2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்து அணியிடம் இருந்து முதல் இடத்தைப் பறித்தது தென் ஆபிரிக்க அணி

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடரில் மிக மோசமான தோல்வியை இங்கிலாந்து அணி சந்திக்க, தென் ஆபிரிக்க அணி தொடரையும், முதல் நிலை டெஸ்ட் அணி என்ற நிலையையும் கைப்பற்றியது.

இந்த தொடர் ஆரம்பிக்கும் போது முதல் இடத்திற்கான போட்டியாகவே எதிர்பார்க்கப்பட்டது. இங்கிலாந்து அணி அண்மைக்காலமாக மிக பலமான அணியாக தன்னை வெளிக்காட்டி வந்தது. மறு புறத்தில் தென் ஆபிரிக்க அணியும் அதே நிலைதான். இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையில் தொடர் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், யாரும் எதிர்பார்க்காத அளவு தென் ஆபிரிக்க அணி இங்கிலாந்தில் வைத்து அசுர ஆதிக்கத்தை வெளிக்காட்டியது. இரண்டு தோல்விகள் என்பது இங்கிலாந்து அணியை பொறுத்த மட்டில் மிக மோசமானதோல்வியே.

தென் ஆபிரிக்க அணியின் மிக சிறப்பான வேகப் பந்துவீச்சு கை கொடுத்தது. உலகின் முதற்தர டெஸ்ட் பந்து வரிசை அவர்களுடையது என்பதை நிரூபித்து காட்டி விட்டார்கள். அவர்கள் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை தகர்க்க இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் தடுமாறிப் போனது. துடுப்பாட்டத்தில் தென் ஆபிரிக்க அணியின் ஆரம்பம் மிக சிறப்பாக அமைந்து போனது. குறிப்பாக முதல் நான்கு வீரர்களும் ஓட்டங்களை குவித்தனர். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு ஓரளவு சிறப்பாக அமைந்த போதும் துடுப்பாட்டம் மிக மோசமாக அமைந்தது. கெவின் பீற்றர்சன் ஓரளவு சிறப்பாக செயற்பட்ட போதும், பிரச்சினைகள் காரணமாக இறுதிப் போட்டியில் அவர் விளையாடவில்லை.


இங்கிலாந்து அணி இன்னும் தன்னை நேர்த்தியான அணியாக மாற்றிக் கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. நல்ல அணி என்றாலும் கூட தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றுக் கொள்ளமுடியவில்லை. இலங்கையில் வைத்து தோல்வி. இப்போது சொந்த மண்ணிலும் தோல்வி. எனவே சமநிலை தன்மையை உயர்த்திக் கொள்ளவேண்டும். இன்னும் ஒரு பக்கம் அணிக்குள் மீண்டும் பிரச்சினை. இது ஓர் அணிக்கு பெரிய  பின்னடைவை உருவாக்கும். கெவின் பீற்றர்சன் சம்மந்தப்பட்ட பிரச்சினை என்றாலும் இது அணியின் பிரச்சினையும் கூட.


தென் ஆபிரிக்க அணி டெஸ்ட் போட்டிகளில் நிச்சயமான நல்ல பெறுதிகளை காட்டி வருகிறது. அணியின் சமநிலை தன்மையும் நல்ல முறையில் உள்ளது. மார்க் பௌச்சரின் இடம் பெரிதளவில் பின்னடைவை உருவாகவில்லை. சுழல்ப்பந்து வீச்சாளரை அவர்கள் நம்பி இருக்கவில்லை. டேல் ஸ்டைன், வேணன் பிலாண்டர், மோர்னி மோர்கல் மிக அபாரமாக பந்து வீசுகிறார்கள். இவர்கள்தான் தற்போது உலகின் முதல் மூன்று சிறந்த டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்கள். இனி என்ன தேவை இந்த அணிக்கு. இன்னுமொரு பக்கம் பயிற்றுவிப்பாளர் கரி கேர்ஸ்டன். உலகின் நம்பர் வண் பயிற்றுவிப்பாளர் என்பதை நிரூபித்துவிட்டார். இந்திய அணிக்கு முதல் இடத்தைப் பெற்றுக் கொடுத்தார். தற்போது தனது சொந்த அணிக்கு அதை பெற்றுக் கொடுத்துவிட்டார். 

முதற்போட்டியில் இலகுவான வெற்றி தென் ஆபிரிக்க அணிக்கு
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 385 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் அலஸ்டையர் குக் 115 ஓட்டங்களையும், மத் ப்ரையர் 60 ஓட்டங்களையும் பெற்றனர். மோர்னி மோர்கல் 4 விக்கெட்களையும், ஜக்ஸ் கலிஸ், டேல் ஸ்டைன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 637 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது. ஹாசிம் அம்லா 311 ஓட்டங்கள். ஜாக்ஸ் கலிஸ் 182 ஓட்டங்கள். இருவரும் ஆட்டமிழக்கவில்லை. கிரேம் ஸ்மித் 131 ஓட்டங்கள். இங்கிலாந்து அணி தங்கள் இரண்டாவது இன்னிங்சில் 240 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இயன் பெல் 55 ஓட்டங்களைப் பெற்றார். டேல் ஸ்டைன் 5 விக்கெட்களையும், இம்ரான் தாகிர் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியில் நாயகன் ஹாசிம் அம்லா.


இரண்டாவது போட்டி சமநிலையில்

முதல் போட்டி தோல்வி என்ற நிலையில் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஓரளவான போரட்டதுக்கு பின்னர் சமநிலையில் போட்டியை நிறைவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 419 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் அல்விரோ பீற்றர்சன் 182 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். கிரேம் ஸ்மித் 52 ஓட்டங்கள். ஸ்டுவோர்ட் ப்ரோட் 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டீபன் பின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி 425 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. கெவின் பீற்றர்சன் 149 ஓட்டங்கள். மட் ப்ரையர் 68 ஓட்டங்கள். இம்ரான் தாகிர் 3 விக்கெட்கள். டேல் ஸ்டைன், மோர்னி மோர்கல், வேர்ணன் பிலாண்டர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள். தென் ஆபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் தடுமாறிப் போனது. 258 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்களை இழந்த நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்தியது. ஜக்ஸ் ருடொல்ப் 69 ஓட்டங்கள். கிரேம் ஸ்மித் 52 ஓட்டங்கள். இங்கிலாந்து அணி 130 ஓட்டங்களைப் பெற்று நான்கு விக்கெட்களை இழந்த நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. போட்டியின் நாயகன் கெவின் பீற்றர்சன். இந்தப் போட்டி மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென் ஆபிரிக்கா

முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி பின் வரிசை வீரர்களின் உதவியுடன் 309 ஓட்டங்களைப் பெற்றது. ஜே.பி. டுமினி, வேர்ணன் பிலாண்டர் ஆகியோர் தலா 61 ஓட்டங்களைப் பெற்றனர். ஸ்டீபன் பின் 4 விக்கெட்கள். ஜேம்ஸ் அண்டர்சன் 3 விக்கெட்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 315 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜொனி பயர்ஸ்டவ் 95 ஓட்டங்களையும், இயன் பெல் 58 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மோர்னி மோர்கள், டேல் ஸ்டைன் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். தென் ஆபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 351 ஓட்டங்களைப் பெற்றது. ஹசிம் அம்லா 121 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஸ்டீபன் பின் 4 விக்கெட்கள். ஜேம்ஸ் அண்டர்சன், ஸ்டுவோர்ட் ப்ரோட், கிரேம் சுவான் ஆகியோர் தலா 2 விக்கெட்கள். இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 294 ஓட்டங்களைப் பெற்று 51 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. மட் ப்ரையர் 73 ஓட்டங்கள். ஜொனதன் ட்ராட் 63 ஓட்டங்கள். பந்துவீச்சில் வேர்ணன் பிலாண்டர் 5 விக்கெட்கள். போட்டியின் நாயகனும் அவரே.

போட்டியின் நாயகர்களாக தென் ஆபிரிக்க அணி சார்பாக ஹசிம் அம்லாவும், இங்கிலாந்து அணி சார்பாக மட் ப்ரையரும் தெரிவானார்கள்.

தொடரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்
ஹசிம் அம்லா                   3    5    482    311*    120.50    58.85    2    0       
மட் ப்ரையர்                         3    6    275       73       45.83    60.04    0    3
கிரேம் ஸ்மித்                      3    5    272    131        54.40    47.30    1    2
ஜாக்ஸ் கலிஸ்                   3    5    262    182*       65.60    57.58    1    0
அல்விரோ பீற்றர்சன்      3    5    244    182         61.00    46.83    1    0
கெவின் பீற்றர்சன்            2    4    219    149         54.75    70.41    1    0
ஜொனதன் ட்ராட்              3    6    217       71         43.40    44.10    0    2
(போட்டிகள் , இன்னிங்க்ஸ், ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள்,சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதம், அரைச் சதம் )

தொடரில் கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
டேல் ஸ்டைன்                   3    6    131        438    15    56/5    29.20    3.34
வேர்ணன் பிலாண்டர்     3    6    120.5     284    12    30/5    23.66    2.35
மோர்னி மோர்க்கல்         3    6    128.2     380    11    72/4    34.54    2.96
ஸ்டுவோர்ட் ப்ரோட்        3    5    130.4     437    11    69/5    39.72    3.34
ஸ்டீபன் பின்                       2    4       91.0    322    10    74/4    32.20    3.53
ஜேம்ஸ் அண்டர்சன்        3    5    147.4     366    09    76/3    40.66    2.47
இம்ரான் தாகீர்                    3    6    116.4     378    08    63/3    47.25    3.24
(போட்டிகள், இன்னிங்க்ஸ், ஓவர்கள்,ஓட்டங்கள்,விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஸ்ட்ரைக் ரேட், ஓவருக்கு வழங்கிய சராசரி ஓட்டங்கள்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .