2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மேற்கிந்திய தீவுகள் பலமான அணியா?

A.P.Mathan   / 2012 ஜூன் 16 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


மேற்கிந்திய தீவுகள் - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டி தொடர் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்தில் இந்த தொடர் நடைபெறுகின்றது. மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் தொடருக்கு பதில் அடி கொடுக்கக் கூடிய தொடராக அமையும் வாய்ப்புக்கள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் போர்மில் உள்ள ஐந்து முக்கிய வீரர்கள் அணிக்குள் வந்துள்ளமை. இவர்கள் போர்மில் உள்ளார்கள் என்பதிலும் பார்க்க படு பயங்கரமானவர்கள். குறிப்பாக நிறைவடைந்த ஐ.பி.எல். போட்டிகள் அதை நிரூபித்து விட்டன. முதலாமவர் க்றிஸ் கெயில். அவர் பற்றி சொல்லவே தேவை இல்லை. அடுத்தவர் டுவைன் பிராவோ. இவரின் துடுப்பாட்டம் கை கொடுக்கிறதோ இல்லையோ இங்கிலாந்தின் ஆடுகளங்கள் நிச்சயம் இவரின் பந்து வீச்சுக்கு கை கொடுக்கும். டுவைன் ஸ்மித் மூன்றாமவர். ஐ.பி.எல்.இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடித்த அடி அணிக்கும் அவரை சேர்த்துள்ளது. இவரின் பந்து வீச்சு மேலதிக பலம். நான்காமவர் கெரோன் போலார்ட். துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என கலக்கும் இவர் சர்வதேச போட்டிகளில் சாதித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். துடுப்பாட்ட போர்ம் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. ஐந்தாமவர் சுனில் நரையன். இவரின் சுழல்ப் பந்துவீச்சு பற்றி தான் எல்லோரும் இப்போது பேசுகிறார்கள். இவர்களை தாண்டி டரின் சமி அணித்தலைவர். குறிப்பிட்ட 6 வீரர்களும் பந்து வீசுவார்கள். மிகுதி ஐந்து வீரர்களையும் துடுப்பாட்ட வீரர்களாக அணியில் சேர்த்து விட்டால் அணி எப்படி இருக்கும்?

அடுத்த முக்கியமானவர் மர்லன் சாமுவேல்ஸ். அண்மைக்கால மேற்கிந்தியதீவுகள் அணியின் ரன் இயந்திரம். பந்துவீச்சிலும் சுழல்ப் பந்துவீச்சாளராக நல்ல முறையில் செயற்படுவார். யோசித்து பார்க்க படு பயங்கர அணி போல் தென்படுகிறதா? அன்டுறு ரஸ்ஸல் இன்னுமொரு சகலதுறை வீரர். அண்மைக்காலமாக பந்து வீச்சு, துடுப்பாட்டம் என நல்ல முறையில் செயற்படுகிறார். டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்த டரின் பிராவோ பயிற்சிப் போட்டியில் சதம் அடித்துள்ளார். இந்த அணியைப் பார்க்கும் போது மிகப் பலமான அணியாக எந்த அணிக்கும் அடிக்கக் கூடிய அணியாக தென்படுகிறது. ஆனால் இவர்களின் பிரச்சினை எல்லோரும் ஒருமித்து ஒற்றுமையாக ஆடமாட்டார்கள். அணியின் மூத்த வீரர்கள் அணிக்குள் வந்துள்ளார்கள். அவர்களை எப்படி கையாள்வது? அணித்தலைவர் சமிக்கு அது பெரிய சவால். அதுவும் குழப்படி காரர்கள். இவர்களை சமாளித்து விட்டாலே சமிக்கு தொடரை வெற்றி பெற்றதற்கு சமன்.

இவை எல்லாவற்றையும் தாண்டி இந்த படு பயங்கர துடுப்பாட்ட வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? குறிப்பாக ஸ்டுவோர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன், டிம் பிரஸ்னன் ஆகியோரின் பந்துவீச்சு பதம் பாக்காமல் விடப் போவதில்லை. அவர்கள் இந்த பயங்கரமானவர்களை உருட்டிவிட்டால் இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தில் லாபகரமாக வென்று விடும்.


இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் கெவின் பீற்றர்சன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகியிருப்பதானது பெரும் பின்னடைவை தரும். வேகமாக அடிதாடக் கூடிய வீரர் ஒருவர் அணியில் இல்லை என்பதும் அவர்களுக்கு பிரச்சினையை தரப் போகிறது. அலிஸ்டயர் குக், இயன் பெல் ஆகியோரே அவர்களின் முக்கியமான துடுப்பாட்ட வீரர்கள். அடுத்தவர் ஜோனதன் ட்ராட். ரவி போபர அணிக்குள் வருகிறார். ஒய்ன் மோர்கனுக்கு ஒரு மீள் வருகை வாய்ப்பு. எனவே இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தில் சாதித்துக்காட்ட வேண்டிய நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணியில் அடித்தாடக் கூடியவராக கிரேக் க்கிஸ்வெட்டர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இரு அணிகளையும் வைத்துப் பார்க்கும் போது சம பலம் தென்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தில் பலம். ஒன்பது வீரர்கள் அல்லது பத்து துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பாடுவார்கள். அதிலும் வேகமாக அடித்தாடுவார்கள். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சோ பலம். எனவே பந்து வீச்சு, துடுப்பாட்டதுக்கான போட்டி தொடராக இந்த போட்டி அமையலாம். மூன்று போட்டிகள் கொண்ட தொடர். எனவே போட்டி விறு விருப்பை தரும்.

முதற்ப் போட்டி                    - ஜூன் 16          இலங்கை நேரப்படி மாலை 3 .15        - சௌதம்டன் மைதானம்

இரண்டாவது போட்டி       - ஜூன் 19          இலங்கை நேரப்படி மாலை 3.15         - த ஓவல் மைதானம்

மூன்றாவது போட்டி          - ஜூன் 22          இலங்கை நேரப்படி மாலை 3.15         - லீட்ஸ் மைதானம்
 
இரண்டு அணிகளுக்குமிடையில் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ள ஒரு நாள் சர்வதேச போட்டி விபரங்கள்.
இரண்டு அணிகளும் முதல் தடவையாக 1973ஆம் ஆண்டு சந்தித்துள்ளன. 32 போட்டிகளில் இங்கிலாந்து அணி 16இல் வெற்றி பெற்றுள்ளதோடு மேற்கிந்திய தீவுகள் அணி 15இல் வெற்றி. ஒரு போட்டி கை விடப்பட்டது. எனவே மேற்கிந்திய தீவுகள் அணிதான் பலமாக இருந்துள்ளது கடந்த காலங்களில்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .