2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

5ஆவது உலக Twenty 20 கிண்ணப் போட்டிகள் ஆரம்பம்...

A.P.Mathan   / 2014 மார்ச் 15 , பி.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


5ஆவது உலக Twenty 20 கிண்ணப் போட்டிகள் இதோ ஆரம்பிக்கின்றன. கடந்த உலக Twenty 20 கிண்ணப் போட்டிகள் இலங்கையில் மிகக் கோலாகலமாக நடந்து, மேற்கிந்தியத் தீவுகள் முடி சூடிய அந்தக் கோலம் இன்னும் கண்களில் இருந்து மறையும் முன்பாகவே, அடுத்த தொடர் புதிய சம்பியனைத் தேடி பங்களாதேஷில் ஆரம்பிக்கிறது.

இதுவரை நடந்த தொடர்கள் ஒவ்வொன்றிலும் புதிய வெற்றியாளர்கள் கிண்ணங்களை வென்றிருந்தார்கள்...

முதலாவது 2007 தென் ஆபிரிக்காவில் நடந்த ICC World T20 - இந்தியா
2009இல் இங்கிலாந்தில் நடந்தது - பாகிஸ்தான்
2010இல் மேற்கிந்தியத் தீவுகளில் - இங்கிலாந்து வென்றது.
2012இல் இலங்கையில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கையை வெற்றிகொண்டு மேற்கிந்தியத் தீவுகள் சம்பியன் ஆனது.

2012 உலக T20 கிண்ணப்போட்டிகள் பற்றிய முன்னோட்டக் கட்டுரைகள்

http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/vilaiyattu-katturaikal/48740-----20---1-.html

http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/vilaiyattu-katturaikal/48813--20-2.html

மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கான வாழ்த்துக் கட்டுரை

http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/vilaiyattu-katturaikal/50195-2012-10-09-16-54-10.html

2012 உலக T20 கிண்ணப்போட்டிகள் பற்றிய சாதனைக் குறிப்புக்கள்

http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/vilaiyattu-katturaikal/50731--t20-------.html

எனவே இம்முறை போட்டிகளை நடத்த இன்னொரு புதிய நாடு, புதிய வெற்றியாளரையும் தருமா என்பதே ஆர்வத்தைத் தரும் கேள்வியாகவும் இருக்கிறது.

கடந்த மகளிர் உலக T20 க்காக அணிவகுத்த தலைவியர்

கடந்த 3 முறைகள் போலவே இம்முறையும் மகளிர் உலக T20 கிண்ணப்போட்டிகளும் சமாந்தரமாக இடம்பெறுகின்றன.

2009 முதல் மகளிர் உலக T20 கிண்ணப்போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.

முதல் தடவை சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்த இரு தடவைகளும் அவுஸ்திரேலிய - மகளிர் சம்பியனாகி இருக்கிறார்கள்.

இலங்கையில் இவ்வாறு மகளிருக்கான போட்டிகளும் ஆடவருக்கான போட்டிகளோடு ஒரே காலகட்டத்தில் இடம்பெற்ற வேளையில் அரையிறுதிகளும் இறுதிப்போட்டிகளும் தொலைக்காட்சி மூலமாகவும் நேரடியாக மைதானங்களிலும் ரசிகர்களின் பெரு வரவேற்பைப் பெற்றிருந்தன.

கடந்த முறை எட்டு மகளிர் அணிகள் விளையாடியிருந்தன. இம்முறை தகுதிகாண் சுற்றுக்களின்படி, அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகளும் 'பெரிய' அணிகளோடு விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.

இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் இலங்கை, பாகிஸ்தானிய மகளிர் அணிகளும் அயர்லாந்து அணியும் தகுதிகாண் சுற்றின் மூலம் தெரிவு செய்யப்பட்டவை என்பது தான்.

ஆடவர் பிரிவைப் போல இரண்டு கட்டங்களாக இல்லாமல், இரு பிரிவுகளாக தலா ஐந்து அணிகள் முதல் சுற்றி விளையாடி, அதன் பின்னர் அரையிறுதி, இறுதி என்று நேரடி போட்டிகள்.

23ஆம் திகதி முதல் பெண்கள் மோதிக்கொள்ளப் போகிறார்கள்.


அதிரடியாக ஆடி அசத்தி வரும் ஆப்கானிஸ்தான்

அதிகளவு ஆர்வம் தரும் ஆடவர் போட்டிகளில், ICC Twenty 20 தரப்படுத்தல்களில் கடந்த வருடத்தின் எல்லைத் திகதியொன்றின் அடிப்படையில் முதல் 8 இடங்களைப் பெற்றிருந்த அணிகள் நேரடியாக இரண்டாவது முக்கிய கட்டத்துக்குத் தகுதிபெற, ஏனைய இரண்டு டெஸ்ட் விளையாடும் நாடுகளான பங்களாதேஷும் சிம்பாப்வேயும் கூடத் தகுதிகாண் சுற்றின் மூலமாகத் தான் பிரதான போட்டித் தொடருக்கு உள் நுழைய முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு உலக Twenty 20 போட்டிகளிலும் 12 நாடுகள் விளையாடியிருந்தன.

இதில் சில போட்டிகள் ஓர் அணியின் முழுமையான ஆதிக்கத்தோடு உப்புச் சப்பற்று இருந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் பேரவை இவ்வாறு இரு கட்டச் சுற்றை இம்முறை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாளை முதல் 21ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்த முதற்சுற்றில் விளையாடும் ஏனைய 6 அணிகளைத் தெரிவு செய்ய ICC World Twenty20 Qualifier என்னும் தகுதிச் சுற்று ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் கடந்த வருடத்தின் நவம்பர் மாதம் இடம்பெற்றது.

இதிலே வெற்றி பெற்ற அயர்லாந்து, அயர்லாந்திடம் இறுதிப் போட்டியில் தோற்ற - அண்மையில் ஆசியக் கிண்ணப் போட்டியில் அசத்திய - ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளோடு, சிறப்புத் திறமை காட்டிய இன்னும் நான்கு அணிகளான நேபாளம், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், நெதர்லாந்து, ஹொங்கொங் ஆகியவையும் இன்று (16) முதல் டெஸ்ட் அரங்கின் கடைநிலை இரு அணிகளோடு களம் காணப்போகின்றன.

ஏனைய அணிகள் ICCயின் உலகக் கிண்ண அரங்கைப் பார்த்திருக்கும்போதிலும், நேபாளம் மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு தங்களை உலக அரங்கில் வெளிப்படுத்த அருமையான முதல் வாய்ப்பு.

ஹொங்கொங் இதற்கு முதல் ஒருநாள் சர்வதேச அந்தஸ்தை சில காலம் பெற்றிருந்த போது ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியிருந்தது.

இலங்கையரின் பயிற்றுவிப்பில் (முன்பு ரோய் டயஸ், தற்போது புபுது தசநாயக்க) முன்னேறி வரும் நேபாள அணி மிகுந்த எதிர்பார்ப்போடு எதிர்காலத்தை நோக்குகின்ற அணியாகும்.


ஆசியாவிலிருந்து இன்னொரு அணி... நேபாளம்

இரு பிரிவுகளாக விளையாடும் எட்டு அணிகளில் இரண்டு பிரிவுகளிலும் முதலிடம் பெறும் ஒவ்வொரு அணிகள் அடுத்த பிரதான சுற்றின் இரு பிரிவுகளிலும் இடம்பெறும்.

பிரிவு Aயில் வெற்றி பெறும் அணி 2ஆம் பிரிவில் விளையாடும் வாய்ப்பையும் பிரிவு Bயில் வெற்றி பெறும் அணி 1ஆம் பிரிவில் விளையாடும் வாய்ப்பையும் பெறும்.

Twenty 20 கிரிக்கெட் போட்டிகள் பொதுவாகவே ஓர் ஓவரிலேயே மாறி விடக் கூடிய இயல்புகொண்ட துரித ரக கிரிக்கெட் போட்டிகளாக இருந்தாலும் கூட, அணிகளின்பலம், பலவீனங்கள், சில நட்சத்திர வீரர்கள் போட்டியின் முடிவுகளை மட்டுமன்றி கிண்ணத்தைக் கைப்பற்றும் அணியையும் தீர்மானிக்கக் கூடியதாக இருப்பதைக் கடந்த கால வரலாறுகள் சொல்கின்றன.

பங்களாதேஷின் சிட்டகொங், டாக்கா, சில்ஹெட் ஆகிய மூன்று மைதானங்களில் இடம்பெறும் இப்போட்டிகளில் 'பெரிய' அணிகள் விளையாடும் போட்டிகள் 21ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதால் ஆர்வம் ஒரு வாரம் கழித்தே அதிகரித்தாலும், பங்களாதேஷின் உள்ளூர் ரசிகர்கள் தங்கள் அணியும் பெரிய அணிகளுடன் விளையாடவேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

சொந்த மண்ணில் சோகம் துடைக்குமா வங்கப் புலிகள்?

இன்று முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி தங்கள் பிரிவில் பெரும் சவாலாக இருக்கக் கூடிய, துரித முன்னேற்றம் கண்டுவருகின்ற ஆப்கானிஸ்தான் அணியைச் சந்திக்கிறது.

இந்தப் பிரிவிலே இவ்விரு அணிகளும் அதிக பலம் வாய்ந்த அணிகளாகத் தெரிந்தாலும் கூட, புதிய அணிகளான நேபாளம், ஹொங்கொங் ஆகிய அணிகளும் குறைத்து மதிப்பிட முடியாத முயற்சியுள்ள அணிகள்.

ஆனாலும் தரம், விளையாடும் முறை, அனுபவம், காலநிலை, கள நிலை அனுபவங்களின் அடிப்படையில் இன்று இடம்பெறும் முதலாவது போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அடுத்த சுற்றில் செல்லும் அதிகளவு வாய்ப்பு உள்ளது என்பது நிச்சயம்.

இந்தப் போட்டியின் மேலும் ஒரு சுவாரஸ்யம், பங்களாதேஷ் அணிக்கு இது ஒரு பழிவாங்கும் போட்டியாக அமையவுள்ளது.

ஆசியக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினால் சொந்த மண்ணில் வைத்துத் தோற்கடிக்கப்பட்ட அவமானமும், வரலாற்றில் ஆப்கானிஸ்தானிய அணியினால் தோற்கடிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட் அணி என்ற வடுவும் இன்று எப்படியாவது வென்றாகவேண்டும் என்ற அழுத்தத்தை முஷ்பிகுர் ரஹீமின் அணிக்குக் கொடுக்கிறது.

அத்துடன் போட்டிகளை நடத்துகின்ற அணி இல்லாமல் ஓர் உலகக் கிண்ணமா என்ற நிலை 21ஆம் திகதிக்குப் பிறகு ஏற்படுமாக இருந்தால் ICCக்கு பார்வையாளர்கள் குறைந்த போட்டித் தொடராக இது பொருளாதார ரீதியில் தோல்வியாக அமையக் கூடும்.

அடுத்த 'பெரிய' அணி? அயர்லாந்து சவாலுக்குத் தயார்

ஆனால், ஆப்கானிஸ்தான் அணி T20 போட்டிகளுக்கு என்றே பிறந்தது போல சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஓர் அணி.

அண்மையில் ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணிக்குக் கூட தம் போராட்ட குணத்தை வெளிக்காட்டிய அணி. அத்துடன் இவ்வணியின் உறுதியும் வேகமாக வளரும் ஆற்றலும் கண்டு உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இன்றைய முக்கிய மோதலின் முடிவை இரு அணிகளின் பக்கமும் உள்ள அதிரடி துடுப்பாட்ட வீரர்களும், சகலதுறை வீரர்களும் தீர்மானிக்கக் கூடும். அத்துடன் ஆடுகளங்கள் சுழல் பந்துவீச்சை ஆதரிப்பதாக அமைந்தால் பங்களாதேஷ் அணிக்கான சாதகம் கூடலாம்.

வங்கப் புலிகளா, நீலப் புலிகளா என்ற வினாவுக்கு இன்றைய முதலாவது விறுவிறு போட்டி விடை தரும்.

இன்றைய இரண்டாவது போட்டியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தங்களின் கரங்களை உயர்த்திக்காட்ட நேபாளமும் ஹொங்கொங்கும் அறிமுகமாகப் பயன்படுத்தலாம்.

நேபாள அணியின் துடுப்பாட்டம் பலரிடம் சிலாகிப்பை வென்று வரும் அதேவேளை, ஹொங்கொங் அணி பயிற்சி ஆட்டம் ஒன்றில் சிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது.

சிம்பாப்வேக்கான வசந்த காலம் மீண்டும் எப்போது?

நாளை B பிரிவின் முதலாவது போட்டியில் அப்பிரிவின் அதிக வாய்ப்புள்ள இரு அணிகளும் மோதுகின்றன. சிம்பாப்வே எதிர் அயர்லாந்து.

அண்மைக்காலமாக தங்கள் முன்னைய புகழைக் கொஞ்சம் இழந்திருக்கின்ற சிம்பாப்வே அணிக்கு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தாமும் முக்கிய அணி என்பதைக் காட்ட இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்காது.

warm up போட்டியில் ஹொங்கொங் அணியிடம் கண்ட தோல்வியில் இருந்து மீண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக அபாரமான வெற்றியைப் பெற்றது.

எனினும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தரத்தில் டெஸ்ட் அந்தஸ்து உள்ள அணிகளுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு முன்னேறி வரும் அயர்லாந்து அதிக வாய்ப்புக்களை கொண்டிருக்கிறது என்பது பலரினதும் அபிப்பிராயம்.

அயர்லாந்து அணியின் வளர்ச்சி, கிரிக்கெட் அவதானிகள் பலருக்கும் இந்த அணிக்கு விரைவாக டெஸ்ட் அந்தஸ்தை வழங்கவேண்டும் என்று மனமார வலியுறுத்திச் சொல்லும் அளவுக்கு உறுதியாகவும் வேகமாகவும் இருக்கிறது.

டெஸ்ட் அந்தஸ்தில்லாத அணிகள் விளையாடும் ஒவ்வொரு தொடர்களிலும் அயர்லாந்தின் ஆதிக்கம். கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் தன் முத்திரை பதித்தே வருகிறது. இம்முறையும் இந்தப் பிரிவிலிருந்து 1ஆம் பிரிவுக்கு செல்லக் கூடிய அதிக வாய்ப்புள்ள அணியாக அயர்லாந்தே தெரிகிறது.

ஆனால், அயர்லாந்துக்கும் சிம்பாப்வேக்கும் நெதர்லாந்து, ஐக்கிய அரபு ராஜ்ஜிய அணிகளிடம் இருந்து சவால் வரும். காரணம் இவ்விரு அணிகளும் Associate நாடுகள் என்று சொல்லப்படும், டெஸ்ட் அந்தஸ்தில்லாத அணிகளுக்கான போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி பதப்பட்டுள்ள அணிகள்.

ஆனாலும் இறுதித் தடை கடக்கும் ஏதோ ஒரு முக்கிய ஆற்றல் இவ்விரு அணிகளிடம் குறைவாகவே இருக்கிறது.

தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டியில் கிண்ணத்தைப் பகிர்ந்த இலங்கை - பாகிஸ்தான் தலைவியர் - நவம்பர் 2013

இந்த எல்லாப் போட்டிகளும் முதலாவது போட்டி இலங்கை நேரப்படி 3 மணிக்கும், இரண்டாவது போட்டி 7 மணிக்கும் ஆரம்பிக்கும்.

12 முதல் கட்டப் போட்டிகளின் பின்னர் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு உலக கிரிக்கெட் ரசிகர்களின் அதிக ஆர்வத்தைத் தூண்டுகின்ற மிகப் பெரிய கிரிக்கெட் மோதலோடு அடுத்த முக்கிய கட்டம் ஆரம்பம்.

ஆமாம்...

கிரிக்கெட்டையும் தாண்டி ஒரு பெரும் போராகவே காணப்படும் இந்திய - பாகிஸ்தானிய மோதல் தான் அடுத்த கட்டத்தின் முக்கிய போட்டி. சுவாரஸ்யமான கட்டங்கள் சூடு பறக்க ஆரம்பிக்கும்.

இலங்கை அணியின் முதலாவது போட்டி தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்துக்கும் இடையிலான ஒப்பந்த சிக்கலால் ஒரு கட்டத்தில் இலங்கை அணியின் சிரேஷ்ட, வழமையான வீரர்கள் இல்லாத 'மாற்று' அணி அனுப்பப்படுமோ என்ற நிலை மாறி இப்போது இலங்கை அணியானது பங்களாதேஷ் பயணமாகியுள்ள நிலையில், இலங்கை அணி இதுவரை வெல்லாத சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிண்ணம் இம்முறையாவது கரம் கிட்டுமா என்று ஏக்கத்துடன் இலங்கை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இரண்டு தடவை இறுதிப் போட்டி வரை வந்து மயிரிழையில் கிண்ணத்தைத் தவறவிட்ட துரதிர்ஷ்டசாலி அணி. அதிலும் வெல்லக்கூடிய வாய்ப்பான நிலையிலிருந்து கடந்தமுறை சொந்த மண்ணில், சொந்த ரசிகர்கள் முன்னால் கிண்ணத்தை மேற்கிந்தியத் தீவுகளிடம் கொடுத்து விட்டது மறக்க முடியாதே.

தகுதிகாண் சுற்று இல்லாமல் நேரடியாகத் தகுதி பெற்ற அணிகளுக்கு தலா இரண்டு பயிற்சிப் போட்டிகள் - warm up matches இருப்பதும் அவற்றில் இலங்கை விளையாடவுள்ள போட்டிகள் இரண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளதும் மகிழ்ச்சியான விடயங்கள்.

அடுத்த கட்டம், அதிகம் எதிர்பார்ப்புள்ள 8 அணிகள் பற்றி அடுத்து வரும் எனது விரிவான அலசலை ஓரிரு நாட்களில் இதே பகுதியில் எதிர்பாருங்கள்.

www.arvloshan.com

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .