2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

IPL 6: மீண்டும் ஆரம்பிக்கிறது களியாட்ட கிரிக்கெட்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 03 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆறாவது தொடர்ச்சியான ஆண்டாக இன்று முதல் ஆரம்பிக்கிறது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர். IPL 6 எனப் பிரபல்யமாக அறியப்படும் இந்தக் கழகங்களுக்கு இடையிலான களியாட்டக் கிரிக்கெட் பணம் கொழிக்கும் கிரிக்கெட் தொடர் மட்டுமல்ல... உலகத்தின் மிக அதிகமான கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்கும், அநேகமான சர்வதேசக் கிரிக்கெட் நட்சத்திரங்கள் விளையாடும் தொடரும் கூட.

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையும், மற்ற நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளும் கூட தங்கள் முக்கிய போட்டிகளை நிறுத்தி, அல்லது கால தாமதித்து நடத்தும் அளவுக்கு அதிகார பலமும், அனுசரணைப் பலமும் கொண்ட இந்திய கிரிக்கெட் சபையே நடத்துகின்ற போட்டி என்பதால் உலகின் கிரிக்கெட் போட்டிகளின் மிக முக்கியமான இடத்தையும் IPL பெற்றிருக்கிறது.

இம்முறை இந்த IPL போட்டிகளில் எல்லாவற்றையும் மீறி அரசியல் காரணங்களும், இலங்கைத் தமிழர் விவகாரமும் செலுத்தும் செல்வாக்கு மிக முக்கியமானது. சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாடுவதற்கு தமிழக முதலமைச்சர் விதித்த தடையும், இலங்கையின் முன்னாள் வீரர் முரளிதரன் வழங்கிய பேட்டியும், இலங்கை வீரர்களில் தினேஷ் சந்திமால் விளையாடாமல் விலகி இருப்பதும் அரசியலில் செலுத்திய அளவு அதிர்வலைகளை விளையாட்டுப் பக்கம் செலுத்தவில்லை என்றாலும் போட்டிகள் நடக்கையில் சலசலப்பை ஏற்படுத்தலாம்.

இலங்கை வீரர்கள் அணிக்கு ஒவ்வொருவராவது இருக்கிறார்கள் என்பதோடு (பஞ்சாப் தவிர) மூன்று பேர் தலைவர்களாக இருக்கப் போகிறார்கள் என்பதும் மிக முக்கியமானது.

நேற்று கொல்கொத்தாவில் இடம்பெற்ற கண்கவர் ஆரம்ப நிகழ்ச்சிகள் மற்றும் அணித்தலைவர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து இன்று போட்டிகள் ஆரம்பிக்கின்றன.

எட்டு அணிகளோடு ஆரம்பித்த IPL இப்போது ஒன்பது அணிகளோடு பயணிக்கிறது.

இதுவரை நடந்த ஐந்து தொடர்களில் முதலாவது தொடரை ஷேன் வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வென்றெடுத்தது. இரண்டாவது IPL தொடர் தென் ஆபிரிக்காவில் இடம்பற்ற நேரம் அடம் கில்க்றிஸ்டின் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த அணி தான் தற்போது உரிமையாளர்கள் கைமாறி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் என்ற பெயருடன் குமார் சங்கக்கார தலைமையில் இவ்வருடம் அறிமுகமாகிறது.

அடுத்த இரண்டு IPL கிண்ணங்களும் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியிடம் போய்ச் சேர்ந்தன.

கடந்த வருட IPL இறுதிப் போட்டியிலும் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி விளையாடியிருந்தபோதும், தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கௌதம் கம்பீரின் தலைமையில்) கிண்ணத்தை சுவீகரித்தது.

இம்முறை விளையாடுகின்ற ஒன்பது அணிகளில் எது பலமானது, எது பலவீனமானது என்பதை மேற்பார்வையில் பார்த்தோ, கொஞ்சம் இறங்கி ஆழமாக அலசினாலோ கூட சரியாகத் தீர்மானிக்க முடியாமல் இருக்கும்.

காரணங்கள் -
முதலில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களை விட இறுதியாக இந்த வருட ஏலத்தில் வந்துள்ள அறிந்த, அறியாத வீரர்கள்... முக்கியமான பல வீரர்கள் காயம் காரணமாக இம்முறை IPL தொடரைத் தவறவிடுகிறார்கள்.

இருபது ஓவர்கள் மட்டுமே கொண்ட போட்டிகள் என்பதாலும் மைதானங்களுக்கு மைதானங்கள் காலநிலையும் களநிலையம் மாறுவதாலும் அணிகளின் பலம், பலவீனங்கள் மாறுபடும்.


IPL 6இன் முதலாவது போட்டி இன்றிரவு ஆரம்பிக்க முதலே இன்று விளையாடும் இரு அணிகளின் முக்கிய வீரர்கள் நால்வரின் காயங்கள் பற்றி உறுதியான தகவல்கள் இதுவரை இல்லை.

கொல்கொத்தாவின் கம்பீர், கலிஸ் மற்றும் டெல்லியின் சேவாக் & ஜெசி ரைடர் (அடிதடியில் கோமா வரை போய் மீண்டுள்ளார்) ஆகியோர் இன்றைய முதலாவது போட்டியில் விளையாடாமல் போனால் ஆரம்பமே கொஞ்சம் மந்தத்தை வழங்கலாம்.

இதேபோல பூனே வோரியர்ஸ் அணிக்குத் தலைமை தாங்கவிருந்த அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கேல் கிளார்க் உபாதை காரணமாக இத்தொடரிலே விளையாடமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் இலங்கையின் புதிய தலைவரான அஞ்சேலோ மத்தியூஸ் இந்த வருட IPL அணிகளில் இலங்கையைச் சேர்ந்த மூன்றாவது தலைவர் ஆகியிருக்கிறார்.

புதிய அணியாக பெரிய செல்வாக்கோடும், பிரம்மாண்ட விளம்பரப்படுத்தலோடும் (சன் தொலைக்காட்சிக் குழுமம்) களமிறங்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இம்முறை எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எழுகிறது.

41 வயதிலும் தலைவராக பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வழிநடத்தப்போகின்ற அடம் கில்க்றிஸ்ட் மேல் நிச்சயம் அழுத்தம் இருக்கப் போகிறது.

இதேவேளை முதலாவது IPL தொடரிலிருந்து இப்போதுவரை பெரிதாக அணிக் கட்டமைப்பில் மாற்றம் இல்லாத சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி இம்முறையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கியமான அணியாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால் இம்முறை இவை எல்லாவற்றையும் தாண்டி அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஓர் அணியாக மும்பாய் இந்தியன்ஸ் அணி இருக்கிறது.

காரணம் கிரிக்கெட்டின் மிக மூத்த அனுபவ வீரரான சச்சின் டெண்டுல்கர் நட்சத்திரமாக விளங்கும் இந்த அணிக்கு இம்முறை தலைமை தாங்க இருப்பவர் சச்சினின் சமகாலப் போட்டியாளராக விளங்கி அண்மையில் ஓய்வு பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ரிக்கி பொன்டிங்.

இதே அணியில் தான் மில்லியன் டொலர்களுக்கு இம்முறை ஏலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அவுஸ்திரேலிய அணியின் இளைய வீரர் கிளேன் மக்ஸ்வெல்லும் இருக்கிறார் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

இந்த ஆண்டு IPL ஏலம் பற்றி முன்பு இதே பகுதியில் வெளியான கட்டுரையையும் மீள வாசியுங்கள். தனித்தனியாக வீரர்கள் யார் யார் இம்முறை பிரகாசிப்பார்கள் என அறிந்துகொள்ளலாம்.

IPL 2013 ஏலம்: ஒரு பார்வை

இந்த வருட IPL போட்டிகளின் சுவாரஸ்யங்கள் பற்றி தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவும், புதிய தகவல்கள் தெரிந்துகொள்ளவும் ஒவ்வொரு வாரமும் இந்தப் பகுதியைத் தொடர்ந்து அவதானியுங்கள்.

இன்னும் சில நிமிடங்களில் - நடப்பு சாம்பியன் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன தலைமை தாங்கும் டெல்லி டெயார்டெவில்ஸ் அணியை சந்திக்கிறது.

www.arvloshan.com


You May Also Like

  Comments - 0

  • alex Tuesday, 16 April 2013 11:04 AM

    என்ன சார்

    இந்திய அவுஸ்திரேலிய டெஷ்ட் விமர்சனம் எங்கே ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .