2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை - இந்திய ஒருநாள் போட்டி தொடர்: முன்னோட்டப் பார்வை

A.P.Mathan   / 2012 ஜூலை 20 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டி தொடர் இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. என்னதான் இந்த இரண்டு அணிகளும் அடிக்கடி விளையாடினாலும் போட்டிகள் சோடை போவதாக இல்லை. இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். உலகக்கிண்ண பழிவாங்கல் இலங்கையில் நடக்குமா? இதுதான் அந்த சுவாரஸ்யத்துக்கு காரணம். இலங்கையில் வைத்து இந்திய அணி இலங்கை அணியை வென்றால் உலககிண்ண வெற்றி இன்னும் கொஞ்சம் இந்தியா பக்கமாக உறுதியாகும். உலகக்கிண்ண இறுதிப் போட்டி இந்தியாவில் நடைபெற்றதால் இந்திய அணி வென்றது. இலங்கையில் நடந்து இருந்தால்? ஒப்பிட முடியாது. ஒரு வருடங்களுக்கு மேலாகி விட்டது. இரண்டு அணியிலும் வீரர்கள் மாறியும் உள்ளார்கள். ஆனால் அணிகள் என்று பார்க்கும்போது அவை எல்லாம் எமக்கு தெரிவதில்லை.

இம்முறையும் இரு அணிகளும் சம பலமாக தென்படுகின்றன. இலங்கை அணி இன்னும் கொஞ்சம் பலமாக இருக்கின்றது என்று சொல்லலாம். உலகக் கிண்ண போட்டிகளின் பின் இலங்கை அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. மற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அடித்து துவைத்து விட்டது இலங்கை அணியை. அவுஸ்திரேலியாவில் வைத்து மறக்க முடியாத துரத்தி அடித்த அந்தப் போட்டி. ஆசிய கிண்ண போட்டிகளிலும் அதே நிலை. எனவே இலங்கை அணி இவற்றிக்கு எல்லாம் இலங்கையில் வைத்து பதில் கொடுக்குமா? சச்சின் இல்லை. யுவராஜ் சிங் இல்லை. மற்றப்படி இந்திய அணி முழுமையான அணி. இலங்கை அணியோ முழுமையான அணி. மூன்று மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஹம்பாந்தோட்டை, பல்லேகல ஆகிய மைதானங்களில் இந்திய அணி முதற் தடவையாக விளையாடவுள்ளது. அவர்களுக்கு இந்த தொடர் உலக டுவென்டி டுவென்டிக்கு முன்னரான மைதானங்களிற்கான ஒத்திகையாக அமைந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் இதை யோசிக்கவில்லையா? இந்திய அணியின் பாணியில் சொல்வதென்றால் “அடிமை தானாக வந்து சிக்கி விட்டது. ஏன் விடுவான்? ஓகே போயிற்று வருவம்” என்று கிளம்பி வந்த கதை போலத்தான் இது இருக்கிறது.

இலங்கைக்கு தங்கள் அணியின் பலத்தை காட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்தியா தரப்படுத்தலை தக்க வைத்துக்கொள்ள நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையும் உள்ளது. தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தால் புள்ளிகளை இழக்க நேரிடும். இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தாலே புள்ளிகளை இழக்க நேரிடும். மாறாக இலங்கை அணி தொடரை கைப்பற்றினால் புள்ளிகள் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன. 5 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றால் இலங்கை அணி 116 புள்ளிகளையும், இந்திய அணி 112 புள்ளிகளையும்  பெறும். இலங்கை அணிக்கு நான்கு வெற்றிகள் கிடைத்தால் 115 புள்ளிகளை இலங்கை அணியும், 114 புள்ளிகளை இந்திய அணியும் பெற்றுக் கொள்ளும். 3 - 2 என இலங்கை அணி வென்றால் இடங்களில் மாற்றம் இருக்காது. இந்திய அணி புள்ளிகளை இழக்க, இலங்கை அணி புள்ளிகளை பெற்றுக் கொள்ளும். அணிகள் பெரிய அளவில் இவற்றை கணக்கில் எடுக்கா விட்டாலும் வெற்றிகளின் போதும், தோல்விகளின் போதும் இவை மாற்றங்களை ஏற்படுத்தும்.

இரண்டு அணிகளுக்குமிடையில் இலங்கையில் நடைபெற்ற தொடர்களில் இரு நாடுகள் மாத்திரம் விளையாடிய தொடர்களில் இலங்கை அணி 1997ஆம் ஆண்டிற்கு பின்னர் இதுவரை வெற்றி பெற்றதில்லை. இலங்கையில் இறுதியாக இந்திய அணி பங்கு பற்றிய முக்கோண ஒருநாள்ப் போட்டித் தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்று இருந்தது. இரண்டு அணிகளுக்குமிடையிலான ஒருநாள்ப் போட்டி தொடர் 1985ஆம் ஆண்டு ஆரம்பமாகியிருந்தது. இதுவரையில் 51 போட்டிகளில் இலங்கை அணி 26 போட்டிகளை வென்றுள்ளது. இந்திய அணி 19 போட்டிகளில் வென்றுள்ளது. இரண்டு அணிகளும் மாத்திரம் விளையாடும் ஒருநாள்ப் போட்டி தொடர் இலங்கையில் நான்கு வருடங்களின் பின்னர் நடைபெறுகின்றமை ஒரு வித்தியாசமான சுவாரஸ்யத்தை நிச்சயம் தரும் என எதிர்பார்க்க முடியும்.

இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள்ப் போட்டிகளில் இலங்கையில் வைத்து கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்
சனத் ஜெயசூரியா                    41    39    1580    130      42.70    99.68    3    12
சச்சின் டெண்டுல்கர்               29    28    1023    138      40.92    83.92    4    3
மஹேல ஜெயவர்தன            33    32    1009      94*    37.37    73.01    0    10
மார்வன் அத்தபத்து                 23    23      823    118      39.19    68.69    1    6
மொஹம்மத் அசாருதீன்      19    18      815    111*    54.33    79.98    1    8
குமார் சங்ககார                          28    27      785      84      30.19    74.83    0    8
சரவ் கங்குலி                               22    20      781    113     39.05    69.54    2    5
யுவராஜ் சிங்க்                             26    22      767    117     38.35    82.11    1    5   
அரவிந்த டி சில்வா                   21    20      744    105     41.33    85.22    2    4   
ராகுல் டிராவிட்                          24    22       734      82     38.63    66.00    0    5
(போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதங்கள், அரைச்சதங்கள்)

இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள்ப் போட்டிகளில் இலங்கையில் வைத்து கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
ஹர்பஜன் சிங்                        22    21    194.2     776    33    56/5    23.51    3.99
முத்தையா முரளிதரன்     34    31    296.4    1242    31    33/3    40.06    4.18
சகீர் கான்                                  21    21    185.2     815    29    21/4    28.10    4.39
சனத் ஜெயசூரியா                41    32    222.2    1008    28    18/4    36.00    4.53
சமிந்த வாஸ்                          23    23    165.0      743    26    63/3    28.57    4.50
நுவான் குலசேகர                 16    16    133.0      643    22    40/4    29.22    4.83
ஆசிஷ் நெஹ்ரா                    13    13    110.4      551    21    59/6    26.23    4.97   
அஜந்த மென்டிஸ்                11    11       97.5      443     2    10/4    22.15    4.52

இந்தப் போட்டி தொடரில் பங்கு பற்றும் வீரர்களை பொறுத்தளவில் இரு அணி சார்பாகவும் நல்ல வீரர்கள். இவர் நன்றாக துடுப்பாடுவார், அவர் சிறப்பாக பந்து வீசுவார் என சொல்ல இயலாது. ஆனாலும் கூட திசர பெரேரா - இலங்கை அணி சார்பாக இந்த தொடரில் கவனிக்கப்படும் வீரராக மாறலாம் என நம்பலாம். சுரேஷ் ரெய்னா இன்னும் கொஞ்சம் நல்ல முறையில் செயற்படவேண்டும். ரோஹித் ஷர்மா இடத்தை நிலையாக பெற்று வருபவர். யுவராஜ் மிக விரைவில் அணிக்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுவதனால் ஒரு வீரர் வெளியேற வேண்டி வரும். எனவே இளம் வீரர்கள் சாதிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்த இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி தொடரானது பல விடயங்களிற்காக முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கை கிரிக்கெட்டிற்கு பணம் சேர்வதற்கும் கூட. எனவே விறு விறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படும் தொடரில் அணிகள் மைதானத்தில் எப்படி செயற்படுகின்றன என்பதிலேயே விறு விறுப்பும் சுவாரஸ்யமும் தங்கியுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • herry Wednesday, 01 August 2012 08:24 AM

    மஹேல தலைமையில் விளையாடும் இலங்கை அணிக்கு எப்பொழுதும் வெற்றி கிடைக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .