2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மங்கிய நட்சத்திரங்கள்

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அணியில் விளையாடுவதே விளையாட்டு வீரனின் கனவு. உலகக்கிண்ணம் ஒலிம்பிக் ஆகியவற்றில் விளையாடுவது அவர்களின் இலட்சியம். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் ரசிகர்களின் கோலாகலத் திருவிழா பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பமாகிறது. காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதி, கிரிக்கெட் மீது பெருங்காதல் கொண்டவர்களின் நாளாகவும் அமையப்போகிறது.

தேசிய அணியில் இடம்பிடித்த வீரர்கள் உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடுவதற்காக தமது திறமைகளை மேலும் வலுவூட்ட பிரயத்தனப்பட்டனர். உலகக்கிண்ண அணியில் இடம் கிடைக்குமென காத்திருந்த வீரர்கள் பலரின் ஆசையில் மண் விழுந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முறையற்ற பந்து வீச்சு என்ற குற்றச்சாட்டு திறமையான வீரர்களை முடக்கியது.

நம்பிக்கைதரும் நட்சத்திர வீரர்களாக மின்னிய வீரர்கள் மதிப்பிழந்து செல்லாக்காசாகி விட்டனர். உலகக்கிண்ன சம்பியனான இந்தியாவின் வெற்றியில் பெரும் பங்காளிகளான ஷேவாக், கம்பீர், யுவராஜ் சிங் ஆகிய மூவரும் அணியில் தமக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என நம்பி ஏமாந்துபோனார்கள். டுவென்டி 20, ஒருநாள் போட்டி ஆகிய இரண்டிலும் அசத்திய யுவராஜ் சிங், நொந்து போயுள்ளார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் 362 ஓட்டங்கள் அடித்து 15 விக்கெட்களை கைப்பற்றி தொடர்நாயகன் விருதை பெற்றவர் யுவராஜ் சிங். அடுத்த உலகக் கிண்ணப் போட்டியிலும் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருந்தது. சகலதுறை வீரரான யுவராஜ் ஓரம் கட்டப்பட்டார். டுவென்டி 20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி அவரின் வாழ்க்கையை திசை திருப்பியது. இந்தியா வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை யுவராஜ் சிங்கின் விளையாட்டு தகர்த்தது. விளயாடக்கூடிய உடல் தகுதி அன்று அவருக்கு இருக்கவில்லை. ஆனாலும் களமிறக்கப்பட்டு பலிக்காடாவாக்கப்பட்டார்.

இந்தியா உலகக் கிண்னத்தை பெற கம்பீரின் விளையாட்டும் ஒரு காரணம். ஷேவாக்கும் சச்சினும் ஆட்டமிழந்ததும் இந்தியாவின் தோல்வி உறுதி என்ற நம்பிக்கை ஏற்பட்டது. தோல்வி முகத்தைச் சகிக்க முடியாத இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு படுத்து விட்டார்கள். கம்பீரின் எழுச்சி இலங்கை வீரர்களைத் திணறடித்தது.

உலகக் கிண்ணத்தை வென்ற ஷேவாக், கம்பீர், யுவராஜ்சிங், ஹர்பஜன் சிங், சஹீர்கான், நெஹ்ரா ஆகியோர் அணியில் இல்லை. சச்சின் ஓய்வுபெற்றுவிட்டார். ஸ்ரீநாத் ஆட்ட நிர்ணய சதியில் சிக்கியுள்ளார். டோனி, கோஹ்லி, ரெய்னா, அஸ்வின் ஆகிய நால்வர் மட்டும் அணியில் உள்ளனர். ஏனையவர்கள் புதியவர்கள்.

மேற்கிந்தியத் தீவுகளின் ஆதிக்கம் 1970களில் மிக அதிகமாக இருந்தது. அந்த அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறுவதென்பது மிகக்கடினமானது. 1975-79 களில் உலகக்கிண்ண சம்பியனான மேற்கிந்தியத்தீவுகளின் கிரிக்கெட் தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது.

1983ஆம் ஆண்டு அரையிறுதிவரை முன்னேறியது. டுவென்டி 20 முன்னாள் சம்பியன் என்ற சொற்பபெருமையுடன் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தயாரான மேற்கிந்தியத்தீவுகளின் நட்சத்திர வீரர்களான டுவைன் பிராவோ, பொலார்ட் ஆகிய இருவரும் உலகக்கிண்ண அணியில் சேர்க்கப்படவில்லை. இது திட்டமிட்ட பழிவாங்கலாகவே கருதப்படுகிறது.

இந்தியத்தொடரை பாதியில் கைவிட்டு நாடு திரும்பிய குற்றச்சாட்டு பிராவோ மீது சுமத்தப்பட்டது. சகலதுறை ஆட்டக்காரனான பொலார்ட், பிராவோ ஆகியோர் இல்லாதது மேற்கிந்தியத்தீவுகளுக்கு பெரும் இழப்புத்தான். முறை தவறி பந்து வீசியதாக குற்றம் சுமத்தப்பட்ட சுனில் நரேன், உலகக்கிண்ன அணியில் இருந்து வெளியேறிவிட்டார். மேற்கிந்தியத்தீவுகளின் விக்கெட் வேட்டைக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து படுதோல்வியடைந்ததனால் தலைமைப்பதவியில் இருந்துக் தூக்கப்பட்ட அலெஸ்டர் குக், உலகக்கிண்ன அணியில் சேர்க்கப்படவில்லை. ஆஷஸ் கிண்ணப்போட்டியில் தோல்வியடைந்ததனால் பீற்றர்ஸனின் தலைமைப்பதவி பறிக்கப்பட்டது. நிர்வாகத்துடன் முரண்பட்ட பீற்றர்ஸன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை நிர்வாகத்தின் மீது சுமத்தினார். என்றாலும் உலகக்கிண்ன அணியில் இடம் கிடைக்கும் என நம்பி ஏமாந்துபோனார்.

காயத்தால் அவதிப்படும் உமர்குல் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை. சொஹிப் மாலிக் கம்ரன் அக்மல் ஆகியோரையும் பாகிஸ்தான் தேர்வாளர்கள் கண்டுகொள்ளவில்லை. தென்.ஆபிரிக்காவின் ரயன் டுமினி, பங்களாதேஷ் வீரர் ருபெல் ஹசைன், இலங்கையின் அஜந்த மென்டிஸ், அவுஸ்திரேலிய வீரர் ரியான் ஹரிஸ், நியூஸிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷிம் ஆகியோரும் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • Ram Friday, 13 February 2015 11:01 AM

    India section team very bad

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .