2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடர்

A.P.Mathan   / 2012 ஜூன் 14 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர் நிறைவடைந்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட முடிவே கிடைத்துள்ளது. இங்கிலாந்து இலகுவாக தொடரைக் கைப்பற்றும் என்பது நடந்து விட்டது. இங்கிலாந்து வீரர்களில் எதிர்பார்க்கப்பட்டவர்கள் எல்லோருமே சாதித்து விட்டார்கள். சொதப்பி விட்டார்களே என்று சொல்ல யாரும் இல்லை. துடுப்பாட்டம், பந்து வீச்சு என சகலதுறையிலும் கலக்கி விட்டார்கள். பந்து வீச்சில் ஸ்டுவோர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோருடைய பந்து வீச்சு இங்கிலாந்து அணிக்கு விக்கெட்களைக் அள்ளிக் கொடுத்தது. டிம் பிரஸ்னன் கூட குறை சொல்லவதற்கு இல்லை. நல்ல முறையிலேயே பந்து வீசியுள்ளார். எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சில் கலக்க, துடுப்பாட்டத்தில் அன்று ஸ்ட்ரோஸ் கலக்கினார். பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலிஸ்டயர் குக் எதிர்பார்த்த அளவு செய்யவில்லை. இயன் பெல் மிக திறமையாக துடுப்பெடுத்தாடினார். கெவின் பீற்றர்சன் நல்ல முறையில் சராசரியாக துடுப்பெடுத்தாடினார். ஜொனதன் ட்ராட் பெரிய அளவில் சொல்வதற்கில்லை.

மேற்கிந்திய துடுப்பாட்டத்தில் மர்லன் சாமுவேல்ஸ் மிக அபாரமாக துடுப்பெடுத்தாடினார். மற்றவர் சந்தர்போல். அவர் தன்னுடைய கடமையை சரியாக செய்பவர். டரின் சமி கன்னிச் சதத்தைப் பெற்று இன்னும் கொஞ்சம் ஓட்டங்களையும் பெற்று தன்னை நல்ல சகலதுறை வீரராக காட்டியுள்ளார். டீனோ பெஸ்ட், கிமர் ரோச் உபாதையடைய அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர். அபார மீள் வருகை. இனி அணியில் வாய்ப்புக்கள் தொடரும் என்று சொல்லலாம். எதிர்பார்க்கப்பட்ட மேற்கிந்தியதீவுகளின் ஆரம்ப இளைய துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றியது போராட முடியாமல் போனது. டரின் பிராவோ முழுமையாக ஏமாற்றிவிட்டார். இந்த அணிக்குள் க்றிஸ் கெயில் வந்தால் ஆரம்பம் இன்னும் பலமாக மாறும். தினேஷ் ராம்டின் ஓரளவு பரவாயில்லை என்ற நிலை. பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரகாசித்தவர் என்றால் கிமர் ரோச். அடுத்த படியாக சமி. இறுதி போட்டியில் சுனில் நரையன் விளையாடிய போதும் பந்து வீச பெரிதளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரவி ராம்போல் எதுவும் சாதிக்கவில்லை என்ற நிலை. கிமர் ரோச், பிடல் எட்வேர்ட்ஸ் ஆகியோர் அணிக்குள் வந்தால் ராம்போலின் நிலை கேள்விதான். டீனோ பெஸ்ட் கும் ராம்போலிற்கும் போட்டி ஒன்று நிலவலாம்.


முதல் போட்டி
இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது இங்கிலாந்து அணி. லோர்ட்சில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்களையும் இழந்து 243 ஓட்டங்களை பெற்றது. சிவ்நரேன் சந்தர்போல் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களைப் பெற்றார். ஏட்ரியன் பரத் 42 ஓட்டங்கள். பந்துவீச்சில் ஸ்டுவோர்ட் ப்ரோடின் பந்து வீச்சு அபாரமாக அமைந்தது. 7 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலளித்த இங்கிலாந்து அணி 398 ஓட்டங்களைப் பெற்றது. அன்று ஸ்ட்ரோஸ் 122 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இயன் பெல் 61 ஓட்டங்களைப் பெற்றார். ஜொனதன் ட்ராட் 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சராசரியான இணைப்பாட்டங்கள் இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது. பந்து வீச்சில் கிமர் ரோச், ஷனோன் கப்ரியல் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். டரின் சமி 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். தங்கள் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 345 ஓட்டங்களைப் பெற்றது. சிவ்நரேன் சந்தர்போல் 91 ஓட்டங்களையும் , மார்லன் சாமுவேல்ஸ் 86 ஓட்டங்களையும் பெற்றனர். தினேஷ் ராம்டின் (43), டரின் சமி (37) ஆகியோருடைய துடுப்பாட்டமும் கை கொடுத்தது நல்ல ஓட்ட எண்ணிக்கையை பெற. இரண்டாவது இன்னிங்சிலும் ஸ்டுவோர்ட் ப்ரோட் சிறப்பாக பந்து வீசினார். 4 விக்கெட்கள். கிரேம் சுவான் 3 விக்கெட்கள். முதல் இன்னிங்சில் போதிய அளவு ஓட்ட எண்ணிக்கையைப் பெற முடியாமல் போனது மேற்கிந்திய தீவுகள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.

இங்கிலாந்து அணி 5 விக்கெட்களைக் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இங்கிலாந்து அணி பெற்ற 193 ஓட்டங்களில் அலிஸ்டயர் குக் 79 ஓட்டங்களையும் இயன் பெல் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும் பெற்றனர். 57/4 என்ற நிலையில் இருந்து, இந்த இருவரும் இங்கிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். கிமர் ரோச் 3 விக்கெட்களை கைப்பற்றினர். 11 விக்கெட்களைக் கைப்பற்றிய ஸ்டுவோர்ட் ப்ரோட் போட்டியின் நயகனாக தெரிவானார்.


இரண்டாவது போட்டி
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியதீவுகள் அணி 370 ஓட்டங்களைப் பெற்றது. மீண்டும் ஒருதடவை மிக மோசமான ஆரம்பம். மார்லன் சாமுவேல்ஸ், டரின் சமி ஆகியோருடைய ஏழாவது விக்கெட் இணைப்பாட்டம் 204 ஓட்டங்களைத் தர மேற்கிந்திய தீவுகள் அணி வலுவான ஒரு நிலைக்கு வந்தது. மார்லன் சாமுவேல் 117 ஓட்டங்கள். டரின் சமி 106 ஓட்டங்கள். இது அவருடைய கன்னிச் சதம். இணைப்பாட்டம் முறியடிக்கப்பட இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 370 ஓட்டங்களுடன் மேற்கிந்திய தீவுகளின் இன்னிங்ஸ் நிறைவடைந்தது. சந்தர்போல் 46 ஓட்டங்கள். பந்து வீச்சில் டிம் ப்ரெஸ்னன் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஜேம்ஸ் அன்டர்சன், கிரேம் சுவான், ஸ்டுவர்ட் ப்ரோட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலளித்த இங்கிலாந்து அணி நல்ல ஆரம்பத்தினூடகவும், சராசரியான இணைப்பாட்டங்கள் மூலமாகவும் மேற்கிந்தியதீவுகளின் ஓட்ட எண்ணிக்கையை இலகுவாக கடந்தது. 428 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றது. இதில் அணித்தலைவர் அன்று ஸ்ட்ரோஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 141 ஓட்டங்களை பெற்றார். கெவின் பீற்றர்சன் 80 ஓட்டங்கள். இவர்கள் இருவரும் 144 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். பந்து வீச்சில் ரவி ரம்போல் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். கிமர் ரோச், டரின் சமி, மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினார். 

தங்கள் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. மார்லன் சாமுவேல்ஸ் தனித்து  நின்று 76 ஓட்டங்களைப் பெற்ற போதும் மற்றவர்கள் வேகமாக ஆட்டமிழக்க எதுவுமே செய்யமால் போனது. ஜேம்ஸ் அன்டர்சன், டிம் பிரஸ்னன் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். 108 ஓட்டங்கள் மாத்திரமே வெற்றி இலக்கு. இங்கிலாந்து அணி இலகுவான 9 விக்கெட்களினால் வெற்றியை பெற்றது. அன்று ஸ்ட்ரோஸ் 45 ஓட்டங்களையும், அலிஸ்டயர் குக் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றனர். போட்டியின் நாயகனாக டிம் பிரஸ்னன் தெரிவானார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை தனதாக்கியுள்ளது.


மூன்றாவது போட்டி
மழை காரணமாக கழுவப்பட்ட போட்டி இது. இரண்டு நாட்கள் மாத்திரமே போட்டி நடைபெற்றது. மேற்கிந்திய தீவுகளின் ஆதிக்கம் இருந்த போட்டி. மூன்றாவது நாளில் போட்டி ஆரம்பிக்க மேற்கிந்திய தீவுகள் துடுப்பெடுத்தாடியது. வழமையான சொதப்பல் ஆரம்பம். இந்தப் போட்டியும் மற்ற போட்டிகள் என இருக்க சமுவேல்சின் சிறந்த துடுப்பாட்டம் கை கொடுக்க, தினேஷ் ராம்டின் பின் வரிசை வீரர்களுடன் இணைந்து ஓட்டங்களை பெற்றார். இறுதி விக்கெட் இணைப்பாட்டம் மிகப் பெரிய மாற்றத்தை தந்தது. டினோ பெஸ்ட் 95 ஓட்டங்களைப் பெற்று சாதனை புரிந்தார். இறுதி துடுப்பாட்ட வீரர் ஒருவர் பெற்றுக் கொண்ட கூடுதலான ஓட்டங்கள் இதுவே. ராம்டின் ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்கள். இரண்டாவது சதம் அவருக்கு. மார்லன் சாமுவேல்ஸ் 76 ஓட்டங்கள். கிரகாம் ஒனியன்ஸ் 4 விக்கெட்கள். கிடைத்த வாய்ப்பை சரியாக பாவித்துக் கொண்டார். டிம் பிரஸ்னன் 3 விக்கெட்கள். ஸ்டீவன் பின் 3 விக்கெட்கள். இவரும் இன்னும் ஒரு தடவை தன்னை நிரூபித்து காட்டி விட்டார். பின், ஒனியன்ஸ் ஆகியோர் ஸ்டுவோர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோருக்கு பதிலாக விளையாடியவர்கள்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்கள். மோசமான ஆரம்பம். இருப்பினும் கெவின் பீற்றர்சன் (78), இயன் பெல் (ஆட்டமிழக்காமல் 76), இணைப்பாட்டம் இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. பந்து வீச்சில் டீனோ பெஸ்ட் 2 விக்கெட்கள். போட்டியின் நாயகனாக டீனோ பெஸ்ட் தெரிவானார்.


தொடர் நிறைவடைந்த நிலையில் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அன்று ஸ்ட்ரோஸ், மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோருக்கு போட்டி தொடர் நாயகர்கள் விருது வழங்கப்பட்டது. மார்லன் சாமுவேலுக்கு தான் தனியாக இந்த விருது செல்ல வேண்டும். ஏன் அன்று ஸ்ட்ரோசுக்கு என்ற கேள்வி நிச்சயம் கேக்க வேண்டியுள்ளது. சமாளிப்புக்கு கொடுக்கப்படுகிறதா இந்த விருதுகள்? கீழ் வரும் பெறுதிகள் இதை நிரூப்பதாக அமையும். 


துடுப்பாட்டத்தில் கூடுதலான ஓட்டங்கள் பெற்றவர்கள்
மார்லன் சாமுவேல்ஸ்         3    5     386    117      96.50      1    3   
அன்று ஸ்ட்ரோஸ்                  3    5     326    141      65.20      2    0
சிவ்நரேன் சந்தர்போல்           2    4     235      91      78.33      0    2   
இயன் பெல்                                3    4      222      76*    111.00    0    3   
கெவின் பீற்றர்சன்                   3    4     203      80      50.75      0    2
டரின் சமி                                    3    5     201    106      40.20      1    0

பந்து வீச்சில் கூடுதலான விக்கெட்கள்  கைப்பற்றியவர்கள்
ஸ்டுவோர்ட் ப்ரோட்            2    4     304     14      72/7     21.71    
டிம் பிரஸ்னன்                       3    5     396     12      37/4     33.00
ஜேம்ஸ் அன்டர்சன்            2    4       42       9       43/4     26.88
கிமர் ரோச்                               2     4     274      8       60/3     34.25
கிரேம் சுவான்                        3     5     282      6       59/3     47.00
டரின் சமி                                 3    5     291       6       92/2    48.50
மார்லன் சாமுவேல்ஸ்     3     5     150       5       14/2    30.00


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .