2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

IPL 2013 ஏலம்: ஒரு பார்வை

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 04 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்த வருடத்துக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டித்தொடருக்கான அணிகளுக்கான வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இடம்பெற்றது. முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் அந்தந்த அணிகளில் இருக்க, ஒரு சில வீரர்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததனாலும், சில அணிகள் சில வீரர்களை ஒப்பந்தங்களிலிருந்து விலக்கியதனாலும் புதிதாக அந்தந்த அணிகளின் மொத்த வீரர்களின் கணக்கை (எண்ணிக்கையை) சமநிலையில் பேணிக்கொள்ளவும் வருடாந்தம் நடத்தப்படும் ஏலம் தான் இது.

நேற்று இடம்பெற்ற ஏலத்தில் மொத்தமாக 108 வீரர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவுஸ்திரேலிய அணியின் முன்னைய தலைவர் ரிக்கி பொன்டிங் மற்றும் இந்நாளின் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கேல் கிளார்க் ஆகியோர் பெயர்களும் ஏலத்தில் இருந்ததனால் பெரியளவு எதிர்பார்ப்பும் கவனமும் இவர்கள் இருவர் மீதே இருந்தது.

எனினும் அண்மைக்காலத்தில் சர்வதேச மற்றும் அந்தந்த நாடுகளின் உள்ளூர்ப் போட்டிகளில் கலக்கிய சில இளம் வீரர்கள், குறிப்பாக சகலதுறை வீரர்கள் மீதும் பலரின் பார்வையும் இருந்தது.

நேற்றைய நாளில் பரபர ஏலப் போட்டிகள், IPL அணிகளின் உரிமையாளர்கள், திட்ட வகுப்பாளர்கள், தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோரின் போட்டிகள் - வாங்குதல்களுக்குப் பிறகு, இன்றைய நாளில் மொத்தமாக 37 வீரர்களும் 9 அணிகளாலும் வாங்கப்பட்டுள்ளதோடு மொத்தமாக செலவான தொகை 11.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேற்று ஏலத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஒன்பது அணிகளுமே அணிகளை வாங்குவதற்கு அதிகபட்சமாகப் பயன்படுத்தப்படக் கூடிய தொகையான $12.5 மில்லியன் டொலர்களுக்கு உள்ளேயே தங்கள் வீரர்களை வாங்கியதும் கவனிக்கக் கூடியது.

உரிமையாளர் கை மாறி பல வீரர்கள் வெளியேற்றப்பட்டும், கடந்த வருடம் மோசமான பெறுபேற்றை சந்தித்த ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி (முன்னைய டெக்கான் சார்ஜர்ஸ்) தான் அதிகமாக வீரர்களை, முக்கியமாக முன்னைய வீரர்களை வாங்கும், அதிலும் அதிக விலை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. ஆனால், அந்த அணி சில வீரர்களை அளவோடு வாங்கியதோடு, தங்கள் மொத்த செலவுத்தொகையின் பாதியையே இதுவரை பயன்படுத்தியுள்ளார்கள்.

அதுபோல பூனே வோரியர்ஸ் அணி மட்டுமே அதிகபட்ச வீரர்கள் எண்ணிக்கையான 33ஐ இதுவரை பூர்த்தி செய்துள்ளது. மறுபக்கம் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வெறும் 21 வீரர்களையே வைத்துள்ளது.

நேற்றைய ஏலத்தில் ஒரேயொரு வீரரே மில்லியன் டொலர் தொட்ட வீரர். அவுஸ்திரேலிய அணியின் புதிய சகலதுறை வீரரான கிளேன் மக்ஸ்வெல் தான் அவர்.


இதுவரை பெரிதாக எதையும் சர்வதேச மட்டத்தில் சாதிக்காவிட்டாலும், வேகமாக அடித்தாடக் கூடியவர், சுழல் பந்தின் மூலம் விக்கெட்டுக்கள் எடுக்கக் கூடியவர், களத்தடுப்பில் அபாரமாக ஈடுபடக் கூடியவர் என்று தான் விளையாடிய சில சர்வதேச T20 போட்டிகளில் காட்டியிருந்தார். அதுவே இவருக்கான அழைப்பாக / விசிட்டிங் கார்டாக அமைந்துவிட்டது போலும்.

ஆனாலும் இவருக்கு மில்லியன் டொலர்களை வீசியெறிந்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது பெரிய ஆச்சரியத்தை உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் விமர்சகர்கள், வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.

ஆனாலும் ஆச்சரியகரமாக இவ்வளவு நாளும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தான் வீசியிருந்த 204 பந்துகளில் எந்தவொரு விக்கெட்டையும் எடுக்காமல் இருந்த மில்லியன் டொலர் மக்ஸ்வெல் நேற்று நான்கு விக்கெட்டுக்களை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக வீழ்த்தித் தனது சந்தோஷத்தைப் பகிர்ந்துள்ளார்.

மக்ஸ்வெல் கடந்த வருடம் டெல்லி டெயார்டெவில்ஸ் அணிக்காக விளையாடி இருந்தாலும் பெரிதாகப் பிரகாசித்திருக்கவில்லை. இப்போது மும்பாய் அணிக்குத் தேவைப்படும் சகலதுறை வீரராக மாறியுள்ளார்.

மக்ஸ்வெல்லின் மில்லியன் டொலர் ஒப்பந்தத்துக்கு அடுத்தபடியாக அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டவர், கடந்த வருடத்தில் யாராலும் ஏலத்தில் பெறப்படாத இலங்கையின் அஜந்த மென்டிஸ்.

2012இல் மென்டிஸ் Twenty 20 சர்வதேசப்போட்டிகளில் காட்டிய மாயாஜால வித்தைகள் வெற்றிகளைத் தேடிக்கொண்டுள்ள பூனே வோரியர்ஸ் அணிக்கு மென்டிசின் தேவையை உணர்த்தியுள்ளன போலும். 725,000 அமெரிக்க டொலர்கள் மெண்டிசுக்கு வழங்கப்பட்டன.

இதற்கு அடுத்தபடியாக பெரியதொகை வழங்கப்பட்ட வீரரும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் தான். 700,000 டொலர்களுக்கு பூனே வோரியர்ஸ் அவுஸ்திரேலியாவை சேர்ந்த கேன் ரிச்சர்ட்சனை வாங்கிக்கொண்டார்கள். இவ்வளவுக்கும் கேன் ரிச்சர்ட்சன் ஒன்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்றவரில்லை.

இந்த ஆச்சரியங்கள், அதிர்ச்சிகளைத் தாண்டி மேலும் சில காத்திருந்தன.


இலங்கைக்காக ஒருசில சர்வதேசப் போட்டிகளையே விளையாடியுள்ள சுழல் பந்துவீசும் சகலதுறை வீரர் சசித்திர சேனநாயக்க - கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியினாலும், தென் ஆபிரிக்காவின் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடிவரும் க்றிஸ் மொரிஸ் என்ற சகலதுறைவீரர் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியினாலும் எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய 625,000 டொலர்களுக்கு வாங்கப்பட்டார்கள்.

இலங்கையின் திசர பெரேரா அண்மைக்காலத்தில் சர்வதேசப் போட்டிகளில் காட்டிவரும் அசகாயத் திறமைகள் அவரது விலையையும் இம்முறை உயர்த்தியுள்ளது. 675,000 டொலருக்கு  பெரேராவை ஹைதராபாத் சண் ரைசர்ஸ் அணி கையகப்படுத்தியது.

மக்ஸ்வெல்லுக்கே மில்லியன் கொடுக்கிற நேரம் திசர பெரேராவுக்கு வழங்கப்பட்ட இந்தத் தொகை நிச்சயம் லாபகரமானது என்பது தெளிவு.

இந்தியாவின் உள்ளூர் வீரர்கள் பலரின் தேவை ஐ.பீ.எல் அணிகளுக்கு அவசியமாக இருந்த காரணத்தினால் சில வீரர்கள் பெரிய தொகைகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்கள். அபிஷேக் நாயரின் சகலதுறை திறமை காரணமாக பூனே வோரியர்ஸ் அவரை 675,000 டொலருக்கு வாங்கிக்கொண்டது.

வேகப்பந்துவீச்சாளர்களைத் தேடிக்கொண்டிருந்த சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி அவுஸ்திரேலியாவின் டேர்க் நன்னசை 600,000 டொலர்கள் கொடுத்து வாங்கியது.

எல்லா அணிகளுமே தத்தமக்கு எந்தெந்த இடங்களில் இடைவெளி/ தேவை இருக்கிறதோ அதைப் பார்த்துப் பக்குவமாக நிரப்பிக் கொண்டார்கள்.

பெரிய வீரர்களாக எதிர்பார்க்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் தலைகள் பொன்டிங் மற்றும் கிளார்க் ஆகியோர் எந்தப் போட்டியும் இல்லாமல் அவர்களுக்கான நிர்ணய விலையான 400,000 டொலர்களுக்கே ஏலம் போயினர்.

பொன்டிங், சச்சினுடன் சேர்ந்து மும்பாய் அணிக்கு விளையாடப்போவது ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் தரப்போவது நிச்சயம்.

ஒரே காலகட்டத்தில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சாதனைகள், ஓட்டங்கள், சதங்கள் என்று போட்டியிட்ட இரு சிகரங்களும் ஒரே அணிக்காகத் துடுப்பெடுத்தாட இருப்பது நிச்சயம் ஆர்வத்தை அள்ளி வழங்கும் தான்.
 
கிளார்க் - பூனே அணியினால் வாங்கப்பட்டுள்ளார். அநேகமாக இம்முறை இவர் பூனே வோரியர்சின் தலைவராகலாம்.

மேற்கிந்தியத் தீவுகளின் தலைவரான தரன் சமி ஹைதராபாத் அணிக்கு 425,000 டொலர்களுக்கு வாங்கப்பட்டார்.

IPL போட்டிகளில் வெற்றிகரமாக விக்கெட்டுக்களை எடுத்துவரும் இந்திய வேகப்பந்துவீச்சாளரான R.P.சிங் மற்றும் மேற்கிந்திய வேகப்பந்துவீச்சாளர் ரவி ராம்போலை ரோயல் சலஞ்சர்ஸ்  பெங்களுர் அணி வாங்கிக்கொண்டது.

நடப்பு சாம்பியன் அணி கொல்கொத்தா பெரிதாக வீரர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை; தேவையான இடங்கள் சிலவற்றை நிரப்பிக் கொண்டது. டெல்லி டெயார் டெவில்ஸ் சுழல் பந்துவீச்சாளர்களை வாங்கிக்கொண்டது.

ஏலத்தில் வாங்கப்பட்ட மேலும் சில இலங்கை வீரர்கள்
அகில தனஞ்செய - சென்னை சுப்பர் கிங்க்ஸ்
ஜீவன் மென்டிஸ் - டெல்லி டெயார் டெவில்ஸ்
குசால் ஜனித் பெரேரா - ராஜஸ்தான் ரோயலஸ்

இதேவேளை இலங்கை வீரர்களான ரங்கன ஹேரத், பார்வீஸ் மகரூப், பிரசன்ன ஜெயவர்த்தன, தினேஷ் சந்திமால், உபுல் தரங்க, சுராஜ் ரண்டீவ் ஆகியோர் யாராலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

சர்வதேசத்தில் பிரபலம் பெற்ற பெரிய வீரர்கள் பலரும் கூட, ஆச்சரியமாக நேற்று IPL அணிகளால் வாங்கப்படவில்லை.
 
ரவி போபரா, வேர்ணன் பிளண்டர், ஹெர்ஷெல் கிப்ஸ், டரன் பிராவோ, மார்ட்டின் கப்டில், டக் போளின்ஜர், தினேஷ் ராம்டின், மத்தியூவ் வேட், ஸ்கொட் ஸ்டைரிஸ், ஜேம்ஸ் ஹோப்ஸ் என்று இந்த வரிசை நீண்டது.

இந்த வீரர்கள், மற்றும் விலைகள் ஆகியன பல காரணிகளால் செல்வாக்கு செலுத்தப்படுகின்றன என்பது தெளிவு.

அணிகளின் தேவை... வீரர்கள் சர்வதேசப் போட்டிகள் காரணமாக இடை நடுவே விலகாமல் இருத்தல் மற்றும் இந்திய ஆடுகளங்களுடனான பரிச்சயங்கள், இது தவிர அந்தந்த IPL அணிகளின் தலைவர்கள் செலுத்தும் செல்வாக்கு.

முழுமையான விபரங்கள்...


நேற்று மூன்றாம் திகதி முடிவடைந்த ஏலத்தைத் தொடர்ந்து சரியாக இரண்டு மாதங்களின் பின்னர் ஏப்ரல் மூன்றாம் திகதி ஆறாவது IPL கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக ஆரம்பிக்கப் போகிறது.

www.arvloshan.com

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .