2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை - இந்திய ஒருநாள் போட்டித் தொடர்; ஒரு மீள் பார்வை

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித்தொடர் நிறைவடைந்துள்ளது. இந்திய அணிக்கு ஓர் அபார தொடர் வெற்றி. இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர் பார்ப்புக்கள் இருந்தாலும் இவ்வளவு மோசமான தோல்வியை இலங்கை அணியோ, ரசிகர்களோ எதிர்பார்க்கவில்லை. மாறாக இந்தியா பக்கமாக, குறிப்பாக இந்தியா ஊடகங்கள் இந்த தொடரில் இந்தியா அணி வெற்றி பெறுவது கஷ்டம் என்றே எதிர்பார்த்து இருந்தனர். நல்ல அணியாக, சமநிலை பெற்ற அணியாக இலங்கை அணி இருந்த போதும் வெற்றி பெற முடியவில்லை. குமார் சங்ககார, நுவான் குலசேகர ஆகியோர் உபாதை காரணமாக அணியில் இருந்து விலகியமை இலங்கை அணிக்கு பாதிப்பாக அமைந்தது. அணியின் சமநிலை, அவர்களுடைய அனுபவம் நிச்சயம் இல்லாமல் போய் விட்டது. இவற்றை எல்லாம் தாண்டி இலங்கை அணியின் களத் தடுப்பு மிக மோசமாக இந்த தொடரில் அமைந்து போனது. பிடிகள் தவற விடப்பட்டமை, ஓட்டங்கள் தேவை இல்லாமல் வழங்கப்பட்டன, ரன் அவுட் ஆட்டமிழப்புக்கள் தவற விடப்பட்டன என பல பிரச்சினைகள் இலங்கை அணியில் காணப்பட தோல்விகளை சந்தித்தது.

இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை இலங்கையில் வைத்து வெற்றி பெற்றுக் கொண்டது. இலங்கை அணி - இந்திய அணியை பார்த்து பயப்படுகிறதா? இந்தியா என்றால் மன அளவில் குழப்பமடைகிறார்களா? இப்படி கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது. உலகக் கிண்ணத்திற்கு பின் இலங்கை அணி - இந்திய அணியை சந்தித்த வேளையில் மோசமான முடிவுகளே கிடைத்துள்ளன. அவுஸ்திரேலியாவில் வைத்து, அவுஸ்திரேலியாவை வென்ற இலங்கை அணி - இந்திய அணியை ஒரு போட்டியில் வென்றாலும் இந்தியா அணியின் ஆதிக்கம்தான் அங்கேயும் இருந்தது. ஆசிய கிண்ணப் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. எல்லாவற்றுக்கும் சேர்த்து இலங்கையில் பழி வாங்குவார்களா என்று பார்த்தால் இன்னும் மோசமாக தோல்விகளை சந்தித்துள்ளது.

இந்திய அணிக்கு பழக்கமில்லாத மூன்று ஆடுகளங்கள். இவற்றில் ஒன்றில் மாத்திரமே வெற்றி. கொழும்பு போட்டிகளில் இலங்கை அணி இரண்டில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றும் தோல்வி. பொதுவாக ஆர்.பிரமேதாச மைதானத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றால் போட்டியை பாதி வென்றதற்கு சரி. ஆனாலும் இந்திய அணியின் துடுப்பாட்ட பலம் வெற்றி பெற வைத்தது. இலங்கை அணிக்கு வேகப் பந்து வீச்சு சகல துறை வீரர்கள் இருவர் இருத்தும், துடுப்பாட்டம் பலமில்லாமல் இருக்கும் வேளையில் இன்னும் ஒரு மேலதிக துடுப்பாட்ட வீரரை ஏன் பாவிக்கக் கூடாது? தட்டையான ஆடுகளங்கள். சகல ஆடுகளங்களும் துடுப்பாட்ட வீரர்களை நம்பி களமிறங்கும் ஆடுகளங்கள். இந்தியா அணி சுழல்ப் பந்து வீச்சாளர்களில் அந்த யுக்தியை பாவித்து நான்காவது போட்டியில் மனோஜ் திவரியை அணிக்குள் கொண்டு வந்து, அவருடைய பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டையும் பாவித்தார்கள். இலங்கை அணி ஏன் அவ்வாறு செய்யக் கூடாது? திசர பெரேரா, அஞ்சலோ மத்தியூஸ் இருவரும் சிறப்பாகவே பந்து வீசுகிறார்கள். லசித் மாலிங்க மூவருமாக 30 ஓவர்கள் என நம்பி இருந்தால் நான்காவது சுழல்ப் பந்து வீச்சாளர். டில்ஷானை பந்து வீச்சில் முழுமையாக பாவிக்கவில்லை. உபாதைகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஜீவன் மென்டிஸ் நன்றாக பந்து வீசுகிறார். பார்கின்ற வேளையில் இலங்கை அணிக்கு பகுதி நேர பந்து வீச்சாளர்களின் குறை நன்றாக தெரிகின்றது. லஹிறு திரிமன்னே மத்திய வரிசையில் நிச்சய இடம்பிடித்துள்ள நிலையில் அவருடைய பந்து வீச்சை இலங்கை அணி மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஐந்து பந்து வீச்சாளர்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என்ற நிலை உருவாகும். இறுதியாக இந்த தொடரில் நடந்தது நடக்கும்.

உலக T20 போட்டிகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் இந்திய அணி சார்பாக களமிறங்கும் அணி இதே அணியாகத்தான் இருக்கும். ரோஹித் ஷர்மா, மனோஜ் திவாரி ஆகியோருக்கு பதிலாக அணிக்குள் வேறு யாராவது வரக்கூடும். இலங்கை அணிக்குள் முக்கிய மாற்றங்கள் ஏற்படாது. ஆனாலும் குமார் சங்ககார, நுவான் குலசேகர ஆகியோருடைய நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் குணமடைந்தால் எந்த பிரச்சினைகளும் இருக்காது. உப்புல் தரங்க நிச்சயம் விளையாட மாட்டார் என நம்பலாம். லஹிறு திரிமன்னே விளையாடுவார் என்றே எதிர் பார்க்கப்படுகிறது.

போட்டிகளின் சாராம்சம்:
ஹம்பாந்தோட்டையில் முதற்ப் போட்டி இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுபெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ஓட்டங்களைப் பெற்றது. விராத் கோலி 106 ஓட்டங்களையும், விரேந்தர் செவாக் 96 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் திசர பெரேரா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலளித்த இலங்கை அணி சார்பாக குமார் சங்ககார சிறப்பாக துடுப்பெடுத்தாடி 133 ஓட்டங்களை பெற்ற போதும் விக்கெட்கள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட வெற்றி இலக்கை நோக்கி செல்ல முடியவில்லை. 21 ஓட்டங்களால்  இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. திசர பெரேரா 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் உமேஷ் யாதவ், இர்பான் பதான், அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டனர். போட்டியின் நாயகன் விராத் கோலி. பிடி ஒன்றை எடுக்க முற்பட்ட போது நுவான் குலசேகரவிற்கு தசை பிடிப்பு ஏற்பட்டு தொடரில் விளையாடாத அளவிற்கு உபாதை ஏற்பட்டது.

இரண்டாவது போட்டியும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது. இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியது. இந்திய அணி மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிபடுத்தியது. 138 ஓட்டங்களிற்கு 33.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது. கெளதம் கம்பீர் 65 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் திசர பெரேரா, அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள். பதிலளித்த இலங்கை அணி 19.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. உப்புல் தரங்க ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்கள். திலகரத்ன டில்ஷான் 50 ஓட்டங்கள். திசர பெரேரா போட்டியின் நாயகனாக தெரிவானார். 

மூன்றாவது போட்டி கொழும்பில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்கள். குமார் சங்ககார 73 ஓட்டங்கள். அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்கள். மஹேல ஜெயவர்தன 65 ஓட்டங்கள். பந்து வீச்சில் சகீர் கான் இரண்டு விக்கெட்கள். இலங்கை அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் பலமான இந்திய துடுப்பாட்ட வரிசையை கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கை அணி இலங்கையில் வைத்து 250 ஓட்டங்களுக்கு மேல் பெற்று தோல்வியடைந்ததில்லை. இது முதற்ப் போட்டியாக மாறிப்போனது. பதிலளித்த இந்திய அணி இரண்டு பந்துகள் மீதமிருக்க வெற்றி பெற்றுக்கொண்டது. கெளதம் கம்பீர் 102 ஓட்டங்கள். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்கள். இர்பான் பதான் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்கள். போட்டியின் நாயகனாக இறுதி நேரத்தில் அடித்தாடி வெற்றி பெற்றுக் கொடுத்த சுரேஷ் ரெய்னா தெரிவானார்.

நான்காவது போட்டியும் கொழும்பில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் இந்திய அணி துரத்தி அடித்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 251 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. உப்புல் தரங்க 51 ஓட்டங்கள். லஹிறு திரிமன்னே 47 ஓட்டங்கள். கடந்த போட்டியில் விக்கெட் காப்பில் ஈடுபட்ட வேளையில் கை விரலில் ஏற்பட்ட முறிவு காரணமாக குமார் சங்ககார இந்தப் போட்டியில் விளையாடவில்லை. 6 வாரங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்திய அணியின் சுழல்ப் பந்து வீச்சாளர்கள் விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்த போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மனோஜ் திவாரி மூன்று விக்கட்களைக் கைப்பற்றினார். அஷ்வின் இரண்டு விக்கெட்கள். பதிலளித்த இந்திய அணி 42.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. விராத் கோலி இந்த தொடரின் இரண்டாவது சத்தத்தை அடித்தார். ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்கள். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்கள். போட்டியின் நாயகன் விராத் கோலி. தொடர் இந்தியா வசமானது.

இறுதிப் போட்டி பல்லேகலவில் நடைபெற்றது. தொடர் பறிபோன நிலையில் மஹேல ஓய்வு எடுத்துக் கொண்டார். அஞ்சலோ மத்தியூஸ் தலைமை பொறுப்பை ஏற்றார். ஆனாலும் மாற்றங்கள் பெரிதாக நிகழவில்லை. இந்திய அணி வெற்றி பெற்றுக் கொண்டது. இந்திய அணி முதலில் இந்தப் போட்டியில் துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 294 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. கெளதம் கம்பீர் 88 ஓட்டங்கள். மனோஜ் திவாரி 65 ஓட்டங்கள். டோனி 58 ஓட்டங்கள். லசித் மாலிங்க 3 விக்கெட்கள். முதற் தடவையாக இந்திய அணிக்கு எதிராக மூன்று விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றது. லஹிறு திரிமன்னே 77 ஓட்டங்கள். ஜீவன் மென்டிஸ் 72 ஓட்டங்கள். அவரின் கன்னி அரைச் சதம் இது. பந்து வீச்சில் இர்பான் பதான் ஐந்து விக்கெட்கள். போட்டியின் நாயகனும் அவரே. தொடர் நாயகனாக விராத் கோலி தெரிவானார், இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தரப்படுத்தலில் 119 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு முன்னேறியது.

இத்தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள்

விராத் கோலி                      5    5    296    128*      74.00    2    0
கெளதம் கம்பீர்                    5    5    258    102       51.60    1    2
குமார் சங்ககார                   3    2    206    133    103.00     1    1
உப்புல் தரங்க                       5    5    177      59*     44.25    0    2
சுரேஷ் ரெய்னா                   5    5    174      65*      58.00    0    3
விரேந்தர் செவாக்              4    4    148      96        37.00    0    1   
டோனி                                     5    4    135      58        33.75    0    1
ஜீவன் மென்டிஸ்                3    3    134      72        67.00    0    1
லஹிறு திரிமன்னே          4    3    131      77        43.66    0    1   
அஞ்சலோ மத்தியூஸ்       5    4    105      71*      35.00    0    1
திலகரத்ன டில்ஷான்        5    5    102      50        20.40    0    1
(போட்டிகள்,இன்னிங்க்ஸ்,ஓட்டங்கள்,கூடிய ஓட்டங்கள், சராசரி,சதங்கள்,அரைச் சதங்கள்)

இத்தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்கள்

இர்பான் பதான்                      5    5    40.0    211    8    61/5    26.37    5.27
திசர பெரேரா                          5    5    43.0    250    8    19/3    31.25    5.81
லசித் மாலிங்க                      5    5    45.3    284    8    64/3    35.50    6.24
அஞ்சலோ மத்தியூஸ்        5    5    36.4    168    5    14/3    33.60    4.58
ரவிச்சந்திரன் அஷ்வின்    5    5    44.0    197    5    46/2    39.40    4.47
(போட்டிகள்,இன்னிங்ஸ், ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு,சராசரி, ஓட்ட வேகம்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .