 167 8 2/24 20.87 3.97
லுங்கி என்கிடி 4 4 33.0 2 204 8 4/51 25.50 6.18
கஜிஸ்கோ றபடா 5 5 43.3 1 242 5 2/58 48.40 5.56
ஷர்துல் தாகூர் 1 1 8.5 0 52 4 4/52 13.00 5.88
ஹார்டிக் பாண்டியா 6 6 44.0 0 216 4 2/30 54.00 4.90
அன்டிலி பெக்குலுவாயோ 5 5 32.0 0 183 3 2/42 61.00 5.71
(போட்டி, இன்னிங்ஸ், ஓவர்கள், ஓட்டமற்ற ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓட்ட சராசரி வேகம்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
1 hours ago
25 Apr 2025