2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இலங்கையின் வெளியேற்றத்திற்கு சனத்தும் கிரிக்கெட் சபையும் காரணமா?

A.P.Mathan   / 2015 மார்ச் 21 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கோபிகிருஷ்ணா கனகலிங்கம்

தலைப்பிற்கான குறுகிய விடை: ஆம். அவர்களின் பங்கு மிக முக்கியமானது. விரிவான விடைக்குத் தொடர்ந்து வாசிக்குக.

கிரிக்கெட் உலகக்கிண்ணப் போட்டிகளில் 1996ஆம் ஆண்டு இலங்கை சம்பியன்களாக மாறியதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாகச் சிறப்பான பெறுபேறுகளையே இலங்கை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. அடுத்த உலகக்கிண்ணத்தில் (1999) ஆரம்பத்திலேயே வெளியேறியிருந்தாலும், 2003ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் அரையிறுதி வரையும், 2007ஆம் ஆண்டும் 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ணங்களில் இறுதிப் போட்டி வரையும் இலங்கை முன்னேறியிருந்தது.

அதன்படி, இவ்வாண்டு இடம்பெறும் உலகக்கிண்ணத் தொடரிலும் இலங்கை அணி மீது எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது போட்டியில் தோல்வி, அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானிற்கெதிராக தடுமாறிப் பெற்ற வெற்றி எனக் காணப்பட்ட போதிலும், அதன் பின்னரான பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கெதிரான மிகச்சிறப்பான ஆட்டமும், பலமிக்க அவுஸ்திரேலிய அணிக்கெதிராக போராடித் தோற்றமையும் இலங்கை அணி மீது நம்பிக்கை கொள்ள வைத்தது. இதுவரை காலமும் உலகக்கிண்ணப் போட்டிகளில் 'நொக் அவுட்' போட்டிகள் எவற்றிலும் வெற்றிபெறாத, தடுமாறும் அணியான தென்னாபிரிக்காவிற்கெதிராக காலிறுதிப் போட்டி அமைய, இலங்கை அணிக்கு வாய்ப்புக்கள் இருப்பதாகக் கருதப்பட்டது. தென்னாபிரிக்க அணி பலமான அணியென்ற போதிலும், இலங்கை அணியின் உலகக்கிண்ணத் திறமை வெளிப்பாடுகளும், தென்னாபிரிக்க அணி 'நொக் அவுட்' போட்டிகளில் தடுமாறுவதும் இலங்கைக்கான வாய்ப்புக்களை வழங்குவதாக அமைந்தது. ஆனால், இலங்கை அணி படுதோல்வியைச் சந்தித்திருந்தது.

காலிறுதிப் போட்டி வெற்றிக்கு தென்னாபிரிக்க அணி மிகவும் பொருத்தமான அணியாக அமைந்து கொண்ட போதிலும், இலங்கை அணியின் தோல்வியின், தோல்வியடைந்த முறையும் கேள்விகளையும், வருத்தங்களையும், கோபத்தையும் இரசிகர்களிடம் ஏற்படுத்தியிருந்தது. இலங்கை அணியின் தோல்விக்கான காரணம் தான் என்ன? அல்லது, காரணங்கள் தான் எவை? இலங்கை அணியின் பெறுபேறுகளை ஆராய முன்பதாக, ஒரு வருடமாவது முன்சென்று, இலங்கையின் திறமை வெளிப்பாடுகளை மீட்டுப் பார்ப்பது பொருத்தமானது.

கடந்தாண்டு பெப்ரவரியிலிருந்து இலங்கை அணி மிகச்சிறப்பான திறமை வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தது. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்களாதேஷில் வைத்து பங்களாதேஷிற்கெதிராக 3-0 என்ற தொடர் வெற்றி, பங்களாதேஷில் ஆசியக் கிண்ண சம்பியன்கள், அயர்லாந்திற்கெதிரான ஒரு போட்டியில் வெற்றி, இங்கிலாந்தில் வைத்து இங்கிலாந்திற்கெதிராக 3-2 என்ற கணக்கில் வெற்றி, பாகிஸ்தானுக்கெதிராக 2-1 என்ற கணக்கில் வெற்றி எனச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தது. தென்னாபிரிக்காவிற்கெதிரான 1-2 என்ற தொடர் தோல்வியே அக்காலப்பகுதியில் இலங்கையில் ஒரே தொடர் தோல்வியாக அமைந்தது.

பாகிஸ்தானுக்கெதிரான தொடர் ஓகஸ்ட் 30ஆம் திகதி நிறைவடைய, அதன் பின்னர் இடம்பெறவுள்ள இங்கிலாந்துத் தொடர், நியூசிலாந்துத் தொடர், உலகக்கிண்ணம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, இலங்கை அணியானது உடற்தகுதிப் பயிற்சிகளில் ஈடுபட்டு, அதன் பின்னர் ஒரு மாத காலத்திற்கு திறன் பயிற்சிகளில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டு, உடற்தகுதிப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரின் நடுவே வெளியேற, அதை நிரப்புவதற்காக இலங்கை அணியை 5 போட்டிகள் கொண்ட தொடருக்கு அழைத்தது. அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபை முடிவுசெய்தது. இதன்படி, இலங்கை அணியின் 6 வார காலத்திற்கான உடற்தகுதிப் பயிற்சிகள் நடுவே நிறுத்தப்பட்டு, ஒரு மாத காலத்திற்குத் திட்டமிடப்பட்டிருந்த திறன் சார்ந்த பயிற்சிகள் ஒருவார காலத்திற்கு மாற்றப்பட்டன. இதற்கான எதிர்ப்பை குமார் சங்கக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்த, அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸும் போதுமான தயார்படுத்தல் இல்லாமை குறித்து கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்திய கிரிக்கெட் சபையின் நட்பு, அதன் மூலமான நிதியியல் நன்மைகள் என்ற குறுகியகால அனுகூலங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு, இலங்கை அணியின் உலகக்கிண்ணம் என்ற ஓரளவு நீண்டகாலத் திட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்தியத் தொடரில் இலங்கை அணி 0-5 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்திருந்தது. முதலாவது போட்டியில் 169 ஓட்டங்களால், 2ஆவது, 3ஆவது போட்டிகளில் 6 விக்கெட்டுக்களால், 4ஆவது போட்டியில் 153 ஓட்டங்களால் (இதில் றோகித் சர்மா இரட்டைச்சதம் பெற்றதோடு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களைப் பெற்றிருந்தார்), 5ஆவது போட்டியில் 3 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்திருந்தது. ஐந்தாவது போட்டியைத் தவிர எந்தப் போட்டியிலும் இலங்கை அணியால் இந்திய அணிக்கு எந்தவிதமான நெருக்கடியையும் வழங்க முடிந்திருக்கவில்லை. மிகவும் வெற்றிகரமான ஒரு வருடத்தில், முதன்முறையாக இலங்கை அணி பலவீனமானதாக, வெற்றிபெறுவது எப்படி எனத் தெரியாத அணியாகத் தெரிந்தது.

அதற்கடுத்து இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான 7 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 5-2 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால், இங்கிலாந்திற்கு ஓரளவு பரிட்சயமான அவுஸ்திரேலிய, நியூசிலாந்து ஆடுகளங்களில் இடம்பெறும் உலகக்கிண்ணப் போட்டிகளின் குழு நிலைப் போட்டிகளைத் தாண்டி முன்னேறாத இங்கிலாந்து அணிக்கெதிராக, அவர்கள் வழக்கமாகவே தடுமாறுகின்ற எங்களது ஆடுகளங்களில் பெறப்பட்ட வெற்றி என்ற வகையிலேயே இத்தொடர் வெற்றியைக் கருத வேண்டியிருக்கிறது.

அதன் பின்னர் நியூசிலாந்தில் வைத்து நியூசிலாந்திற்கெதிராக 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கை 2-4 என்ற கணக்கில் தோல்வியடைய, உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக இரண்டு பாரிய, மோசமான தொடர் தோல்விகளுடன், குறைந்தளவு மனவுறுதியுடன் இலங்கை அணி உலகக்கிண்ணத்தில் நுழைந்தது. 

உலகக்கிண்ணத்தில் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக 98 ஓட்டங்களால் தோல்வியடைந்த இலங்கை, அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கெதிராகத் தடுமாறியே வெற்றிபெற்றிருந்தது. அடுத்த இரண்டு போட்டிகளில் பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கெதிராக சிறப்பான வெற்றிகளைப் பெற்று, இலங்கை அணி சிறந்த மனவுறுதியைப் பெற்றது. தொடர்ந்து அவுஸ்திரேலியாவிற்கெதிராகவும் ஓரளவு சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருந்தது.

ஆனால், இந்தியத் தொடரிலும் சரி, நியூசிலாந்துத் தொடரிலும் சரி, உலகக்கிண்ணப் போட்டிகளிலும் சரி இலங்கை அணி களத்தடுப்பில் மோசமாகத் தடுமாறியிருந்தது. றோகித் சர்மாவின் 264 ஓட்டங்களில் அவர் 4 தடவைகள் வழங்கிய பிடிகளை இலங்கை தவறியிருந்தது. இந்த மோசமான களத்தடுப்புப் பெறுபேறுகள் உடற்தகுதிப் பயிற்சிகள் போதுமானதாக இல்லாததால் ஏற்பட்ட விளைவா என்பதை ஆராய வேண்டிய தேவையுள்ளது. அத்தோடு, திறன் பயிற்சிகளும் குறைக்கப்பட்டிருந்த நிலையில், களத்தடுப்பில் மோசமான நிலைமை என்பது நிச்சயமாக அதன் விளைவாக அமைந்தன என்பது வெளிப்படையானது. இலங்கை அணி பொதுவாக சிறப்பான களத்தடுப்பிற்குப் பெயர்போன அணி என்பது முக்கியமானது.

இதனைத் தவிர, உலகக்கிண்ணத்திற்காக இலங்கை சார்பாக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட குழாமில் 5 வீரர்கள் உடற்தகுதிப் பிரச்சினைகள் காரணமாக குழாமிலிருந்து வெளியேற வேண்டியேற்பட்டிருந்தது. அதில், ரங்கன ஹேரத் மாத்திரம் களத்தில் பந்து பட்டதன் காரணமாகக் காயமடைந்திருந்தார். ஏனைய நால்வரும் தசைநார் அல்லது தசை, என்பு சார்ந்த உபாதைகள் காரணமாக வெளியேற்றப்பட்டிருந்தனர். அவர்களது உடற்தகுதி சிறப்பான அளவில் காணப்பட்டிருக்கவில்லை என்பதே அதன் உண்மையாகும். இலங்கை மாத்திரம் எவ்வாறு அவ்வளவு அதிகமான உடல் உபாதைகளைச் சந்திக்க வேண்டியேற்பட்டது என்பது வினாவிற்குரியதே.

இவற்றைத் தவிர, காலிறுதிப் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக குசால் ஜனித் பெரேரா களமிறக்கப்பட்டிருந்தார். இதற்கு முதல் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகத் துடுப்பாடிய லஹிரு திரிமன்ன ஓரளவு சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தாலும், காலிறுதிப் போட்டியில் திடீரென இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பலமான பந்துவீச்சு, அழுத்தம் கூடிய போட்டி, இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய அனுபமில்லாத குசால் பெரேரா, லஹிரு திரிமன்னவில் ஓரளவு சிறந்த துடுப்பாட்டம் ஆகிய விடயங்கள் புறக்கணிக்கப்பட்டு, குசால் பெரேரா ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறக்கப்பட்டார். இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்திருந்தார். லஹிரு திரிமன்னவும் இரண்டாவது ஆட்டமிழந்திருக்கலாம் என்ற போதிலும், முதலாவது ஓவரிலேயே குசால் பெரேரா பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய விதமும், எப்போது வேண்டுமானாலும் ஆட்டமிழக்கப் போகிறார் என்ற உணர்வும் இருந்ததை மறுக்க முடியாது. குசால் பெரேரா ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கக் கூடும் என்ற செய்தி வெளியானதும், இலங்கை அணியின் பெரும்பாலானா இரசிகர்கள் அந்த முடிவு சிறப்பானதாக அமையாது என்பதை சமூக ஊடகத் தளங்கள் மூலமாக வெளிப்படுத்தியிருந்தனர். சாதாரணமான இரசிகர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியுமெனில், அதைத் தொழிலாகக் கொண்டிருக்கும் முன்னாள் வீரர்களான தேர்வாளர்களாலும், பயிற்றுவிப்பாளராலும் புரிந்து கொள்ள முடியாமற் போனமையை எவ்வாறு அழைப்பது?

இவ்வாறு முக்கியமான போட்டியொன்றில் திடீரென மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது இலங்கையின் தேர்வாளர்களுக்குப் புதிதானதொன்றுமல்ல. கடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி 4 மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது, அதில் அஞ்சலோ மத்தியூஸ் காயமடைந்து வெளியேறியமை தவிர, ஏனைய மாற்றங்கள் விரும்பி ஏற்படுத்தப்பட்டன. அப்போட்டியின் முடிவை இலங்கை இரசிகர்கள் அறிவார்கள்.

முக்கியமான நொக் அவுட் போட்டிகளில் அணி தளம்பல் மனநிலையுடன் காணப்படுகிறது என்பதை இவ்வாறான அவசரமான மாற்றங்கள் உணர்த்துவதோடு, அணியின் மனநிலையிலும் நிச்சயமாக மாற்றங்களைச் செலுத்தும். அத்தோடு, எதிரணி தளம்பல் மனநிலையுடன் காணப்படுகிறது என்பது இலங்கையோடு விளையாடும் அணிகளுக்கு நிச்சயமாக மனவுறுதியை வழங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்துவீச்சு என்பன இலங்கையின் தோல்விக்கான பொறுப்புக்களில் முக்கியமான பொறுப்பை ஏற்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் களத்திற்கு வெளியே எடுக்கப்பட்ட பல முடிவுகள் இலங்கையின் மோசமான பெறுபேறுகளுக்கு மிக முக்கியமான தாக்கங்களை செலுத்தியிருக்கின்றன என்பதை இலங்கை கிரிக்கெட் சபையும், தேர்வாளர்களும் - குறிப்பாக பலமிக்க பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய - புரிந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவுமான தேவை ஏற்பட்டிருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .