2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை - நியூசிலாந்து ஒருநாள் போட்டித்தொடர்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிகெட் போட்டிகள் இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளன. முதலில் ஒற்றை 20 - 20  போட்டி. அதனையடுத்து 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள். அதன் பின்னர் 2 டெஸ்ட் போட்டிகள். இந்த நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நவம்பர் முதலாம் திகதி கண்டி பல்லேகேல மைதனத்தில் ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச ரீதியில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களின் பினனர் ஒருநாள் சர்வதேசப் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டியே இறுதியாக நடைபெற்ற போட்டி.

தொடர்ச்சியான 20 - 20 போட்டிகளிற்கு பின்னர் இந்த ஒருநாள் போட்டி நடைபெறுவதனாலும் புதிய விதிமுறை மாற்றங்களின் பின்னர் இந்த தொடர் நடைபெறுவதினாலும் இந்த போட்டிகள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் அந்த எதிர்பார்ப்பளவிற்கு இந்த தொடர் இருக்குமா என்பது கேள்வியே? இலங்கை மண்ணில் வைத்து நியூசிலாந்து அணி இலங்கை அணியை எதிர்கொள்கின்றது. இதுதான் இந்த கேள்விக்கான காரணமாக அமைந்தது.

இரண்டு அணிகளுக்குமிடையில் முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டி 1979ஆம் ஆண்டு நடைபெற்றது. இறுதியாக கடந்த வருடம் மார்ச் மாதம் இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்றது. இரு அணிகளும் 74 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இலங்கை அணி 34 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 35 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சமநிலையில் ஒரு போட்டி நிறைவடைந்துள்ள நிலையில் 04 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரையில் நியூசிலாந்து அணி உலகக்கிண்ணம், சாம்பியன்ஸ் ரொபி அடங்கலாக 11 தொடர்களில் விளையாடியுள்ளது. இதில் மூன்று தொடர்களில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் இறுதியாக 92ஆம் ஆண்டு விளையாடியதன் பின்னர் இன்னமும் இலங்கையில் இரு அணிகளும் பங்குபெறும் தொடரில் விளையாடவில்லை. இதுவே முதற் தடவையாகும். இந்த தொடரின்போது கொழும்பு கோட்டை பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற, சில நியூசிலாந்து வீரர்கள் நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் எச்சரிக்கைக்கு மத்தியிலும் தங்கள் பாதுகாப்பை கருத்திற் கொண்டு சுய விருப்பத்தின் அடிப்படையில் நாடு திரும்பினர். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி இரண்டு போட்டிகளை வெற்றி பெற்றுக் கொண்டது. ஒரு போட்டி கை விடப்பட்டது.

நியூசிலாந்து அணி பங்குபற்றிய மற்றைய தொடர்கள் எல்லாமுமே இரண்டிற்கு மேற்பட்ட அணிகள் பங்கு பற்றிய தொடர்களே. இரு அணிகள் மட்டும் பங்கு பற்றிய தொடர் இலங்கையில் இரு அணிகளுக்குமிடையில் முதல் தொடராக நடைபெற்றது 83 / 84ஆம் ஆண்டு. இந்த தொடரில் நியூசிலாந்து அணி 2 - 1 என்ற ரீதியில் வெற்றி பெற்றுக் கொண்டது. அடுத்த வருடம் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் ஒவ்வொரு வெற்றிகளைப் பெற்றுக் கொண்டன. இரு அணிகளும் இலங்கையில் வைத்து 20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 13 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ள அதேவேளை நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் முடிவுகள் இன்றி கைவிடப்பட்டுள்ளன. இறுதியாக நியூசிலாந்து அணி தம்புள்ளையில் வைத்து 2003ஆம் ஆண்டு வெற்றி பெற்றதன் பின்னர் இலங்கை அணியை வெற்றி பெறவில்லை.


இலங்கையில் வைத்து இவ்வளவு மோசமான பெறுபேறுகளை நியூசிலாந்து அணி காட்டி இருப்பதும் அண்மைகாலமாக நியூசிலாந்து அணி பொதுவாகவே சர்வதேசப் போட்டிகளில் தோல்வியடைந்து வருவதும் நியூசிலாந்து அணி இந்த தொடரில் வெல்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தென்படவில்லை. யாரும் நியூசிலாந்து வெற்றி பெறும் என எதிர்வு கூறவும் தயாரில்லை. ஒருநாள் போட்டிகள் என்று வந்தால் இலங்கை அணி பலமாக தென்படுகிறது. துடுப்பாட்ட வரிசை சிக்கல் இல்லாமல் நன்றாக உள்ளது. வேகப்பந்தும் சிறப்பாக உள்ளது. ரங்கன ஹேரத் முதல் சுழல்ப் பந்து வீச்சாளர். அடுத்தவராக இளைய அகில தனஞ்செய களமிறங்குவார் என எதிர்பார்க்க கூடியதாக உள்ளது.

ஆனாலும் மழை குறுக்கிடாமல் போட்டிகள் நடைபெற்றால் இலங்கை அணிக்கு வெற்றிகள் ஆரம்பத்திலேயே கிடைக்கும் என நம்பலாம். முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கி, இள வயது வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அவர்களை தயார்ப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. இலங்கை அணியின் பதினொருவர் தயாராக இருந்தாலும் வெளியே உள்ள வீரர்கள் இன்னும் முழுமையாக தயாராக இல்லை. அவுஸ்திரேலிய தொடருக்கு செல்ல முன்னர் அணியை தயார்படுத்த நல்ல வாய்ப்பு இது. இலங்கை அணி சரியாக அதை செய்ய வேண்டும். எதிர்கால அணியை தயார்ப்படுத்த இதை விட நல்ல வாய்ப்புக் கிடைக்காது.
 
நியூசிலாந்து அணி ஏற்கனவே வெற்றிகளை பெற தடுமாறி வரும் நிலையில் டானியல் வெட்டோரியும் அணியில் இல்லை. உபாதை காரணமாக அணியில் இருந்து விலகியுள்ள நிலையில் நியூசிலாந்து அணி இலங்கையில் வைத்து எப்படியான அணியாக களமிறங்கப் போகிறது என்பது தெரியாதா நிலை. அல்லது முழுமையான பலமான அல்லது சமநிலையான அணியாக அமையாத நிலை. இந்த நிலையில் ரொஸ் ரெயிலரின் தலைமையில் களமிறங்கும் நியூசிலாந்து - இலங்கை அணிக்கு சவாலாக இருக்குமா?


நியூசிலாந்து அணி சார்பாக ஒவ்வொரு தனி வீரர்களாகவும் பார்க்கும் போதும் பலமானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர். ஆனாலும் அணியாக ஒருமித்து இவர்களால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அணித் தலைவர் ரொஸ் ரெயிலரின் தலைமைத்துவத்திலும் குறைசொல்ல முடியாது. இப்படியான நிலையில் களமிறங்குகின்றனர். சிலவேளைகளில் இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

மிக மோசமான கால நிலை பிரச்சினை இருக்கும் நேரத்தில் மழை எத்தனை போட்டிகளை கழுவப்ப் போகின்றதோ தெரியவில்லை என்பதும் இன்னும் ஒரு பெரிய பிரச்சினை. இதுவரையில் இலங்கையிலேயே கூடுதலான போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளன என்பதும் ஒரு மேலதிக தகவல்.


இரு அணிகளுக்குமிடையிலான போட்டிகளில் இலங்கையில் வைத்து கூடுதலான ஓட்டங்களைப் பெற்றுள்ளவர்கள்
அரவிந்த டி சில்வா             10    10    264      62        37.71      87.12     0    2
சனத் ஜெயசூரிய                  10    09    261      80       29.00      76.31      0    2
அர்ஜுன ரணதுங்க              11    09    250    102        35.71     81.16     1    1   
மார்வன் அத்தபத்து            07    07    242       83*     48.40      62.53     0    2
ரொஷான் மகாநாம            06    04    214    107    107.00       65.24    1    1   
கிறிஸ் ஹரிஸ்                    10    10    214       68*     30.57       52.32    0    1
மார்டின் குரோ                      07    07    186       68       31.00      74.69     0    2
மஹேல ஜெயவர்தன       09    09    177       59*     22.12      64.83     0    2
குமார் சங்ககார                    06    06    172       54       28.66      62.77     0    1
நேதன் அஸ்டில்                  05    05    167       74       33.40      73.24     0    2
அடம் பரோரே                       08    08    167       51*     33.40      66.80     0    1
திலான் சமரவீர                    03    03    163    104    163.00      81.50     1    0
ரொமேஷ் களுவிதாரண  07    07    161      54       23.00      58.97     0    1
திலகரத்ன டில்ஷான்         06    06    151      73      30.20      77.43      0    1
(போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதங்கள் அரைச் சதங்கள், * - ஆட்டமிழப்பு இல்லை)

இரு அணிகளுக்குமிடையிலான போட்டிகளில் இலங்கையில் வைத்து கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்.
முத்தையா முரளிதரன்       08    08    76.1    261    13    16/3    20.07    3.41
சனத் ஜெயசூரிய                     10    10    70.0    263    13    28/3    20.23    3.75
அர்ஜுன ரணதுங்க                 11    08    56.4    237    11    23/3    21.54    4.18
டானியல் வெட்டோரி          09    09    83.0    312    11    14/4    28.36    3.75
லசித் மாலிங்க                        04    03    25.1    118    10    28/4    11.80    4.68
குமார் தர்மசேன                     07    07    57.0    208    10    40/3    20.80    3.64
கைல் மில்ஸ்                           07    07    49.5    228    09    41/4    25.33    4.57
ருவான்  கல்பகே                    03    03    30.0    109    08    29/3    13.62    3.63   
இவேன் சட்பீல்ட்                    05    05    39.0    118    08    23/2    14.75    3.02
கிறிஸ் ஹரிஸ்                       10    09    82.0    365    08    42/2    45.62    4.45
(போட்டிகள், இன்னிங்ஸ், ஓவர்கள், ஓட்டங்கள், விக்கெட்கள் , சிறந்த பந்துவீச்சு , சராசரி , ஓவருக்கான சராசரி ஓட்டங்கள்)

இலங்கை வீரர்கள் மிகக் கடும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பது பெறுதிகளில் இருந்து தெரிய வருகிறது. ஆனால் தரப்படுத்தல்கள் இலங்கை அணிக்கு சாதகமாக இல்லை. ஒரு போட்டியில் இலங்கை அணி தோற்றாலே இலங்கை அணிக்கு புள்ளிகள் கிடைக்காது. சகல போட்டிகளையும் வென்றால் 02 புள்ளிகளே கிடைக்கும் என்ற நிலை. மறுபக்கமாக நியூசிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே 01 புள்ளி கிடைக்கும் என்ற நிலை. தரப்படுத்தல்களில் இலங்கை அணி 05ஆம் இடத்திலும், நியூசிலாந்து அணி 08ஆம் இடத்திலும் உள்ளன.

போட்டிகளின் அட்டவணை
போட்டி 01 - கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் -  நவம்பர் 01–பிற்பகல் 2.30 மணி 
போட்டி 02 -கொழும்பு ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானம் - நவம்பர் 04 – பிற்பகல் 2.30 மணி 
போட்டி 03 -கொழும்பு ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானம் - நவம்பர் 06 – பிற்பகல் 2.30 மணி 
போட்டி 04 -ஹம்பாந்த்தோட்டை மஹிந்த ராஜபக்க்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் - நவம்பர் 10 – பிற்பகல் 2.30 மணி 
போட்டி 05 -ஹம்பாந்த்தோட்டை மஹிந்த ராஜபக்க்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் - நவம்பர் 12 – பிற்பகல் 2.30 மணி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .