2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்து - தென் ஆபிரிக்க டெஸ்ட் தொடர்: ஆரம்ப பார்வை

A.P.Mathan   / 2012 ஜூலை 19 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து, தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு முன்னணி அணிகளுக்கிடையிலான போட்டி தொடர் என்பதனால் நிச்சயம் சிறப்பாக எதிர்பார்க்க முடியும். மூன்று போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாடவுள்ளன. மூன்று போட்டிகளுக்கும் 31 நாட்கள் எடுக்கப்படுகின்றன. போட்டிகளுக்கு நடுவில் அதாவது முதல் இரண்டு போட்டிகளும் நிறைவடைந்ததும் பயிற்சிப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணி தரப்படுத்தலில் முதல் அணி. டெஸ்ட் போட்டிகளில் நிச்சயமாக மிகப் பலமாக உள்ள அணி. அண்மைக்காலமாக சிறப்பாக செயற்படுவதுடன் சமநிலையாகவும் உள்ள அணி.

தென் ஆபிரிக்க அணி நல்ல அணியாக சமநிலையாக இருந்தாலும் அடிக்கடி தோல்விகளை சந்திப்பார்கள். அவர்களின் வேகப்பந்து வீச்சு மிகப்பலம். டேல் ஸ்டெயின், வெரோன் பிலாண்டர், மோர்னி மோர்க்கல் மூவரும் டெஸ்ட் போட்டிகளில் மிக அபாரமாக பந்து வீசுபவர்கள். சுழல்ப் பந்து வீச்சாளர் மிகப் பெரிய அளவில் சொல்வதற்கு இல்லை என்றாலும் இம்ரான் தாகிர் பரவாய் இல்லை ரகம். துடுப்பாட்டம் பலமாகவே உள்ளது. கிரேம் ஸ்மித், அல்விரோ பீற்றர்சன் இவர்கள் ஆரம்பத்தை சரியாக கொடுத்தால் பின்னால் உள்ளவர்கள் சிறப்பாக கொண்டு செல்வார்கள். அடுத்த இடங்களில் ஹசிம் அம்லா, ஜக்ஸ் கலிஸ், ஏபி.டி.வில்லியர்ஸ் ஆகியோர். இதில் வில்லியர்ஸ் அண்மைக்காலமாக சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் கலக்கி வருகின்றனர். ஓட்டங்களை மிக லாபகரமாக பெற்று வருகின்றார். இந்த தொடரிலும் அவரை நிறைய எதிர்பார்க்கலாம். அது மட்டுமல்லாமல் இந்த தொடரில் தென் ஆபிரிக்காவிற்கு மிக கை கொடுக்க போபவரும் இவரே. ஏன், தொடரில் கூட நாயகனாகக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

அடுத்த இரண்டு இடங்களும் தங்களை இன்னும் நிரூபித்து காட்ட வேண்டிய இடங்கள். முதலாமவர் டுமினி, இரண்டாமவர் ஜக்ஸ் ருடொல்ப். டுமினி - நியூசிலாந்து போட்டிகள் மூலம் தன மீள் வருகையை தந்தவர். நல்ல மீள்வருகை, சதத்துடன். ருடொல்ப் சராசரியாக செயற்ப்பட்டு வருகின்ற போதும் மிக சிறப்பாக செயற்பட்டுள்ளார் என்று சொல்வதற்கில்லை. இந்த இருவருக்குமான போட்டி மார்க் பௌச்சரின் வெளியேற்றத்தை அடுத்து தீர்ந்துள்ளது. இருவருக்கும் இடம் கிடைத்துள்ளது. ஆனால் பௌச்சர் இல்லாதது தென் ஆபிரிக்கா அணிக்கு பின்னடைவை தர வாய்ப்புக்கள் உள்ளன. டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட தொடங்கிய காலத்தில் இருந்து இரு தடவைகள், மூன்று போட்டிகளில் மாத்திரமே அவர் விளையாடவில்லை. 999 சர்வதேச ஆட்டமிளப்புக்களை உருவாக்கிய விக்கெட் காப்பாளர். டெஸ்ட் போட்டிகளின் உலகின் தலை சிறந்த விக்கெட் காப்பாளர். இங்கிலாந்து ஆடுகளங்களில் அவரின் விக்கெட் காப்பு குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களின் ஸ்விங், பௌன்ஸ் என்பவற்றிக்கு நிறைய கை கொடுத்துள்ளது. அவரின் அனுபவமான துடுப்பாட்டம் பின், மத்தியவரிசையில் இல்லாமை கொஞ்சம் பிரச்சினையை கொடுக்கலாம். தென் ஆபிரிக்க அணி இப்படியான ஒரு நிலையிலேயே களமிறங்குகின்றது. சமநிலையாக பலமாக தென்படுகின்றது. இனி அவர்கள் களத்தில் செய்து காட்ட வேண்டியதே உள்ளது.

இங்கிலாந்து அணி தங்களை இப்போது உலகின் முதற் தர அணியாக காட்டியுள்ளது. டெஸ்ட் அணி மிகப்பலமாக உள்ளது. தென் ஆபிரிக்காவை அவர்கள் வெற்றி கொண்டால் அது மேலும் உறுதி செய்யப்படும். தென் ஆபிரிக்காவா? இங்கிலாந்தா முதற் தர அணி என்பதற்கான சவாலாக கூட இந்தப் போட்டி தொடர் இருக்கலாம். இங்கிலாந்து அணியை பொறுத்த மட்டில் மிகச் சமநிலையான அணி. 9ஆம் இலக்கம் வரை துடுப்பாட்டம் உள்ளது. 10ஆம் இடத்தில களமிறங்கும் கிரேம் சுவான் கூட சிறப்பாக துடுப்பாடுவார். வேகப் பந்துவீச்சாளர்கள் இருவர் சகலதுறை வீரர்களாக இருபது அணிக்கு மிகப் பெரிய பலமே. அவர்கள் ஸ்டுவோர்ட் ப்ரோட் மற்றும் டிம் பிரஸ்னன். ஜேம்ஸ் அன்டர்சன் பந்து வீச்சில் மிக அபாரம். இந்த மூவரும் சேர்ந்தே அண்மைக்கால விக்கெட்களை அள்ளி எடுக்கின்றனர். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. சுழல்ப் பந்து வீச்சில் கிரேம் சுவான் சிறப்பாக செயற்படக்கூடியவர். ரவி போபர விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் அவருடைய பந்து வீச்சும் நிச்சயம் உதவும். மிக சிறப்பான பந்து வீச்சு அணி. துடுப்பாட்டம் இன்னும் அபாரம். ஆரம்பம் பற்றி யோசிக்கத் தேவை இல்லை. அன்று ஸ்ட்ரோஸ், அலிஸ்டியர் குக் ஆகியோர் அண்மைக்காலத்தில் ஓட்டங்களை குவித்து வருகின்றனர். அடுத்தவர் ஜொனதன் ட்ராட். சத்தமில்லாமல் அணிக்கு ஓட்டங்களை சேர்த்து வரும் ஒருவர். சிறந்த மூன்றாமிடம். நான்காமிடம் கெவின் பீற்றர்சன். அவரும் நல்ல போர்மில் உள்ளார். அவர் பற்றி சொல்லத் தேவை இல்லை. இயன் பெல் ஐந்தாமிடம். இங்கிலாந்து அணியின் அண்மைக்கால சுப்பர் ஸ்டார். நல்ல போர்மில் உள்ளார். ஓட்டங்களை அள்ளி குவித்து வருகின்றார். அடுத்து இடம் இப்போது ரவி போபராவிற்கு கிடைத்துள்ளது. பல தடவைகள் அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தாலும் இப்போது நிலையான இடைத்தை பிடித்துவிட்டார் என்றே சொல்ல தோன்றுகிறது. அவுஸ்திரேலிய அணியுடனான போம் தொடருமாக இருந்தால் அவரும் ஓட்டங்களை குவிப்பார். அடுத்தவர் விக்கெட் காப்பாளர் மத் ப்ரையர். குறை கூறக் கூடிய வகையில் அவர் இல்லை. ஒட்டங்களைப் பெற்று வருகின்ற ஒருவர்.

இப்படி பார்கின்ற வேளையில் இங்கிலாந்து அணி கொஞ்சம் தென் ஆபிரிக்க அணியிலும் பார்க்க பலம் கூடுதலாக இருப்பது போலவே தென்படுகிறது. போட்டிகள் இங்கிலாந்தில் நடை பெறுவதனால் இன்னும் கொஞ்சம் வாய்ப்புக்கள் அவர்கள் பக்கமா இருப்பதனால் தொடர் இறுக்கமாக இருக்கும். என்றாலும் இங்கிலாந்து அணிக்கு தொடர் வெற்றிக்கான வாய்ப்புக்கள் இருக்கும் என்றே சொல்லலாம். அல்லது சமநிலை முடிவுகள். தென் ஆபிரிக்க அணி வெற்றி பெறுவது தொடரில் கஷ்டமாகவே இருக்கும்.

இரண்டு அணிகளுக்குமிடையில் 15 டெஸ்ட் தொடர்கள் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளன. இதில் இரண்டு மட்டுமே சமநிலையில் நிறைவடைந்துள்ளன. மிகுதி தொடர்களில் மூன்று மாத்திரமே தென் ஆபிரிக்க அணியால் வெல்லப்பட்டுள்ளன. 10 தொடர்கள் இங்கிலாந்து அணியால் வெல்லப்பட்டாலும், 1998ஆம் ஆண்டே கடைசி தொடர் அவர்களால் வெல்லப்பட்டது. அதற்குப் பின் நடைபெற்ற தொடரில் சமநிலை முடிவும், 2008ஆம் ஆண்டு தொடரில் தென் ஆபிரிக்க அணிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. இரு அணிகளுக்குமிடையில் 61 போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளன. இங்கிலாந்து அணி 27 போட்டிகளில் வென்றுள்ளது. 11 போட்டிகளில் தென் ஆபிரிக்க அணி வென்றுள்ளது.

இரு அணி சார்பாகவும் தற்போது விளையாடுபவர்களில் இங்கிலாந்தில் வைத்து கூடுதலான ஓட்டங்களைப் பெற்றுள்ளவர் தென் ஆபிரிக்க அணியின் தலைவர் கிரேம் ஸ்மித். 9 போட்டிகளில் 1083 ஒட்டகங்களைப் பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் 12 போட்டிகளில் விளையாடி ஜக்ஸ் கலிஸ் 586 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்து வீச்சில் ஜக்ஸ் கலிஸ் 35 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஜேம்ஸ் அன்டர்சன் 9 போட்டிகளில் 30 விக்கெட்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

முதற்ப் போட்டி - ஜூலை 19  - 23 (த ஓவல் மைதானம்) 
இரண்டாவது போட்டி - ஓகஸ்ட் 02 - ஓகஸ்ட் 06 (லீட்ஸ் மைதானம்)
மூன்றாவது போட்டி - ஓகஸ்ட் 16 - 20 (லோர்ட்ஸ் மைதானம்)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .