2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இந்தியா, இங்கிலாந்து ஒருநாள்ப் போட்டித் தொடர்

A.P.Mathan   / 2013 ஜனவரி 13 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா அணி அழுத்தங்களுக்கு மத்தியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. வெல்ல வேண்டும் என்ற கட்டாயம் இந்திய அணிக்கு. தொடர் தோல்விகள். இங்கிலாந்திடம் சொந்த நாட்டில் டெஸ்ட் போட்டி தொடரில் தோற்றது என வீரர்கள் மீதும், அணி மீதும் மிகப் பெரிய அழுத்தம் உருவாகியுள்ளது. வென்று காட்ட வேண்டும் என்ற கட்டாயம் அணி மீதும். தங்கள் இடங்களை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றால் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற நிலை வீரர்கள் மீதும் உருவாகியுள்ளது.

இங்கிலாந்து அணி நம்பகரமாக களமிறங்குகிறது. டெஸ்ட் தொடர் வெற்றி. இந்தியாவில் தங்களால் வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஆனால் பயிற்சிப் போட்டிகளில் அவர்கள் விளையாடியுள்ள விதம் அழுத்தங்களை அவர்கள் மீது உருவாக்கியிருக்கும். இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் தோல்வி. இதை தாண்டி அழுத்தங்கள் என்று எதுவுமே இல்லை. வென்று காட்ட வேண்டும் என்ற நிலையும் இல்லை. வென்றால் சாதனையாக அமையும்.

இந்திய அணி தற்போது முழுமையான புதிய அணி. எதிர்கால அணி என்று சொல்லக் கூடிய அணி. சகீர் கான், சச்சின் டெண்டுல்கார், விரேந்தர் சேவாக் ஆகியோர் அணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் புதிய வீரர்கள் உள்வாங்கப்பட்டு அணியை தயார்படுத்துகிறது இந்திய அணி. வெற்றிகள் தான் அவர்களை சிறப்பாக விளையாட உதவும். அவர்களும் சாதித்து காட்ட வேண்டும் என்ற நிலையில் விளையாடுவார்கள். ஆனால் தற்போது இருக்கும் வீரர்களில் அனுபவ வீரர்கள் சரியாக பிரகாசிக்க தவறுவது இந்திய அணியின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. யுவராஜ் சிங், கெளதம் கம்பீர், விராத் கோலி போன்றவர்கள் துடுப்பாட்டத்தில் சோடை போவது புதிய வீரர்களுக்கு மேலதிக அழுத்தத்தை கொடுத்து சோபிக்க இயலாமல் செய்துவிடும். பாகிஸ்தான் தொடரில் டோனி தனித்து நின்று போராட மற்றையவர்கள் ஏமாற்றிவிட்டார்கள்.

இந்த தொடரிலும் எதிரணியின் பந்து வீச்சு பலமானது. நல்ல வேகப் பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது இங்கிலாந்து அணி. அதை போர்ம் இழந்துள்ள இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள் என்பதே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய விடயமாக இருக்கும். ஆரம்ப வீரராக அஜின்கையா ரெஹானே களமிறங்கவுள்ளார். நீண்ட காத்திருப்புக்கு பின் அவருக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. லிஸ்ட் A போட்டிகளிலும், முதற் தர போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருவது இவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்க வேண்டும் என்ற அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியது. இதன் காரணமாக விரேந்தர் செவாக் அணியால் நீக்கப்பட்டார். ரெஹானே வந்துள்ள இடம் சாதாரண இடம் கிடையாது. உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலான துடுப்பாட்ட வீரர் விட்டுச் சென்றுள்ள இடத்திற்கு. அந்த இடத்தை மீள் நிரப்ப மிகப் பெரியளவில் போராடவேண்டி இருக்கும். அடுத்த இடம் கெளதம் கம்பீர். இவர் அழுத்தத்தில் உள்ள வீரர். செற்றேஸ்வர் புஜாரா அணியில் தயாராக உள்ளார். அவருக்கு ஆரம்ப இடம் என்பது உறுதியாகியுள்ள நிலையில் கம்பீர் சோபிக்க தவறினால் அவரின் இடம் புஜாரவிற்க்கு கிடைக்கும். அல்லது ரெஹானே சோபிக்க தவறினால் இந்த தொடரிலேயே அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன. அடுத்த மூன்று இடங்கள் பெரியளவில் பிரச்சினையில்லாத இடங்கள். விராத் கோலி, யுவராஜ் சிங், டோனி ஆகியோருடையது. யுவராஜ் சிங்க் முழுமையாக இன்னும் நல்ல துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த தொடர் அவருக்கு நல்ல வாய்ப்பு. சுரேஷ் ரெய்னாவின் இடம் இப்போதைக்கு பெரியளவில் பிரச்சினையில் இருபதாக தெரியவில்லை. சராசரியாக துடுப்பெடுத்தாடி வருகின்றார். ஆனாலும் இன்னும் செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. அடுத்த இடமான ரவீந்தர் ஜடேஜாவின் இடம் பந்துவீச்சு மூலமாக பாதுக்காப்பாக உள்ளது. துடுப்பாட்டத்தில் அவருக்கு இன்னம் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். பந்துவீச்சில் அஷ்வின், புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா ஆகியோர் நல்ல முறையில் பந்து வீசி வருகின்றனர். அசோக் டின்டாவிற்கு வாய்ப்புக்கள் தேவை என்ற நிலை உள்ளது. சமி அஹமட் முதல்ப் போட்டியில் நல்ல முறையில் பந்து வீசி தன அறிமுகத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் தொடரில் இருந்து ஒரு வீரர் மாத்திரமே மாற்றப்பட்டார். செவாக் நிறுத்தப்பட்டு, புஜாரா அணிக்குள் உள்  வாங்கப்பட்டார். 


இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டம் அசுர பலம். அலஸ்டயர் குக் டெஸ்ட் போட்டிகளில் காட்டிய காட்டு என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இயன் பெல் அண்மைக்காலமாக மிக அபாரமாக ஒரு நாள்ப் போட்டிகளில் ஓட்டங்களை குவித்து வருகின்றார். இவர்கள் ஆரம்பத்தை எடுத்துக் கொடுத்துவிட்டாள் ஜொனதன் ரொட், கெவின் பீற்றர்சன், ஒய்ன் மோர்கன் ஆகியோர் சிறப்பாக முடித்து வைப்பார்கள். இவர்கள் மூவரும் பலமான நம்பிக்கை வைக்கக் கூடிய வீரர்கள். அடுத்த விக்கெட் காப்பாளர் கிரெய்க் கியூஸ்வெட்டர் வேகமாக அடித்தாடக்கூடியவர். சமிட் பட்டேல் நல்ல சகலதுறை வீரர். பந்துவீச்சிலும் பார்க்க ஓட்டங்களை குவித்து வரும் ஒருவர் வேகமாகவும் அடித்தாடக் கூடியவர். அடுத்து ஸடுவோர்ட் ப்ரோட் . தேவையான நேரங்களில் ஓட்டங்களை குவிக்கக்கூடியவர். சகலதுறை வீரர். எனவே இந்த நீண்ட துடுப்பாட்ட வரிசையில் டிம் பிரஸ்னன் பின் வரிசை சகலதுறை வீரர். ஓட்டங்களை வேகமாக அடித்துப் பெற்றுக் கொடுக்கக் கூடியவர் என இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசை மிகப் பலமாக உள்ளது. ஜேம்ஸ் ரெட்வெல்  துடுப்பாடக்கூடியவர். ஆக இலகுவாக இங்கிலாந்தின் ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியாது. பந்து வீச்சில் டிம் பிரஸ்னன், ஸ்டீபன் பின், ஸ்டுவோர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசுவார்கள். ஜேம்ஸ் ரெட்வெல், சமித் பட்டேல், டனி பிரிக்ஸ்  ஆகியோர் சுழல்ப் பந்து வீச்சாளர்கள். வேகப் பந்து வீச்சு பலமாகவே உள்ளது. ஆனாலும் சுழல்ப்பந்து பற்றி எதுவும் சொல்ல முடியாது. புதியவர்கள். செய்து காட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை அச்சுறுத்திய மொன்டி பனீசரை ஏன் அணியால் சேர்க்கவில்லை எனபது தெரியவில்லை. இரண்டு முழு நேர சுழல்ப் பந்து வீச்சாளர்கள் தேவை என்றால் பந்து வீச்சு சிக்கல் உள்ளது. பனீசரை அணியில் சேர்ப்பது மனவளவில் இந்திய அணியை வீழ்த்தக் கூடியதாக இருந்து இருக்கும். சமிட் பட்டேல் பெரியளவில் பந்துவீச்சில் சாதித்துக்காட்டவில்லை. மற்றையவர்களும் அப்படியே. பலமான பந்து வீச்சு என்று சொன்னாலும் சுழல்ப் பந்து இங்கிலாந்து அணிக்கு பிரச்சினையைக் கொடுக்கலாம். வேகப் பந்து பந்து வீச்சாளர்களை அள்ளிக் கொண்டு வந்துள்ளது இங்கிலாந்து அணி. சுழற்சி முறையில் பாவிக்க வாய்ப்புக்கள் உள்ளன. 5 போட்டிகள் என்ற காரணத்தினால் அப்படி செய்வார்கள் என நம்பலாம்.


இந்தியாவில் வைத்து ஒரு நாள்ப் போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கமே இங்கிலாந்து மீது இருந்துள்ளது. இரண்டு அணிகளுக்குமிடையில் முதற்ப் போட்டி 1974 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி நடை பெற்றது. அந்த போட்டி இங்கிலாந்தில்  நடைபெற்றது. இரண்டு அணிகளுக்குமிடையில் இதுவரை 81 போட்டிகள் நடை பெற்றுள்ளன. இதில் 43 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 33 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்த அதேவேளை, 3 போட்டிகள் கை விடப்பட்ட போட்டிகள். இந்தியாவில் இரு அணிகளும் மட்டும் விளையாடிய தொடர்கள் 7 நடைபெற்றுள்ளன. நான்கு தொடர்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 2 தொடர்கள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. இந்தியா டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த அதே காலத்திலேயே ஒரு நாள்ப் போட்டி தொடரிலும் தோல்வியை சந்தித்தது. அதற்க்கு பின் இந்தியாவுடன் விளையாடிய தொடரிலும் சரி, பல நாடுகள் விளையாடிய தொடரிலும் சரி இங்கிலாந்து அணி வெற்றி பெறவில்லை. 40 போட்டிகளில் இரு அணிகளும் இந்தியாவில் மோதியுள்ளன. இதில் 26 போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றி. 13 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி. 1 போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இறுதியாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஐந்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெள்ளையடிப்பு செய்து கைப்பற்றியது. இறுதியாக நடை பெற்ற மூன்று தொடர்களிலும் இந்திய அணி மிக அபார வெற்றியைப் பெற்றுள்ளது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற 7 போட்டிகளில் இந்திய அணி 6 - 1 என வெற்றி பெற்றது. அடுத்த தொடர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற போது 5 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக இந்திய அணி வெற்றி கொண்டது. 12.04.2006 இற்கு பின்னர் இங்கிலாந்து அணி இதுவரையில் இந்தியாவில் வைத்து ஒரு நாள் சர்வதேசப் போட்டி ஒன்றில் வெற்றி பெறவில்லை.


அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள்
கெவின் பீற்றர்சன்                  16    16    788    111*    49.25       89.54    1    5
யுவராஜ் சிங்                              13    13    696    138*    77.33    118.89    3    2
விரேந்தர் செவாக்                   18    18    676       91     37.55    102.11    0    6
சச்சின் டெண்டுல்கர்              16    16    631    120     45.07       93.20    1    4
M.S டோனி                                  17    16    569      96      63.22      92.07    0    4
கெளதம் கம்பீர்                         12     12    545      84*    45.41      88.90    0    6
சுரேஷ் ரெய்னா                       17     16    527       81*    40.53      84.72    0    6
போல் கொலிங்க்வூட்           19     19    473       93      29.56      77.28    0    3
மைக் கட்டிங்                            14     13    434    115*    48.22      80.37    1    3
மொஹமட் அசாருதீன்        11     10    403      95*    50.37      98.53    0    3
(வீரர்கள், போட்டிகள், இன்னிங்க்ஸ், ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதம் அரைச் சதம்)

அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள்
ஹர்பஜன் சிங்                  17    17    157.0    685    31    31/5    22.09    4.36
ஜகவல் ஸ்ரீநாத்                 12    12    104.1    486    21    41/5    23.14    4.66
அன்று ப்லின்டொப்        16    15    126.5    576    17    31/3    33.88    4.54   
கபில் தேவ்                         13    13    110.0    440    16    38/3    27.50    4.00
போல் ஜார்விஸ்              06    06      53.4    249    15    35/5    16.60    4.63
இர்பான் பதான்                   7       7      57.5    249    13    51/4    19.15    4.30
அஜித் அகர்கார்                   9      9      63.5    374    12    34/4    31.16    5.85
மனோஜ் பிரபாகர்            12    12    104.4    476    12    54/4    39.66    4.54
ஜேம்ஸ் அன்டர்சன்       12    12      98.0    578    12    28/3    48.16    5.89
ரவீந்தர் ஜடேஜா               06    06      50.0    233    11    33/4    21.18    4.66
சகீர் கான்                             06    06      50.0    252    11    26/3    22.90    5.04
டிம் பிரஸ்னன்                  07    07      58.2    328    11    48/5    29.81    5.62
யுவராஜ் சிங்                       13    11      82.0    377    11    28/4    34.27    4.59
(வீரர்கள், போட்டிகள், இன்னிங்க்ஸ், ஓவர்கள், ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓவருக்கு வழங்கிய சராசரி ஓட்டங்கள் )

பொதுவாக இந்தியாவில் போட்டிகள் நடை பெற்றால் இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் வழங்குவது வழக்கம். ஆனால் அணி இப்போது இருக்கும் நிலை, ஒரு நாள்ப் போட்டி தொடரின் முதல் தர அணியான இங்கிலாந்து அணியுடனான போட்டி தொடர் என்பன இந்திய அணிக்கான வாய்ப்பை தர கடினமாக உள்ளது. இந்திய அணி தொடரைக்  கைப்பற்றினால் இங்கிலாந்து அணியின் முதல் இடம் பறி போகும் என்பது உறுதி. இந்திய அணிக்கு இரண்டாம் இடம் கிடைக்கும். ஆனால் முதல் இடம் உறுதியில்லை, அது தென் ஆபிரிக்காவின் கையில் தங்கியுள்ளது. இந்திய அணி மீள் வருகையை காட்டும் தொடராக இந்த தொடரை கூற முடியும். ஆனால் இங்கிலாந்து அணி இலகுவாக விட்டுக்கொடுக்காது. விறு விறுப்பான தொடராக இந்த தொடரை எதிர்பார்க்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .