2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து; கால் இறுதிகளுக்கான அணிகள் எட்டும் தெரிவாகின

A.P.Mathan   / 2012 ஜூன் 21 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பியக் கிண்ணத்தின் பிரிவுகள் ரீதியான முதற் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன. கால் இறுதி ஆட்டங்களுக்கான அணிகள் எட்டும் தெரிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை முதல் காலிறுதி ஆட்டங்களுடன் Knock out சுற்றுக்கள் ஆரம்பிக்கின்றன.

கால் இறுதிகளுக்கு இந்த ஆண்டு ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளை நடத்தி வரும் இரு அணிகளுமே தெரிவாகவில்லை என்பது போட்டிகளைக் காணத் திரண்டு வந்த உள்ளூர் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கும். கடந்த 2008 ஐரோப்பியக் கிண்ணம் போலவே (சுவிட்சர்லாந்து & ஒஸ்ரியா) இம்முறையும் போட்டிகளை நடத்துகின்ற நாடுகள் இரண்டும் முதல் சுற்றோடு காலி.

ஆனால் நடப்பு வெற்றியாளர்களும் நடப்பு உலக சாம்பியனுமான ஸ்பெய்ன், இம்முறை ஸ்பெய்னுக்கு சவால் விடுக்கும் அணியாக விளங்கும் எனக் கருதப்படும் ஜேர்மனி ஆகிய அணிகளும் ஏனைய எதிர்பார்க்கப்பட்ட பலமான அணிகளும் காலிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளன.


இரண்டாம் சுற்றுக்கு வரும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறிய ஒரே அணியாக ரஷ்ய அணியை சொல்லலாம்... பிரிவு Aயின் இறுதி முதற்சுற்றுப் போட்டியில் கிரீஸ் அணியிடம் கண்ட அதிர்ச்சித் தோல்வி தான் இதுவரை இந்த சுற்றுப் போட்டியின் மிகப் பெரிய அதிர்ச்சியாகக் கருதப்படுகிறது.

ஐரோப்பாவின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான ஒல்லாந்து அணியும் முதற்சுற்றோடு வெளியேறினாலும், மிக சிரமமான பிரிவில் ஒல்லாந்து விளையாடியிருந்ததால், இதன் இரண்டாம் சுற்றுப் பிரவேசம் சந்தேகமாகவே இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே...  ஆனாலும் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே தோல்வியடையும் என்பது யாரும் எதிர்பாராத ஒன்று.


அடுத்த அதிர்ச்சியாக அமைந்தது நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற முதற் சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டியான பிரிவு போட்டியில் ஸ்வீடன் அணியிடம் பிரான்ஸ் அணி தோற்றது. தொடர்ச்சியாக 23 போட்டிகளில் தோற்காமல் இருந்த பிரான்சின் சாதனைப் பயணம் நேற்றுமுன்தினம் அதிர்ச்சித் தோல்வியுடன் முற்றுப் பெற்றுள்ளது. இதைவிட இன்னொரு அடியாக இந்த தோல்வியால் பிரிவு Dஇல் தம் முதலாம் இடத்தை இங்கிலாந்திடம் இழந்ததால், பிரான்ஸ் தனது கால் இறுதிப் போட்டியை நடப்பு சம்பியன் ஸ்பெய்னுடன் விளையாடவேண்டிய ஆபத்தான நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவாக சுருக்கமாக அலசுவோமானால்...

பிரிவு A
செக் குடியரசு முதலாவது போட்டியில் என ரஷ்யாவிடம் மரண அடி வாங்கினாலும், அடுத்த இரண்டு போட்டிகளையும் நேர்த்தியாக வென்று காலிறுதிக்கு தெரிவாகியுள்ளது. ஜிராசெக், பிளார் ஆகியோர் தலா இரு கோல்களைக் குவித்து முன்னணி வீரர்களாக விளங்குகிறார்கள். பின் களத்தடுப்பும் அபாரமாகவே உள்ளது.


நான்கு புள்ளிகளுடன் தனது இறுதிப் போட்டியை கிரீசுடன் விளையாடிய ரஷ்யா இலகுவாகத் தெரிவாகிவிடும் என்ற நினைப்பில் பலரும் இருக்க, கிரீஸ் ஒரு கோலை அந்தப் போட்டியில் எடுத்த பின் கடந்த பத்துவருடங்களாக வெற்றிகரமாக மற்ற அணிகளை வீழ்த்தப் பயன்படுத்திவரும் கிடுக்கிப்பிடி தற்காப்பு ஆட்டம் மூலம் ரஷ்யாவின் வாய்ப்புக்களை முடக்கி தோல்வியடையச் செய்தது. இரண்டு போட்டிகளில் ஒரேயொரு புள்ளியைப் பெற்றிருந்த கிரீஸ் ரஷ்யாவை வீழ்த்தியதன் மூலமாகக் காலிறுதிக்குப் பயணிக்கிறது.

போட்டிகளை நடத்துகின்ற போலந்து இரண்டு போட்டிகளை சிறப்பாகத் தடுத்தாடி சமன் செய்தாலும், செக் அணியுடனான தோல்வியுடன் கண்ணீர் மல்க விடைகொடுத்தது.

பிரிவு B
இந்தத் தொடரின் மிக சிக்கலான பிரிவான இப்பிரிவில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட இரு முன்னணி அணிகளே அடுத்த சுற்றுக்குத் தெரிவாகி இருப்பது கவனிக்கக் கூடிய ஒரு விடயமாகும்.

இப்பிரிவில் தான் எந்தவொரு சமநிலை முடிவும் பெறப்படவில்லை என்பதும் விசேடம்.

ஜேர்மனி, போர்த்துக்கல் இவை இரண்டும் தத்தமது பலத்தோடும் ஆதிக்கத்தோடும் தேவையான வெற்றிகளைப் பெற்று முன்னேறியுள்ளன. ஜேர்மனி விளையாடிய மூன்று போட்டிகளையுமே வென்று இத்தொடரின் ஒரே நூறு சதவீத வெற்றி அணியாக நடைபோடுகிறது. கோமேஸ் ஒரு கோல் குவிப்பு இயந்திரமாக மூன்று கோல்களை இதுவரை பெற்றுள்ளார்.  இவரோடு பொடோல்ஸ்கி, ஒசில், க்லோசே, கஹ்டிரா போன்ற வீரர்களும் கலக்கி வருகிறார்கள்.

ஸ்பெய்னை விட பல விமர்சகர்கள் ஜேர்மனியே இம்முறை கிண்ணம் வெல்ல வாய்ப்புள்ள அணியென சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.


போர்த்துக்கல் - ஜேர்மனியுடன் மட்டும் தோற்று ஏனைய போட்டிகளை வென்றது. முதலாவது போட்டியிலும் கூட அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்த அணியின் தலைவர் ரொனால்டோ தேவையான இறுதிப் போட்டியில் இரு கோல்களை அடித்து கதாநாயகனாக மாறியுள்ளார். ரொனால்டோ மட்டுமன்றி பெப்பே, பொஸ்டிகா போன்ற வீரர்களும் கோல்களைப் பெற்றதுடன் ஜேர்மெனிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு தங்கள் பின்களத்தையும் உறுதிப்படுத்தியிருப்பது சிறப்பு.

டென்மார்க் தன்னைவிடப் பலமான அணியாகக் கருதப்பட்ட ஒல்லாந்து அணியைத் தோல்வியடைச் செய்திருந்தது. உலகின் பல்வேறு முன்னணிக் கழகங்களுக்காக விளையாடிவரும் நட்சத்திர வீரர்களை எல்லாம் அணியில் நிறைய வைத்திருந்தாலும் ஒல்லாந்து அணியால் அவர்களை ஒன்றுபடுத்தி வெற்றியை நோக்கிப் பயணிக்கவைக்க முடியவில்லை. ஒல்லாந்தின் ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் இவ்வணியின் விளையாட்டை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பிரிவு C
முதலாவது போட்டியில் இத்தாலி அணியால் தடுத்தாடப்பட்டாலும் தொடர்ந்து வந்த போட்டிகளில் தாங்கள் ஏன் இன்னும் சாம்பியனாக வலம் வருகிறார்கள் என்பதை ஸ்பெய்ன் காட்டி இருந்தது.


வியா, புயோல் ஆகியோரின் இன்மை தந்த ஆரம்பத் தடுமாற்றங்களை பெர்னாண்டோ டோறேசின் மீள் பெறப்பட்ட வேகம் ஈடுகட்ட, டேவிட் சில்வா, இனிஎஸ்டா, சவி, பிக்கே, அணித் தலைவரும் கோல் காப்பாளருமான கசியாஸ் என்று பலரும் இணைந்த கூட்டு முயற்சி தோல்வி ஏதும் இல்லாமல் அடுத்த சுற்றுக்குப் பயணிக்க வைத்துள்ளது. வேகமான பந்துப் பரிமாற்றம் இவர்களது பலமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.

இறுதிப் போட்டி வரை இத்தாலி தடுமாறி வந்தாலும் வென்றே ஆகவேண்டிய அயர்லாந்துடனான இறுதிப் போட்டியில் இரு கோல்களை அபாரமாக ஆடிப் பெற்று தமது பாரம்பரிய பலத்தை எடுத்துக்காட்டியுள்ளது.


வயதேறினாலும் சிங்கமாக வலம் வருகிறார் பிர்லோ... கோல் காப்பாளர் புப்போனும் நம்பிக்கை தருகிறார்.

கஸ்சானோ, டி நட்டால் ஆகியோரும் ஆரம்பத்தில் தடுமாறி கடைசியாக வெற்றி கோலை ஒரு சாகசத் தனத்துடன் பெற்றுத் தந்தவருமான பலோடேலியும் இத்தாலியின் முக்கிய வீரர்கள்.

கடுமையாகப் போராடித் தோற்ற பெருமையுடன் நாடு திரும்புகிறது குரோஷிய அணி. வெற்றி, தோல்வி, சமநிலை என்று ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றாய் சுவைத்து இறுதியாக ஸ்பெய்னையே தடுமாற வைத்து, போராட வைத்து கௌரவமாக வெளியேறியுள்ளது.

இத்தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களில் ஒருவராக இவ்வணியின் மன்சுக்கிக் இருப்பதும் இவ்வணிக்குப் பெருமையே.

ஒல்லாந்து போலவே அயர்லாந்தும் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொற்று ஏமாற்றத்தோடும், ஏகப்பட்ட விமர்சனங்களோடும் நாடு திரும்பியுள்ளது.

பிரிவு D

பிரான்ஸ் அணி முதலிடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரிவில் இங்கிலாந்து முந்திக் கொண்டது. சொந்த மண்ணில் இடம் பெறுவதால் சிறிய வாய்ப்பொன்றைக் கொண்டிருக்கும் என்று நம்பப்பட்ட உக்ரெய்ன் பிரான்ஸ், இங்கிலாந்து என்ற வழமையான பலமான அணிகளின் முன்னால் மண்டியிட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருப்பதும், ஆச்சரியப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்வீடன் அணி கடைசிப் போட்டியில் மட்டும் பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்ததும் சில முக்கிய விடயங்கள்.


இங்கிலாந்தின் முக்கிய வீரர் வெய்ன் ரூனி முன்பு விதிக்கப்பட்ட தடையினால் முதல் இரு போட்டிகளில் விளையாடாதுவிட்டாலும், கடைசிப் போட்டியில் உக்ரேய்னுடன் தேவையான ஒற்றை கோலைப் பெற்றுக் கொடுத்து இங்கிலாந்தை நம்பிக்கையோடு அடுத்த சுற்றுக்கு அழைத்துச் செல்கிறார். 

ரூனி இல்லாத நேரம் இங்கிலாந்து தன் இளைய வீரர்கள் மூலம் நல்ல எதிர்காலத்தையும் அறிந்துகொண்டது சிறப்பு.

லெஸ்கொட், தியோ வோல்கொட், கரோல், வெல்பெக் என்று நால்வர் நம்பிக்கை தருகிறார்கள். போதாக்குறைக்கு வழமையான மூன்று தூண்கள் எப்போதும் போல உறுதியாக. கோல் காப்பாளர் ஹார்ட், ஜெரார்ட் மற்றும் டெரி.

பிரான்ஸ் கடைசிப் போட்டியில் சுவீடனிடம் தோற்கும் வரை 23 போட்டிகளில் தோல்வியை சுவைக்காத அளவுக்குப் பலமான அணியாக விளங்கியது. ஸ்வீடன் தோல்வி இவர்களது நம்பிக்கையை உடைத்துப் போடும் போல தெரிகிறது.

ரிபேறி, மலூடா, பென்சீமா, அர்பா, எவரா, டெபூச்சி போன்ற பிரபல வீரர்கள் இன்னும் பெரிதாகப் பிரகாசிக்கவில்லை. ஆனால் இளம் வீரர்கள் நஸ்ரயும், மெனேசும், கபயேயும் கலக்கியுள்ளார்கள்.

ஆனால் அடுத்து சந்திக்கவிருப்பது ஸ்பெய்னை என்கையில் பிரான்சுக்கு எல்லாம் சரியாக அமையவேண்டும்.

உக்ரெய்ன் வழமை போலவே தங்கள் தலைவரிடம் மட்டுமே நிறையத் தங்கி இருந்ததால் தலைவர் ஷெவ்செங்கோவின் இரு கோல்களோடு மட்டும் வெளியேறியுள்ளது.

ஸ்வீடன் எதிர்பார்த்த அவ்வணியின் நட்சத்திரங்கள் சிறப்பாகவே செய்துள்ளார்கள்; ஆனாலும் அது மட்டுமே போதவில்லை. இப்ராஹிமோவிக் இரண்டு கோல்கள், லார்சன், மெல்பேர்க் தலா ஒவ்வொரு கோல்கள்... ஆனாலும் முதல் சுற்றோடு வெளியேற்றம்.

இனி ஒரேயொரு வாய்ப்பு... வென்றால் அரையிறுதி, தோற்றால் வெளியேற்றம் எனும் Knock out சுற்றுக்கள். விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது.

வெள்ளிக்கிழமை முதல் அதாவது நாளை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்கள்... நான்கு கால் இறுதிப் போட்டிகள்... நான்கு பலம் வாய்ந்த அணிகள் அந்த நாளில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் அரையிறுதிக்குப் பயணிக்கப் போகின்றன.

வெள்ளி       -  செக் குடியரசு  எதிர்     போர்த்துக்கல்
சனி                - ஜெர்மனி             எதிர்     கிரீஸ்
ஞாயிறு       - ஸ்பெய்ன்           எதிர்     பிரான்ஸ்
திங்கள்        - இங்கிலாந்து      எதிர்    இத்தாலி


கடைசி இரு கால் இறுதிகளும் நிச்சயம் அதிக விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இதவரை நடைபெற்ற 24 போட்டிகளில் 60 கோல்கள் பெறப்பட்டிருக்கும் நிலையில் இனி மேலும் கோல்களை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்...

இதயத் துடிப்பை எகிற வைக்கும் இறுக்கமான போட்டிகள், மேலதிக நேரங்கள், பெனால்டி உதைகள் என்று இனித் தான் உணர்ச்சியான ஐரோப்பியக் கால்பந்துத் திருவிழா... ரசிப்போம் வாருங்கள்..

கால் இறுதிகள் முடிய இன்னொரு தொகுப்பில் சந்திக்கிறேன்...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .