2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை - பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி தொடர்

A.P.Mathan   / 2012 ஜூன் 08 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி தொடர்கள் எப்பொழுதுமே விறு விறுப்பை தருவதாகவே அமைந்துள்ளன. இம்முறை ஒரு நாள் போட்டி தொடர் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றது. ரீ20 போட்டி தொடர் சமநிலையில் நிறைவடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இலங்கை அணி ஐக்கிய அரபு ராட்சியத்தில் அடைந்த மிக மோசமான தோல்வி. இவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்க இலங்கை அணி காத்திருக்கின்றது. இவை போட்டியின் சுவாரசியத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. 

1975ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டி தொடரில் முதற் தடவையாக இரண்டு அணிகளும் சந்தித்தன. 80ஆம் ஆண்டிற்கு பின்னர் தொடர்ச்சியாக இரண்டு அணிகளும் தொடர்களில் விளையாடி வருகின்றன. இதுவரையில் இரண்டு அணிகளுக்குமிடையில் 127 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி மிகப் பெரிய ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 76 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.47 போட்டிகளில் இலங்கை அணி வென்றுள்ளது. ஒரு போட்டி சம நிலையில் நிறைவடைந்துள்ளது. 3 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இலங்கையில் இதுவரை 28 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதிலும் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தவில்லை. இரு அணிகளும் தலா 13 போட்டிகளில் வென்றுள்ளன. இரண்டு போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இது இரு அணிகளதும் சில கடந்த காலப் பெறுபேறுகள்.

இம்முறை போட்டி நடைபெறும் மைதானங்கள் இரண்டு. முதல் இரண்டு போட்டிகளும் கண்டி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன. அடுத்த மூன்று போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானம். முதல் மைதானத்தை பற்றி எதிர்வு கூறுவது கஷ்டமே. நடைபெற்ற போட்டிகள் மிகக் குறைவு. இந்த இரண்டு அணிகளும் கண்டி பல்லேகல மைதானத்தில் முதற் தடவையாக சந்திக்கின்றன. பிரேமதாச மைதானம் இலங்கை அணிக்கு சாதகத்தன்மையை தரக் கூடியது. இருப்பினும் பாகிஸ்தான் அணி இந்த மைதானத்தில் விளையாடிய 18 போட்டிகளில் 11இல் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியுடன் 12 போட்டிகளில் 6இல் வெற்றி. ஆசிய அணிகளுக்கு பிரேமதாச மைதானம் பெரிதளவில் பிரச்சினையாக இருந்ததில்லை. எனவே மைதானங்கள் போட்டிகளில் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தப்போவதில்லை என்பது தெரிகிறது.


இரண்டு அணிகளைப் பொறுத்த மட்டிலும் என்ன நிலைமை என்பதே கேள்வி? இலங்கை அணியின் ஆரம்பம் மிகப் பலம். முதல் நான்கு இடங்கள் மிக நம்பிக்கையானவை. அண்மைக்காலமாக மத்திய வரிசை புதிய முறையில் உருவாகி வருகிறது. பந்து வீச்சு இலங்கைப் பக்கமாக பார்த்தால் மிக நல்ல முறையில் என்று சொல்லலாம். நான்கு வேகப் பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர். டில்ஷான் பகுதி நேரப் பந்து வீச்சாளர். இருவர் சகலதுறை வீரர்கள் என்றாலும், அஞ்சலோ மத்தியூஸ் மட்டுமே நிரூபித்துக் காட்டியவர். திசர பெரேரா இன்னும் அதை நிரூபிக்கவில்லை. இலங்கை அணியை பார்த்தால் நல்ல சமநிலை அணியாக சொல்லி விட முடியாத நிலை இன்னும் உள்ளது. மத்திய வரிசையில் அதிரடியாக அடித்து முடிவு செய்து வைக்கக் கூடிய ஒருவர் இல்லை என்பது ஒரு குறையே.

மறுபுறம் பாகிஸ்தான் அணியைப் பார்த்தால் ஆரம்பத்திலும் பார்க்க மத்திய வரிசை பலமாக உள்ளதாக தென்படுகிறது. அணித்தலைவர் ஆரம்ப வீரர். அவர் கொஞ்சம் எதிரணிகளுக்கு பிரச்சினையே. பந்து வீச்சு இலங்கை அணி போன்றே உள்ளது என்றாலும் சுழற் பந்து வீச்சு மிக சிறப்பாக உள்ளது. சைட் அஜ்மல், சஹிட் அப்ரிடி, ஹபீஸ் ஆகிய மூவருமே சிறப்பாக பந்து வீசுவார்கள். வேகப் பந்து வீச்சாளர்களில் உமர் குள் இந்த ஆடுகளங்களில் சாதிக்க முடியுமா என்பது கேள்வி. மொஹம்மத் சமி, சொஹைல் தன்வீர் ஆகியோருக்கு இது மீள் வருகை தொடர். பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளரும் இன்னும் பெரிதளவில் எதையும் செய்யவில்லை. எனவே வேகப் பந்து வீச்சு பலம் குறைந்தது என்றே சொல்லலாம். குறை நிறைகளை வைத்து பார்க்கும் போது இரு அணிகளுமே சம பலம் பொருந்தியவை. ஆனாலும் இலங்கையில் தொடர் என்ற காரணத்தினால் இலங்கை அணிக்கான வாய்ப்புக்கள் கூட என்று சொல்லலாம். பாகிஸ்தான் அணியும் இலகுவில் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. இறுக்கமான தொடர். ஒரு போட்டி வித்தியாச வெற்றியை அதிகம் எதிர்பார்க்கலாம். இலங்கைக்கு கிரிக்கெட் அணிகள் வந்துவிட்டால் எட்டிப்பார்க்கும் மழை வராமல் விட்டால் இப்படி முடிவை எதிர்பார்க்கலாம். மழை வந்தால் முடிவு என்ன என்பதை யாரும் கூற முடியாது. 


இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடரில் இலங்கையில் வைத்து கூடுதலான ஓட்டங்கள் பெற்றவர்கள்...
யூனுஸ் கான்                      14    14      536         8       38.28     0    4
சனத் ஜெயசூரிய               16     16     464     102*     30.93     1    4
அர்ஜுன ரணதுங்க            12     11     423      82*      52.8       0    4
மஹேல ஜெயவர்தன     16     15     412    123       29.42     1    1       
குமார் சங்ககாரா                16     16     384      49        29.53    0    0
இன்சமாம் உல் ஹக்       13     13     361      83*      32.81    0    2
சலீம் மலிக்                          11        8     357      93*      59.50    0    5

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடரில் இலங்கையில் வைத்து கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்...
முத்தையா முரளிதரன்       18      18     168.4       690/27        23/5    25.55
சஹிட் அப்ரிடி                         13     12         90.3      407/17        34/4    23.94
சனத் ஜெயசூரிய                     16     16      104.5       473/17        49/4    27.82
அப்துல் ரசாக்                            14    13       103         412/16        19/2    25.75
வாசிம் அக்ரம்                           11    10         82.3      294/13        28/4    22.61
அப்துல் காதிர்                             5       4          30.5     126/11        23/3    11.45
முஹம்மட் ஆமிர்                    6       6          53.1     240/10        28/4    21.81
நவிட் உல் ஹசன்                    6       5           36        194/10        44/4    19.40
ருவான் கல்பகே                        7       7           65        264/10        36/4    26.40
வொக்கார் யூனுஸ்                   8      8           64        296/10        33/3    29.60

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .