2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இலங்கை, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மீள்பார்வை

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 14 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு இலங்கை அணி இந்தத் தொடரில் சாதித்துக் காட்டியுள்ளது எனக் கூறிவிடமுடியாது. இறுதிப் போட்டியை சமநிலையில் நிறைவு செய்தமை  மாத்திரமே பேசப்படக்கூடியது. ஆனால் அந்த சமநிலை முடிவு, மழையின் உதவியுடன் பெறப்பட்டது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இலங்கை அணிக்கு ஏற்படட உபாதைகள் நிச்சயம் இலங்கை அணிக்கு பாதிப்பு. ஆனாலும் பந்துவீச்சு அதிக மோசம் எனக் கூறிவிட முடியாது. துடுப்பாட்டமே மிகவும் மோசமாக அமைந்தது. சரியான துடுப்பாட்ட வீரர்களின் தெரிவு இல்லாமை. சரியான இடங்களில் வீரர்களை தெரிவு செய்யாமையும் மிக முக்கியமான காரணமாக இங்கே குறிப்பிடலாம்.

இங்கிலாந்து அணி பலமான அணி. தொடர் முடிவு இவ்வாறு அமையும் என்பதும் எதிர்பார்த்ததே. முதல் இனிங்ஸில் 298 ஓட்டங்களுக்கு  இங்கிலாந்து அணியை ஆட்டமிழக்க செய்தமை, இலங்கை அணி அபாரமாக ஆரம்பித்துள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் இலங்கை அணியின் துடுப்பாட்டம் முழுமையான ஏமாற்றத்தைத் தந்தது. 100 ஓட்டங்களைக் கூடப் பெறமுடியாமல் போனது. இன்னுமொரு  எட்டு ஓட்டங்களைப் பெற்று இருந்தால், தொடர்ச்சியாக இரண்டாவது தடவை துடுப்பாடுவதை தவிர்த்து இருக்கலாம். அது முடிவை அல்லது போட்டியின் போக்கில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இலங்கை அணியின் டெஸ்ட் துடுப்பாட்டத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படட வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் முதற் போட்டியில் ஏமாற்றி விட்டனர். ஏன் இவர் அணியில் என்று கேள்வி எழுப்பப்பட்ட குஷால் மென்டிஸ் அரைச்சதம் அடித்தார். சிறப்பாக பந்துவீசிய தசுன் சானக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி சிறந்த அறிமுகத்தை மேற்கொண்டார். துரதிர்ஷ்டம், இவர் அணியில் தொடரவில்லை.

துஸ்மந்த சமீர உபாதையடைந்து அணியில் இருந்து விலகிய வேளையில் தசுன் சானக  நீக்கப்பட்டார். ஏன்? கேள்விக்கு பதில் அவர் வேகமாக பந்து வீசவில்லை. வேகம் முக்கியமா ? விக்கெட் முக்கியமா? நவீன கிரிக்கெட்டின் நுட்பமா இது? அல்லது இலங்கை அணியின் தோல்விக்கான நுட்பமா என்பது மிகப் பெரிய சந்தேகமே?  தசுன் சானக உண்மையில் துரதிர்ஷ்டமானவர். இந்தியாவில் வைத்து இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார். அடுத்த போட்டியில் இந்தியா அணி வெளுத்து வாங்குகின்றது. இறுதி ஓவரை வீச அழைக்கப்படடார். பின்னர்  மூன்று போட்டிகளில் பந்து வீசவில்லை. பின்னர், டெஸ்ட் போட்டிகளில் நல்ல அறிமுகத்தை மேற்கொண்ட பின்னர் அணியால் நீக்கப்பட்டார்.

டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், குஷால் மென்டிஸ் சிறப்பாக செயற்பட்டுள்ளார் என பாராட்டி, புதிய வீரர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என புகழ்ந்துள்ளார். தொடர் ஆரம்பிக்க முன்னரே குஷால் மென்டிஸ் மூன்றாமிலக்கத்தில் துடுப்பாடுவார் எனவும், அவர் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறுவார் எனவும் கூறியிருந்தார். ஆக இவருக்கு மாத்திரம் தொடர்ச்சியான வாய்ப்புகள். மிலிந்த சிரிவர்தன, தசுன் சானக ஆகியோருக்கு இல்லையா என்ற கேள்வி நிச்சயம் கேக்க வேண்டும். மூன்று போட்டிகளில் 156 ஓட்டங்களை பெற்றமை அவ்வளவு பெரிதாகப் பாரட்டப்பட வேண்டிய விடயமா என்ன?  இந்த விடயங்கள் நிச்சயம் இலங்கை அணியின் தோல்விகளுக்கு ஒரு காரணமாக இருக்க முடியும்.

இந்தத் தொடரின் மூன்று போட்டிகளிலும் மிகப் பெரியளவில் துடுப்பாடத்தில் இங்கிலாந்து அணி அச்சுறுத்தி இருக்கவில்லை. ஆனால் அவர்களின் பந்து வீச்சு மிக அபாரமாக அமைந்தது. இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களுக்கு எந்தப் பந்துகளுக்கு எவ்வாறு துடுப்பாட வேண்டும் என்ற கணிப்பு சரியாக செய்ய முடியாமை பின்னடைவுக்கு மிக முக்கியமான காரணம். முதற் போட்டி நிறைவடைந்ததும் ஓப் திசையில் செல்லும் எல்லா பந்துகளும் துடுப்பாட வேண்டும் என்ற அவசியமிலை என மஹேல ஜெயவர்த்தன கூறியிருந்தார்.

இலங்கை அணி அதிகம் நம்பியிருந்த அஞ்சலோ  மத்தியூஸ் துடுப்பாட்டத்தில் ஏமாற்றி விட்டார். ஒரு போட்டியில் அடித்த 80 ஓட்டங்கள் மட்டுமே. அடுத்த ஐந்து இனிங்ஸில் வெறும் 45 ஓட்டங்கள் மட்டுமே. தினேஷ் சந்திமாலும் அவ்வாறே. ஒரு சதம். மிகுதி நான்கு இனிங்ஸில் 46 ஓட்டங்கள் மட்டுமே. தொடர்ச்சியாக ஓரளவு ஓட்டங்களைப் பெற்றவர் கெஷால் சில்வா மட்டுமே.

இங்கிலாந்து அணி சார்பாக ஜொனி பெயர்ஸ்டோ  387 ஓட்டங்களை 129 என்ற அபார சராசரியில் பெற்றுக் கொண்டார். முதலாவது போட்டியிலும், மூன்றாவது போட்டியிலும் இங்கிலாந்து அணியைக் காப்பாற்றியவர் இவர் என்றே கூறலாம். இவரின் ஓட்டங்களே இங்கிலாந்து அணிக்கு பலம் வழங்கின. மற்றவர்கள் குறைத்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் குறைகூற பெரியளவில் இடம் இல்லை. காரணம் இவ்வளவுதான் இந்த வீரர்களால் முடியும். ஆனால் தசுன் சானகவின் பந்துவீச்சு நல்ல முறையில் அமைந்தும் அவரை அணியால் நீக்கியது. மிலிந்த சிரிவர்தன ஒரு போட்டியில் மாத்திரம் சேர்க்கப்பட்ட நிலையில் மற்றைய போட்டிகளில் விளையாடியிருந்தால் சில வேளைகளில் ரங்கன ஹேரத்துடன் இணைந்து அழுத்தங்களை வழங்கியிருக்க முடியும்.

ஹேரத் 8 விக்கெட்டுகளையும், சிரிவர்தன ஒரு போட்டியில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிலையில் இன்னுமொரு சுழற்பந்து வீச்சாளர் நிச்சசயம் சிறப்பாக செயற்பட்டிருக்க முடியும். அஞ்சலோ மத்தியூஸ்  39 ஓவர்களில் ஒரு  விக்கெட்டினை மாத்திரமே கைப்பற்றியிருந்தார். இன்னும் கொஞ்ச ஓவர்களை வீசியிருக்கலாம்.

இலங்கை அணியின் அனுபவமின்மை இங்கே தெளிவாக தென்படுகின்றது. வீரர்களையும், அணியையும் பற்றி அதிகம் பேசும் நாங்கள் பயிற்றுவிப்பாளரைப் பற்றி பேசுவதில்லை. இங்கிலாந்தில் இருந்து வந்த பயிற்றுவிப்பாளர். ஏன் இவரால் அணியை இன்னமும் கொஞ்சம் சிறப்பாக செயற்படுத்த முடியாது? அல்லது அவரால் இது இயலாமல் போனதா? புதிய அணி. புதிய வீரர்கள். அனுபவமுள்ள வீரர்கள் இல்லாமை மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் இல்லாமை இன்னுமொரு காரணமாக இருக்கலாம். உப பயிற்றுவிப்பாளர்களாக இருப்பவர்களும் இங்கே முக்கியம் என்பதனையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தில் பெரியளவில் எதனையும் சாதித்தது எனக் கூறி விட முடியாது. இலங்கை அணியின் பந்து வீச்சு அவ்வளவு சிறப்பானது எனக் கூற இயலாது. தம்மிக்க பிரசாத், துஸ்மந்த சமீர ஆகியோர் உபாதை காரணமாக அணியால் விலகியதன் பின்னர் இங்கிலாந்து அணி ஓட்ட்ங்களை அள்ளி குவிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால் நடந்தது வேறு. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்த அதேவேளை, இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம் இங்கிலாந்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

 

கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்

ஜொனி  பெயர்ஸ்டோ        3              4              387         167*        129.00                   2               0 

அலெக்ஸ் ஹேல்ஸ்          3              5              292         94           58.40                     0               3

அலஸ்டயர் குக்                  3              5              212         85           70.66                     0              1

கெஷால் சில்வா                 3              6              193         79           32.16                     0              2

மொயின் அலி                     3              4              189         155*         63.00                    1              0 

தினேஷ் சந்திமால்              3              5              172         126          34.40                    1              0 

குஷால் மென்டிஸ்              3              6              156         53            31.20                    0              1 

திமுத் கருணாரட்ன            3              6              129         50            25.80                     0              1 

அஞ்சலோ மத்தியூஸ்         3              5             125         80             25.00                     0              1 

ரங்கன ஹேரத்                     3              5             109         61             21.80                    0              1 

கிறிஸ் வோக்ஸ்                   2              3             105         66            52.50                    0              1 

 

கூடுதலான விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்கள் 

ஜேம்ஸ் அன்டர்சன்            3              6               96.4        227         10           5/16       10/45     10.80 

ஸ்டுவர்ட் புரோட்                3              6               94          295         12           4/21       5/78       24.58 

நுவான் பிரதீப்                      3              5              96.0        316         10           4/107     5/141     31.60 

கிறிஸ் வோக்ஸ்                  2              4              53.3        3150       08           3/9         5/112     18.75

ஸ்டீபன் பின்                        3              5              59.0        197         07           3/26       3/45       28.14 

ரங்கன ஹேரத்                     3              5              106.3       303        07           4/81       4/144     43.28

சுரங்க லக்மால்                     2              4             72.0         259         05           3/90       3/135     51.80

ஷமின்ட எரங்க                     3              5             86.4         324         05           3/58       4/152     64.80 

இந்த தொடர் இரு அணிகளுக்கும் பெரியளவில் எதனையும் தரவில்லை என்றே கூறமுடியும். இலங்கை அணி இந்த தொடரில் இருந்து புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அல்லது ஆகா அபாரம் எனும் சொல்லுமளவுக்கு எந்த வீரரும் நல்ல முறையில் செயற்படவில்லை. ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி இனி என்ன செய்யப்போகின்றது என்பது எல்லோருடைய பார்வையாகவும் மாறலாம். இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா தொடரிலும் பல பரிசோதனைகள் இடம்பெறலாம். துடுப்பாட்ட வரிசை இவ்வாறே அமையும் என எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்து அணி எதிர்பார்த்த அளவிலும் பார்க்க மோசமாகவே செயற்பட்டுள்ளது. துடுப்பாட்டத்தில் ஒவ்வொருவர் கை கொடுத்தனர். இல்லாவிட்டால் கதை மாறியிருக்கும். அன்டர்சன், புரோட் ஆகியோரின் பந்துவீச்சே இங்கிலாந்து அணிக்கு வெற்றியை இலகுவாக பெற்றுக்கொடுத்தது. பொதுவாக எதிர்பார்த்த விறு விறுப்புகள் இந்த தொடரில் ஏற்படவில்லை.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .