2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு டெஸ்ட் தொடர் வெற்றி

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 2 - 0 என்ற ரீதியில் கைப்பற்றிக் கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி நல்ல மீள் வருகையை காட்ட ஆரம்பித்துள்ளது. உள்ளூர் தொடரில் வென்றாலும், நியூசிலாந்து அணியிலும் பார்க்க பலம் இழந்தே காணப்பட்டது. இருப்பினும் தற்போது நியூசிலாந்து அணி - மேற்கிந்திய தீவுகள் அணியிலும் பார்க்க பலமிழந்துள்ளது என்பதுதான் முக்கியமான விடயம். எப்படி இருப்பினும் வெற்றிகள் அணிக்கு புதிய உத்வேகத்தை வழங்கும். அணியில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்கள் அவர்களுக்கு பயனை தந்துள்ளது. நியூசிலாந்து அணி முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணி இருந்த நிலைக்கு சென்றுவிட்டது. மிக மோசமான பெறு பேறுகளை காட்டி வருகின்றது. ஏன் திடீர் என இப்படி மாறிவிட்டார்கள் என புரியவில்லை. வருகின்ற புதிய வீரர்கள் கூட பெரிதாக எதுவும் செய்வதாக இல்லை. இருக்கின்ற வீரர்களும் அவ்வளவு பெரிதாக செய்து காட்டுவதாக இல்லை. மாற்றங்கள் நிறையவே நியூசிலாந்து அணிக்கு தேவைப்படுகிறது.

இரண்டு அணிகளுக்குமான முதற்ப் போட்டி ஜூலை மாதம் 25ஆம் திகதி அன்டிகுவாவில் ஆரம்பித்தது. நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி 351 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மார்டின் கப்தில் 97 ஓட்டங்களையும், டானியல் ப்ளைன், ரொஸ் டெயிலர் ஆகியோர் தலா 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுனில் நரையன் 5 விக்கெட்களையும், கிமர் ரோச், ரவி ராம்போல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தங்கள் முதல் இன்னிங்சில் அபார ஆரம்பம் மூலமாக 534 ஓட்டங்களை பெற்றது மேற்கிந்திய தீவுகள். 254 ஓட்டங்களாக ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக அமைந்தது. கிறிஸ் கெயில் 150 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை, கெரோன் பவல் 134 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். நரசிங் டினோரைன் 79 ஓட்டங்களையும், அசாட் புடாடின் 55 ஓட்டங்களையும் டரின் சமி 50 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் கிறிஸ் மார்டின் 3 விக்கெட்களையும், டக் ப்ரக்வேல், கேன் வில்லியம்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

நியூசிலாந்து அணி தங்கள் இரண்டாவது இன்னிங்சில் 272 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. இதில் பிரெண்டன் மக்லம் 84 ஓட்டங்களையும், மார்டின் கப்தில் 67 ஓட்டங்களையும் பெற்றனர். கிமர் ரோச் 5 விக்கெட்களைக் கைப்பற்றிய அதேவேளை, சுனில் நரையன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெறும் 102 ஓட்டங்கள் மாத்திரமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து மிக இலகுவான வெற்றியை பெற்றுக் கொண்டது மேற்கிந்திய தீவுகள். கிறிஸ் கெயில் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள். கெரோன் பவல் 30 ஓட்டங்கள். ஒன்பது விக்கெட்களினால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுக் கொண்டது. போட்டியின் நாயகனாக சுனில் நரையன் தெரிவானார்.

இரண்டாவது போட்டி இம்மாதம் இரண்டாம் திகதி ஆரம்பமாகி இருந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பில் ஈடுப்பட்டது. துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் மார்டின் கப்டில் 71 ஓட்டங்கள். ரொஸ் டெயிலர் 60 ஓட்டங்கள். பந்து வீச்சில் கிமர் ரோச் 4 விக்கெட்கள். டினோ பெஸ்ட், நரசிங் டினோரைன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள். மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 209 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதில் மர்லன் சாமுவேல்ஸ் 123 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். டரின் சமி 32 ஓட்டங்கள். நியூசிலாந்து அணியின் ட்ரென்ட் பௌல்ட், டக் ப்ரக்வெல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களைக் கைப்பற்றினர். டிம் சௌதி, நெயில் வாக்னர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

தங்கள் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 154 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. மார்டின் கப்டில் 42 ஓட்டங்களையும், டௌக் ப்ரவுன்லி 35 ஓட்டங்களையும் பெற்றனர்.  பந்து வீச்சில் நரசிங் டினோரைன் 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். சுனில் நரைன் 3 விக்கெட்கள். டினோ பெஸ்ட் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். நியூசிலாந்து அணியின் மோசமான இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 206 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. ஐந்து விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. மர்லன் சாமுவேல்ஸ் 52 ஓட்டங்களையும், சந்தர்போல் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாக மர்லன் சாமுவேல்ஸ் தெரிவான அதேவேளை, போட்டி தொடர் நாயகனாக கிமர் ரோச் தெரிவு செய்யப்பட்டார்.

கூடுதலான ஓட்டங்கள் பெற்றவர்கள்
மார்டின் கப்டில்               2     4    277      97    69.25    43.82    0    3
கிறிஸ் கெயில்                2     4    230    150    76.66    72.10    1    1
மர்லன்சமுவேல்ஸ்     2     3    203    123    67.66    63.43    1    1
கெரோன்  பவல்              2     4    180    134    45.00    49.04    1    0
பிரண்டன் மக்லம்          2     4    128      84    32.00    53.33    0    1
ரொஸ் டெயிலர்             2     4    126      60    31.50    45.65    0    1
(போட்டிகள், இனிங்ஸ்,ஓட்டங்கள், சிறந்த ஓட்ட எண்ணிக்கை, சராசரி, ஸ்ட்ரைக் ரேட்  சதங்கள், அரைச் சதங்கள்)

கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
கிமர் ரோச்                      2    4      76.3      219    12    60/5       18.25
சுனில் நரையன்           2    4    123.0     308    12    132/5      25.66
டௌக் ப்ரக்வெல்        2    4       64.0    205      7       46/3      29.28
நரசிங் டினோரைன்    2    4       13         91       6       37/4     15.16
டினோ பெஸ்ட்             1    2        29        84       4       40/2      21.00
ரவி ராம்போல்              1    2       40.1     96       4       44/2      24.00
ட்ரென்ட் போல்ட்         1    2       29      104       4        58/3     26.00
நெயில் வக்னேர்          2    4       60      209       4        65/3     52.25
(போட்டிகள்,இன்னிங்க்ஸ்,ஓவர்கள், ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி)

பெறுபேறுகளின் அடிப்படையில் பார்க்கும் போது இரண்டு பக்கமாகவும் மேற்கிந்திய தீவுகள் அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. குறிப்பாக பந்துவீச்சில் நாற்பது விக்கெட்களில் 24 விக்கெட்களை  இரண்டு பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர். நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு மோசமாகவே இருந்துள்ளது. என்றாலும் துடுப்பாட்ட ஆதிக்கம் இன்னும் கொஞ்சம் இருந்து இருந்தால் சமநிலை நோக்கி சென்றாவது இருக்க முடியும். இரண்டாவது போட்டியில் அதன் காரணமாகவே தோல்வியடைய வேண்டிய நிலை உருவாகிப்போனது. கிறிஸ் கெயிலின் துடுப்பாட்டம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பொதுவாக பார்க்கும் பொது மேற்கிந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் வெற்றிக்கான ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். நியூசிலாந்து அணி சார்பாக பெறப்பட்ட ஓட்டங்கள். அணியின் இக்கட்டான நிலையை காப்பாற்ற பெறப்பட்ட ஓட்டங்களே. மார்டின் கப்டில் எல்லாப் போட்டிகளிலும் தனித்து நின்று ஓட்டங்களைப் பெற மறு பக்கமாக விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. இதுதான் அணியின் நிலை.

மேற்கிந்திய தீவுகள் அணி எப்போதுமே நல்ல அணியாக வரவேண்டும் என்ற விருப்பாம் சகல கிரிக்கெட் ரசிகர்களிற்கும் உள்ள ஒன்று. சிறப்பான அணியாக இருந்த அணி வீழ்ந்து போய்விட்டது என்பது ஒரு காரணம். யாருடனும், எந்த அணியுடனும் பிரச்சினைகளில் ஈடுபடாமல் நட்புணர்வுடன் விளையாடுபவர்கள். இது இன்னுமொரு காரணம். ஆனால் தங்களுக்குள் மிகுந்த குழப்படி காரர்கள், பொறுப்பற்றவர்கள். இப்போது மீண்டும் எழத் தொடங்கியுள்ளார்கள். தொடருமா என பொறுத்து இருந்து பார்க்கலாம். இவர்கள் சிறப்பான அணியாக மாறினால், எல்லா அணிகளுக்கும் அச்சுறுத்தல் கொடுப்பார்கள். ஆரோக்கியமான கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியும். நடக்குமா? இல்லையா? கேள்வி மாத்திரமே பதில்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .