2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


காலத்திற்கு காலம் புதிய வீரர்கள் பலரை கிரிக்கெட் பார்த்திருந்தாலும் இதுவரை காலமான டெஸ்ட் போட்டிகளின் முதுகெலும்புகள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தான். பொதுவாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற சகல அணிகளையும் எடுத்து பார்க்கும் போது வீரர்கள் பலர் காணப்பட்டாலும் ஜாம்பவான்கள் என்று வர்ணிக்கக்கூடிய ஒரு சில வீரர்களே அணியின் வெற்றியில் பெரிதும் தாக்கம் செலுத்தியிருப்பார்கள். இலங்கை கிரிக்கெட்டை பொறுத்தவரையில் முரளிதரன், சமரவீர, சங்கக்கார, ஜெயவர்த்தன என்று அந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களை எழுமாறாக நிரப்பலாம். 
 
மேலே குறிப்பிடப்பட்ட வீரர்களில் இம்முறை பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டிகளின் பிறகு தனது ஓய்வை அறிவித்திருந்த மஹேல ஜெயவர்த்தன பற்றிய தகவல்களை சுமந்து வரும் ஒரு சிறிய பதிவே இது. 
 
1977ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி கொழும்பில் செனெரத் ஜெயவர்த்தன, சுனிலா தம்பதிகளுக்கு புதல்வனாய் பிறந்தவர் மஹேல ஜெயவர்த்தன. தன்னுடைய இளைய சகோதரன் திஷாலை 16 வயதிலேயே புற்று நோய்க்கு பலிகொடுத்த மஹேல, அந்த பாதிப்பில் மிக நீண்ட நாட்களை கழித்தார். பெற்றார், நண்பர்களின் உதவியுடன் அதிலிருந்து மீண்ட மஹேல - மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கொழும்பு நாலந்தா கல்லூரியில் ஆரம்ப கால கல்வியை கற்கும் போதே மஹேல ஜெயவர்தன NCC அணிக்காக விளையாடியமை குறிப்பிடத்தக்கது. பின்னர் 1995ஆம் ஆண்டு SSC அணிக்காக மஹேல ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருடைய எதிர்காலமும் தான் ஆரம்ப கால கட்டத்தில் விளையாடும் கழகத்திற்காக அளித்த சேவையிலே தங்கியிருப்பது நாம் அறிந்ததே. அதேபோல் தான் கழகங்களுக்கு செய்த சேவைக்காக 1997ஆம் ஆண்டு மஹேல ஜயவர்தனவிற்கு இலங்கை கிரிக்கெட் அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. இலங்கை டெஸ்ட்டின் 69ஆவது வீரர் மஹேல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடயம். 
1997ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி இந்திய அணிக்கெதிராக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை சர்வதேச அரங்கில் ஆரம்பித்தார் மஹேல. அந்த போட்டியை பொறுத்த வரை இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற அணி என்ற பெருமையை தனதாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சனத் ஜயசூரிய, ரொஷான் மஹனாம அதிகூடிய இணைப்பாட்டம் என பல சாதனைகளால் சொல்லப்பட்ட ஒரு போட்டியில் தன் கிரிக்கெட் சகாப்தத்தை ஆரம்பிப்பது என்பது ஒவ்வொரு வீரனுக்கும் ஒரு கனவாகவே இருக்கும். அந்த போட்டியிலும் கூட 66 ஓட்டங்களையும் பெற்று இரண்டு ஓவர்களும் பந்து வீசியிருந்தார் மஹேல ஜெயவர்த்தன. இந்த 66 ஓட்டங்களும் இலங்கை கிரிக்கெட்டிற்கு ஒரு சிறந்த வீரரின் வருகையை அந்நாட்களில் நினைவூட்டியது. 
 
மஹேல ஜெயவர்தன தன் வாழ் நாளில் பல சாதனைகளை கடந்திருந்தாலும் தக்க நேரத்தில் தேவைப்பட்ட ஓர் உலக சாதனையாக 2006ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க அணிக்கெதிராக குமார் சங்கக்காராவுடன் பெற்ற 624 ஓட்டங்கள் அமையப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதிலும் தன்னுடைய முதலாவது டெஸ்ட் போட்டியில் நிலை நாட்டப்பட்ட சாதனையை தானே முறியடித்தல் என்பதுவும் மஹேலவிற்கு மேலதிக உந்துகோலாக இருந்தது. அதே போட்டியில் 374 ஓட்டங்களை பெற்ற மஹேல இன்றுவரை இலங்கை அணி சார்பாக டெஸ்ட் போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரராக திகழ்கின்றமையும் விஷேட அம்சமாகும். இதையும் தாண்டி ஒரு பந்துவீச்சாளர் வீசிய பந்துகளுக்கு அதிகூடிய பிடி எடுப்புகளை பெற்ற வீரர் என்ற பெருமையையும் மஹேல கொண்டிருக்க, அது முத்தையா முரளிதரன் பெற்ற விக்கெட்டுகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.  
 
டெஸ்ட் போட்டிகளில் 11,671 ஓட்டங்களை பெற்றுள்ள மஹேல ஜெயவர்த்தன 50.09 என்ற சராசரியில் ஓட்டத்தை குவிதிருப்பதும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று. இதில் 34 சதங்களும் 48 அரைச்சதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் 200 பிடியெடுப்புகளையும் மஹேல பெற்றிருப்பது மூலம் இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிகளில் பாரிய பங்கினை மஹேல வழங்கியிருப்பதை கிரிக்கெட் ரசிகர்களால் அவதானிக்க கூடியதாய் இருக்கும். 2006ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபை அறிமுகப்படுத்திய "Captain of the Year 2006" விருதும் மஹேலவின் கைகளை சேர்ந்தது. 2007ஆம் ஆண்டு "Spirit of Cricket Award 2007" விஸ்டன் விருதும் மஹேல ஜெயவர்த்தனவிற்கு கிடைக்கப்பெற்றது இலங்கை கிரிக்கெட்டை மேலும் பெருமை படுத்தியது. 
இவற்றையும் தாண்டி ஒரு மனித நேயத்துடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மஹரகமவில் "Hope Cancer Hospital" என்ற ஒரு மருத்துவமனையை நிர்மாணிப்பதிலும் மஹேல ஜயவர்தன தன்னாலான பங்களிப்பை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை கிரிக்கெட்டை சர்வதேச அளவில் உயர்த்திய மஹேல ஜெயவர்த்தனவை இனி டெஸ்ட் போட்டிகளில் காணும் வாய்ப்பை ரசிகர்கள் இழந்தாலும், 2015 உலகக்கிண்ண போட்டிகள் வரையில் ஒருநாள் போட்டிகளில் மஹேல விளையாடவிருப்பதாக அறிவித்திருந்தமை கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. இலங்கை கிரிக்கெட் இருக்கும்வரை அது மஹேல புகழ் பாடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 
 
இப்படிக்கு,
மஹேல ரசிகன்,
Rimaz Ahamadh 


You May Also Like

  Comments - 0

  • Senthil AM Friday, 08 August 2014 11:21 AM

    நன்றி

    Reply : 0       0

    s.thowfeek Saturday, 09 August 2014 06:23 AM

    wish all tha best

    Reply : 0       0

    ajithvijay Friday, 12 September 2014 09:54 AM

    தென் ஆபிரிக்காவிடம் அடைந்த தோல்வி காரணத்தை விபரிக்க மறந்தது ஏன்.?

    Reply : 0       0

    shanthan Saturday, 18 October 2014 02:23 AM

    good cricket

    Reply : 0       0

    shanthan Saturday, 18 October 2014 02:26 AM

    good cricket mahala

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .