2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

FIFA உலகக்கிண்ணக் கால்பந்துத் தொடர்; ஒரு மாத கோலாகலம்

A.P.Mathan   / 2014 ஜூன் 11 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


இதோ அதோ என்று கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் இரு தினங்களில் பிரேசிலில் ஆரம்பமாகிறது. 20ஆவது உலகக்கிண்ணம் இது.

இதுவரை நடைபெற்ற உலகக் கிண்ணங்களில் அதிக கிண்ணங்களை வென்ற, உலகத்தின் மிக ஆதிக்கம் செலுத்தும் கால்பந்து அணியான பிரேசில், தனது நாட்டிலேயே போட்டிகளை நடத்துவதால் இம்முறை தனது சொந்த மண்ணில் வைத்து வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருக்கிறது.

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள கால்பந்தாட்டத்தின் மீது வெறிகொண்ட ரசிகர்கள் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்று பிரேசில். இங்கே கால்பந்து ஒரு சமயம் போல...

5 தடவைகள் உலகக்கிண்ணம் வென்றுள்ள பிரேசில் நாட்டில் கால்பந்து அவர்களின் நாளாந்த வாழ்க்கையிலேயே கலந்துள்ளது.


அதிலும் இம்முறை 1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக பிரேசிலுக்குத் திரும்புகின்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் எப்படியாவது வென்று பெருமைமிகு கிண்ணத்தைத் தங்கள் நாட்டிலேயே வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்படும் பிரேசில் ரசிகர்கள் ஒரு பக்கம், இதற்கு முதல் இறுதியாக தென் அமெரிக்காவில் நடந்தபோது சொந்தமண்ணில் சம்பியனான ஆர்ஜென்டீனாவும் இம்முறை தனது கண்டத்திலே நடக்கும் போட்டியை எதிர்பார்த்துள்ளது.

ஆனால், இவ்விரு நாடுகள் மட்டுமன்றி உலகத்தின் எல்லாக் கண்டங்களிலும் இருந்து பல தடைகள், தகுதிகாண் போட்டிகள் தாண்டி சவால் விடும் மேலும் 30 அணிகளுடன் உலகக்கிண்ணம் களைகட்டுகிறது.

இவற்றுள் உலகக்கிண்ணத்தை ஒரு தடவையாவது வென்ற நாடுகள் 8 மட்டுமே. இந்த 8 நாடுகள் தான் இதுவரை நடந்த 19 உலகக்கிண்ணங்களையும் வென்றிருக்கின்றன. அதிலே போட்டி என்னமோ ஐரோப்பா - தென் அமெரிக்கக் கண்டங்களுக்கிடையில் தான்.
ஐரோப்பா 10 கிண்ணங்களை வென்றுள்ளது.
இதில் இத்தாலி 4 தடவை, ஜேர்மனி 3 தடவை.
தென் அமெரிக்கா வென்ற 9 தடவைகளில் பிரேசில் 5 தடவை. ஆர்ஜென்டீனா மற்றும் உருகுவே தலா 2 தடவை.

இந்த ஆண்டின் உலகக்கிண்ண இறுதியில் பிரேசிலும் ஆர்ஜென்டீனாவும் விளையாடும் என்று உலகக்கிண்ணத்துக்கான குழுக்கள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் விமர்சகர்கள் தெரிவிக்கும் அதே நேரம், பந்தயக்காரர் இப்போதே ஜேர்மனியும் ஆர்ஜென்டீனாவும் இறுதியில் சந்திக்கும் என்று ஆரூடம் கூறுகிறார்கள்.

ஜேர்மனி தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஐரோப்பிய கால்பந்து வல்லரசு. எப்போதுமே உலகக்கிண்ணம் என்று வந்தால் ஜேர்மனி அசுர பலம் கொண்டுவிடும்.

எனினும் நடப்புச் சம்பியன்கள் ஸ்பெய்ன் இப்போது தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள அணி என்பதால் மிகப் பலம் வாய்ந்த மற்றொரு அணியாகத் தெரிகிறது.

நடப்புச் சம்பியன்கள் ஸ்பெயின் அணிக்கு ஒரு சாதனைக்குரிய பெருமை இருக்கிறது.

1986ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் முதல் இவ்வாண்டின் உலகக்கிண்ணம் வரை தகுதிகாண் போட்டிகள் மூலமாகத் தொடர்ச்சியாகத் தெரிவான ஒரே அணி ஸ்பெயின் மட்டுமே.

போர்த்துக்கல், பெல்ஜியம், இத்தாலி போன்ற அணிகளும் பெரிய அணிகளுக்கும் சவால் விடக்கூடிய அணிகளாகவே தெரிகின்றன.

இம்முறை 32 அணிகளும் பின் வரும் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


8 பிரிவுகளிலும் விளையாடும் தலா நான்கு அணிகளிலும் பலமான 2 அணிகள் knock out சுற்றான அடுத்த சுற்றுக்குச் செல்லவுள்ளன.

அனேக பிரிவுகளில் பெரிதாக சிக்கல்கள் இல்லாமல் முக்கிய அணிகள் அடுத்த சுற்றுக்குச் செல்லும் என எதிர்பார்ப்புக்கள் இருந்தாலும், சில பிரிவுகள் மூன்று அல்லது ஏன் நான்கு அணிகளுமே முக்கிய அணிகளாக இருக்கின்றன.

இதிலே Group of Death என்று தனியே ஒரு பிரிவை மட்டும் சொல்ல முடியாதவாறு 3 பிரிவுகளில் மோதல்கள் உக்கிரமாக இருக்கப்போகின்றன.

பிரிவுகள் B, D மற்றும் G ஆகியனவே இம்முறை எந்த இரு அணிகளை இரண்டாம் சுற்றுக்கு அனுப்பிவைக்கப்போகின்றன என்ற கேள்வி சுவாரஸ்யமானது.

ஒவ்வொரு பிரிவுகள் பற்றியும் சிறிது விவரமாக இந்தக் கட்டுரையிலும் அடுத்த பகுதியிலும் தரலாம் என்று எண்ணுகின்றேன்.

இந்த உலகக்கிண்ணத்தின் ஆரம்பமே நிறைய சிக்கல்களுடன் தான்...

மக்களின் நலத்திட்டங்களுக்கு செலவு செய்யாமல் இவ்வாறான கேளிக்கைப் போட்டிகளுக்காக செலவு செய்வதாக எதிர்ப்பு, பின்னர் மக்களின் குடியிருப்புப் பகுதிகள் கையகப்படுத்தப்பட்ட எதிர்ப்பு... அதன் பின்னர் சர்வதேச கால்பந்து சம்மேளனம், பிரேசில் சரியான நேரத்தில் மைதானங்களையும் ஏனைய ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்யவில்லை என்ற அதிருப்தியை வெளியிட்டது.

அதன் பின்னர் பல முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட உபாதைகள், காயங்கள்...  சில உச்ச நட்சத்திரங்களின் இழப்பு கொஞ்சம் ரசிகர்களைக் கவலைப்படுத்தியுள்ளது.

முக்கியமாக பிரான்சின் பிராங் ரிபெறி, பெல்ஜியத்தின் கிறிஸ்டியன் பென்டேக், கொலொம்பியாவின் ரடாமல் பல்கொவொ, இங்கிலாந்தின் தியோ வோல்கொட் ஆகியோர் முக்கியமானவர்கள்.

இன்னும் சிலி அணியின் லூயிஸ் சுவாரெஸ், ஜேர்மனி அணியின் உலகத் தரம் வாய்ந்த கோல் காப்பாளர் மனுவேல் நியூர் ஆகியோர் அணிக்குள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் விளையாடுவார்களா என்பதை உடற்தகுதிப் பரிசோதனைகள் தான் சொல்லவேண்டும்.

இதையெல்லாம் தாண்டி இதோ 12 நகரங்களில் அமைக்கப்பட்ட அழகான, நவீன மயப்படுத்தப்பட்ட மைதானங்களில் போட்டிகள் நடைபெற சகல ஏற்பாடுகளும் தயார் என்று பிரேசில் கால்பந்து சம்மேளனமும் FIFAவும் அறிவித்துள்ளன.

ரசிகர்களும் லட்சக்கணக்கில் வந்து பிரேசிலில் குவிந்துள்ளார்கள்.

பயிற்சிப்போட்டிகள், சிநேகபூர்வ, சர்வதேசப் போட்டிகள் நடைபெற்று அணிகள் தங்கள் வியூகங்களை இறுதிப்படுத்தியுள்ளன.

கழக மட்டத்தில் எதிரெதிர் அணியில் விளையாடிய நட்சத்திரங்கள் தங்கள் சொந்த நாடுகளுக்காக ஒரே அணியில் சேர்ந்து விளையாட, சேர்ந்து விளையாடிய கழக மட்ட நட்சத்திரங்கள் எதிரெதிர் அணியில் மோதி கிண்ணத்தை தங்கள் தேசங்களுக்குக் கொண்டு செல்ல முயலப்போகிறார்கள்.

நாளை இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் ஆரம்ப விழாவின் கோலாகலக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர், வெள்ளி அதிகாலை 2 மணியளவில் முதலாவது போட்டி போட்டிகளை நடத்தும் பிரேசில் அணிக்கும் குரோஷிய அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.

இந்த உலகக்கிண்ணப் போட்டிகளை எம்மவர்கள் எத்தனை பேர் தொலைக்காட்சியில் நேரலையாகப் பார்க்க முடியும் என்பது சந்தேகமே. காரணம் நேரம்...

ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று போட்டிகள் இடம்பெறுமானால் முதலாவது போட்டி எம் நேரப்படி இரவு 10 மணிக்கே ஆரம்பமாகும். மிகப் பிந்தியதாக ஆரம்பிக்கும் போட்டியாக இருந்தால் அது காலை 7 மணிக்குக் கூட இடம்பெறவுள்ளது.

எனினும் கால்பந்தில் தீவிர ஆர்வமுள்ளவர்கள் எப்படியாவது தொடரத்தான் போகிறார்கள். அவர்களுக்காகத் தான் இந்தப் பகுதி.

நாளை போட்டி ஆரம்பமாகும் நேரத்துக்கு முன்னதாக அணிகளையும் 32 அணிகளும் வகுக்கப்பட்டு முதற்கட்டத்தில் மோதவுள்ள பிரிவுகள் பற்றியும் பார்க்கலாம்.


www.arvloshan.com

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .