2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை - பாகிஸ்தான் ஒருநாள் போட்டி தொடர் இலங்கை வசம்

A.P.Mathan   / 2012 ஜூன் 21 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டி தொடர் நிறைவடைந்துள்ளது. இலங்கை அணி தொடரை 3 - 1 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது. இறுக்கமான நல்ல தொடர். ஐந்து போட்டிகளிலும் மழையின் பாதிப்பு இருந்துள்ளது. ஒரு போட்டி கை விடப்பட்டது. ஒரு போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டன. மற்றைய போட்டிகளில் மழை குறுக்கிட்டாலும் போட்டியை நிறுத்துமளவு பாதிக்கவில்லை. இலங்கை அணி மிக மோசமான முதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்து வெற்றிகளை தனதாக்கியது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததில் இருந்து அவர்களால் மீள் எழ அல்லது தங்களை திருத்திக் கொள்ள முடியாமல் போய் விட்டது.

பாகிஸ்தான் அணிக்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு தொடர் தோல்விகள். இங்கிலாந்து அணியுடன் ஐக்கிய அரபு இராட்சிய தோல்வி. இப்போது இந்த தோல்வி. ஆனால் ஆசிய கிண்ணப் போட்டிகளில் இரண்டு தொடர்களுக்கும் நடுவில் வெற்றி பெற்றுக் கொண்டார்கள். ஆனால் இலங்கை அணியோ இந்த வருடத்தில் முதல் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் சில மாதங்களிற்கு முன் ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற தொடரில் ஸ்கொட்லாந்து, அயர்லாந்து அணிகளை வெற்றி பெற்று தொடரை தனதாக்கியது. அதற்கு முதல் மேற்கிந்திய தீவுகளுடன் 2011ஆம் ஆண்டு ஜனவரி இலங்கையில் நடைபெற்ற தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்று இருந்தது.


முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டி

கடந்த 07ஆம் திகதி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. மழை குறுக்கிட்ட ஒரு போட்டியாகவும், இலங்கை அணி மோசமாக சொதப்பிய ஒரு போட்டியாகவும் அமைந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப விக்கெட்கள் மிக வேகமாக வீழ்ந்தன. இலங்கை அணி 100 ஓட்டங்களை தானும் தாண்டுமா என்ற நிலையில் லஹிறு திரிமன்ன, நுவான் குலசேகர ஆகியோருடைய 8ஆவது விக்கெட் இணைப்பாட்டம் 50 ஓட்டங்களை தர 42 ஓவர்களாக மாற்றப்பட்ட போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. லஹிறு திரிமன்னே ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். உதிரிகள் 31 ஓட்டங்கள். நுவான் குலசேகர 18 ஓட்டங்கள். திசர பெரேரா 17 ஓட்டங்கள். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு மிக அபாரமாக இருந்தது. உமர் குல் 24 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்கள். மொஹமட் சாமி 19 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்கள். மொஹமட் ஹபீஸ் 20 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்கள்.

பதிலளித்த பாகிஸ்தான் அணி 34.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. மொஹமட் ஹபீஸ் 37 ஓட்டங்களை பெற்ற அதேவேளை உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்கள். மிஸ்பா உல் ஹக் 30 ஓட்டங்கள். நுவான் குலசேகர, லசித் மலிங்க, ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக உமர் குல் தெரிவானார்.

இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி கடந்த 9ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. துடுப்பாட்ட ஒழுங்கு மாற்றம் இலங்கை அணிக்கு கை கொடுக்க துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை குவித்ததன் மூலம் இலகுவாக வெற்றி பெற முடிந்தது. குறிப்பாக டில்ஷானின் துடுப்பாட்டம், திசர பெரேராவின் பந்து வீச்சும் வெற்றிக்கு மிக முக்கியமாக அமைந்தன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றது. இந்த ஓட்ட எண்ணிக்கையானது இந்த மைதானத்தில் வெற்றி பெற போதுமானது. இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக டில்ஷான், உப்புல் தரங்க ஆகியோர் களமிறங்கினர். தரங்க அண்மைக்காலமாக மத்திய தர வரிசை வீரராகவும், மஹேல ஜெயவர்தன ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் துடுப்பெடுத்தாடி வந்தனர். ஆரம்ப இணைப்பாட்டம் 37 ஓட்டங்கள். தரங்க 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து குமார் சங்ககார 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். மூன்றாவது விக்கட் இணைப்பாட்டமாக தினேஷ் சந்திமால் (32), டில்ஷான் ஆகியோர் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பின்னர் மஹேல ஜெயவர்த்தன, டில்ஷான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். 84 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்தனர். மஹேல ஜெயவர்த்தன 45 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இறுதியாக டில்ஷான், திசர பெரேரா ஆகியோர் இனிங்சை நிறைவு செய்தனர். திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்றார். திலகரத்ன டில்ஷான் தனது 13ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். நல்ல ஆரம்பத்தையும் முடிவையும் அவரின் துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு வழங்கியது. 119 ஓட்டங்களை 139 பந்துகளில் அவர் பெற்றார். இதில் 11 நான்கு ஓட்டங்கள், ஒரு சிக்ஸர் அடக்கம். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று 76 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. சரியான இணைப்பாட்டங்களை பாகிஸ்தான் அணியால் உருவாக்க முடியாமல் போனது. அசர் அலி தனித்து நின்று போராடிய போதும் அவருக்கு துணையாக யாரும் இல்லை. 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் திசர பெரேரா கலக்கினார். 10 ஓவர்கள் பந்து வீசி 44 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்கள். நுவான் குலசேகர, லசித் மாலிங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகன் திசர பெரேரா. இந்த வெற்றியின் மூலமாக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என இலங்கை அணி சமப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணியுடன் இலங்கை பந்து வீச்சாளர் பெற்ற சிறந்த பந்து வீச்சு பெறுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சிறந்த பந்து வீச்சு பெறுதியும் இதுவே.

மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது போட்டி
மழை பெய்யும் வாய்ப்புக்களுடனேயே போட்டி ஆரம்பமானது. ஏழாவது ஓவரில் கரு முகில்கள் சூழ போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டது. பின் கடும் மழை தொடர இரவு 8.30 மணியளவில் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

போட்டி நிறுத்தப்படும் போது பாகிஸ்தான் அணி 6.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 12 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தது. இலங்கை அணி நல்ல ஆரம்பத்தை எடுத்தும் பலன் இல்லாமல் போய்விட்டது. 

நான்காவது போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி 100 ஓட்டங்களைப் பெற முதலில் 3 விக்கெட்களை இழந்தது. குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன ஆகியோரது நான்காவது விக்கெட் இணைப்பாட்டம் 110 ஓட்டங்களை தர இலங்கை அணி 200 ஓட்டங்களைப் பெற்றது. மஹேல ஜெயவர்தன 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். நடுவரின் தவறு இவரின் ஆட்டமிளப்புக்கு காரணமாக அமைந்தது. சொஹைல் தன்வீர் வீசிய பந்து முறையற்ற பந்து. நடுவர் அதை கவனிக்கவில்லை. குமார் சங்ககார 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சதமடிக்கும் வாய்ப்பு இருந்தது. பொறுமையாக ஆடி இருக்கலாம். அவரின் ஆட்டமிழப்பு நிச்சயம் இன்னும் சிறிதளவு ஓட்டங்களை இலங்கை அணிக்கு இல்லாமல் செய்தது. பந்து வீச்சில் சொஹைல் தன்வீர், சைட் அஜ்மல், மொஹம்மத் ஹபீஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்களை கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் ஓட்டம் எதுவும் இல்லாமல் விழுந்தது. அடுத்த இரண்டு இணைப்பாட்டங்கள் நல்ல முறையில் அமைந்தது. 166 ஓட்டங்களில் வைத்து மூன்றாவது விக்கெட் விழ விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன. திசர பெரேரா ஹட்ரிக் மூலம் மூன்று விக்கெட்களை வீழ்த்த பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. 45 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. ஆசர் அலி ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்கள். மிஸ்பா உல் ஹக் 57 ஓட்டங்கள். பந்துவீச்சில் திசர பெரேரா 4 விக்கெட்கள். லசித் மாலிங்க 2 விக்கெட்கள். போட்டியின் நாயகன் திசர பெரேரா. இந்த தொடரில் இரண்டாவது போட்டி நாயகன் விருது அவருக்கு. இலங்கை அணியில் நிச்சய இடம் பிடித்த அவர் இந்த தொடருடன் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார்.

இறுதிப் போட்டியை வென்ற இலங்கை அணி தொடரை தனதாக்கியது
ஐந்தாவதும் இறுதியுமான போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. விறு விறுப்பான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. குறிப்பாக அஞ்சலோ மத்தியூசின் சிறந்த துடுப்பாட்டமும் பின் வரிசை வீரர்களின் நல்ல இணைப்பாட்டங்களும் இலங்கை அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது. அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. யூனுஸ் கான் நிறுத்தப்பட்டு இம்ரான் பர்ஹத் சேர்க்கப்பட்டார். பந்து வீச்சில் சைட் அஜ்மலிற்கு பதிலாக உபாதையில் இருந்து குணமடைந்த மொஹம்மத் சாமி சேர்த்துக் கொள்ளப்பட்டார். துடுப்பாட்டத்தில் இம்ரான் பர்ஹத் 56 ஓட்டங்கள். உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்கள். இலங்கை அணியின் பந்து வீச்சில் நுவான் குலசேகர, ஜீவன் மென்டிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலளித்த இலங்கை அணியின் ஆரம்ப விக்கெட்கள் சம இடைவெளிகளில் வீழ இலங்கை அணி வெல்ல முடியாது என்ற நிலை வந்தது. 41ஆவது ஓவரில் ஏழாவது விக்கெட் வீழ்த்தப்பட 175 ஓட்டங்கள். ஜீவன் மென்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோருடைய வேகமான இணைப்பாட்டம் கை கொடுக்க இலங்கை அணி வெற்றி இல்லக்கை நோக்கி சென்றது. ஜீவன் மென்டிஸ் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க நுவான் குலசேகர நல்ல முறையில் துடுப்பெடுத்தாட மறு முறத்தில் அஞ்சலோ மத்தியூஸ் அடித்து தாக்கினார். குறிப்பாக இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 4 பந்துகளில் போட்டியை நிறைவு செய்தார். ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்கள். தினேஷ் சந்திமால் 54 ஓட்டங்கள். குமார் சங்ககார 40 ஓட்டங்கள். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சொஹைல் தன்வீர் 3 விக்கெட்கள். சாஹிட் அப்ரிடி 2 விக்கெட்கள். போட்டியின் நாயகனாக அஞ்சலோ மத்தியூஸ் தெரிவு செய்யப்பட போட்டி தொடர் நாயகனாக திசர பெரேரா தெரிவானார்.


தொடரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்

அசர் அலி                           5    5    217    96       54.25    0    2    70.00
குமார் சங்ககார               5    4    164    97        41.00    0    1    64.06
திலகரத்ன டில்ஷான்    5    4    158    119*    52.66    1    0    75.23
மிஸ்பா உல் ஹக்          5    5    146    57        36.50    0    1    61.08
தினேஷ் சந்திமால்         5    4    104    54        26.00    0    1    63.41
(போட்டி, இன்னிங்க்ஸ், ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, சதம், அரைச் சதம், ஸ்ட்ரைக் ரேட்)


தொடரில் கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்

திசர பெரேரா          5    4    34.1    171    11    44/6    15.54    5.00
நுவான் குலசேகரா         5    5    39.2    154    7    33/2    22.00    3.91
லசித் மாலிங்க         5    5    35.0    155    7    30/2    22.14    4.42
மொஹமத் ஹபீஸ்         5    4    38.0    117    6    20/2    19.50    3.07
சொஹைல் தன்வீர்         5    4    37.0    166    6    42/3    27.66    4.48


இலங்கை அணி தொடரை கைப்பற்றி இருந்தாலும் இன்னும் அணியை வலுவாக்க செயல்பட வேண்டும். சுழல்ப் பந்து வீச்சாளர் குறையை நீக்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றி இனி கவலை இல்லை. துடுப்பாட்ட ஒழுங்கு மாற்றி அமைக்கப்பட்டு நல்ல படியாக இரண்டாவது போட்டியில் அமைந்தாலும் அதை சரியாக தொடர முடியவில்லை. இலங்கை அணி துடுப்பாட்டத்தில் இன்னும் கூடுதல் கவனம் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. பாகிஸ்தான் அணிக்கும் அதே பிரச்சினை. பந்து வீச்சாளர்கள் சரியாக அமைந்து இருக்கிறார்கள். துடுப்பாட்டம் சரியாக இல்லை. அது மட்டுமல்லாமல் யூனுஸ் கானின் ஒருநாள் போட்டிகளுக்கான இடமும் கேள்வியாக மாறியுள்ளது. ஆரம்பம் ஒன்று பாகிஸ்தானுக்கு தேவை. இல்லாவிட்டால் கஷ்டப்பட வேண்டி இருக்கும். மொஹம்மத் ஹபீஸ் ஏமாற்றியது அவர்களுக்கு பின்னடைவே. முடித்து வைக்கக் கூடிய நல்ல பின் வரிசை துடுப்பாட்ட வீரரும் இல்லை. சாஹிட் அப்ரிடியை நம்ப இயலாது. உமர் அக்மல் இன்னும் செய்து காட்ட வேண்டியுள்ளது. விக்கெட் காப்பாளர் சப்ராஸ் அஹமத் துடுப்பாட்ட வீரர் என சொல்ல முடியாத நிலை. பாகிஸ்தான் அணி தன்னை இன்னும் நிறைய மேம்படுத்த வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .