2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

நியூசிலாந்து அணிக்கு என்ன நடந்தது?: ஓர் அலசல்

A.P.Mathan   / 2013 ஜனவரி 22 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூ சீலாந்து அணிக்கு என்ன நடந்தது? இது கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோர் மத்தியிலுமே இப்போது இருக்கும் மிக முக்கியமான கேள்வி...

இலங்கையில் இடம்பெற்ற கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து அதிர்ச்சி தரும் விதத்தில் ரொஸ் டெய்லர் அணித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து அண்மைக்கால சறுக்கல்களும் தடுமாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.

இலங்கையில் வைத்து ஒரு போட்டியில் தோற்காமல் தப்புவதே பெரிய நிலை என பெரிய பெரிய அணிகளே இலங்கை மண்ணில் தடுமாறுகின்ற நிலையில், அணியின் முக்கிய வீரரான டானியல் வெட்டோரியும் இல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டியை வென்றும், தொடரை சமப்படுத்தியும் சிறப்பாகப் பிரகாசித்து நாடு திரும்பிய உடனேயே (குறிப்பாக நியூசிலாந்து அபாரமாக ஆடிவென்ற டெஸ்ட் போட்டியில் டெய்லர் தனியொருவராக நின்று சாதித்துக் காட்டியிருந்தார். அவரது இரு இனிங்ஸ் ஓட்டங்கள் 142 & 74), கிரிக்கெட் நியூசிலாந்து வெளியிட்ட அறிவித்தல் கிரிக்கெட் உலகையே அதிர வைத்தது.

ரொஸ் டெய்லர் - டெஸ்ட் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று அவர் விரும்பினால் டெஸ்ட் அணியின் தலைவராக மட்டும் கடமையாற்றலாம் என்றும் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்தது இன்னும் பெரிய குழப்பம்.

எதிர்காலத்துக்கான திட்டமிடலாக ரொஸ் டெய்லர் நியமிக்கப்பட்டது நியூசிலாந்துக்கு நல்லதொரு மாற்றமாகவே இருந்தது. ஆனால் மீண்டும் பிரெண்டன் மக்கலமைத் தலைவராக்குவதன் மூலம் நியூசிலாந்து என்ன பயனைக் கண்டுவிடப்போகிறது என்று அனைவருமே யோசித்துக்கொண்டிருக்க, இந்த முடிவில் அதிருப்தியடைந்த ரொஸ் டெய்லர் - தென் ஆபிரிக்காவுக்கான  சுற்றுலாவிலிருந்து விலகிக்கொண்டார். (இந்தக் குழப்பம் பற்றி நியூசிலாந்து கிரிக்கெட் சபையானது டெய்லரிடம் கடிதமூலம் மன்னிப்புக் கேட்டிருந்தாலும் அது இழப்பை ஈடுகட்டாது என்பது தெளிவு)

அதைத் தொடர்ந்து நடந்தவை எல்லாம் நியூசிலாந்தின் Black Caps கிரிக்கெட் வரலாற்றில் Black History.

45 ஓட்டங்களுக்கு சுருண்டது; இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் படுமோசமான இனிங்ஸ் தோல்வி, ஒரேயொரு அரைச்சதம் மட்டுமே பெற முடிந்த அணித்தலைவர் மக்கலம் என்று அணியின் வேதனைகளும் சோதனைகளும் தீர்ந்தபாடில்லை.

நல்ல காலம் ஜேம்ஸ் பிரான்க்ளினின் புண்ணியத்தில் முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் மயிரிழையில் வெற்றி ஒன்று வசப்பட்டுள்ளது.

ஆனால், ரொஸ் டெய்லர் இல்லாத மத்திய வரிசையும், டானியல் வெட்டோரி இல்லாத பந்துவீச்சும் அணியின் ஓட்டைகளை அப்படியே அம்பலப்படுத்துகின்றன.

இந்த நிலையில் தான் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும் பந்து வீச்சுப் பயிற்சியாளருமான ஷேன் பொன்ட் - நியூசிலாந்து கிரிக்கெட் சபைக்கு எழுதிய கடிதமொன்றில், நியூசிலாந்துப் பயிற்சியாளர் முன்னைய தலைவர் ரொஸ் டெய்லருக்கு எதிராக வேண்டுமென்றே செயற்பட்டார் என்று போட்டுடைத்திருக்கிறார்.


ஆனால், நியூசிலாந்து கிரிக்கெட் சபை ஒரேயடியாக பொண்ட்டின் கடிதத்தை ஏற்பதாக இல்லை; விசாரணை என்ற பெயரில் சமரசமாகப் பேசி, இப்போது எல்லாம் சரி என்கிறது.

மறுபக்கம், தானாகவே அஞ்ஞாத வாசம் மேற்கொண்ட டெய்லர் அடுத்த வாரம் தனது பிராந்திய அணிக்காக விளையாட இருக்கிறார்; அத்துடன் அடுத்துவருகிற இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு நியூசிலாந்து அணியில் விளையாடவும் தயாராக இருப்பதாக சமிஞ்சைகளை அனுப்பியிருக்கிறார்.


ஆனால், இதன் பின்னர் நியூசிலாந்து அணியின் சிக்கல்கள் தீர்ந்து, இப்போது நியூசிலாந்து கிடக்கிற மிக மோசமான நிலையிலிருந்து மீண்டு வருமா என்று கேட்டால் பதில் இல்லை என்றே வரவேண்டும். காரணம் அணிக்குள்ளே பிளவுகள், பிரிவுகள் இருப்பது கண்கூடாக அண்மைக்காலங்களில் தெரியவந்தன. வெட்டோரி தலைவராக இருக்கும்போதே பெரிதாக ஒற்றுமை இல்லாதபோதிலும், வெட்டோரியின் பின்னர் மக்கலமைத் தாண்டி டெய்லருக்குத் தலைமைப் பதவி வழங்கப்பட்டதிலிருந்து சில பிளவுகள் நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்தே இருக்கின்றன.

எவ்வளவு தான் திறமையான இளம் வீரர்கள் இருந்தும், உலகத் தரத்திலான சகலதுறை வீரர்கள் இருந்தும் அவர்களால் சோபிக்க முடியாமல் போனதற்கான, போவதற்கான காரணம் இவை தாம்.

நியூசிலாந்து அணிக்கு இன்று நேற்றல்ல, சில ஆண்டுகளாகவே இப்படியான சிக்கல்கள் மற்றும் வெளிப்புற அழுத்தங்கள் இருந்துவந்துகொண்டே இருக்கின்றன. ஊதியக் குறைவு, அனுசரணைகள், ஒப்பந்தங்கள் மூலமாக அதைத் தீர்க்க முடியாமல், வீரர்களின் வெளி கிரிக்கெட் லீக்குகளில் உள்ள இணைப்பையும் அகற்ற முடியாமல் பல திறமையான வீரர்களை நியூசிலாந்து அண்மைக்காலங்களில் இழந்தது.

ஒழுக்க நடவடிக்கைகளில் இன்னும் உறுதியாக இல்லாமல் ஜெசி ரைடர் போன்ற சில வீரர்களின் இழப்பு.


இறுக்கமான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல், கட்டுப்பாடான வீரர்களைக் கண்ணியமாக நடத்தவும் தெரியாமல் தடுமாறி வரும் நியூசிலாந்து மீண்டும் எழவேண்டுமாக இருந்தால், மார்ட்டின் குரோ அல்லது ஸ்டீபன் பிளெமிங் (இவர் கூட தனது ஆரம்ப கிரிக்கெட் நாட்களில் போதைவஸ்து பாவனை சிக்கலில் அகப்பட்டுக் கொண்டவர் தான்) போன்ற ஓர் உற்சாகமூட்டக் கூடிய, பொறுப்பான தலைவரும், மார்ர்டின் ஸ்நேடன் போன்ற ஒரு கிரிக்கெட் நிர்வாகியும், ஜோன் ரைட் அல்லது ஸ்டீவ் ரிக்சன் போன்ற கட்டுப்பாடான பயிற்சியாளரும் வேண்டும்.

அடுத்த உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளால் இணைந்தே நடத்தப்பட இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் தன்னை நியூசிலாந்து இனி எப்படி திடப்படுத்தி, ஸ்திரப்படுத்தப்போகிறது என்று கிரிக்கெட் உலகம் ஆர்வமாக நோக்குகிறது.

www.arvloshan.com

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .