2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சுற்றுப் போட்டி: ஒரு முழுமையான பார்வை

A.P.Mathan   / 2012 ஜூன் 11 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்னிஸ் ரசிகர்களுக்கு விறுவிறுப்பு விருந்து படைத்த பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டிகள் நேற்று இரவு நடைபெற்ற (முடிவு இன்றுதான் எட்டப்பட்டது) ஆடவர் ஒற்றையர் இறுதியுடன் நிறைவுபெற்றுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை இரவு முடிந்திருக்கவேண்டிய பிரெஞ்சு பகிரங்கத் தொடரானது பாரிஸ் மழையினால் ஒரு நாள் தாமதித்தே நிறைவுக்கு வந்துள்ளது. நடால் மீண்டும் தான் தான் களி மண் தரையின் ராஜா - King of Clay court என நிரூபித்துள்ளார். வரலாறில் சாதனை மிகுந்த ஏழாவது பிரெஞ்சு பகிரங்க மகுடம் அவர் வசமாகியுள்ளது. அத்துடன் பிரெஞ்சு பகிரங்க சுற்றுப் போட்டிகளில் அவர் விளையாடியுள்ள 53 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மாத்திரமே தோற்றுள்ளார் என்பதும் குறிப்பிடக்கூடிய ஒன்று.

நேற்று மழை குறுக்கிடும்போதே ஆதிக்கம் செலுத்தியிருந்த ரபாயேல் நடால் இன்று போட்டியின் நான்காவது செட்டில் வெற்றிபெற்று மகுடத்தைத் தனதாக்கினார். தரப்படுத்தலில் முதலாம் இடத்தில் உள்ள நொவாக் ஜோகொவிக் தனது நான்காவது தொடர்ச்சியான கிராண்ட் ஸ்லாம் வெற்றியைப் பெற முடியாமல் போயுள்ளது.


(விறுவிறு இறுதிப்போட்டி தந்த உலகின் முதல் இரு வீரர்கள் நடால் மற்றும் ஜோகோவிக்)

ரபாயேல் நடால் (ஸ்பெய்ன்) - நொவாக் ஜோகோவிக் (செர்பியா)
6-4    6-3   2-6    7-5

மழை இடையிடையே குறுக்கிட்ட போதிலும் அரங்கு நிறைந்த ரசிகர்களோடும் உலகம் முழுதும் தொலைக்காட்சியை மொய்த்திருந்த ஆர்வம் மிக்க ரசிகர்களின் விழிகளுக்கு விருந்தையும் வழங்கி பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டி நிறைவடைந்துள்ளது. ஆடவர் ஒற்றையர் ஆட்டம் இம்முறை ஆரம்பம் முதலே மிகுந்த விறுவிறுப்பை வழங்கி இருந்தது.


(நடால் - ஜோகோவிக் மோதல் பார்க்கும் ஆர்வத்தில் திரண்ட ரசிகர்கள்)

தரப்படுத்தலில் முதல் இடங்களில் இருந்த அத்தனை வீரர்களுமே சிறப்பான உடற்தகுதியோடும், வெற்றிபெற்றுக் கொண்டிருக்கும் தொடர்ச்சியான ஆற்றலோடும் இருந்ததும் இதற்கான காரணம் என்று சொல்லலாம்.

ஒரு கட்டத்தில் ஆண்களுக்கான தரப்படுத்தலில் முதல் நான்கு இடங்களிலும் இருக்கும் வீரர்களே அரையிறுதிகளுக்குள் நுழைவார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் கால் இறுதிப் போட்டிகளில் முன்னாள் முதல் தர வீரர் பெடரரும், இந்நாள் முதல் நிலை வீரர் ஜோகோவிக்கும் மிகக் கடுமையாகப் போராடி, ஐந்தாவது செட் வரை விளையாடியே அரையிறுதிக்குத் தெரிவாகவேண்டி இருந்தது.

ஆனால் இன்னொருபக்கம் பிரித்தானிய வீரர், தரப்படுத்தலில் நான்காம் இடத்தில் உள்ள அண்டி மரே தனது காலிறுதிப் போட்டியில் தோற்றுப்போனார். அவரை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார் நடாலுக்கு அடுத்ததாக இன்னொரு ஸ்பானிய வீரரான டேவிட் பெரெர். இவர் தரப்படுத்தலில் ஆறாம் இடத்தில் இருக்கிறார்.

மற்ற மூவரும் டென்னிஸ் உலகின் தற்போதைய மும்முடி மன்னவர்கள்...  ஜோக்கொவிக், நடால் மற்றும் பெடரர். மூவரில் யார் இப்பட்டத்தை வென்றாலும் அவரவருக்கு அது ஒரு சாதனையாக அமையும் என்ற நிலையில், அரையிறுதிகள் இடம்பெற்றன.

நடால் வென்றால் பிரெஞ்சு பகிரங்க சுற்றுப் போட்டியை அவர் வெல்லும் ஏழாவது தடவை. இது ஒரு சாதனையாகும். இதற்கு முதல் பிரான்சின் ஜோன் போர்க் ஆறு தடவைகள் வென்றிருந்தார். இதனைக் கடந்த ஆண்டில் தான் நடால் சமப்படுத்தினார்.

ஜோகோவிக் வென்றிருந்தால் ஏற்கெனவே கடந்த வருடம் விம்பிள்டன், அமெரிக்க பகிரங்க சுற்று என்பவற்றையும், இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய பகிரங்க சுற்றையும் வென்ற இவருக்கு ஒரு வருட சுற்றிலே நான்கு கிராண்ட் ஸ்லாமையும் ஒரு சேர வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமை கிடைத்திருக்கும். 43 வருடங்களில் வேறு யாரும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.

பெடரர் வென்றால் உலகில் அதிக கிராண்ட் ஸ்லாம்களை வென்றவர் என்ற சாதனையை அவர் நீட்டித்திருப்பார்.

அரையிறுதிகள் எதிர்பார்த்ததை விட விறுவிறுப்பு குறைந்தனவாக இருந்தன...

நேரடி செட்களில் பெடரரை ஜோக்கொவிக் வீழ்த்த, நடால் தன் நாட்டையே சேர்ந்த டேவிட் பெரரை வீழ்த்தினார். 

இறுதிப்போட்டியில் கடந்த வருடத்தின் விம்பிள்டனில் இருந்து ஒவ்வொரு கிராண்ட் ஸ்லாமிலும் சந்தித்து வரும் உலகின் முதல் இரண்டு வீரர்கள் மோதினார்கள்... அதற்குப் பிறகு நடந்தது வரலாறு. (மேலேயுள்ள பந்திகளை மீள வாசியுங்கள்..)


(நீண்ட காலக் காத்திருப்பின் வெற்றி உற்சாகத்தில் குதிக்கும் மரியா)

ஆடவர் பிரிவில் எதிர்பார்த்த மூவரில் ஒருவர் வெற்றியாளர் ஆகியுள்ள அதேவேளையில், மகளிர் பிரிவில் அண்மைக்காலத்தில் மீண்டும் வெற்றிகளைப் பெற ஆரம்பித்துள்ள மரியா ஷரப்போவா வெற்றிவாகை சூடியுள்ளார்.

கடந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பித்த இந்த கிராண்ட் ஸ்லாம் ஆனது டென்னிஸ் உலகின் நான்கு கிராண்ட் ஸ்லாமில் களிமண் தரையில் நடக்கும் ஒரே போட்டித்தொடர் என்பது முக்கியமானது.

ஆடவர் பிரிவில் ரபாயேல் நடால் சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவரும் அளவுக்கு மகளிர் பிரிவில் யாரும் ஆதிக்கம் செலுத்தியதில்லை என்பதும் ஒரு சுவாரஸ்யமே.

மகளிர் பிரிவில் இம்முறை எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனைகள், WTA தரப்படுத்தலில் முன்னணி இடம் பிடித்த வீராங்கனைகள் ஒவ்வொரு சுற்றாக வெளியேற, தரப்படுத்தலில் தற்போது முதலாம் இடத்தில் உள்ளவரும், இம்முறை பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டவருமான பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த விக்டோரியா அசரென்காவும் நான்காவது சுற்றோடு தோற்று வெளியேறினார்.

மூன்றாம், ஐந்தாம் இடங்களில் உள்ள ரட்வன்ச்கா மற்றும் செரெனா வில்லியம்சும் அரையிறுதிக்கு முன்னதாகவே வெளியேறிவிட, முன்னணி வீராங்கனைகளில் (தரப்படுத்தலில் முதல் 10 இடங்களில் உள்ள வீராங்கனைகளில்) தரப்படுத்தலில் இரண்டாம் இடத்திலுள்ள ரஷ்யாவின் மரியா ஷரப்போவா, நான்காம் இடத்திலுள்ள செக் குடியரசின் பெட்ராற்றா க்விட்டோவா, ஆறாம் இடத்தில் உள்ள அவுஸ்திரேலியா நாட்டின் சமந்தா ஸ்டோசர் ஆகிய வீராங்கனைகளுடன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த வளர்ந்து வரும் வீராங்கனை சாரா எரானியும் அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தார்கள்.


(மகளிர் இரட்டையர் பட்டம் வென்ற மகிழ்ச்சியுடன் எராணி, வின்சி)

எராணி இரட்டையர் ஆட்டங்களில் அசத்திவருகிற ஒருவர். தரப்படுத்தலில் 21ஆம் இடத்தில் இருக்கின்ற இவர் கிராண்ட் ஸ்லாம் ஒன்றின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் தடவை இது.

ஷரப்போவா 2008ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பகிரங்க சுற்றுப்போட்டியில் பட்டம் வென்ற பிறகு தொடர்ந்து தோல்விகளையே சுவைத்தவர்; பின்னர் காயங்கள், உபாதைகளால் அவதிப்பட்டவர். நீண்ட காலத்தின் பின்னர் இந்த வருடத்தின் ஜனவரியில் அவருக்கு ராசியான அவுஸ்திரேலிய பகிரங்க சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தார்.

எனவே இந்த பிரெஞ்சு பகிரங்க மகுடம் மரியாவுக்கு அவசியப்பட்டு இருந்தது. அதற்கேற்றது போல க்விட்டோவாவை வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்.

மறுபக்கம் அனைவராலும் (அநேகரால்) எதிர்பார்க்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் அரையிறுதியில் விறுவிறுப்பான ஒரு போட்டியில் இத்தாலியின் எரானியினால் தோற்கடிக்கப்பட்டார்.

இறுதிப்போட்டி ரசிகர்களால் எதிர்பார்க்கப்படமைக்கு இரு காரணங்கள் இருந்தன... ஒன்று - இருவருமே இதுவரை பிரெஞ்சு பட்டம் வென்றதில்லை. இரண்டு - மீண்டும் டென்னிஸ் உலக ராணியாக மரியா வரப்போகிறாரா என்ற கேள்வி.

இறுதிப் போட்டியில் நேரடி செட்களில் இரானிய வென்றார் பிரெஞ்சு ஒப்பினின் புதிய ராணி.

மரியா ஷரப்போவா பத்து ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த கிராண்ட் ஸ்லாம் அவர் வசமாகியுள்ளது.

மரியா ஷரப்போவா (ரஷ்யா) - சாரா எராணி (இத்தாலி)

6-3      6-2


எராணி ஒற்றையர் பிரிவில் தவற விட்ட மகுடத்தை தன் சக ஜோடியுடன் சேர்ந்து இரட்டையர் பிரிவில் தனது வசப்படுத்திக்கொண்டார். இராணியுடன் சக இத்தாலி வீராங்கனை ரொபர்ட்டா வின்சி சேர்ந்து மகளிர் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்ய மகளிர் ஜோடியான மரியா கிரிலென்கோ - நாடியா பெட்ரோவா ஜோடியை வெற்றிகொண்டது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் எதிர்பார்த்த இரு ஜோடியுமே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. தரப்படுத்தலில் முதலாம், இரண்டாம் இடங்களில் உள்ள ஜோடிகளே இறுதிப் போட்டிக்கு வந்திருந்தன.

அதிலும் முதலாம் இடத்தில் உள்ள டானியல் நெஸ்டர் (கனடா) - மக்ஸ் மிர்னி (பெலாரஸ்) ஜோடி, இரண்டாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்க சகோதர இரட்டையர்களான பிரையன் சகோதரர்களைத் தோற்கடித்தார்கள்.


(ஆசியாவின் பெருமை: மகேஷ் பூபதி - சானியா மிர்சா)

கலப்பு இரட்டையர் ஆட்டம் ஆசியர்களுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும், இந்திய ரசிகர்களுக்கு பெருமையைத் தருவதாகவும் அமைந்தது. இந்திய ஜோடியான மகேஷ் பூபதி - சானியா மிர்சா வெற்றி பெற்றுக்கொண்டார்கள். அதிலும் மகேஷ் பூபதியின் பிறந்தநாளிலேயே இந்த வெற்றி கிடைத்தது இன்னொரு சிறப்பு.

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கைத் திருமணம் முடித்தாலும் டென்னிஸில் இந்தியாவைப் பிரதிநித்துவப்படுத்திவரும் சானியாவுக்கு அண்மைக்கால விமர்சனங்களுக்குப் பதில் அளிப்பதாக இந்த வெற்றி அமைந்துள்ளது.

இவர்களது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் வெற்றியாக இம்முறை வெற்றி அமைந்துள்ளது.


(ஆடவர் இரட்டையர் வெற்றிக் கிண்ணத்தை முத்தமிடும் வெற்றிவீரர்கள் நெஸ்டர் மற்றும் மிர்னி)

எதிர்காலத்துக்கான நட்சத்திரங்களைக் கண்டறியும் போட்டிகள் என்று வர்ணிக்கப்படும் இளையவர்களுக்கான போட்டிகளில், ஆண்கள் பிரிவில் (Boys) பெல்ஜிய சிறுவன் ஒருவன் - கிம்மர் கொப்பஜான்ஸ் வெற்றி ஈட்டியுள்ளான். பெல்ஜிய நாட்டின் நீண்டகாலத்துக்குப் பின்னதான ஆண் பிரிவு வெற்றி என்று இது கொண்டாடப்படுகிறது.

சிறுமியர் (Girls) பிரிவில் ஜேர்மனிய வீராங்கனை அன்னிக்கா பெக் வெற்றிபெற்றார்.

17 வயதான இவ்விருவரையும் அடுத்த ஆண்டு முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தொழில்சார் வீர, வீராங்கனைகளாக நாம் காணலாம் என்று நம்பி இருக்கலாம்.


(சாதனை வீரர் நடால் - மீண்டும் பிரெஞ்சு சாம்பியனாக)

இன்னொரு முக்கிய விடயம் பணப்பரிசுத் தொகை...

டென்னிஸில் பணம் அள்ளி வழங்கப்படும் போட்டித் தொடர்கள் என்ற காரணத்தாலேயே அனுசரணையாளரும் போட்டியாளர்களும் முண்டியடித்துக்கொண்டு முக்கியமான தொடர்களுக்கு முன்வருவது.

ஆண்கள் பிரிவில் வழங்கப்பட்ட மொத்தப் பணப்பரிசுத் தொகை - 8,487,000 யூரோ (கிட்டத்தட்ட ரூபாய் 135 கோடி). பெண்கள் பிரிவில் வழங்கப்பட்ட மொத்தப் பணப்பரிசுத் தொகை - 8,375,000 யூரோ (கிட்டத்தட்ட ரூபாய் 133 கோடியே 25 லட்சம்).

இது கடந்த வருடத்தை விட பத்து வீத அதிகரிப்பாகும்.

இதை விட ஏனைய மொத்த கொடுப்பனவுகள் எல்லாம் சேர்த்து இம்முறை வழங்கப்பட்ட மொத்தப் பணம் - 18,718,000 யூரோ (கிட்டத்தட்ட ரூபாய் 298 கோடி).

இதிலே இம்முறை முடிசூடிக் கொண்ட மரியா ஷரப்போவாவும் என்ன தொகையை எடுத்துச் செல்கிறார்கள் என்று ஆர்வத்தோடு கேட்பவர்களுக்கு - ஆடவர் பட்டத்தை வென்ற நடாலுக்கு வழங்கப்பட்ட தொகை - 1,250,000 யூரோ (கிட்டத்தட்ட ரூபாய் 20 கோடி), மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்ற மரியா ஷரப்போவா வென்ற தொகையும் அதே அளவு.

இரட்டையர் பிரிவில் வெற்றியீட்டிய ஜோடிக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாருக்குமே) தலா 340,000 யூரோ (கிட்டத்தட்ட ரூபாய் 5.4 கோடி) வழங்கப்பட்டன.

ஒரு டென்னிஸ் திருவிழா முடிய, இனி அடுத்த திருவிழாவுக்காக அதுவே டென்னிஸின் உயரிய போட்டித் தொடர் என்று கருதப்படுவது - விம்பிள்டன் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் டென்னிஸ் ரசிகர்கள்.

தெரிவுப்போட்டிகள் இன்று ஆரம்பித்துள்ளன.

ஆனால் முக்கியமான முதல் சுற்று ஆட்டங்கள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல்.

('களி மண் தரையின் ராஜா' ரபாயேல் நடால்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .