2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இலங்கைக்கு தோல்வியும் கேள்வியும்; அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியும் வினாவும்

A.P.Mathan   / 2013 ஜனவரி 17 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சிட்னியில் மீண்டும் ஒரு தோல்வியை இலங்கைக்கு வழங்கியிருந்தது. இறுதியாக இதே அவுஸ்திரேலியாவில் வைத்து மூன்றுக்குப் பூச்சியம் என்று வெள்ளையடிக்கப்பட்ட பிறகு இலங்கை அணி மூன்றுக்குப் பூச்சியம் என்ற படுதோல்வியைப் பெற்றுள்ளது.

ஆனால், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விட அனுபவம் குறைந்த, பலவீனமான அணியைக் கொண்டிருந்தாலும் இவ்வளவு தூரம் போராடி இலங்கை அணியானது அவுஸ்திரேலிய அணிக்கு சிறு அழுத்தத்தை வழங்கியிருந்தது.

இந்த டெஸ்ட் போட்டி இலங்கை அணியின் தற்போதைய தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு தலைவராக இறுதியான போட்டியாக அமைந்தது. தான் இந்த டெஸ்ட் தொடரோடு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த மைக்கேல் ஹசிக்கு இந்த சிட்னி டெஸ்ட் பிரியாவிடைப் போட்டியாகவும் அமைந்தது.

இலங்கை அணியின் மூத்த வீரர்களான திலகரத்ன டில்ஷான், திலான் சமரவீர ஆகியோருக்கு இந்த டெஸ்ட் போட்டியே அவுஸ்திரேலியாவில் அவர்களது இறுதி டெஸ்ட் போட்டியாக அமையலாம். இலங்கை அணி இதற்கு முந்தைய டெஸ்ட் போட்டியில் இனிங்ஸினால் தோல்வியடைந்த பிறகு நம்பிக்கையிழந்திருந்த ரசிகர்களுக்கு இந்த சிட்னி டெஸ்ட் போட்டியில் இலங்கையின் இளம் வீரர்கள் காட்டிய திறமையும் போராட்டமும் எதிர்காலத்துக்கான நம்பிக்கையை வழங்கியிருக்கும்.

தொடரில் மூன்று போட்டிகளிலும் நம்பிக்கையோடு ஆடிய இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுது கருணாரத்ன, காயமடைந்த குமார் சங்கக்காரவுக்குப் பதிலாக அணிக்குள் அழைக்கப்பட்ட மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அழைக்கப்பட்ட லஹிறு திரிமன்ன, காயமடைந்த விக்கெட் காப்பாளர் பிரசன்னா ஜெயவர்த்தனாவுக்குப் பிரதியீடு செய்யப்பட்ட இளம் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான தினேஷ் சந்திமால் ஆகியோர் இலங்கை அணிக்கான எதிர்கால அணியில் நிரந்தர இடம் பிடிக்கக் கூடியவர்களாகத் தெரிகிறார்கள். இந்த இளையவர்களின் பிரகாசிப்பு இதுவரை இடம்பெற்ற முதல் இரு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருந்ததை நாம் கண்டுள்ளோம். இம்மூவரும் நிச்சயம் அணியிலுள்ள சிரேஷ்ட தடுமாறும் வீரர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கப்போகிறார்கள் என்பது தெளிவு.

அடுத்துவர இருக்கின்ற பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலங்கை தேர்வாளர்கள் மூத்த வீரர்களுக்கு 'ஓய்வை' வழங்கி இந்த மூவருடன், உள்ளூர் கழகமட்டப் போட்டிகளில் பிரகாசித்த மேலும் சில வீரர்களையும் இணைத்து, அஞ்சேலோ மத்தியூசுக்கு எதிர்காலத்துக்கான அணியை வழங்கி ஒரு சோதனையை செய்து பார்க்கலாமே... அத்துடன் வேகப்பந்துவீச்சும் மிக மோசமானதாக இல்லை என்பதும் தெளிவு.

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சின் முதற் தெரிவுகளாக இருக்கக் கூடிய சானக வெலகெதர, நுவான் குலசேகர, சமிந்த எறங்க ஆகியோர் காயங்கள், உபாதைகள் காரணமாக இறுதிப் போட்டியில் விளையாட முடியாதபோதும், அவுஸ்திரேலிய அணிக்கு ஓரளவுக்கு சவால் கொடுக்கக்கூடிய வேகப்பந்துவீச்சை வழங்கி இருந்தது என்றால் அது கூட ஓர் ஆரோக்கியமான விடயமே.

தலைமைப் பதவியிலிருந்து ஓய்வுபெறும் மஹேல இரண்டு இனிங்சிலும் அரைச் சதங்களைப் பெற்று தான் தொடர்ந்து ஒரு துடுப்பாட்ட வீரராக நிலைக்கப்போவதை காட்டியுள்ளார். மூன்று வருடத்துக்கும் அதிகமான காலப் பகுதிக்குப் பிறகு மஹேல வெளிநாடொன்றில் பெற்ற டெஸ்ட் அரைச்சதங்கள் இவை என்பது முக்கியமானவை.

ஆனால், மஹேலவுக்குப் பிறகு அணியின் தலைமையை ஏற்கவுள்ள அஞ்சேலோ மத்தியூஸ் தன்னை நிலைநிறுத்தும் அளவுக்கு இந்த டெஸ்ட் தொடரில் பிரகாசிக்கவில்லை என்பது தெளிவு. ஒரே ஒரு அரைச் சதத்துடன் 175 ஓட்டங்களையே எடுத்திருந்தார்.

ஆனால் இப்போதைக்கு இலங்கை அணியின் டெஸ்ட் தலைவராக இருக்கின்ற ஒரே தெரிவு இவராகத் தான் இருக்க முடியும்.

ஆனால், இலங்கையின் தேர்வாளர்களும் வீரர்களும் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விடயமாக வீரர்களுக்கு ஒரேயடியாக ஏற்பட்ட காயங்கள், உபாதைகள் அமைந்திருக்கின்றன. ஒரே நேரத்தில் நான்கைந்து வீரர்கள் காயமடைவது துரதிர்ஷ்டம் என்பதை விட, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியாத் தன்மையிலும் அடங்கும் என்பது உண்மை. எனவே இதுபற்றிய சரியான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் எடுக்கவேண்டி இருக்கும்.

மறுபக்கம் அவுஸ்திரேலிய அணி, சிரேஷ்ட வீரர்கள் இருவர் இந்த கிரிக்கெட் பருவகாலத்தில் ஓய்வுபெற்றும் இளம் அணியொன்றை முன்னோக்கி நகர்த்துவதில் வெற்றிகண்டுள்ளது. அத்துடன் காயம் மற்றும் உபாதைகள் காரணமாக வேகப்பந்துவீச்சாளர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க அவுஸ்திரேலியா கடைப்பிடித்த சுழற்சி முறையும் மிட்செல் ஸ்டார்க், ஜக்சன் பேர்ட் ஆகியோரை டெஸ்ட் தரத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

ரிக்கி பொன்டிங் ஓய்வு பெற்ற பிறகு அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டம் பிலிப் ஹியூசின் வரவுடன் தெம்பு பெற்றுள்ளது. ஆனால் மைக்கேல் ஹசி என்ற தொடர்ச்சியான வெற்றிகளுக்கு அடித்தளங்கள் போட்டுக்கொடுத்த வீரரின் ஓய்வு அவுஸ்திரேலியாவுக்கு வழங்க இருக்கின்ற தாக்கங்கள் எப்படியானவை என்பது அடுத்துவரும் தொடர்களிலேயே தெரியவரும்.

சிட்னி டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 294 ஓட்டங்களைப் பெற்றது.  
லஹிறு திரிமன்ன  91
மஹேல ஜெயவர்த்தன 72
ஜாக்சன் பேர்ட் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள்

அவுஸ்திரேலிய முதலாம் இனிங்சில் 432 ஓட்டங்கள்.
மைக்கேல் வோர்ட் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்கள்
பிலிப் ஹியூஸ் 87
டேவிட் வோர்னர் 85
மைகேல் கிளார்க் 50
ரங்கன ஹேரத் 95 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள்

இலங்கை இரண்டாம் இனிங்சில் 278 ஒட்டங்கள்.
திமுது கருணாரத்ன 85
மஹேல ஜெயவர்த்தன 60
தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 62

அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கப்பட்ட இலக்கான 141 ஐ நோக்கித் துடுப்பாடிய அவுஸ்திரேலியா ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இளம் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளரான ஜாக்சன் பேர்ட் தெரிவானார். தொடரின் சிறப்பாட்டக்காரராக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைகேல் கிளார்க் தெரிவானார்.

இத்தொடரில் கூடிய ஓட்டங்களை பெற்றவர் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கேல் கிளார்க் - 316 ஓட்டங்கள். இவருக்கு அடுத்தபடியாக டேவிட் வோர்னர் 272 ஓட்டங்கள்.

இலங்கை சார்பாக அதிக ஓட்டங்கள் பெற்றவர் டில்ஷான் 208 ஓட்டங்கள்.

பந்துவீச்சாளர்களில் கூடுதலான விக்கெட்டுக்களை இத்தொடரில் வீழ்த்தியவர் பீற்றர் சிடில் 15 விக்கெட்டுக்கள். இலங்கையின் ரங்கன ஹேரத் 12 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இந்த மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற வெற்றி அவுஸ்திரேலிய அணிக்கு ஊக்கத்தை வழங்கி இருந்தாலும், அதற்கு மேல், பொன்டிங், ஹசி போன்றோரின் ஒய்வு வழங்கியுள்ள வெற்றிடமும், அணியின் உபதலைவரும் முக்கிய உறுப்பினருமான ஷேன் வொட்சனுக்கு அடிக்கடி ஏற்பட்டு வரும் உபாதைகளும் எழுப்பியுள்ள கேள்விகள் ஒருபக்கம், மறுபக்கம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்டுவரும் உபாதைகள் காரணமாக அவர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி வருகின்றமையும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

எந்த ஒரு வீரர்களுக்கும் நிரந்தர இடம் கிடையாது என்பது வீரர்களுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் என்பது சில தரப்பினரது வாதமாக இருக்கின்றது. எனவே கிளார்க்கின் அணிக்கும் இத்தொடர் வெற்றிகளைத் தந்தாலும் கேள்விகளையும் தந்தே விடை கொடுக்கின்றது.

அடுத்து - சாதனை நாயகன் மிஸ்டர். கிரிக்கெட் மைக்கேல் ஹசி பற்றிய கட்டுரை நாளை மறுதினம். இதே பக்கத்தில்...

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .