2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மேற்கிந்திய தீவுகள் மீண்டும் தோல்விப்படியில்; பாகிஸ்தான் வெற்றி படியில்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள்ப் போட்டித்தொடர் நிறைவடைந்துள்ளது. இந்த இரண்டு அணிகளுமே எப்போது வெற்றி பெறும், தோல்வியை பெறும் என கூற முடியாத அணிகள். மேற்கிந்திய தீவுகள் அணி நல்ல அணியாக மீண்டும் எழுந்து வருகின்றது. நல்ல போட்டிகளை வழங்கும் அணியாக மாறி வருகின்றது என்ற நிலையில் இந்த தொடர் ஆரம்பமானது. இலங்கை, இந்திய அணிகள் பங்கு பற்றிய முக்கோண ஒருநாள்ப் போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்கு வராவிட்டாலும் இரண்டு அணிகளையும் வெற்றி பெற்றது. அதன் பின் நடைபெற்ற தொடரில் மிக மோசமான தொடர் தோல்வி. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3 இற்கு 1 என்ற ரீதியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற தொடரில் இப்படி மோசமான தோல்வி என்பது மேற்கிந்திய தீவுகளுக்கு பலத்த அடி.
 
ஆனால் பாகிஸ்தானுக்கு நல்ல ஒரு மீள் வருகை. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் மிக மோசமாக சகல போட்டிகளிலும் தோல்வியை சந்த்தித்தது பாகிஸ்தான் அணி. கிண்ணப் போட்டிகளில் முதற்ப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதற்கு மிக பெரியளவில் பதிலடி கொடுத்துள்ளது. 
 
பாகிஸ்தான் அணி எப்போதுமே பலமான அணியாக கருதப்படும் அணி. எந்த தொடருக்கு சென்றாலும் இலகுவாக எந்த காலத்திலும் எடுக்கப்பட முடியாத அணி. இந்த தொடரிலும் அப்படியே இருந்தது. ஆனாலும் மேற்கிந்திய தீவுகள் மீண்டும் பலத்தை காட்டி வருவது பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடர் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் மிக இலகுவாக தங்கள் பலத்தை காட்டி வென்றார்கள். இந்த இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி ஏன் தோல்வியை சந்தித்தது என கேட்டால் பதில்கள் இல்லை. நட்ச்சத்திர வீரர்கள் என பட்டியலிட்டாலும் 20-20 போட்டிகளில் அவர்கள் நட்சத்திரங்களே. ஒருநாள்ப் போட்டிகளில் என்று வரும்போது அது வித்தியாசமாக அமைந்து விடும். அணியின் மாற்றங்கள், தலைவர் மாற்றம் என்பன கூட அணியின் நிலையை மாற்றும். இவைதான் மேற்கிந்திய தீவுகளின் பிரச்சினை அல்லது தோல்விக்கு காரணம் என சொல்ல முடியும். வேற என்ன காரணம்தான் சொல்ல முடியும்.  
ஓட்டங்கள் என்று பார்க்கும்போது இரு அணி வீரர்களும் சராசரி ஓட்டங்களை குவித்தே உள்ளனர். இதனடிப்படையில் பார்க்கும்போது தொடரில் பாகிஸ்தானின் பந்துவீச்சு மிக அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது. முதற்ப் போட்டி தவிர்த்து மற்றைய நான்கு போட்டிகளில் ஒரு சமநிலை தவிர மற்றைய மூன்று போட்டிகளும் ஓட்டங்களின் அடிப்படியில் இறுக்கமாக இருந்துள்ளன. பாகிஸ்தான் அணியின் பலமான பந்துவீச்சு மேற்கிந்திய தீவுகளை கட்டுப்படுத்தியுள்ளது. அல்லது மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்டம் மோசமாக இருந்துள்ளது. அப்படி பார்த்தாலும் பாகிஸ்தானின் துடுப்பாட்டம் போதுமானதாக இருந்துள்ளதா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்பதே. பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகளிலும் பார்க்க சிறப்பாக செயற்பட வெற்றிகளை பெற்றுள்ளது. 
 
மேலே குறிப்பிட்ட வித்தியாசம் இந்த பெறுதிகளில் தெளிவாக தென்படுகிறது. 

 
போட்டிகள் ஒரு மீள் பார்வை 
முதற்ப் போட்டி  - சஹிட் அப்ரிடியின் மீள் வருகைப் போட்டி. சிறப்பான மீள் வருகை என்று சொல்வதிலும் பார்க்க அபார மீள்வருகை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். மீள் வருகை இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய வகையில் சகலதுறை மீள் வருகை. ஆனாலும் தொடர முடியவில்லை. இதுதான் சஹிட் அப்ரிடி என்று சொல்லக் கூடியதாகவே அமைந்தது. வரும்போது பெரிதாக செய்வார். பிறகு தொடர மாட்டார். இவரின் ஆரம்பமும் அப்படியே அமைந்தது. 74 ஓட்டங்களை 56 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக பெற்றுக் கொண்டார். இவரின் அபார துடுப்பாட்டம் மூலமாகவே 224 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி பெற்றது. பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டர் 10 ஓவர்கள் பந்து வீசி 14 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். மேற்கிந்திய தீவுகள் நல்லபோட்டியை வழங்கும் என்றும் பார்த்தல் அப்ரிடி எல்லோரையும் சுழற்றி தூக்கினார். பாகிஸ்தானின் சிறந்த பந்து வீச்சு பெறுதி என்ற சாதனை. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் இரண்டாவது சிறந்த பந்துவீச்சு பெறுதி என்ற சாதனைகளை படைக்க பாகிஸ்தான் அணி 126 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. அப்ரிடியின் சாதனைப் பந்து வீச்சு 9 ஓவர்கள் 12  ஓட்டங்கள் 7 விக்கெட்கள் என அமைந்தது.  
 
இரண்டாவது போட்டி - மேற்கிந்திய தீவுகளின் இறுக்கமான பந்து வீச்சு மூலமாக வெற்றியைப் பெற்று தொடரை சமப்படுத்தியது. 233 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 195 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. பிராவோ சகோதர்களின் துடுப்பாட்டமும், பாகிஸ்தானின் பந்து வீச்சாளர்களாலும் 232 ஓட்டங்களை மேற்கிந்தியதீவுகள் பெற்றது.   இதில் 37 ஓட்டங்கள் உதிரி ஓட்டங்கள். டரென் பிராவோ 54 ஓட்டங்கள். டுவைன் பிராவோ ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்கள். பாகிஸ்தான் அணி சார்பாக நசீர் ஜெம்ஷெட் 54 ஓட்டங்கள். உமர் அக்மல் 50 ஓட்டங்கள். பந்து வீச்சில் சுனில் நரையன் 26 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்கள். தொடர் விறு விறுப்பான நிலையை அடைந்தது.  
 
மூன்றாவது போட்டி மூலம் இந்த தொடர் மேலும் விறு விறுப்பான கட்டத்தை அடைந்தது. காரணம் சமைநிலையில் போட்டி நிறைவடைந்தது. முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்றது. மிஸ்பா உல் கக் 75 ஓட்டங்களையும் உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றனர். ஜேசன் ஹோல்டர், டுவைன் பிராவோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர். பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி இறுதி துடுப்பாட்ட வீரர்களின் உதவியுடன் போட்டியை சமநிலைப்படுத்தியது. லென்டி சிமொன்ஸ் 75 ஓட்டங்களையும், மார்லன் சாமுவேல்ஸ் 46 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி இணைப்பாட்டம் 13 பந்துகளில் 24 ஓட்டங்களாக அமைந்தது. அத்துடன் இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் பெறப்பட்டன. பந்து வீச்சில் ஜுனைட் கான், சைட் அஜ்மல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்த சமநிலை முடிவு இறுதி ஓவரில் பாகிஸ்தான் அணி விளையாடிய விதம் போட்டி நிர்ணயம் நடை பெற்று இருக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளன. அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் களத்தடுப்பு வியூகங்களை அமைக்காமல், பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் வித்தியாசமான வியூகத்தை அமைத்தார். அதைவிட இறுதிப் பந்தில் இரண்டாவது ஓட்டம் பெறும்போது ரன் அவுட் ஆட்டமிழப்பு சந்தர்ப்பத்தை உமர் அக்மல் தவற விட்டார். இவற்றை வைத்து போட்டி நிர்ணயம் என்ற சந்தேகத்திற்கு வந்தால் அது மிகப் பெரிய தவறு. ஆனால் அன்றைய போட்டிக்கு பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் வழமைக்கு மாறாக அதிகமாக சமநிலைக்கு பந்தயம் கட்டியமையே இந்த சந்தேகத்தை அதிகம் உருவாக்கியது. 
 
நான்காவது போட்டி - தொடர் 1-1 என்ற சமநிலையில் நான்காவது போட்டியில் மழை குறுக்கிட பாகிஸ்தான் அணி 6 விக்கெட்களினால் டக் வேர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்றது. மார்லன் சாமுவேல்ஸ் 106 ஓட்டங்களையும், லென்டி சிமொன்ஸ் 46 ஓட்டங்களையும் பெற்றனர். மொஹமட் இர்பான் 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். மழை குறுக்கிட போட்டி 31 ஓவர்களாக மாற்றப்பட்டு பாகிஸ்தான் அணிக்கு 189 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது. ஒரு ஓவர் மீதமிருக்க பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. மொஹமட் ஹபீஸ் 59 ஓட்டங்களையும், மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணி தொடரில் முன்னிலை பெற்றது.   
 
ஐந்தாவதும் இறுதியுமான போட்டி தொடரை நிர்ணயிக்கும் போட்டி. மிக விறு விறுப்பாக அமைந்தது. ஆனாலும் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. தொடரை 3 - 1 என்ற ரீதியில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 48 ஓட்டங்களை டுவைன் பிராவோ பெற்றுக் கொண்டார். 45 ஓட்டங்களை மார்லன் சாமுவேல்ஸ் பெற்றுக் கொண்டார். ஜுனைட் கான் 3 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். பதிலளித்த பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதில் அஹமட் செஷாட் 64 ஓட்டங்களையும், மிஸ்பா உல் ஹக் 63 ஓட்டங்களையும் பெற்றனர். டினோ பெஸ்ட் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். தொடரை பாகிஸ்தான் அணி 3 -1 என்ற ரீதியில் கைப்பற்றியது. தொடர் நாயகனாக பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவானார்.

You May Also Like

  Comments - 0

  • Thakkireem Monday, 19 August 2013 05:36 AM

    நன்று

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .