Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 நவம்பர் 28 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ச.விமல்
அவுஸ்திரேலியா அணியை, அவர்கள் நாட்டில் வைத்தே டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. 2-1 என்றவாறான தொடர் வெற்றியைப் பெற்றுளார்கள். அவுஸ்திரேலியா அணி, சொந்த நாட்டில் வைத்து டெஸ்ட் தொடரில் தோல்வியா? ஆச்சரியப்படக்கூடிய ஒன்றுதான். அதுவும் அடுத்தடுத்த தொடர்களில் தோல்வி. இலங்கையில் வைத்து இலங்கை அணி வெள்ளையடித்து அனுப்பியது. தங்கள் நாட்டில் வெள்ளையடிப்பு வாங்கப்போகின்றார்கள் என்று பார்த்தால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றுத் தப்பித்தார்கள். 1986ஆம் ஆண்டுக்கு பின்னர் அடுத்தடுத்த இரு தொடர்களில் அவுஸ்திரேலியா அணி தோல்வியடைந்தது இது மூன்றாவது தடவை.
அவுஸ்திரேலியாவில் வைத்து தென்னாபிரிக்கா அணி தொடர் வெற்றியைப்பெற்றது ஒன்றும் புதிதுமல்ல. ஆச்சரியப்படும் ஒன்றுமல்ல. தென்னாபிரிக்கா அணியின் இறுதி மூன்று தொடர்களிலும் வெற்றியைப்பெற்றுளளது. அவுஸ்திரேலியா அணி 2005ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணியை தங்கள் நாட்டில் வெற்றி கொண்டது. அதற்கு பின்னர் தொடர்ச்சியாக மூன்று தொடர்களிலும் தென்னாபிரிக்கா அணி வென்றுளள்து. அவுஸ்திரேலியா அணியும் அதே போன்றே தென்னாப்பிரிக்காவில் தாங்கள் விளையாடிய இரு தொடர்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆக இரு அணிகளும் தங்கள் நாட்டிலும் பார்க்க மற்றைய நாட்டிலேயே வெற்றிபெறுவதில் குறியாக உள்ளனர்.
இலங்கையில் வைத்து தொடர் தோல்வியைச் சந்தித்த வேளையில் இலங்கை ஆடுகளங்கள் புதியவை. அனுபவமற்ற வீரர்களுடன் அவுஸ்திரேலிய அணி விளையாடியமையினால் தோல்வியடைந்தது என்ற கருத்துக்கள் இருந்தாலும், இந்த தொடர் தோல்வி அவுஸ்திரேலிய அணி பலமிழந்து இருக்கின்றது என்ற கருத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக அவுஸ்திரேலிய அணி இவ்வாறான தோல்விகளைச் சந்திக்கும் வேளையில் அணியிலும், முகாமைத்துவத்திலும் கூட அதிரடி மாற்றங்கள் நிகழும்.
இரண்டாவது போட்டியில் பெற்ற தோல்வியுடன் தெரிவுக்குழுவின் தலைவர் றொட்னி மார்ஷ் தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தோல்விக்கு தான் சரியான அணியை தெரிவு செய்யவில்லை என்பதே உள்க் காரணம். இறுதிப்போட்டியில் ஐந்து வீரர்கள் நீக்கப்பட்டு வேறு வீரர்கள் சேர்க்கப்பட்டனர். அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதுவே இனி அவுஸ்திரேலியா அணியின் நடவடிக்கையாக இருக்கும். சில வீரர்கள் இனிமேல் அணிக்குள் வர மாட்டார்கள். முழுமையாக நீக்கப்படுவார்கள். புதியவர்கள் அணிக்குள் உள்வாங்கப்படுவர்.
கடந்த வருடம் தென்னாபிரிக்கா அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் நல்ல முறையில் அமையவில்லை எனக்கூறலாம். ஆனால் அடுத்தடுத்த இரு தொடர் வெற்றிகள் அவர்கள் மீண்டும் வெற்றிப்பாதைக்குள் வருவதனை நிரூபித்துள்ளது. குறிப்பாக அவர்களின் தலைவரும் முக்கிய துடுப்பாட்ட வீரருமான ஏ.பி.டி வில்லியர்ஸ் இல்லாமல் அவுஸ்திரேலியாவில் வைத்துத் தொடரை வெல்வது என்பது பெரிய விடயமே. அதுமட்டுமல்லாமல் அவர்களின் முக்கிய பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் முதல் இனிங்ஸிலேயே உபாதையடைந்தார். இவர்கள் இருவரும் இல்லாமல் அவுஸ்திரேலியாவில் வைத்து வெற்றி பெறுவது ஒன்றும் இலகுவானது அல்ல. பப் டு பிளெஸியின் தலைமையில் தென்னாபிரிக்கா அணி சாதித்துக்காட்டியுள்ளது. சில மாற்றங்களுடன் மீண்டும் முழுமை பெற்ற அணியாக தென்னாபிரிக்கா அணி மாறி வருகின்றது.
இந்தத் தொடரில் கூடுதல் ஓட்டங்களை பெற்றவரும், கூடுதல் விக்கெட்டுகளை கைப்பற்றியவரும் அவுஸ்திரேலியர்களே. ஆனால், தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. அணி வீரர்கள் எல்லோரும் இணைந்து சிறப்பாக செயற்பட்டமையினாலேயே தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது. துடுப்பாட்டம், பந்து வீச்சு என எல்லோருமே சிறப்பாகச் செயற்பட்டுள்ளனர்.
அஸ்திரேலியாஅணியின் சில வீரர்கள் செயற்பட, மற்றவர்கள் சரியாக செயற்படாமல் போக அணி முழுமையாக இணைந்து செயற்படாமல் போனது போல ஆகிவிட்டது. குறிப்பாக அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டம் மிக மோசமாக அமைந்தது. இரண்டாவது போட்டியில் அவர்கள் 85 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர். இரண்டாவது இனிங்ஸில் 161 ஓட்டங்கள். மூன்றாவது போட்டியில் துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. வெற்றி பெற்றார்கள்.
அவுஸ்திரேலியா அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அவர்களின் முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் மூவருமே அதிகமாக ஓட்டங்களைப் பெற்றனர். உஸ்மான் கவாஜா, டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரே அவர்கள். மற்றைய துடுப்பாட்ட வீர்ரகள் கைகொடுக்காமையே அவர்கள் ஓட்டங்களை குறைவாக பெறக் காரணமாக அமைந்தது. இரண்டாவது போட்டியில் இவர்களும் கைவிட்டனர். அணிக்கு ஓட்டங்கள் வரவில்லை.
பந்துவீச்சிலும் அதே நிலைதான். ஜொஸ் ஹெசில்வூட், மிற்சல் ஸ்டாக், நேதன் லயன் ஆகியோர் மட்டுமே மூன்று போட்டிகளிலும் விளையாடியவர்கள். இவர்களில் முதலிருவரும் சிறப்பாகவே பந்து வீசினார்கள். ஆனால் இவர்கள் இருவரினாலும் ஒட்டுமொத்தமாக தென்னாபிரிக்கா அணியின் விக்கெட்டுகளைத் தகர்க்க முடியவில்லை. ஆனாலும் தென்னாபிரிக்கா அணி மூன்று இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு இனிங்ஸில் எட்டு விக்கெட்டுகள், மற்றைய இனிங்ஸில் ஒன்பது விக்கெட்கள். ஆக, அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் இன்னுமொருவர் கைகொடுத்திருந்தால் கூட தென்னாபிரிக்கா அணியை இன்னும் கொஞ்சமாவது தடுமாற வைத்திருக்கலாம்.
தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்டத்தில் 100 ஓட்டங்களைத் தாண்டியவர்கள் 7 பேர். இது போதாதா. ஒருவர் இல்லாவிட்டால் இன்னுமொருவர் என ஓட்டங்களைக் குவித்துள்ளனர். இதுதான் அவர்களின் பலமாக அமைந்தது. ஆரம்பம் முதல் பின்வரிசை வரை சராசரியான இணைப்பாட்டங்கள் பெறப்பட்டுள்ளன. முதற் போட்டியில் பெறப்பட்ட 540 ஓட்டங்களைத் தவிர மற்றைய இனிங்ஸில் பெறப்பட்ட ஓட்டங்கள் வெற்றிக்கு போதுமானவை எனக் கூறிவிட முடியாது.
ஆனால் பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது. அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்ட வீரர்களைக் கட்டுப்படுத்த முடிந்தது. பந்துவீச்சில் கஜிஸ்கோ றபடா, கைல் அபொட், வேர்ணன் பிளாந்தர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். கைல் அபொட் மீண்டும் ஒரு தடவை தன்னை நிரூபித்துக்காட்டியுள்ளார். சிறந்த மீள்வருகை இவருக்கு கிடைத்துள்ளது. ஸ்டெய்ன் மீண்டும் வரும் வரை அணியில் வாய்ப்பு உண்டு. அதற்கு பின்னர்? சந்தேகமே. ஸ்டெய்ன் உபாதையடைந்து அணியால் விலகியதை மிக சிறப்பாக மீள் நிரப்புகை செய்துவிட்டார்.
சுழற் பந்து வீச்சாளர்கள் பெரியளவில் எதனையும் செய்யவில்லை. நேதன் லயன் மூன்று போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேஷவ் மஹராஜ், தப்ரயாஸ் ஷம்ஷி ஆகிய இருவரும் இணைந்து ஆறு விக்கெட்களைக் கைப்பற்றினர். இரு அணிகளது பந்துவீச்சையும் பார்க்கும்போது, மூன்றாவது பந்துவீச்சாளர் கைப்பற்றிய விக்கெட்டுகளே இங்கே வித்தியாசத்தைத் தந்துள்ளது.
இலங்கை அணியுடனான தோல்வியின் மூலம் முதலிடத்தை இழந்த அவுஸ்திரேலிய அணி, இந்தத் தொடர் தோல்வியின் மூலம் புள்ளிகளை இழந்துள்ளது. தென்னாபிரிக்க அணி புள்ளிகளை அதிகரித்துள்ளது. முதலித்திலுள்ள இந்திய அணியைத் தவிர, மற்றைய நான்கு அணிகளுக்கிடையில் கடும் போட்டியொன்று உருவாகியுள்ளது. அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளே அவை. நான்கு அணிகள் மூன்று புள்ளிகளுக்குள் தங்கள் வித்தியாசங்களை கொண்டுள்ளன.
தொடரில் 100 ஓட்டங்களைத் தாண்டியவர்கள்
உஸ்மான் கவாஜா 3 6 314 145 52.33 47.93 1 2
குயின்டன் டி கொக் 3 5 281 104 56.20 71.50 1 2
டேவிட் வோணர் 3 6 236 97 39.33 81.09 0 1
ஸ்டீவன் ஸ்மித் 3 6 212 59 42.40 50.23 0 1
பப் டு பிளெஸி 3 5 206 118* 51.50 58.35 1 0
ஜீன் போல் டுமினி 3 5 184 141 36.80 55.25 1 0
ஸ்டீபன் குக் 3 5 179 104 35.80 40.04 1 0
டெம்பா பவுமா 3 5 162 74 32.40 43.43 0 2
டீன் எல்கர் 3 5 161 127 32.20 38.42 1 0
வேர்ணன் பிளாந்தர் 3 5 136 73 27.20 55.28 0 1
(போட்டிகள், இனிங்ஸ், ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதங்கள், அரைச்சதங்கள்)
தொடரில் 05 விக்கெட்களை கைப்பற்றியவர்கள்
ஜொஸ் ஹெசில்வூட் 3 5 126.5 375 17 6/89 6/89 22.05 2.95
கஜிஸ்கோ றபடா 3 6 108.1 336 15 5/92 7/170 22.40 3.10
மிற்சல் ஸ்டாக் 3 5 120.0 422 14 4/71 6/158 30.14 3.51
கைல் அபொட் 2 4 74.5 193 13 6/77 9/118 14.84 2.57
வேர்ணன் பிளாந்தர் 3 6 103.3 283 12 5/21 5/52 23.58 2.73
நேதன் லயன் 3 5 97.0 346 6 3/60 4/105 57.66 3.56
(போட்டிகள், இனிங்ஸ், ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்டுகள், இனிங்ஸ் சிறந்த பந்துவீச்சு, போட்டி சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஸ்ட்ரைக் ரேட்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
25 Apr 2025