2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இலகுவாக இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற ஒருநாள் போட்டித் தொடர்

A.P.Mathan   / 2012 ஜூன் 26 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து அணி 2 - 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி இலகுவாக வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. பலமான அணியாக மேற்கிந்திய அணி திரும்பியுள்ள போதும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. போரடத்தானும் முடியவில்லை. சகலதுறை வீரர்களின் மிகப் பெரிய பட்டியல் இப்போது அணியில் உள்ளது. அதிலும் அடித்தாடக் கூடிய வீரர்கள் இருந்தும் எதுவும் செய்ய முடியாமல் போனது. நல்ல டெஸ்ட் வீரர்களாக அல்லது ஒருநாள் போட்டிகளில் மிகப் பெரிய அளவில் சாதிக்காத வீரர்களான இயன் பெல், அலிஸ்டயர் குக் ஆகியோர் சதங்கள் அடித்து மேற்கிந்திய தீவுகள் அணியை சரித்தனர்.

முதற்ப் போட்டி இங்கிலாந்து, சௌதம்ப்டன், ரோஸ் பௌல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் உபாதை காரணமாக கிறிஸ் கெய்ல் விளையாடவில்லை. இயன் பெல் கெவின் பீற்றர்சனின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.  நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. முதலில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட் ஓட்டம் எதவும் இல்லாமல் வீழ்த்தப்பட்ட போதும் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 108 ஓட்டங்கள் பகிரப்பட்டன. ஜோனதன் ட்ராட் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இயன் பெல் தொடர்ந்தும் மத்திய வரிசை வீரகளுடன் இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி சதத்தைப் பூர்த்தி செய்தார். 126 ஓட்டங்கள். இயன் பெல்லின் இரண்டாவது சதம் இது. கிரெய்க் கீஸ்வீட்டர் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்கள். மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சில் மார்லன் சாமுவேல்ஸ் 2 விக்கெட்கள். ரவி ராம்போல், சுனில் நரையன், டுவைன் பிராவோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்கள்.

மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடிய வேளையில் சராசரி இடைவெளிகளில் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. பின் வரிசை வீரர்களின் விக்கெட்கள் வேகமாகவே வீழ்த்தப்பட்டன. மேற்கிந்திய தீவுகள் அணி 33.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டுவைன் ஸ்மித் 56 ஓட்டங்களைப் பெற்றார். மார்லன் சாமுவேல்ஸ் 30 ஓட்டங்கள். பந்து வீச்சில் டிம் பிரஸ்னன் 4 விக்கெட்கள். ஜேம்ஸ் அன்டர்சன், கிரேம் சுவான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள். ஸ்டுவோர்ட் ப்ரோட், ஸ்டீவன் பின் ஆகியோர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்கள். போட்டியின் நாயகனாக இயன் பெல் தெரிவானார்.


இரண்டாவது போட்டியில் கிறிஸ் கெயில் விளையாடினார். மீள் சர்வதேசப் போட்டி பிரவேசம். அதிகமாக எதிர்பார்ப்புக்கள் இருந்தன. இங்கிலாந்து அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 238 ஓட்டங்களைப் பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி. கிறிஸ் கெயில் 52 ஓட்டங்களையும் டுவைன் பிராவோ 77 ஓட்டங்களையும், கெரன் பொலார்ட் 41 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவோர்ட் ப்ரோட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். டிம் பிரஸ்னன், கிரேம் சுவான், ஸ்டீபான் பின் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்கள்.

பதிலளித்த இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் மீதமிருக்க 8 விக்கெட்களால் வெற்றி பெற்றது. அணித் தலைவர் அலஸ்டயர் குக் சதமடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப விக்கெட் இணைப்பாடம் 122 ஓட்டங்கள். இயன் பெல் 52. அலஸ்டயர் குக் 112. ஜொனதன் ட்ராட் ஆட்டமிழக்காமல் 43. டரின் சமி 2 விக்கெட்கள். 8 பந்து வீச்சாளர்கள் பந்து வீசியிருந்தார்கள். சமிக்கு பந்து வீச்சாளர்களை கையாளும் விதம் கொஞ்சம் பிரச்சினையாகவுள்ளது. இந்த போட்டியில் அது நன்றாகவே தெரிந்தது.

அடுத்த போட்டி ஆரம்பிக்காமலே மழை காரணமாக நிறைவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 2 - 0 என்று வெற்றி பெற்றது. தொடர் நாயகன் விருது இயன் பெல் இற்கு சென்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி இன்னும் கொஞ்சம் அணியை சமநிலை செய்ய வேண்டும். யார் யார் எந்தெந்த இடங்களில் துடுப்பாட வேண்டும், பந்து வீச்சாளர்களை எப்படி பாவிக்க வேண்டும் போன்றன சரியான முறையில் அமைக்கப்பட வேண்டும். இந்த வீரர்களில் குறை சொல்வதற்கில்லை. அணியாக ஒற்றுமையாக நிரந்தர அணியாக அமைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் கட்டுக்கோப்பாக நல்ல முறையில் அணிக்காக விளையாட வேண்டும். மேற்கிந்திய தீவுகளின் பலமிழந்த நிலை இங்கிலாந்து அணிக்கு சோதனையாக இருக்கவில்லை. பந்து வீச்சு பலமாக இருப்பதனால் இலகுவாக வெற்றி பெறக் கூடியதாக அமைந்தது. ஆரம்ப ஜோடி பிரச்சினை தீர்ந்து விட்டது. மூன்றாம் இடம் உறுதி. மற்ற இடங்களில் புதிய வீரர்கள். நல்ல அணிகளை எதிர்கொள்ளும் போதுதான் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பலம் பற்றி மேலும் சொல்ல முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .