2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஆரம்பிக்கிறது கிரிக்கெட்டின் மாபெரும் தொடர்: ஆஷஷ்

A.P.Mathan   / 2013 ஜூலை 09 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகக் கிண்ணங்கள், சம்பியன் கிண்ணங்கள், டுவென்டி டுவென்டி உலகத் தொடர்கள், பிறீமியர் லீக்குகள், இருநாட்டுத் தொடர்கள், முக்கோணத் தொடர்கள் எனப் பல்வேறு வகையான கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றாலும், டெஸ்ட் தொடர்களுக்கான மதிப்பும் மரியாதையும் எப்போதும் உயர்வான நிலையிலேயே காணப்படுகிறது. கிரிக்கெட் வீரர்களின் உண்மையான திறனை அளக்கும் தொடர்களாக டெஸ்ற் தொடர்கள் கருதப்படுகின்றன.
 
சாதாரண டெஸ்ட் தொடர்களே இவ்வாறு முக்கியத்தைப் பெறும்போது, உலகின் மிகப்பழைய சர்வதேசக் கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்புகளும் ஆரவாரங்களும் சாதாரணமானவையல்ல. உலகிற்கு கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய நாடான இங்கிலாந்து அணியும், உலகக் கிரிக்கெட்டை அதிக காலம் ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலிய அணியும் மோதும் ஆஷஷ் கொண்டாட்டம் நாளைய தினம் ஆரம்பிக்கிறது.
 
1882ஆம் ஆண்டு ஆரம்பித்த ஆஷஷ் தொடரில் இதுவரை 310 டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் அவுஸ்திரேலிய அணி 123 போட்டிகளிலும், இங்கிலாந்து 100 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதோடு, 87 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
 
எனினும், கடந்த 20 வருடங்களுக்குள் இடம்பெற்ற 49 ஆஷஷ் போட்டிகளில் 27 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியும், 14 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 8 போட்டிகள் வெற்றி தோல்வியற்று முடிவடைந்துள்ளன.
 
எனினும், இறுதி 2 ஆஷஷ் தொடர்களில் 5 போட்டிகளில் இங்கிலாந்தும், 2 போட்டிகளில் அவுஸ்திரேலியாவும் வெற்றிபெற்றுள்ளதோடு, 3 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.
 
இவ்வருடத்தில் இரண்டு ஆஷஷ் தொடர்கள் இடம்பெறவுள்ளதோடு, அதில் முதலாவது ஆஷஷ் தொடர் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளது.
 
நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஓகஸ்ட் 25ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
 
அலஸ்ரெயர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி பலமான அணியாக, அதிக வெற்றி வாய்ப்புகளைக் கொண்டுள்ள அணியாக இத்தொடரில் களமிறங்குகின்றது. இந்தியாவில் வைத்துப் பெற்றுக் கொண்ட டெஸ்ட் வெற்றிகளைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி மீதான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
 
மறுபுறத்தில் மைக்கல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி, பலவீனமான அணியாக, எதிர்பார்ப்புகளைக் கொண்டிராத அணியாகக் களமிறங்குகின்றது. இந்தியாவில் வைத்து வெள்ளையடிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி, இந்த ஆஷஷ் தொடரில் பலத்த அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.
 
ஆஷஷ் தொடருக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னதாக அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் அதிரடியாகப் பதவி விலக்கப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தப்பட்டிருந்தது. புதிய பயிற்றுவிப்பாளரான டெரன் லீமன் இப்போது அணியில் அமைதியை ஏற்படுத்த முனைந்து வருகிறார்.
 
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி மிகப்பலமான அணியாக, அவுஸ்திரேலியாவை விட பல மடங்கு உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. அலஸ்ரெயர் குக், கெவின் பீற்றர்சன், ஜொனதன் ட்ரொட், மற் பிரயர் என அனுபவ துடுப்பாட்ட வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு பலத்தை வழங்குவதோடு, ஜோ றூட்டின் இளம் இரத்தம் ஆகியன இங்கிலாந்து அணிக்குப் பலமாகக் காணப்படுகின்றன.
 
பந்துவீச்சில் உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் அன்டர்சன் அவ்வணியின் பலமாகக் காணப்படும் அதேவேளை, ஸ்ருவேர்ட் ப்ரோட், ஸ்டீவன் ஃபின் என உலகத்தரமான வேகப் பந்துவீச்சாளர்களையும், உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான கிறேம் ஸ்வானையும் கொண்டு இங்கிலாந்து அணி உயர்நிலையில் காணப்படுகிறது.
 
மறுபுறத்தில் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் தொடர்பாக அதிகக் கேள்விகள் காணப்படுகின்றன. மைக்கல் கிளார்க் தவிர, வேறு எந்த வீரரும் டெஸ்ட் போட்டிகளில் அண்மைக்காலத்தில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்கவில்லை. அதன் காரணமாக துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை மைக்கல் கிளார்க்கே அவுஸ்திரேலிய அணியின் முதுகெலும்பாகக் காணப்படுகிறார்.
 
பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜேம்ஸ் பற்றின்சன், பீற்றர் சிடில், ஜக்ஸன் பேர்ட், மிற்சல் ஸ்ரார்க் என திறமையான பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இங்கிலாந்து சார்பாக முதலாவது டெஸ்ட் போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள குழாம்:
அலஸ்ரெயர் குக், ஜேம்ஸ் அன்டர்சன், ஜோனி பெயர்ஸ்ரோ, இயன் பெல், ரிம் பிரெஸ்னன், ஸ்ருவேர்ட் ப்ரோட், ஸ்டீவன் ஃபின், கிரஹம் ஒனியன்ஸ், கெவின் பீற்றர்சன், மற் பிரயர், ஜோ றூட், கிறேம் ஸ்வான், ஜொனதன் ட்ரொட்
 
அவுஸ்திரேலிய குழாம்:
மைக்கல் கிளார்க், பிரட் ஹடின், அஸ்ரன் அகர், ஜக்ஸன் பேர்ட், எட் கொவான், ஜேம்ஸ் ஃபோள்க்னர், றயன் ஹரிஸ், பிலிப் ஹியூஸ், உஸ்மான் கவாஜா, நேதன் லையன், ஜேம்ஸ் பற்றின்சன், கிறிஸ் றொஜர்ஸ், பீற்றர் சிடில், ஸ்டீவன் ஸ்மித், மிற்சல் ஸ்ரார்க், மத்தியூ வேட், டேவிட் வோணர், ஷென் வொற்சன்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .