2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல். விசாரணைகளில் ஐ.பி.எல். அமைப்பில் எழும் சந்தேகங்கள்

A.P.Mathan   / 2012 மே 16 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க்ரிஷ்

இந்திய உள்ளூர்ப் போட்டிகள் மற்றும் ஐ.பி.எல். போட்டிகள் சம்பந்தமாக இந்தியத் தொலைக்காட்சியொன்று வெளிப்படுத்திய வீடியோ ஆதாரங்களை அடுத்து 5 இந்திய உள்ளூர் வீரர்கள் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினரால் அல்லது அதன் உப பிரிவான இந்தியன் பிறீமியர் லீக் அமைப்பினால் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். விசாரணைகள் நிறைவடையும் வரை அந்த வீரர்கள் இந்தியக் கிரிக்கெட் சபை நடாத்துகின்ற எந்தவொரு போட்டியிலும் அவர்களால் கலந்து கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பலருக்கு இந்த நடவடிக்கைகளில் ஏராளமான திருப்தி ஏற்பட்டிருக்கலாம், நியாயம் இறுதியில் நிலைத்திருக்கிறது எனப் பலர் நினைத்திருக்கலாம். ஆனால், இதன் பின்புலங்கள், இந்த நடவடிக்கைகளில் எழும் சந்தேகங்கள் பற்றி இக்கட்டுரை ஆராய எத்தனிக்கிறது.

முதலில் ஒவ்வொரு வீரர் மீதும் எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களைப் பார்ப்பது பொருத்தமானது. (குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியுமே தவிர, அவர்களை நேரடியாகக் குற்றவாளிகள் என அழைப்பது சாதாரண மனித நம்பிக்கைகள், விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது)

ரி.பி.சுதீந்திரா: உள்ளூர்ப் போட்டியொன்றில் (ஐ,பி.எல் அல்ல) ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு "நோ போல்" ஒன்றை வீசியிருந்தார். அதாவது ஸ்பொட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டிருந்தார். பாகிஸ்தானின் மொஹமட் ஆமிர், மொஹமட் ஆசிப் என்ன செய்தார்களோ அதைச் செய்திருந்தார். அத்தோடு அதிகமான பணம் தரப்படுமாயின் போட்டிகளில் முடிவை மாற்றியும் தருவேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

இவரை நியாயப்படுத்தவோ, அல்லது இவர் மீதான இடைக்காலத் தடையை தவறானது என்று சொல்லவோ யாராவது முயற்சிப்பார்கள் எனக் கருதவில்லை.

சலாப் ஸ்ரீவற்சா: ஐ.பி.எல் நிர்ணயித்த 30 இலட்சம் ரூபா ஊதியத்திற்கு அதிகமாக மேலதிகமாக 20 இலட்சம் ரூபா ஊதியத்தை கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி நிர்வாகம் தனக்கு வழங்கியதாகத் தெரிவித்த அவர், தனக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா ஊதியத்திற்கு அதிகமாக வேறு அணி வழங்குமாயின் அவ்வணிக்கு மாறுவதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தவிர, 10 இலட்சம் ரூபா தனக்கு வழங்கப்படுமாயின் ஐ.பி.எல். போட்டியில் "நோ போல்" ஒன்றை வீசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதாவது ஸ்பொட் ஃபிக்சிங்கிற்குத் தான் தயார் எனத் தெரிவித்திருக்கிறார்.

இவை இவர் மீதான குற்றச்சாட்டுக்களாக அமைவதோடு, மனிஷ் பாண்டே என்ற வீரர் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலிருந்து பூனே வொரியர்ஸ் அணிக்காக மாறுவதற்கு அவருக்கு பூனே வொரியர்ஸ் அணி நிர்வாகத்தால் 90 இலட்சம் ரூபா பெறுமதியான மேர்சிடிஸ் கார் ஒன்று வழங்கப்பட்டதாகவும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமித் யாதவ்: கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி வீரரான இவர், தனக்கான ஊதியத் தொகையான 10 இலட்சம் ரூபாவை விட, மேலதிகமாக 10 இலட்சம் ரூபாவை வேறு அணியொன்று வழங்குமாயின் அவ்வணிக்காக விளையாடுவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அதாவது ஐ.பி.எல். விதிகளை மீறத் தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

மோனிஷ் மிஷ்ரா: பூனே வொரியர்ஸ் அணி சார்பாகப் போட்டிகளில் விளையாடத் தெரிவுசெய்யப்பட்டுள்ள இவர், தனக்கான ஊதியத் தொகையான 30 இலட்சம் ரூபாவிற்கு மேலதிகமாக 1.2 கோடி ரூபாக்கள் பூனே வொரியர்ஸ் அணியால் தற்போது வழங்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு அடுத்தாண்டில் மும்பை இன்டியன்ஸ் அணி சார்பாக விளையாடுவதற்கு 2 கோடி ரூபா ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதாவது ஐ.பி.எல். விதிகளுக்குப் புறம்பாக தனது அணியும், தானும் நடந்து வருவதோடு, எதிர்காலத்திலும் நடப்பதற்கு முயற்சிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அபினவ் பாலி: இவர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை என்ற போதிலும், இவர் இந்தியாவின் உள்ளூர்ப் போட்டிகளில் பங்குபற்றும் வீரர் ஆவார். ஆகவே உள்ளூர்ப் போட்டிகளில் இடம்பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக இவரது இடைக்காலத்தடை வழங்கப்பட்டிருக்கலாம்.

இதில் ரி.பி.சுதீந்திரா மற்றும் அபினவ் பாலி விடயங்களை அவ்வாறே விடலாம். ரி.பி.சுதீந்திராவின் ஸ்பொட் ஃபிக்சிங் குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை. அபினவ் பாலி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தெளிவாகக் காணப்படவில்லை. ஏனைய வீரர்கள் ஏன் தடை செய்யப்பட்டார்கள் என்பதை ஆராய்வது முக்கியமானது.

ஸ்ரீவற்சா தனக்கு ஐ.பி.எல். விதிகளுக்குப் புறம்பாகப் பணம் வழங்கப்பட்டதை ஒத்துக் கொண்டதற்காகவும், பணம் வழங்கினால் "நோ போல்" ஒன்றை வீசுவதாக ஒத்துக்கொண்டமைக்காகவும், அதிக பணம் கிடைக்கப் பெறுமானால் இன்னுமொரு அணியில் இணையத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தமைக்காகவும், மோனிஷ் மிஷ்ரா தனக்கு பெருமளவு பணம் ஐ.பி.எல். விதிகளுக்குப் புறம்பாக வழங்கப்படுவதாகவும், இன்னுமொரு அணியுடன் ஏற்கனவே அதிக ஊதியத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தமைக்காகவும், அமித் யாதவ் அதிக பணம் கிடைக்கப் பெற்றால் இன்னுமொரு அணிக்கு மாறத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தமைக்காகவும் இடைக்காலத்தடைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இதில் எழுகின்ற சந்தேகம், இரண்டு வீரர்கள் தங்களுக்கு ஊதியத்திற்கு மேலதிகமாக பணம் விதிகளுக்குப் புறம்பாக வழங்கப்படுகின்றதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள், அதில் ஒருவர் இன்னுமொரு வீரருக்கு (மனிஷ் பாண்டே) விதிகளுக்குப் புறம்பாக அன்பளிப்பு வழங்கப்பட்டதை வெளிப்படுத்தியிருக்கிறார், மற்றைய வீரர் தான் இன்னுமொரு அணியுடன் (மும்பை இன்டியன்ஸ்) பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் வீரர்களுக்கு மாத்திரம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அப்படியானால், விதிகளுக்குப் புறம்பாக பணம் வழங்கினார்கள் என்று சொல்லப்படும் பூனே வொரியர்ஸ் அணி நிர்வாகத்திற்கும், கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி நிர்வாகத்திற்கும், விதிகளுக்குப் புறம்பாக வீரரொருவருடன் ஊதியப் பேச்சுவார்த்தைகளை நடாத்திய மும்பை இன்டியன்ஸ் அணி நிர்வாகத்தின் மீதும் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படப் போகின்றன?

வீரர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் காட்டுவதற்காக, தங்களுக்குக் கேள்வி அதிகமாகக் காணப்படுகிறது என்பதைக் காட்டுவதற்காகப் பொய் சொல்லியிருக்கலாம் என்று ஐ.பி.எல். நிர்வாகம் கருதுமானால், அந்த வீரர்களையுமல்லவா இடைக்காலத் தடைக்கு உட்படுத்தியிருக்கக்கூடாது?

ஆனால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பதை ஐ.பி.எல். நிர்வாகம் முன்பே அறிந்திருக்க ஏராளமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. மனிஷ் பாண்டே முன்னர் காணப்பட்ட அணியான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நிர்வாகி சித்தார்த் மல்லையாவின் தனிப்பட்ட ட்விற்றர் கணக்கு (அது அவருடையது என்பது ட்விற்றர் தளத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது) கடந்த ஏப்ரல் 24ம் திகதி "மனிஷ் பாண்டே தங்களுடன் (அணி) இருக்க விரும்பியிருக்கவில்லை எனவும், பூனே அணி அவருக்கு கார் ஒன்றையும், அடுக்குமாடி ஒன்றையும் வழங்கியதாகவும், அவர் பணத்தை நாடிச் சென்றுவிட்டதாகவும்" தெரிவித்திருந்தது.


ஒரு அணியின் நிர்வாகி ஒரு வீரர் சம்பந்தமாக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கும் போது ஐ.பி.எல். நிர்வாகம் அதற்காக என்ன செய்திருந்தது என்பது சாதாரணமாக எழும் கேள்வி. சித்தார்த் மல்லையா அந்த வீரர் அணியை விட்டுச் சென்றுவிட்டார் என்ற பொறாமையில் அந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தால் ஐ.பி.எல். வீரரொருவரை பகிரங்கத் தளத்தில் அவமானப்படுத்தியமைக்காக, அவரின் நேர்மையை கேள்விக்குட்படுத்தியமைக்காக ஐ.பி.எல். நிர்வாகம் என்ன செய்தது?

ஆக, பணம் படைத்தவர்களையும், அதிகாரம் படைத்தவர்களையும் கேள்விக்குட்படுத்த முடியாத, கேள்விக்குட்படுத்த விரும்பாத ஐ.பி.எல். நிர்வாகம், இளைய வீரர்களை மாத்திரம் உடனடியாக இடைக்காலத் தடைக்குட்படுத்தி அழகு பார்க்கின்றது.

எனினும், இவை ஐ.பி.எல். அமைப்பிற்கு புதிதானவையும் அல்ல.

ரவீந்திர ஜடேஜே ஒரு பருவகாலம் முழுவதற்குமாகவும், மனிஷ் பாண்டே - பூனே அணியுடன் கலந்துரையாடல்களில் விதிகளுக்குப் புறம்பாக ஈடுபட்டமைக்காக 4 போட்டிகளில் தடை விதிக்கப்பட்ட போதும் அந்த அணி நிர்வாகங்கள் மீதோ அல்லது நிர்வாகிகள் மீதோ எந்தவிதமாக நடவடிக்கைகளையும் ஐ.பி.எல். நிர்வாகம் மேற்கொண்டிருக்கவில்லை. இப்போது மட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்ப்பது எதிர்பார்ப்பவர்களின் முட்டாள்தனமாகவும் இருக்கலாம்.

(ஆக்கத்தில் பயன்படுத்தப்பட்ட பணப்பெறுமதிகள் யாவும் இந்தியா ரூபாக்கள் ஆகும்.)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .