2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டில் ஊழல்கள்; உண்மையான குற்றவாளிகளைத் தேட வேண்டிய நேரமிது

A.P.Mathan   / 2012 மே 15 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க்ரிஷ்

இந்திய உள்ளூர் வீரர்கள் சிலர் கிரிக்கெட் சம்பந்தமான ஊழல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் எனவும், சில வீரர்கள் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட முறையில் பணத்தைச் சம்பாதிக்கிறார்கள் எனவும், சிலர் அதற்காகத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனவும் நேற்று (14.05.2012) ஒளிபரப்பப்பட்ட புலனாய்வு நிகழ்ச்சியொன்றில் காட்டப்பட்டிருக்கிறது.

வழமையைப் போன்று இணையமும், ஊடகங்களும், விமர்சகர்களும் குறித்த வீரர்களுக்கான தண்டனை அதிகபட்சமாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டுமொத்தமாக எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் "போதுமான, தெளிவான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால் அவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கான சந்தேகமே தேவையில்லை" என நடுநிலையாக தங்களது அறிக்கையை வழங்கியிருக்கிறது.

குறித்த வீரர்களுக்கான தண்டனைகள் எப்போது வழங்கப்படும் என்பதையெல்லாம் தாண்டி இப்பிரச்சினையின் மூலத்தை சரியாக விளங்கிக் கொள்ளல் அவசியமானது.

முதலாவதாக இந்தியாவில் நடந்ததாகச் சொல்லப்படும் விடயத்தை ஞாபகப்படுத்தல் அவசியமானது.

இந்தியாவின் உள்ளூர்ப் போட்டியொன்றில் ஒரு வீரர் பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டு "நோ போல்" ஒன்றை வீசியிருக்கிறார். அதிகமான பணம் தரப்படுமானால் போட்டியின் முடிவை மாற்றித்தருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்தோடு இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் உள்ளூர் வீரர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச ஊதியத்தை விட அதிகளவிலான பணம் விதிகளுக்குப் புறம்பாக வீரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவை தான் எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள்.

சில வீரர்கள் ஓர் அணியிலிருந்து இன்னுமொரு அணிக்கு பல கோடி ரூபாய்கள் அதிகமாகப் பெற்றுக் கொண்டு மாறியிருக்கிறார்கள் என்பதோடு, ஒரு வீரருக்கு 90 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான கார் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டு இன்னுமொரு அணியால் வாங்கப்பட்டிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையா இல்லை என்பதை அதிகாரிகளும் நீதித்துறையினரும் உறுதிப்படுத்தட்டும். ஆனால் இந்தப் பிரச்சினையின் அடிப்படையை ஆராய்தல் அவசியமானது.

"நோ போல்" மற்றும் போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுக்கள் ஆகியவை எப்போதுமே நியாயப்படுத்தப்பட முடியாதவை, பேராசைகள் காரணமாக தவறான பாதையில் செல்லும் பயணங்கள் எப்போதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டியன, அதில் மாற்றுக் கருத்துக்கள் எவருக்கும் இருக்க வாய்ப்புக்களில்லை. ஆனால், மற்றைய பிரச்சினையான கறுப்புப்பண விவகாரம் அல்லது விதிகளுக்குப் புறம்பான ஊதியம் வழங்கப்படுதல் என்பது ஆராயப்பட வேண்டி ஒரு பிரச்சினையாகக் காணப்படுகிறது.

இந்தியா சார்பாக சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றாத வீரர்களுக்கு அதிகபட்சமாக இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் 30 இலட்சம் இந்திய ரூபாய்கள் மாத்திரமே ஊதியமாக வழங்கப்படலாம். இங்கு “மாத்திரமே” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டமைக்கான காரணம் ஐ.பி.எல். போட்டிகளில் சில வீரர்கள் 106 மில்லியன் இந்திய ரூபாய்களை சாதாரணமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 50,000 ரூபாய் என்ற சராசரி வருமானத்தைக் கொண்ட நாட்டில் 30 இலட்சம் ரூபா சிறிய பணமன்று என்ற வாதமெல்லாவற்றையும் தாண்டி இதை அணுகினால், வீரர்களின் ஊதியங்களுக்கிடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகிறது.

சரி, சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றாத வீரர்களுக்கு ஏன் அவ்வாறு 30 இலட்சம் இந்திய ரூபாய்கள் என்ற கட்டுப்பாடு என்று கேட்டால் தெளிவான பதில்கள் கிடைக்கப் பெறுவதில்லை. முக்கியமாக ஓர் அணி செலவுசெய்யும் தொகையை மட்டுப்படுத்த வேண்டிய தேவை இந்தியன் பிறீமியர் லீக் அமைப்பிற்குக் காணப்பட்டது. அத்தோடு இளம் வீரர்கள் இந்திய தேசிய அணிக்காக விளையாடுவதை ஊக்குவிக்க விரும்புவதாகவும் இந்தியன் பிறீமியர் லீக் அமைப்பு தெரிவித்தது. இந்த விளக்கங்களில் எந்தளவுக்கு உண்மைத்தன்மை என்பதைத் தாண்டி, இந்தக் கட்டுப்பாடுகள் தான் வீரர்களை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கின்றன என்பது முக்கியமான கருத்து.

ஆனால், இது வெறுமனே இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையையோ அல்லது இந்தியன் பிறீமியர் லீக் அமைப்பையோ குற்றஞ்சாட்டுவதை விடுத்து அடிமட்டமான பிரச்சினையை ஆராய்வது முக்கியமானது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட அனேகமான கீழைத்தேய நாடுகளில் திறமை என்பதை விட அனுபவத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் பண்பு உண்டு.

வேலைக்கு ஆட்களைத் தேடும் விளம்பரங்களில் இளைஞர்களாகவும் வேண்டும், 5 வருடங்கள் அனுபவமுடையவராகவும் வேண்டும் என்று எத்தனை விளம்பரங்களை நாங்கள் கண்டிருக்கிறோம்? அலுவலக மட்டத்தில் ஓர் அலுவலரால் அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கப் பெறும் என்பதை விட, அந்த அலுவலர் எவ்வளவு காலம் இதற்கு முன்னர் பணிபுரிந்திருக்கிறார் என்ற அனுபவக் கணக்கு அதிகமாகப் பார்க்கப்படும் தன்மை இங்கு காணப்படுகிறது.

இதே நிலைமை தான் இங்கும் ஏற்பட்டிருக்கிறது.

2010ஆம் ஆண்டு 23 வயதிற்குட்பட்ட சிறந்த வீரராகத் தெரிவுசெய்யப்பட்ட சௌரப் திவாரி, அந்த ஆண்டே இந்திய அணிக்காகப் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தார். அவர் பங்குபற்றியிருந்தது வெறுமனே 3 சர்வதேசப் போட்டிகள் என்பது அடிக்கோடிடப்பட வேண்டியது.

மறுபுறத்தில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக கடந்த வருடத்தில் மிகச்சிறப்பாகச் செயற்பட்ட மனிஷ் பாண்டே இதுவரை சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியிருக்கவில்லை. அதன் காரணமாக அவருக்கு வழங்கப்படக்கூடிய அதிகபட்ச ஊதியம் - விதிகளின் படி 30 இலட்சம் இந்திய ரூபாய்கள்.

மூன்றே மூன்று சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தாலும் சர்வதேச வீரராக மாறிவிட்டதன் காரணமாக 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏலத்தில் சௌரப் திவாரிக்கு வழங்கப்பட்ட ஊதியத் தொகை 1.6 ஐக்கிய அமெரிக்க டொலர்கள். அதாவது கிட்டத்தட்ட 85 மில்லியன் இந்திய ரூபாய்கள்.

நான் ஓர் அணி நிர்வாகியாக இருந்தால் எனக்கு மனிஷ் பாண்டேயின் திறமை, அவர் என் அணிக்கு வழங்கக்கூடிய திறமை வெளிப்பாடுகளை அறிந்திருப்பேன். அதை மனிஷ் பாண்டேயும் அறிந்திருப்பார். ஆக, தன்னை ஒத்த வயதுடைய ஒருவர் தன்னை விட பல மடங்கு பணத்தை ஈட்டிக் கொண்டிருக்கும் போது 22 வயதான ஓர் இளைஞன் தன்னை அந்த வீரனிடம் ஒப்பிடப் போவது நிச்சயமான ஒன்று.

இதன் காரணமாக 30 இலட்சம் இந்திய ரூபாய் ஊதியத்திற்கு மேலதிகமாக 90 இலட்சம் இந்திய ரூபாய்கள் பெறுமதியான காரை ஓர் அணி உரிமையாளர் வழங்கும் போது அவர் அணி மாறுவது சாதாரணமாக நடக்கப்படக் கூடிய ஒன்று.

மனிஷ் பாண்டேயின் விவகாரமாக இருக்கட்டும். ஏனைய இரண்டு வீரர்கள் அதிக பணத்திற்காக அணி மாறிய சம்பவங்களாக இருக்கட்டும், அந்த வீரர்களில் இருக்கும் தவறை விட, விதிகளிலும் நடைமுறைகளிலும் காணப்படும் தவறுகளை தெளிவாக வெளிச்சம் இட்டுக் காட்டுவனவாக அமைகின்றன. இந்தத் தவறுகள் இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் விதிகளில் காணப்படும் தவறுகளை, எங்களுடைய சமூக அமைப்பில் காணப்படும் தவறுகளையே அவை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .