2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டிகள்: ஒரு விரிவான பார்வை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 08 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளை  ரசிக்கிறோமோ என்னவோ, இந்தியாவில் இடம்பெறுவதாலும், இலங்கை மகளிர் அணி தங்கள் உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக ஒரு வெற்றியைப் பெற்று (அதிலும் இம்முறை இரண்டு வெற்றிகள்) இரண்டாம் சுற்றுக்கு சென்றிருப்பதனாலும் சாதாரணமாக பெண்கள் கிரிக்கெட்டைப் பார்க்காதோருக்கும் இந்த மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டிலும், இலங்கையின் எதிர்கால கிரிக்கெட் வீரர்களிலும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பவர்கள் நிச்சயம் இலங்கையில் நடந்து முடிந்த மாகாண அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் மீதும் அக்கறை கொண்டிருப்பார்கள்,  கவனித்திருப்பார்கள்.

சர்வதேசத் தொடர்களையும் சர்வதேச லீக் ஆட்டங்களையுமே அதிகமாகக் கவனிப்போருக்கு, இலங்கைக்கு ஒரு முக்கியமான அவுஸ்திரேலியத் தொடர் நடந்து கொண்டிருந்த வேளையில் இப்படியான தொடரைக் கவனித்திருக்க முடியாமல் போயிருக்கும் தான்.

இத்தொடர் முடிந்த பிறகு இது பற்றிய முழுமையான பார்வையைத் தருவதன் மூலம் தவறவிட்டோருக்கும், அவதானித்து இருந்தும் இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள விரும்புவோருக்குமாக இந்தத் தொகுப்பு.

இலங்கையின் மாகாண அணிகள் சில தனியாகவும் சில இணைக்கப்பட்டும் ஐந்து அணிகள் உருவாக்கப்பட்டு இம்முறை இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர் மூன்று வாரங்கள் நடைபெற்றது.

வயம்ப (வடமேல் மாகாண) அணி வெற்றியீட்டி இருந்தது. இறுதிப் போட்டியில் விம்ப அணியை, மத்திய - ஊவா (கந்துரட்ட - ஊவா) இணைப்பு அணி சந்தித்திருந்தது.

இவை தவிர வடக்கு - கிழக்கு (உதுற - நகெனஹிர) இணைப்பு அணி, மேல் மாகாண (பஸ்நாஹிற), தென் மாகாண (ருஹுன) அணி ஆகிய மூன்று அணிகள் விளையாடி இருந்தன.

இலங்கை அணியின் முக்கியமான, சிரேஷ்ட வீரர்கள் அவுஸ்திரேலியத் தொடரில் ஈடுபட்டிருந்ததனால் பல இளைய வீரர்களுக்கும், அணியில் முன்பு இடம்பிடித்து மீண்டும் அணியில் இடம்பிடிக்க (புதிய) தேர்வாளர்களைக் கவரும் வாய்ப்பும் இந்தத் தொடர் மூலமாகக் கிடைத்திருந்தது.

ஒவ்வொரு அணியினது தலைவர்களும் மிகச் சிறப்பாகத் தனிப்பட்ட முறையில் பிரகாசித்ததும், தத்தம் அணிகளை வழிநடத்தியதும் மிக முக்கியமான ஒரு அம்சம்.

வயம்ப - ஜெஹான் முபாரக்
வடக்கு - கிழக்கு - கௌஷல்ய வீரரத்ன
மத்திய - ஊவா - திலின கண்டம்பி
மேல் - மஹேல உடவத்த
தென் - சாமர சில்வா

வடக்கு கிழக்கு இணைப்பு அணியில் இம்முறையும் அந்த மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்பேசும் வீரர்களைக் காணவில்லை எனினும் எல்லா முறையும் போலவே இம்முறையும் பெயருக்கே இந்த அணி எனினும் இலங்கையில் மற்ற கழகங்கள், பிரதேசங்களில் விளையாடும் வீரர்களே இம்முறையும் இந்த இணைப்பு அணிக்குள்ளும் பெயரிடப்பட்டிருந்தார்கள்.

புதிய தலைமைத் தேர்வாளர் வடக்கு - கிழக்கில் விளையாடும் திறமையான வீரர்கள் எதிர்காலத்தில் தேசிய மட்டத்தில் உள்வாங்கப்படுவார்கள் என்று உறுதியளித்திருப்பதால் எதிர்காலத்தில் நம்பியிருப்போம்.

மாகாண ரீதியாக அணிகள் வகுக்கப்பட்ட பின் அநேகமான தொடர்களில் வெற்றியீட்டிய இரு அணிகள் - வயம்ப மற்றும் மலையக அணிகளே.
இம்முறையும் இந்த அணிகள் பலமானவையாகவும் இறுதி வரை பயணித்த அணிகளாகவும் இருந்தன. முதல் சுற்றில் தலா மூன்று வெற்றிகளை இவை பெற்றன.

தென் மாகாண அணி மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு அணி ஆகியன தலா இரு வெற்றிகளைப் பெற்றிருந்தன. மேல் மாகாண அணிக்கு எந்த ஒரு வெற்றியும் கிட்டவில்லை.

இத்தொடரில் இறுதிப் போட்டி வரை தத்தம் அணிகளைக் கொண்டுவந்த இரு தலைவர்களான ஜெஹான் முபாரக் மற்றும் கண்டம்பி ஆகியோர் துடுப்பாட்டத்திலும் தொடர்ந்து பிரகாசித்திருந்தார்கள். இத்தொடரில் கூடிய ஓட்டங்களைக் குவித்த முதல் இரு வீரர்களும் இவர்களே.

முபாரக் - ஐந்து போட்டிகளில் 300 ஓட்டங்கள் (அரைச் சதங்கள்)
கண்டம்பி - ஐந்து போட்டிகளில் 250 ஓட்டங்கள் (ஒரு சதம் மற்றும் ஒரு அரைச் சதம்)

இலங்கை டெஸ்ட் அணியின் அடுத்த தலைவர் என்று கண்டம்பி பற்றி சில செய்திகள் அடிபட்டுவரும் நிலையில் இந்தத் தொடர் சிறப்புப் பெறுபேறுகள் அவருக்கான அணிவாய்ப்பையாவது பெற்றுக் கொடுக்கும் என்பது உறுதி.

இவர்களை விட சில காலமாக முன்னணித் தெரிவுகளில் இடம்பெறாமல் போயிருந்த இயன் டானியல், இந்திக டி சேரம், பார்வீஸ் மகரூப், சாமர கப்புகெதர ஆகியோரும் தொடர்ச்சியாக ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள்.

இளம் வீரர்கள் பலரும் தேசிய அணியில் தங்கள் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு இந்த மாகாண அணிகளுக்கிடையிலான போட்டிகளைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என சொல்லலாம்.

குறிப்பாக இலங்கை அணியில் அண்மைக்காலமாக 'புதிய' சங்கக்காரவாக உருவாகுவதற்குப் போராடி வரும் துடுப்பெடுத்தாடும் விக்கெட் காப்பாளர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் கௌஷால் சில்வா ஆகியோரும் ஓட்டங்களைக் குவித்திருந்தார்கள்.

இலங்கை டெஸ்ட் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுது கருணாரத்ன, இளம் வீரர்கள் ஷேஹான் ஜெயசூரிய, சகான் விஜேரத்ன, அஞ்சேலோ பெரேரா, பானுக ராஜபக்ச ஆகியோரும் தங்கள் பெறுபேறுகள் மூலம் கவனிக்க வைத்துள்ளார்கள்.

நடைபெற்ற போட்டிகளில் சதங்கள் பெற்றவர்கள்....
கண்டம்பி, திக்வெல்ல, மஹரூப், கோசல குலசேகர மற்றும் அஞ்சேலோ பெரேரா. இதில் இறுதிப் போட்டியில் அபார சதங்கள் பெற்று அசத்தியிருந்தார்கள் மஹரூபும், நிரோஷன் திக்வெல்லவும்.

அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள்
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் டெஸ்ட் தொடரின் பின்னர் நாடு திரும்பிய நுவான் பிரதீப் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாகப் பந்துவீசி ஹட் டிரிக் ஒன்றையும் பெற்றிருந்தார்.

இவர் தவிர அநேகமாகப் பல புதியவர்கள் இம்முறை சிரேஷ்ட நட்சத்திரங்கள் இலங்கையில் இல்லாத வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

துலஞ்சன மென்டிஸ், சதுர ரண்டுன, அமில பிரசாத், தரிந்து கௌஷால், சசித் பத்திரன ஆகியோர் தேர்வாளர்களுக்குத்  தங்களை நினைவூட்டியுள்ளர்கள்.

இவர்களில் கௌஷால் நியூ சீலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கைக் குழாமில் பெயரிடப்பட்டிருந்தார் என்பது கவனிக்கக் கூடிய ஒரு விடயம்.

பழையவர்களில் டில்ஹார பெர்னாண்டோ நீண்ட காலத்தின் பின் மீண்டும் விக்கெட்டுக்களை வீழ்த்த ஆரம்பித்துள்ளார். மலிந்த வர்ணபுர துடுப்பாட்டத்தில் சறுக்கியதைப் பந்துவீச்சில் சரி செய்திருந்தார்.

கவுசல்ய வீரரத்ன, மாலிங்க பண்டார, மற்றும் ஈPள் ஏலத்தில் இம்முறை ஆச்சரியத்தை ஏற்படுத்திய சசித்ர சேனநாயக்க ஆகியோரும் விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்கள்.

பந்துவீச்சாளர்களில் பிரகாசித்தோர்

இந்தத் தொடர் முடிந்த கையோடு ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டினால் நடத்தப்படுகிற கழகங்களுக்கு இடையிலான மூன்று நாள் போட்டிகள் (ஸ்ரீலங்கா பிரீமியர் லீக்) ஆரம்பித்துள்ளன.

முதல் வாரத்திலேயே பத்து சதங்களும்  பல சிறப்பான பந்துவீச்சுப் பெறுதிகளும்....




தொடர்ந்து அவதானிப்போம்.. புதிய நட்சத்திரங்களும் உதயமாவார்கள் பழையவர்களும் மீண்டும் போட்டியிடுவார்கள்.

www.arvloshan.com


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .