2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இந்தியாவிற்கும் டோனிக்கும் டெஸ்ட்; மீளுமா இந்தியா?

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 24 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடர் சென்னையில் ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்த போட்டித் தொடர் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற போட்டித் தொடராக அமைந்துள்ளது. கிரிக்கெட்டின் வல்லரசாக திகழ்ந்து வரும் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்த வேண்டும் என்பது அனைத்து அணிகளினதும் விருப்பம். அதற்கான வாய்ப்புக்கள் சில வேளைகளில் மட்டுமே கிடைக்கும். அப்படி எதிர்பார்ப்பான தருணம்தான் இது.

இந்தியாவில் வைத்து இந்தியா பலமான அணி. அவர்களை வீழ்த்த முடியாது என்று வர்ணிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் இங்கிலாந்து இறுதியா அதை இலகுவாக செய்து காட்டி விட்டுச்சென்றது. எனவே அதில் இருந்து மீள வேண்டும் என்ற நிலை உள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடர் போர்டர் - கவாஸ்கர் ற்றொபி என அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆசெஷ் தொடர் எப்படி இரு அணிகளுக்குமிடையில் எப்படி பார்க்கப்படுகிறதோ அதேபோன்று இந்த தொடரும் பார்க்கப்படுகின்றது. இரண்டு நாடுகளும் கிரிக்கெட்டில் தங்களை பரம எதிரிகளாக பார்த்து வருகின்றன. அவுஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணி வாங்கும் அடிகள் எல்லாவற்றிக்கும் பதலடி கொடுக்கும் நேரமாக தங்கள் நாட்டில் நடைபெறும் தொடரை இந்திய அணி பார்ப்பது வழமை. சிலவேளைகளில் வென்றும், சிலவேளைகளில் தோற்றும் உள்ளார்கள்.

இந்த வருடம் ஆரம்பமாகியுள்ள இந்த தொடர் இரு அணிகளுக்கும் நிச்சயம் மிகப் பெரிய பலப் பரீட்சை. இரு அணிகளும் உயரிய இடங்களில் இருக்கின்ற என்று சொல்வதற்கில்லை. சராசரியான நிலையே. இந்திய அணியை அந்த அளவிற்கும் சொல்ல முடியாது. டெஸ்ட் போட்டிகளில் அண்மைக்காலங்களில் இந்திய அணி அடைந்து வரும் அடுத்தடுத்த மிக மோசமான தோல்விகள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் அணியில் சில மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது இந்திய அணி. இந்த தொடரை எப்படியாவது வெற்றிகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் போனால் டெஸ்ட் போட்டிகளில் டோனியின் தலைமைப் பொறுப்பு பறிக்கப்படும் என்பது உறுதி. அதேவேளை சச்சின் டெண்டுல்கார், விரேந்தர் சேவாக் ஆகியோர் ஓட்டங்களை பெற தவறின் அவர்களின் இடம் நிச்சயம் பறிக்கப்படும். ஏற்கனவே கம்பீர் நிறுத்தப்படுள்ளார். முதல் இரண்டு போட்டிகளிலும் இல்லை. முதல் இரண்டு போட்டிகளிலும் இப்போது உள்ள வீரர்கள் சரியாக செய்யத் தவறின் கம்பீர் மீண்டும் அணிக்குள் வர வாய்ப்புகள் உள்ளன. அவுஸ்திரேலிய அணியுடனான பயிற்சிப் போட்டியில் சதம் அடித்து தன் போர்மைக் காட்டியுள்ளார்.

இளம் வீரர்களை உள் வாங்கி புதிய அணியாக தன்னை மாற்றி வருகின்றது இந்தியா. ஆனாலும் டெஸ்ட் போட்டிகளில் எதனையும் செய்து காட்ட முடியாமல் இருப்பது அவர்களிற்கு மிகப் பெரிய அழுத்தத்தை கொடுத்துள்ளது. வேகப் பந்து வீச்சாளர்களின் பிரச்சினை மிகப் பெரியளவில் அவர்களை பாதித்துள்ளது. தொடர்ச்சியான உபாதைகள் ஏராளமான வீரர்களை கிரிக்கெட் விளையாட முடியாமல் செய்துள்ளது. இப்போதைய டெஸ்ட் அணியில் உள்ளவர்களில் இசாந்த் ஷர்மா மாத்திரமே நம்பிக்கையானவர். மற்றவர்கள் டெஸ்ட் போட்டிக்கு புதியவர்கள். சுழல்ப் பந்து வீச்சை நம்பி இருக்கலாம். அஷ்வின், பிரகஜன் ஓஜா, ஹர்பஜன் சிங் ஆகியோருடன் சகலதுறை வீரராக ரவீந்தர் ஜடேஜா. பந்து வீச்சில் இந்தியாவின் பலம் இது ஒன்றுதான். இங்கிலாந்துடன் அஷ்வின் சிறப்பாக செயற்படவில்லை. எனவே இந்த தொடரில் அவர் செய்து காட்ட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஹர்பஜன் சிங்கிற்கு மீள் வருகை. தனது நூறாவது போட்டியில் விளையாடுகின்றார். இவர்கள் இருவருக்குமிடையில் போட்டி ஒன்று நிலவுகின்றது. அஷ்வினின் துடுப்பாட்டம் மேலதிக பலத்தைக் கொடுக்கின்றது. புவனேஸ்வர் குமாரும் விளையாடினால் இந்திய அணியின் துடுப்பாட்டம் பலமானது. ஆனால் செய்து காட்ட வேண்டும். விராத் கோலி இழந்துள்ள போர்மை இந்த தொடரில் மீளப் பெற்றால் இந்தியாவிற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.


சச்சின் டெண்டுல்கார்
என்னைப் பொறுத்தளவில் இது சச்சினின் இறுதி சர்வதேசப் போட்டித் தொடர். இந்த தொடருடன் ஓய்வு பெறுவார் என நம்பத் தோன்றுகின்றது. நல்ல போர்மில் உள்ளார். ஆனால் ஓட்டங்களை சர்வதேசப் போட்டிகளில் பெற முடியாமல் தவிக்கின்றார். ரஞ்சிக் கிண்ணப் போட்டி சதம் இவரின் போர்மை உறுதி செய்தது. இந்த தொடரில் ஓட்டங்களை அள்ளிக் குவித்து இந்தியாவிற்கு தொடரைக் கைப்பற்றிக் கொடுத்து உயரிய மரியாதையில் விடைபெற்றால் கடவுள் என சச்சினை தாங்குபவர்கள் இன்னும் உயரிய இடத்தில் அவரை வைத்துப் பார்பார்கள். எனவே சச்சின் சதம் அடித்துக் காட்ட வேண்டும். இந்த தொடரில் ஒரு சதம் போதாது என்பது இன்னும் ஒரு முக்கிய விடயம். இவற்றின் மூலம் தன் மீது வந்த விமர்சனங்களை துடைத்து சிறப்பாக விடை பெறலாம்.

இந்திய அணியில் புஜாரா நம்பிக்கையான மூன்றாமிடம். ஐந்தாமிடம் விராத் கோலி. ஆறாவது இடம் ஜடேஜாவிடம் இப்போது உள்ளது. மிகப் பெரிய போட்டியான இடம் இது. இவருடன் இந்த இடத்திற்கு போட்டி போடும் பட்டியல் மிகப் பெரியது. சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, மனோஜ் திவாரி போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள. இவரின் பந்து வீச்சு பலம். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இவரின் துடுப்பாட்டமே அதிகம் எதிர் பார்க்கப்படுகின்றது. இங்கிலாந்து தொடரில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இங்கிலாந்து ஒருநாள் தொடரை பாவித்து எப்படி நிரந்தர இடத்தை ஒருநாள்ப் போட்டிகளில் பிடித்தாரோ அதேபோன்று இந்த தொடரிலும் அவர் செய்ய வேண்டும். அடுத்து வரும் இடம் டோனி. டெஸ்ட் போட்டிகளில் இன்னும் செய்து காட்ட வேண்டும் என்ற எதிர் பார்ப்பு உள்ளது. ஒருநாள்ப் போட்டிகள் போன்று டெஸ்ட் போட்டிகளில் இவர் இல்லை என்பது எல்லோருக்குமே தெரிந்தது. இறுதியாக இங்கிலாந்து அணியுடன் அடித்த 99 ஓட்டங்கள் இவர் மீதும் இன்னும் நம்பிக்கை வைக்கத் தோன்றியுள்ளது.

அடுத்த இடங்கள் பந்து வீச்சு இடங்கள்.அஷ்வின், ஹர்பஜன் சிங் ஆகியோர் விளையாடுகின்றனர். ஹர்பஜன் சிங் முதற்ப் போட்டியில் விளையாடுகின்றார். எனவே ஒரு போட்டிதான் இவருக்கான வாய்ப்பு. நிச்சயம் செய்து காட்ட வேண்டும். இல்லை என்றால் இனி அணியில் இடம் இல்லை. பிரகஜன் ஒஜாவை நிறுத்தி வைத்து விளையாடுவது அதிருப்தியான விடயம். கடந்த தொடரில் கூடுதாலான விக்கெட்களைக் கைப்பற்றியவர் இந்த தொடரின் முதற்ப் போட்டியில் இடமில்லை.

புவனேஸ்வர் குமார் இந்த தொடரில் அறிமுகமாகின்றார். ஸ்விங் பந்து வீச்சு நல்ல முறையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. துடுப்பாட்டம் ஓரளவு செய்வார் என்ற காரணம் மேலதிக பலம்.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்த மட்டில் துடுப்பாட்டம், பந்து வீச்சு இரண்டும் சரிவர பலமாக அமைந்த நல்ல சமநிலை அணியாக உள்ளது. இந்தியாவுடன் பார்க்கும்போது இந்த நிலையில் அவர்கள் பலமாக தென்படுகிறார்கள். வேகப் பந்து வீச்சு மிகப் பெரிய பலம். அதுவே இந்திய அணியின் பலவீனம். எனவே வேகப் பந்துவீச்சை வைத்து இந்தியாவை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா முயற்சிக்கும். ஆனாலும் இங்கிலாந்து தொடரிலும் இதேபோன்று எதிர்பார்க்க சுழல்ப் பந்து வீச்சாளர்களை வைத்து இந்திய அணியை வென்றது இங்கிலாந்து அணி. அனால் அவுஸ்திரேலியாவின் சுழல்ப் பந்து வீச்சாளர் நேதன் லயன் அந்தளவிற்கு செய்வாரா?

துடுப்பாட்டத்தில் ஆரம்பம் பலம். வேகம் மற்றும் நிதானம் கலந்த கலவை. எட் கோவன், டேவிட் வோர்னர் ஆகியோரே அவர்கள். மூன்றாமிடம் பில் ஹியூஸ். ரிக்கி பொன்டிங் விட்டுச் சென்ற இடம். நம்பிக்கையாக அவருக்கு வழங்கப்பட்டுளளது. செய்வார் என்ற எதிர் பார்ப்புக்கள் அதிகம் உள்ளன. அடுத்த இடம் ஷேன் வொட்சன். சொல்லவே தேவை இல்லை. எந்த ஆடுகளங்கள் என்றாலும் கலக்குவார். மைக்கல் கிளார்க் ஐந்தாமிடம். அவர் மிக அபாரமான போர்மில் இருக்கின்றார். இந்தியா, அவுஸ்திரேலிய சென்று இருந்த வேளையில் அடித்ததை மறந்து இருக்காது. இந்தியா ஆடுகளங்களிலும் ஓட்டங்களை அள்ளிக் குவிக்கக் கூடியவர். மொய்சஸ் ஹென்றிக்கஸ் இற்கு அறிமுகம் வழங்கப்பட்டுளளது. வேகப்பந்து சகலதுறை வீரர். ஒருநாள்ப் போட்டிகளில் நம்பகரமாக செயற்படுகின்றார். விக்கெட் காப்பாளர் மத்தியூ வேட் சிறப்பாக துடுப்பாடக்கூடியவர். இந்திய ஆடுகளங்களில் தன் திறைமைகளை காட்ட வேண்டிய நிலையில் உள்ளவர்.

வேகப் பந்து வீசும் மூவருமே மிக சிறப்பானவர்கள். ஜேம்ஸ் பட்டின்சன் உபாதையில் இருந்து மீண்டு வந்துள்ளார். தன் மீள் வருகையை காட்ட வேண்டிய போட்டி இது. இவருடைய பந்து வீச்சு இந்திய அணிக்கு பெரும் தலையிடியை தரும். மிச்சல் ஸ்டார்க் அண்மைக்காலத்தில் அச்சுறுத்தும் பந்துவீச்சாளராக வளர்ந்து வருகின்றார். எல்லாவித ஆடுகளங்களிலும் பந்து வீசக் கூடியவர். இது அவரின் பலம். இருவருமே இந்திய ஆடுகளங்களில் பந்து வீசக் கூடியவர்கள். ஆனால் வெற்றி பெறும் அளவிற்கு சிறப்பாக பந்து வீச வேண்டும் என்பதை செய்து காட்ட வேண்டும்.

இப்படியாக இரு அணிகளையும் பார்க்கும்போது இந்த நான்கு போட்டிகள் கொண்ட தொடர் யார் பக்கம் செல்லும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. சமநிலை வாய்ப்புக்கள் அதிகம். அவுஸ்திரலியா அணி தொடரைக் கைப்பற்றும் என்று முழுமையாக சொல்ல முடியாது. ஆனால் போட்டிகளை வெல்லும் வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை. இந்தியாவை பொறுத்த மட்டில் தொடர் வெற்றி வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அது இலகுவாக கிடைக்காது. எனவே விறு விறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .