2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

தென் ஆபிரிக்க - இங்கிலாந்து ஒருநாள்ப் போட்டி தொடர்

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சரவதேசப் போட்டி தொடர் விறுவிறுப்பாக நிறைவடைந்தது. இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சமநிலையில் நிறைவு செய்தன. ஆரம்பம் தென் ஆபிரிக்க அணி பக்கமாக இருந்த போதும் தன் பக்கமாக போட்டி தொடர் போக்கை மாற்றிய இங்கிலாந்து அணி இறுதியில் தொடரை கைப்பற்ற முடியாமல் போனது. தென் ஆபிரிக்க அணி தொடரை சமன் செய்தது. முதல் தர அணிகள் இரண்டுக்கும் இடையிலான போட்டி தொடர் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று இந்த தொடர் அமைந்தது. முதற் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென் ஆபிரிக்க அணி முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டது. ஆனலும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தமை அவர்களின் முதல் இடத்தை மீண்டும் பறிகொடுக்க வேண்டிய நிலையை வழங்கியது. ஆனாலும் அந்த முதல் இடம் சாதனை முதலிடமாக மாறியது. டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்ட தென் ஆபிரிக்க அணி, ஏற்கனவே ட்வென்டி ட்வென்டி போட்டிகளிலும் முதல் இடத்தை வைத்து இருந்தது. இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளிலும் முதல் இடம் கிடைக்க மூன்றுவித தரப்படுதல்களிலும் ஒரே நேரத்தில் முதலிடத்தில் இருந்த அணி என்ற சாதனை அவர்களுக்கு கிடைத்தது.

ஒருநாள்ப் போட்டிகளுக்கான நல்ல பலப்பரீட்சையாக இந்த தொடர் அமைந்தது. இங்கிலாந்து அணியைப் பொறுத்த மட்டில் டெஸ்ட் தொடர் போட்டிகளில் அடைந்த மிக மோசமான தோல்வியில் இருந்து நல்ல மீள்வருகை என்று சொல்லலாம். தென் ஆபிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்றதும் இலகுவாக ஒருநாள்ப் போட்டித்தொடரில் வெற்றி பெறுவார்கள் என ஏதிர்பார்க்கபட்டது. ஆனாலும் இங்கிலாந்தில் வைத்து அவர்களிடம் தோல்வியடையாமல் சமநிலையில் தொடரை நிறைவு செய்தது என்பது தென் ஆபிரிக்க அணிக்கு வெற்றியே. தென் ஆபிரிக்க அணி வீரர்களுக்கு ஓய்வும் வழங்கி சுழற்சி முறையிலேயே வீரர்களை பாவித்தது. இங்கிலாந்து அணி முழுமையான அணியாக களமிறங்கியது.

தென் ஆபிரிக்க அணி சார்பாக ஹாசிம் அம்லாவின் துடுப்பாட்டம் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் கைகொடுத்தது. அணித்தலைவர் ஏபி.டி.வில்லியர்ஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார். இங்கிலாந்து அணி சார்பாக ஒருவரிடம் தங்கவில்லை. ஒவ்வொரு போட்டியில் ஒவ்வொருவர் என ஓட்டங்களை குவித்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள். அவர்களில் இயன் பெல், ஜொனதன் ற்ரொட் ஆகியோர் ஓட்டங்களை கூடுதலாக பெற்றனர். பந்துவீச்சாளர்கள் இரண்டு அணி பக்கமாக பெரிதளவில் பிரகாசிக்கவில்லை. இரண்டு அணிகளும்தான் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களைக் கொண்ட நாடாகக் கருதப்படுகின்றன. இருந்தபோதும் அதிகமாக சுவிங்க்ஸ் செய்யும் ஆடுகளங்களில் சிறப்பாக பிரகாசிக்கத் தவறியமை ஆச்சரியமே.


போட்டிகளும் முடிவுகளும்

முதலாவது போட்டி
இங்கிலாந்து தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்த போட்டி ஆரம்பிக்கப்பட்ட போதும் 5.3 ஓவர்கள் விளையாடப்பட்ட நிலையில் போட்டி முழுமையாக கைவிடப்பட்டது.

இரண்டாவது போட்டி
இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 50 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் ஹசிம் அம்லா 150 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இதுவே அவருடைய கூடுதலான ஓட்டங்கள். கிரேம் ஸ்மித் 52 ஓட்டங்கள். பந்துவீச்சில் கிரேம் சுவான் 2 விக்கெட்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் இயன் பெல், சமித் பட்டேல் ஆகியோர் தலா 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். வேய்ன் பார்னல், ரொபின் பீற்றர்சன், மோர்னி மோர்க்கல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 80 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியின் நாயகனாக ஹசிம் அம்லா தெரிவானார்.

மூன்றாவது போட்டி
தென் ஆபிரிக்க அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இருந்த நிலையில் இங்கிலாந்து அணி போராட்டத்துக்கு மத்தியில் வெற்றி பெற்று தொடரை உயிர்ப்பித்தது. ஒருநாள்ப் போட்டிகளின் வெற்றிக்கு கெவின் பீற்றர்சன் தேவை என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீற்றர்சன் இல்லாமலே வெற்றி பெறமுடியும் என இங்கிலாந்து அணி வென்று காட்டியது. நாணய சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. ஹசிம் அம்லா 43 ஓட்டங்களையும், டீன் எல்கர் 42 ஓட்டங்களையும் பெற்றனர். ஜேம்ஸ் அன்டர்சன் 9.4 ஓவர்களில் 44 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டார். 9 ஓவர்கள் பந்து வீசி ஜேட் டேர்ன்பச் 44 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். ஜேம்ஸ் ரெட்வெல் 2 விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ஜொனதன் ரொட் மெதுவாக துடுப்பெடுத்தாடி ஆரம்பம் ஒன்றை வழங்க ஒய்ன் மோர்கன் அதிரடியாக அடித்தாடி வெற்றியைப் பெற்றுக் கொண்டார். ஜொனதன் ரொட் 125 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஒய்ன் மோர்கன் 67 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ரொபின் பீற்றர்சன் 10 ஓவர்களில் 39 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். போட்டியின் நாயகனாக ஒய்ன் மோர்கன் தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் கடந்த போட்டியில் இங்கிலாந்து இழந்த முதலாமிடத்தை மீண்டும் பெற்றுக் கொண்டது.

நான்காவது போட்டி
நான்காவது போட்டி இரு அணிகளுக்குமிடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 220 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் ஹசிம் அம்லா 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஏபி.டி.வில்லியர்ஸ் 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். டீன் எல்கர் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 20 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார் ரொபின் பீற்றர்சன். பந்துவீச்சில் ஜேம்ஸ் ரெட்வெல் 8 ஓவர்கள் பந்துவீசி 35 ஓட்டங்களைப் கொடுத்து 3 விக்கெட்களைக் பெற்றுக்கொண்டார். ரவி போபரா 9 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 46.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அணித் தலைவர் அலஸ்டயர் குக் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும் இயன் பெல், ஜொனதன் ரொட் ஆகியோருடைய இணைப்பாட்டம் 141 ஓட்டங்களை தர வெற்றி இலக்கு இலகுவானது. இயன் பெல் 88 ஓட்டங்களை பெற்ற அதேவேளை, ஜொனதன் ரொட் 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஒய்ன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். டேல் ஸ்டைன் 9.4 ஓவர்களில் 47 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் 2 - 1 என்ற முன்னிலை பெற்றது. இந்த தோல்வி மூலமாக தென் ஆபிரிக்க அணி, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று கைப்பற்றிக் கொண்ட முதல் இடத்தை இழந்தது மட்டுமல்லமால் மூன்றாமிடத்திற்க்கும் பின்தள்ளப்பட்டுள்ளது.

ஐந்தாவது போட்டி
இந்த போட்டியில் தென் ஆபிரிக்க அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியது. இரண்டு அணிகளும் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டன. முதற்ப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 45.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 182 ஓட்டங்களை பெற்றது. அலஸ்டையர் குக் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். கிரெய்க் கிவ்சுவேட்டார், கிறிஸ் வோகேஷ் ஆகியோர் தலா 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ரொபின் பீற்றர்சன் 10 ஓவர்கள் பந்துவீசி 37 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார். டேல் ஸ்டைன், மோர்னி மோர்கல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டனர். பதிலளித்த தென் ஆபிரிக்க அணி ஆரம்ப மூன்று விக்கெட்களை இழந்து மிகவும் தடுமாறியது. ஐந்தாவது ஓவரில் 14 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்கள். இங்கிலாந்து பக்கமாக வெற்றி செல்லும் என்று பார்த்தால் ஹாசிம் அம்லா, ஏபி.டி.வில்லியர்ஸ் ஆகியோரின் துடுப்புகள் இங்கிலாந்து பந்துகளை பதம் பார்த்தன. இந்த வருடத்தில் ஓட்டங்களை அள்ளி குவித்து வரும் இருவரும் மிக அபார இணைப்பாட்டத்தை வழங்க வெற்றி கிடைத்தது. முறியடிக்கப்படாத 176 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பெற்றனர். ஓவர்கள் 16 மீதமிருந்த நிலையில் அம்லாவிற்கு சதம் அடிக்கும் வாய்ப்பை வில்லியர்ஸ் வழங்கி இருக்கலாம். ஹாசிம் அம்லா 97 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். ஏபி.டி.வில்லியர்ஸ் 75 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். 34.3 ஓவர்களில் 186 ஓட்டங்களை தென் ஆபிரிக்க அணி பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். போட்டியின் நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் ஹாசிம் அம்லா தெரிவானார். 


தொடரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் 
ஹாசிம் அம்லா                 5    4    335    150    111.66      94.36    1    1
இயன் பெல்                          5    5    181      88       45.25     84.57    0    1
ஏபி.டி.வில்லியர்ஸ்         5    4    170       75*      56.66    91.89    0    1
ஜொனதன் ற்ரொட்           4    3    142       71       47.33     59.41    0    1
ஒய்ன் மோர்கன்                5    4    136       73       45.33     88.88    0    1
கிரேம் ஸ்மித்                     5    4    100       52        25.00    62.11    0    1
(போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சத்தங்கள், அரைச் சதங்கள்)

கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
ரொபின் பீற்றர்சன்            5    5     36.0    152     7     37/3     21.71    4.22
ஜேம்ஸ் அன்டர்சன்         5    4     34.4    170     6     44/4     28.33    4.90
டேல் ஸ்டைன்                   3    3     25.4    103     5     24/2     20.60    4.01   
ஜேம்ஸ் ற்ரெட்வெல்       3    3     24.0    114     5     35/3     22.80    4.75
மோர்னி மோர்க்கல்          4    4    26.4    130     5     29/2     26.00    4.87
ஜேட் டேர்ன்பக்                   3    3     25.3    151    5     44/3     30.20    5.92
(போட்டிகள், இன்னிங்ஸ், ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பெறுதி, சராசரி ஓட்ட சராசரி வேகம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .