2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

புதிய தலைமையிலான இலங்கை அணி புதிதாக என்ன சாதிக்கப்போகின்றது?

A.P.Mathan   / 2013 மார்ச் 07 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை அணி தன்னை மாற்றி தயார்படுத்தும் நிலையில் பங்களாதேஷ் அணியானது இலங்கைக்கு வந்துள்ளது. இலங்கையை பொறுத்தளவில் இது ஒரு நல்ல தருணம். தோல்விகளை இப்படியான தருணங்களில் சந்திப்பதிலும் பார்க்க வெற்றியை நோக்கி செல்வது வீரர்களிற்கும், புதிய தலைவருக்கும் புதிய தெம்பை, நம்பிக்கையை தரும். இதை இலங்கை அணி சரியாக பாவித்துக்கொள்ள வேண்டும். அஞ்சலோ மத்தியூஸ் தலைமைப் பொறுப்பை எடுத்துள்ள நேரம் கடந்த காலங்களிலும் பார்க்க கொஞ்சம் வித்தியாசமானது. தங்களுக்கு அணித் தலைமைப் பொறுப்பு வேண்டாம் என்று விலகும் தருணத்தில் போதிய அனுபவம் அற்ற ஒருவர் அணித் தலைமையை ஏற்கின்றார். கடந்த காலங்களில் தலைமை பொறுப்பை ஏற்றவர்கள் அனுபமானவர்களாக சிறப்பாக விளையாடிய பின்னரே பொறுப்பை ஏற்றனர். அர்ஜுன ரணதுங்க, ஹசான் திலகரட்ன, சனத் ஜெயசூரியா, மஹேல ஜெயவர்தன, குமார் சங்ககார ஆகியோர் கடந்த 20 ஆண்டுகளில் நிலையாக நீண்ட காலம் தலைவர்களாக இருந்தவர்கள்.

குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் அழுத்தங்கள் காரணமாகவே தங்கள் பொறுப்புக்களை விட்டு விலகினார்கள் என்பது நன்றாகவே தெரிந்த விடயம். ஆனாலும் அணியின் நன்மை கருதி மஹேல ஜெயவர்தன உலகக்கிண்ணத்திற்கு பின்னர் தற்காலிகமாக அணித் தலைமைப் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொண்டார். பல சர்ச்சைகள், பிரச்சினைகளின் பின் இலங்கை கிரிக்கெட்டில் மாற்றங்கள் வருகின்றன என யோசிக்க முடிகிறது. புதிய தெரிவுக் குழு. புதிய அணித் தலைமை. புதிய வீரர்கள் அணிக்குள் வந்துள்ளனர். மிக விரைவில் இலங்கை கிரிக்கெட்டின் தலைமையும் மாறும் நிலை உள்ளது. இமாமத இறுதியில் இலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆக புதிய மாற்றம் நோக்கி இலங்கை கிரிக்கெட் என சொல்லலாம்.

இலங்கை பங்களாதேஷ் தொடர் எப்படி அமையும்?
இலங்கை அணியானது பங்களாதேஷ் அணியுடன் பார்க்கும்போது மிகப் பெரிய பலமாக உள்ளது. ஆக பங்களாதேஷ் அணி பெரிய அச்சுறுத்தல் எதையும் வழங்கப்போவதில்லை. ஆனால் இலங்கை அணி எப்படியான சாதனைகளை செய்யப்போகின்றது எனபதுதான் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இரண்டாம் தர இலங்கை அணி கூட பங்களாதேஷ் அணியை வென்று விடும். இப்போதுள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் இன்னும் செய்துகாட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது. மூத்த வீரர்களை பொறுத்தளவில் அடுத்த கட்டம் நோக்கி நகர ஓட்டங்களை குவிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. பந்து வீச்சில் மூத்தவராக இருப்பவர் ரங்கன ஹேரத். ஆனால் அவரின் இடம் உறுதியாக உள்ளது.

புதிய வீரர்களை பொறுத்தளவில் இது நல்ல தருணம். பெரிய அணிகளை எதிர்கொள்ளும்போது புதிய வீரர்கள் அல்லது இன்னும் தங்களை நிரூபித்து அணியில் இடம்பிடிக்க போராடும் வீரர்கள் சாதகமாக பாவித்துக்கொள்ளக் கூடிய தொடர். பங்களாதேஷ் அணி ஒருநாள்ப் போட்டிகளில் அச்சுறுத்தும் அணியாக இருக்கின்றபோதும் டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் இன்னும் வளர வேண்டிய நிலையில் உள்ளது.


முதற்ப் போட்டி காலி மைதனத்தில். இலங்கைக்கு மிக ராசியான மைதானம். நிச்சயம் இலங்கை அணி வெற்றிபெறும் என்று நம்பலாம். சுழல்ப் பந்து வீச்சாளர்களிற்கு சாதகம் தரும் மைதானம். இந்த இடம்தான் கொஞ்சம் இலங்கை அணிக்கு பிரச்சினை என்று சொல்ல தோன்றினாலும் ரங்கன ஹேரத் இலங்கை அணிக்கு போதும் என்று சொல்லலாம். பங்களாதேஷ் அணி இடதுகர சுழல்ப் பந்து வீச்சாளர்களிற்கு பரீட்சயமான அணி. எனவே இலகுவாக அவரை சந்திக்க வாய்ப்புக்கள் உள்ளன. இரண்டாவது சுழல்ப் பந்து வீச்சாளர் யார் என்பது கேள்வி. சுராஜ் ரண்டீவ் விளையாடுவார் என்று சொல்லலாம். ஆனாலும் அணியில் அஜந்த மென்டிஸ் உள்ளார். இலங்கை அணி மூன்று சுழல்ப் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்காது என்பது உறுதி.

மஹேல இல்லத நிலையில் ஜீவன் மென்டிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கும் விளையாடும் வாய்ப்புக்கள் கிடைக்கும் என நம்பலாம். பிரசன்னா ஜெயவர்த்தனவிற்கு இனி இடம் இல்லை என்றே சொல்ல தோன்றுகின்றது. உபாதையில் இருந்து மீண்டு வந்து விளையாட ஆரம்பித்துள்ள போதும் இணைக்கப்படவில்லை. விக்கெட் காப்பாளர்களாக தினேஷ் சந்திமால், குஷால் பெரேரா ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். குஷால் பெரேரா, ஜீவன் மென்டிஸ் ஆகியோருக்கிடையில் ஒரு போட்டி இருக்கும் என நம்பலாம். ஜீவன் மென்டிசின் பந்து வீச்சு அணியில் விளையாடும் வாய்ப்பைக் கொடுக்கும். திமுத் கருணாரத்ன ஆரம்ப வீரராக களமிறங்குவார். மூன்றாமிடம் சங்ககார. நான்காமிடம் தினேஷ் சந்திமால். அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் அடுத்த ஐந்தாமிடத்தில் களமிறங்குவார். அல்லது ஐந்தாமிடம் லஹிறு திரிமன்னவிற்கு வழங்கப்படலாம். ஆனாலும் இவருக்கு நான்காமிடம் பொருத்தமானதாக இருக்கும். ஆக ஆறு இடங்கள் இப்போதைக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கின்றன. அடுத்த இடம் ஜீவன் மென்டிசிற்கு வழங்கினால் பொருத்தமாக இருக்கும். வேகப் பந்து வீச்சில் நுவான் குலசேகர விளையாடுவது நிச்சயம். அடுத்தவர் சானக்க வெலகெதெர அல்லது சமின்ட எரங்க விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆக இலங்கை அணி முதற்ப் போட்டியில் இப்படித்தான் களமிறங்கும் என நம்பலாம்.


பல ஆண்டுகளிற்கு பின்னர் பிரேமதாச மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. போட்டித் தொடரை சுவாரசியமாக மாற்றுவதற்கு இப்படி செய்யப்படுகின்றதோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. முழுக்க முழுக்க துடுப்பாட்ட வீரர்களிற்கு சாதகமான மைதானம். எனவே மாற்றங்கள் தேவைப்படாது. சுழல்ப் பந்து வீச்சிற்கும் சாதகம் தரும் மைதானம். சுழல்ப்பந்து வீச்சாளர்களிலும் மாற்றங்கள் இருக்காது என்று நம்பத் தோன்றுகின்றது. 

பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தில் நல்ல வீரர்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் அவர்கள் ஒருமித்து சிறப்பாக செயற்பட வேண்டும் இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் கொடுக்க. அவர்களின் நம்பிக்கை நட்சசத்திரம் அணியில் இல்லை என்பது மிகப் பெரிய பின்னடைவு. பந்து வீச்சு, துடுப்பாட்டம் என சிறப்பாக செயற்படும் சகிப் அல் ஹசன் அணியில் இல்லை. அணித் தலைவர் முஸ்பிகீர் ரஹீம் மிகப் பெரியளவில் சொல்லக் கூடிய அளவில் இல்லை. ஆனால் அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. மஹமதுல்லா நம்பிக்கை தரும் வகையில் உள்ள வீரர். துடுப்பாட்டத்தில் மாற்றங்களை செய்யக் கூடியவராக வளர்ந்து வருகின்றார். மிகப் பெரியளவில் இன்னும் சாதித்து காட்டவில்லை. இன்னும் ஓட்டங்களை குவித்து காட்ட வேண்டும் என்ற நிலையில் நிலையில் உள்ளார். நைம் இஸ்லாம் ஓரளவு நம்பிக்கை தரக் கூடிய புதிய துடுப்பாட்ட வீரர். இவர்களைத்தான் துடுப்பாட்டத்தில் குறிப்பிட்டு கூற முடியும். ஆனாலும் மொஹமட் அஷ்ராபுல் துடுப்பாட்டத்தில் இலங்கை அணிக்கு பெரும் பிரச்சினையான வீரர். 4 சதங்கள் அடங்கலாக 11 போட்டிகளில் 858 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். எனவே இந்த தொடரில் அவரிடம் இருந்து ஒரு சதத்தை எதிர் பார்க்க முடியுமா? பந்து வீச்சில் மிகப் பெரியளவில் சுட்டிக் காட்டக் கூடிய நிலையில் யாரும் இல்லை. சகலதுறை வீரராக நசீர் ஹொசைன் உள்ள நிலையில் அவரின் பந்து வீச்சு மிக மோசமாக உள்ள நிலையில் துடுப்பாட்டம் பின் வரிசையில் மிகப் பெரிய பலம்.

முழுமையான இளம் அணி. பந்து வீச்சில் சஹதாத் ஹொசைன் மாத்திரமே அனுபவமுள்ளவர். மற்றவர்கள் புதியவர்கள். பந்து வீச்சு பாணி பழக்கமில்லாத நிலையில் அவர்கள் அச்சுறுத்தல் வழங்க முடியும். சகலதுறை வீரர்கள், துடுப்பாட்ட வீரர்கள் என்ற நிலையில் உள்ளவர்கள் சுழல்ப் பந்து வீச்சாளர்கள். எனவே அவர்களின் பந்து வீச்சு கை கொடுத்தால் இலங்கை அணிக்கு சில சவால்கள் கிடைக்கலாம்.

இலங்கை அணியின் வளர்ச்சிக்கு ஏற்ற தொடராக இந்த தொடர் அமைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு தொடர் வெற்றி உறுதி என்றே சொல்லலாம். பங்களாதேஷ் அணி இதுவரை இலங்கை அணியுடன் 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இலங்கை அணி சகல போட்டிகளையும் வெறி பெற்றுள்ளது. இதில் இலங்கையில் விளையாடப்பட்ட போட்டிகள் 8 ஆகும். இவ்வளவு நாளாக விளையாடியும் ஒரு போட்டியைத் தானும் சமநிலையில் முடிக்க பங்களாதேஷ் அணியால் இயலாமல் போயுள்ள நிலையில் இந்த தொடரில் ஒரு போட்டியைத்தானும் வெற்றி பெற முயற்சிப்பார்களா என பார்க்கலாம்.  

அஞ்சலோ மத்தியூஸ் அணித் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளமை மிகப் பெரியளவில் இந்த தொடரில் பார்க்கப்படவுள்ளது. 25 வயதில் 31 போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள நிலையில் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 4 வருட அனுபவம் கொண்டவராக இருக்கின்றார். இவர் அணியை எவ்வாறு கையாளப் போகின்றார்? அவரின் துடுப்பாட்டம், பந்துவீச்சு எப்படி அமையப் போகின்றன? இப்படி பல கேள்விகள் உள்ளன. தற்போது உள்ள தலைவர்களில் வேகப் பந்து வீசும் சகலதுறை வீரர்களில் இவர் மாத்திரமே அணித் தலைவர். சர்வதேச அரங்கில் இப்படியான சகலதுறை வீரர்கள் அணித் தலைவர்களாக இருந்தமை குறைவு. இப்படி பல விடயங்கள் இருக்கின்றமை இவரை அதிகம் உற்று நோக்க காரணமாக அமைந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .