2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்து - அவுஸ்திரேலிய ஒருநாள் போட்டி தொடர்; ஒரு பார்வை

A.P.Mathan   / 2012 ஜூலை 17 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இதில் மிக மோசமான தோல்வியை அவுஸ்திரேலியா அணி சந்தித்துள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக கை விடப்பட்டது. இங்கிலாந்து அணி மிக சிறப்பான முறையில் ஒரு நாள்ப் போட்டிகளிலும் தன்னை கட்டி எழுப்பி வருகிறது. துடுப்பாட்ட வரிசை அவர்களுக்கு கொஞ்சம் பிரச்சினையாக இருந்தது. ஆனாலும் இந்த தொடருடன் அது சரியாக வந்து விட்டது. ரவி போபராவின் சகல துறை ஆட்டம் அவருக்கு அணியில் நிச்சய இடத்தை தந்துள்ளது. இயன் பெல் ஆரம்ப இடத்தில நன்றாக பொருந்தி விட்டார். இங்கிலாந்து பந்து வீச்சு பற்றி கவலைப்பட எதுவுமில்லை. மிக அபாரமாக உள்ளது.

அவுஸ்திரேலிய அணி கொஞ்சம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது. ஒருநாள்ப் போட்டிகளில் அசையாத முதலிடத்தை கொண்ட அணி மிக விரைவில் அந்த இடத்தை இழக்கப் போகிறது. அணியை கட்டி எழுப்ப முடியாத நிலையில் உள்ளனர். அணியின் சமநிலை மிக மோசமாக குழம்பி போயுள்ளது. பந்து வீச்சு, துடுப்பாட்டம் என இரண்டு பகுதியும் நிலையில்லாமல் உள்ளது. வீரர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலை தொடருமானால் அணி இன்னும் மோசமாக வீழ்ச்சியடையும். சரியான அணி இல்லாமல் வெற்றிகளை பெறுவது கடினம். அவர்களின் உபாதைகளும் கூட ஒரு முக்கிய காரணம். இந்த நிலையில் பிரட் லீ ஓய்வை அறிவித்து விட்டார். நிரந்தர பந்து வீச்சாளர் என்று சொல்வதற்கு யாரும் இல்லை. கிளின்ட் மக்காய் மாத்திரமே ஓரளவு தொடர்ந்து விளையாடி வருகிறார்.


முதற்ப் போட்டி - இங்கிலாந்துக்கு வெற்றி
இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் 15 ஓட்டங்களால் வெற்றி பெற்று இருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நல்ல ஆரம்பத்தையும், முடிவையும் ஏற்படுத்தி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 272 ஓட்டங்களைப் பெற்றது. ஒய்ன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 63 பந்துகளில் இந்த ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஜொனதன் ட்ராட் 54 ஓட்டங்களையும், இயன் பெல் 41 ஓட்டங்களையும், அலஸ்டயர் குக் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பிரட் லீ, கிளின்ட் மக்காய், பட் கம்மின்ஸ், ஷேன் வொட்சன், சேவியர் டோஹர்டி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலளித்த அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 257 ஓட்டங்களை 9 விக்கெட்களை இழந்து பெற்றது. இதில் மைகல் கிளார்க் 61 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் டிம் பிரஸ்னன், ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டீபான் பின், ஸ்டுவோர்ட் ப்ரோட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்கள். போட்டியின் நாயகனாக ஒய்ன் மோர்கன் தெரிவு செய்யப்படார்.

இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி
இரண்டாவது போட்டி கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி இங்கிலாந்து கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் பலமான நிலைக்கு மாறியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுபெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது. ஷேன் வொட்சன் 66 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பெய்லி 65 ஓட்டங்களையும் பெற்றனர். டேவிட் ஹஸ்ஸி 29 ஓட்டங்கள். பந்து வீச்சீல் டிம் பிரஸ்னன் 2 விக்கெட்கள். ஸ்டீபான் பின், கிரேம் சுவான், ரவி போபரா, ஸ்டுவோர்ட் ப்ரோட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்கள்.
 
பதிலளித்த இங்கிலாந்து அணி 45.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரவி போபரா 82 ஓட்டங்களையும், இயன் பெல் 75 ஓட்டங்களையும் பெற்றனர். ஒய்ன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் கிளின்ட் மக்காய், ஷேன் வொட்சன், மைக்கல் கிளார்க் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்கள். போட்டியின் நாயகனாக ரவி போபரா தெரிவு செய்யப்படார்.

நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இலகு வெற்றி; தொடரை தனதாக்கியது
மூன்றாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் நான்காவது போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. துடுபெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டேவிட் ஹஸி 70 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை. மைக்கல் கிளார்க் 43 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் ஸ்டீபன் பின் 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலளித்த இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தனதாக்கியது. இதில் இயன் பெல் 69 ஓட்டங்களையும், ஜொனதன் ட்ராட் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களையும், ரவி போபரா ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றனர். கிளின்ட் மக்காய் இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ஸ்டீபன் பின் தெரிவானார்.

ஐந்தாவது போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கு வெற்றி
ஐந்தாவதும் இறுதியுமான போட்டி மழை காரணமாக குழப்பப்பட்ட போதும் டக் வேர்த் லூயிஸ் முறை அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடும் போது மழை பெய்தமையினால் போட்டி 32 ஓவர்களாக மாற்றப்பட்டது. 

அவுஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜோர்ஜ் பெய்லி ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஜேம்ஸ் ட்ரெட்வெல், ரவி போபர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலளித்த இங்கிலாந்து அணிக்கு 29 ஓவர்களில் 138 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 27.1 ஓவர்களில் மூன்று விக்கெட்களை இழந்து அந்த வெற்றி இலக்கை அவர்கள் அடைந்தார்கள். அலஸ்டியர் குக் 58 ஓட்டங்களையும், ரவி போபரா ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாக ரவி போபராவும், தொடர் நாயகனாக இயன் பெல்லும் தெரிவாகினர். இங்கிலாந்து அணி தொடரை 4 - 0 என கைப் பற்றியது.


இந்த தொடரின் துடுப்பாட்ட பெறுதிகள்
இயன் பெல்                  4    4    189    75    47.25    2   
ரவி போபரா                  4    4    182    82    91.00    2
ஜோர்ஜ் பெய்லி           4    4    149    65    49.60    1
அலிஸ்டியர் குக்        4    4    149    58    36.25    1
ஜொனதன் ட்ராட்       4    4    145    64*    48.33    2
ஒய்ன் மோர்கன்         4    3    141    89    --             1
டேவிட் ஹஸ்ஸி     4    4    127    70    30.25     1
(போட்டிகள்,இன்னிங்க்ஸ்,ஓட்டங்கள்,கூடுதலான ஓட்டங்கள், சராசரி ,அரைச்சதங்கள் )

இந்த தொடரின் பந்து வீச்சு பெறுதிகள்
ஸ்டீபான் பின்                4    4    35    155    8    37/4    19.37   
டிம் பிரஸ்னன்               3    3    27    150    6    46/2    25.00
கிளின்ட் மக்காய்          4    4    36    141    5    29/2    28.20
ரவி போபரா                     4    4    19      57    4      8/2    14.25
ஜேம்ஸ் அன்டர்சன்    3    3    24    111    4    34/2    27.75
(போட்டிகள்,இன்னிங்க்ஸ், ஓவர்கள், ஓட்டங்கள். விக்கெட்கள் சிறந்த பந்து வீச்சு  சராசரி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .