Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 15 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ச.விமல்
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேச தொடரை இந்திய அணி 2 - 1 என்ற ரீதியில் கைப்பற்றியது. இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பமும், இந்திய அணிக்கு மோசமான ஆரம்பமாகவும் ஆரம்பித்த தொடர் இந்திய அணிக்கு மிக அபாரமான தொடராகவும், இலங்கை அணிக்கு மிக மோசமான தொடராகவும் மாறிப்போனது.
உலகக்கிண்ண தொடருக்கான முன்னோடித் தொடராக இந்தத் தொடர் அமைந்து இருந்தது. இலங்கை அணி ஆரம்பித்த விதம் மிகப் பெரிய நம்பிக்கையை தந்தது. அவுஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணி அவர்களை வென்று நாடு திரும்பிய பின் ஆரம்பித்த தொடர் இது. இந்திய அணி மிகப் பெரிய பலமான அணியாக திடீர் என ஒரு மாயை ஏற்பட்டது போல இருந்தது. இலங்கை அணி அடித்த அடியில் இந்திய அணியும் இரசிகர்களும் ஆடிப்போனார்கள். இலங்கை அணிக்கெதிராக பெறப்பட்ட குறைந்த ஓட்டங்கள் என்ற பெறுதியை பெற்று மோசமான தோல்வியைச் சந்தித்தது. அறிமுக வீரர்கள், புதிய வீரர்கள் இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். ஆனால் அது தொடரவில்லை. இந்திய அணி அபாரமான மீள் வருகை மூலம் இரண்டாவது போட்டியை வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. துடுப்பாட்டம், பந்துவீச்சு என இந்திய அணி மிக அபாரமாக செயற்பட்டது. இலங்கை அணி பந்துவீச்சில் சரியாக செயற்படவில்லை என்பதுடன் அணித் தெரிவு மற்றும் தினேஷ் சந்திமாலின் பந்துவீச்சு மாற்றங்கள் சரியாக பாவிக்கப்படாமை என்பன காரணமாக கூறலாம்.
முதலிரு போட்டிகளிலும் மோசமாக விளையாடிய தினேஷ் குணதிலக அணியால் நீக்கப்பட்டார். முதற் போட்டியில் மோசமாக விளையாடிய நிரோஷன் டிக்வெல்ல இறுதிப் போட்டியில் இணைக்கப்பட்டார். மிக அபார அறிமுகத்தை மேற்கொண்டு போட்டி நாயகன் விருதைப்பெற்ற கசூன் ரஜித இரண்டாவது போட்டியில் மோசமான பந்துவீச்சு மூலமாக மூன்றாவது போட்டியில் நீக்கப்பட்டார். ஒரு மோசமான பெறுதிக்காக சிறப்பாக விளையாடிய வீரரை உடனடியாக நீக்குவது எந்தளவு சிறந்த விடயம் என்பது கேள்வி. சாமர கப்புகெதர உபாதை காரணமாக அணியால் விலக அசேல குணரட்னவுக்கு அறிமுகம் வழங்கப்பட்டது. டில்ஹார பெர்னாண்டோ அணியில் மீண்டும் வாய்ப்பை பெற்றார். ஒரு தொடரில் இத்தனை மாற்றங்கள். அணி என்பது தொடர்ச்சியாக இருக்க வேண்டும். இலங்கை அணியில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விடயமாக இது இருந்து வருகின்றது. இதுவும் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
இலங்கை அணியின் பந்துவீச்சு முதற் போட்டியில் சீராக அமைந்தது. 6 பந்துவீச்சாளர்கள் சீராக சரியாக பாவிக்கப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப வீரர்கள் அடித்தாட ஆரம்பிக்க இலங்கையின் பந்துவீச்சாளர்களும், தினேஷ் சந்திமாலும் குழம்பி விட்டனர். முதற்போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றிய தசூன் சானக இந்தப் போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். மிலிந்த சிறிவர்த்தன ஒரு ஓவர் மட்டுமே வீசினார். மூன்றாவது போட்டியில் குறைந்த ஓட்டங்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் பந்துவீசிய போது இரண்டாவது போட்டியில் ஹட்ரிக் முறையில் விக்கெட்களை கைப்பற்றி சிறப்பாக பந்துவீசிய திஸர பெரேரா ஒரு ஓவர்தானும் பந்துவீசவில்லை. தசூன் சானக ஒரு ஓவர் கூட வீசவில்லை. இந்தளவுக்கு விடயங்கள் கூறக்கூடிய நிலையில் பந்துவீச்சு மாற்றங்கள் மிக மோசம் என்றும் கூற முடியும். அணியின் துடுப்பாட்ட வரிசை மாற்றங்கள், பந்துவீச்சு மாற்றங்கள் வீரர்களின் தொடர்ச்சியான மாற்றங்கள் நிச்சயம் தோல்விக்கு வழி வகுக்கும் என்பது தெளிவாக காட்டியுள்ளது.
இவற்றை தண்டி மூன்றாவது போட்டியில் நடுவர்களின் தீர்ப்பும் மிக மோசமாக அமைந்தது. இலங்கை அணிக்கு அதுவும் பின்னடைவை தரும். ஆனால் பிழையான முடிவுகளை தந்த ஆட்டமிழப்புகள் பின்னடைவை எந்தளவுக்கு ஏற்படுத்தியிருக்கும் எனக் கூற இயலாது. இரு பக்கமாக எடுத்துக்கொள்ள முடியும்.
இந்திய அணியின் பலம் இரண்டு விதங்களில் நடைபெற்றுள்ளன. துடுப்பாட்டம் இந்திய அணிக்கு பலம். சுழற்பந்து வீச்சு பலம். இவற்றின் மூலமே இந்த தொடரைக்கைப்பற்றியுள்ளது. உலகக் கிண்ண தொடருக்கு முன் ஆயத்தங்களை சரியாக இந்திய அணி செய்துள்ளது எனக் கூற முடியும். துடுப்பாட்டம் பந்துவீச்சு என ஒரு நிரந்த அணியை தயார் செய்துவிட்டது. இந்த தயார்ப்படுத்தல்கள் இலங்கை அணிக்கு இன்னமும் சரியாக அமையவில்லை. ஆசியக்கிண்ண தொடர் அதற்க்கான களமாகவும். லசித் மலிங்க , அஞ்செலோ மத்தியூஸ் ஆகியோரின் மீள் வருகை அணிக்கான முழுமையையும் தரும். ஆனால் ஒரிரு இடங்கள் கேள்வியாக உள்ளன. அவற்றுக்கான வீரர்கள் சரியாக அமைந்துவிட்டால் அணி முழுமை பெற்றுவிடும்.
அவுஸ்திரேலியாவில் வெற்றி பெற்று விட்டோம் என்ற அதீத நம்பிக்கையும், இலங்கை அணியை மிக இலகுவாக எடுத்துக் கொண்டதும் முதற் தோல்விக்கான இன்னுமொரு காரணமாக கூறலாம். பலமான அணியான இந்திய அணியை புதிய அனுபவமற்ற அணியை வைத்துக் கொண்டு வெற்றி பெற்று விட்டோம் என்ற இலங்கை அணியின் அதீத நம்பிக்கை என்பனவற்றை இந்த தொடரில் பார்க்க முடிந்தது. இவையும் போட்டிகளினதும், தொடர்களினதும் முடிவுகளுக்கு காரணமக அமையும்.
தொடரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்
ஷீகர் தவான் 3 3 106 51 53,00 126,19
தினேஷ் சந்திமால் 3 3 74 35 24,66 100,00
சாமர கப்புகெதர 2 2 57 32 28,50 107,54
ரோஹித் சர்மா 3 3 56 43 18,66 109,80
மிலிந்த சிறிவர்த்தன 3 3 53 28 * 53,00 147,22
அஜிங்கையா ரஹானே 3 3 51 25 25,50 104,08
சுரேஷ் ரெய்னா 3 2 50 30 25,00 128,20
(போட்டிகள், இன்னிங்ஸ், மொத்த ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட்)
தொடரில் கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
ஆர். அஷ்வின் 3 3 11,0 35 9 4/8 3,88 3,18 7,3
ஆசிஷ் நெஹ்ரா 3 3 8,0 64 5 2/21 12,80 8,00 9,6
துஸ்மந்த சமீர 3 3 9,5 66 5 2/14 13,20 6,71 11,8
தசூன் ஷானக 3 2 4,0 28 3 3/16 9,33 7,00 8,0
சுரேஷ் ரெய்னா 3 3 6,0 41 3 2/6 13,66 6,83 12,0
திஸர பெரேரா 3 2 6,0 43 3 3/33 14,33 7,16 12,0
ஜஸ்பிரிட் பும்ரா 3 3 10,0 46 3 2/17 15,33 4,60 20,0
ரவீந்தர் ஜடேஜா 3 3 11,0 53 3 2/24 17,66 4,81 22,0
கசூன் ரஜித 2 2 8,0 74 3 3/29 24,66 9,25 16,0
(போட்டிகள், இன்னிங்ஸ், வீசிய ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓட்ட சராசரி வேகம், ஸ்ட்ரைக் ரேட்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
52 minute ago