2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

தி ஆசஸ் (The Ashes)

A.P.Mathan   / 2013 ஜூலை 17 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூற்றாண்டு தாண்டிய டெஸ்ட் தொடர் ஆசஸ் டெஸ்ட் தொடர். கிரிக்கெட்டின் ஆரம்ப எதிரிகளான இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள் மோதிக்கொள்ளும் தொடர் ஆரம்பித்துள்ளது. உலககிண்ணம் போன்ற மிகப்பெரிய தொடர்களிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த தொடருக்கு வழங்கப்பட்டு வருகின்றமை இந்த தொடரின் சிறப்பை தானாக வெளிக்காட்டுகின்றது.

 
இரண்டு அணிகளுக்குமிடையில் 1876ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இதுவேதான் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பது இந்த போட்டிக்கு மேலதிக சிறப்பு. இரண்டு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற தொடர் சமநிலையில் நிறைவடைந்தது. இரு அணிகளும் ஒவ்வொரு வெற்றிகளை பெற்றுக்கொண்டன. முதல் தொடர் ஆரம்பித்து 6 வருடங்களின் பின்னரே இரு அணிகளுக்குமான தொடர் ஆசஸ் என பெயரிடப்பட்டது. இது 1882ஆம் ஆண்டு தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றபோது இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
 
தொடர்ச்சியாக இரு அணிகளுக்குமிடையிலான தொடர் இதே பெயரில் நடாத்தப்பட்டாலும் இடை இடையே வேறு பெயர்களிலும் நடாத்தப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களில் ஆஷஸ் தொடர் தொடர்ச்சியாக நடைபெறும். பின்னர் சில இடைவேளைகளில் வேறு தொடர்களாக நடைபெற்றது. இதுவரை 62 தொடர்கள் ஆஷஸ் என்ற பெயரில் நடத்தப்பட்டுள்ளன. இதில் 31 தொடர்கள் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றியை கொடுத்துள்ளன. இங்கிலாந்து அணி 26 தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. 5 தொடர்கள் மாத்திரமே சமநிலையில் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளும் 310 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 123 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 100 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சமநிலையில் 87 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. 
 
இந்தப் பெயர் சூட்டப்பட காரணமாக அமைந்தது இங்கிலாந்து ஊடங்களினால் எழுதப்பட்ட மரண அறிவித்தலே. ஆஷஸ் போட்டித்தொடர் என பெயரிடப்படுவதற்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் அவுஸ்திரேலிய அணியானது இங்கிலாந்து அணியை முதற் தடவையாக வெற்றி பெற்றது. அப்போது ஊடகங்கள் "இங்கிலாந்து கிரிக்கெட் இறந்துவிட்டது. பூதவுடல் தகனஞ் செய்யப்பட்டு சாம்பல் அவுஸ்திரேலியாவிற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது" என எழுதின. இங்கிலாந்து, அவுஸ்திரேலிய நாட்டு ஊடகங்கள் ஆஷஸ் தொடரை தங்கள் நாடுகள் சொதப்பினால் மிக மோசமாக திட்டுவதையும், வெற்றி பெறும் தருணங்களில் தங்கள் நாடுதான் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னர்கள் என தூக்கி கொண்டாடுவதையும் வழமையாக கொண்டுள்ளன. அடுத்த தொடரை இங்கிலாந்து ஊடகங்கள், சாம்பலில் இருந்து மீண்டு வரும் இங்கிலாந்து என வர்ணனை செய்தன. இதன் மூலமாகவே இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் தி ஆஷஸ் (The Ashes) என பெயர் சூட்டப்பட்டது.

 
கிரிக்கெட் போட்டிகளில் வழங்கப்படும் வெற்றிக் கிண்ணங்களில் மிகச் சிறியது இதுவே. வெறும் 6 இஞ்சி மட்டுமே உயரமானது. இந்தக் கிண்ணம் வழங்கப்பட ஒரு காரணம் உண்டு. பெயர் வைக்க என்ன காரணம் இருந்ததோ அதை ஒத்த காரணம் தான் இதற்கும் உண்டு. 1883ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடருக்கு சென்றபோது அப்போதைய தலைவரான ஐவல் ப்லிஹ் ஒரு கிண்ணத்தில், கிரிக்கெட் உபகரணங்களை எரித்த சாம்பலையும், சில எஞ்சிய பகுதிகளையும் (Bails) எடுத்துச் சென்று அவுஸ்திரேலிய பெண்களிற்கு பரிசாக வழங்கினார். அதிலிருந்து அதை ஒத்த கிண்ணம் ஆஷஸ் தொடரின் கிண்ணமாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.
 
1989ஆம் ஆண்டிற்கு பின்னர் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இருந்து அவுஸ்திரேலியாவின் ஆதிக்கமே இருந்துள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு தொடர்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 89ஆம் ஆண்டிற்கு பின்னர் நடைபெற்ற தொடர்களில் 8 தொடர்களை அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. 2005இல் இங்கிலாந்து அணி ஒரு தொடரை கைப்பற்றியது. பின்னர் 2009, 2010இல் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் வெற்றி பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து முதற்தடவை தன் நாட்டிலும், ஒரு தடவை வெளிநாட்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இம்முறை இங்கிலாந்து அணி சொந்த நாட்டில் விளையாடுவதனால் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. 
 
இரண்டு அணிகளையும் பொறுத்தமட்டில் எவ்வளவு பலமாக இருந்தாலும், ஆஷஸ் என்று வந்தால் ஒரு பலம் வந்துவிடும். இலகுவாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இம்முறையும் அதே நிலைதான். பொதுவாக அவுஸ்திரேலிய அணி ஒரு தோல்வியையே இலகுவாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இந்த நிலையில் இரண்டு தொடர்களை அடுத்தடுத்து இழந்துள்ளார்கள். மறுபுறம் இங்கிலாந்து அணி நீண்ட நாட்களாக தொடர் வெற்றியை பெற முடியாத நிலையில் உள்ளது. இரண்டு தொடர்கள் அடுத்தடுத்து வென்றுள்ளமையும் தற்போது தங்கள் நாட்டில் தொடர் நடைபெறுவதனாலும் இந்த வாய்ப்பை அவர்கள் இலகுவாக கை நழுவ விடமாட்டர்கள்.
 
அணிகள் என்று பார்க்கின்ற வேளையில் இங்கிலாந்து அணி பலமானதாக தென்படுகின்றது. டெஸ்ட் போட்டிகளில் முதன்மை அணி என்ற நிலையிலும் உள்ளது. சமநிலை கொண்ட அணியாக உள்ளது. துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு பக்கமும் இறுக்கமாகவே உள்ளது. புதிதாக எந்த முயற்சிகளையும் செய்து பார்க்க வேண்டும் என்ற நிலையில் இல்லை. ஆனால் அவுஸ்திரேலியாவின் நிலை அப்படி இல்லை. சமநிலை இல்லை என்ற நிலை உள்ளது. புதிய முயற்சிகளை செய்து பார்க்கவேண்டும் என்ற நிலை உள்ளது. துடுப்பாட்ட வரிசையும் அவ்வாறே உள்ளது. பந்து வீச்சிலும் ஐந்து பந்துவீச்சாளர்கள் இவர்கள்தான் என்று சொல்வது கடினமாகவுள்ளது. இருந்தாலும் அவுஸ்திரேலிய அணியின் பலம் தேவைப்படும் நேரத்தில் போர்ம் ஆவதும் அணியாக ஒருமித்து செயற்படுவதும் ஆகும். ஆக்ரோஷமான அணியாக தேவைப்படும் நேரங்களில் மாறி தங்கள் மீள் வருகையினை அபாரமாக காட்டுவார்கள். பொதுவாக இரு அணிகளையும் வைத்துப் பார்க்கும் போது இங்கிலாந்து அணிக்கு இந்த தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என தோன்றுகின்றது. 
 
இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் பார்க்கும்போது சொந்த நாட்டில் இங்கிலாந்து அணி பலமானதாக இல்லை. இதுவரையில் நடைபெற்ற 156 போட்டிகளில் 47 போட்டிகளில் அவுஸ்திரேலியாவும், 45 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளன. சமநிலையில் 64 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. 1880ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டிகளே இவ்வாறு அமைந்துள்ளன. ஆக இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா அணியிடம் அடங்கியே போய் உள்ளது என்பது வெளிப்படை உண்மை. இம்முறையும் ஏன் அவ்வாறு நடக்கக் கூடாது என்றால் பதில் இல்லை. இந்த நிலையை இங்கிலாந்து இம்முறை மாற்றிக்காட்ட முடியுமா என்பதில் அவர்களின் வெற்றி தங்கியுள்ளது.
 
அவுஸ்திரேலிய அணி 18 பேர் கொண்ட குழுவை இந்த தொடருக்காக அறிவித்துள்ளது. இதில் பல வீரர்களிற்கு இது முதல் ஆஷஸ் தொடர் என்பது முக்கிய விடயம். பயிற்றுவிப்பாளர் டரின் லீமன் புதியவர். ஆனாலும் வந்த வரத்தில் அதிரடியாக சில செயல்களில் ஈடுபட்டுள்ளார். நல்ல பெயர் பெற்று இருந்தாலும் சர்வதேசப் போட்டிகளில் செய்து காட்டவேண்டும் என்ற நிலை மிகப் பெரிய அழுத்தத்தை அவர் மீது வழங்கும் என்பது மிகப் பெரிய தொடரில் செயற்பட பின்னடைவை தரும். ஆரம்ப துடுப்பாட்டம் என்பது அவுஸ்திரேலியா அணிக்கு மிகப் பெரிய பிரச்சினை. முதல்ப் போட்டியில் டேவிட் வோனர் இல்லை என்பது தலையிடி தரும் ஒரு விடயம். மூன்றாமிடம் மீள் நிரப்புகை செய்ய இயலாத ரிக்கி பொன்டிங்கின் இடம். ஷேன் வொட்சன் நம்பகர ஆரம்ப வீரர். டேவிட் வோனர் அணிக்குள் திரும்பினால் ஆரம்பம் மிக நன்று என சொல்ல முடியும். அப்படியானால் எட் கொவன் மூன்றாமிலக்கத்தில் களமிறங்குவார். நான்காமிடம் மைக்கல் கிளார்க். மிகுதி துடுப்பாட்ட இடங்கள் நிரந்தரமற்ற நிலையில் உள்ளன. இந்த இடம்தான் அவுஸ்திரேலிய அணியின் சமநிலையை குழப்புமிடம். சுழல்ப் பந்துவீச்சு ஒரு காலத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற. ஷேன் வோன் இதற்க்கு முக்கிய பங்கு வகித்தவர். அந்த இடம் இன்னமும் ஓரளவு தானும் பூர்த்தியாகாத நிலை. இந்த இடம் இங்கிலாந்து அணியுடன் ஒப்பிட முடியாத இடம். வேகப் பந்து வீச்சு என்பது அவுஸ்திரேலியா அணிக்கு பிரச்சினையான இடம் என சொல்லிவிட முடியாது. அவர்கள் யார் வந்தாலும் சிறப்பாக பந்து வீசுவார்கள். ஜேம்ஸ் பட்டின்சன், பீற்றர் சிடில், மிச்சல் ஸ்டார்க் போன்றவர்களுடன் ஷேன் வோட்சனின் பந்துவீச்சும் கைகொடுக்க பலமான பந்து வீச்சாக அமையும்.

 
இங்கிலாந்து அணியின் பலமும் பலவீனமும் அவர்களின் நபிக்கையான அணி. இவர்கள் 11 பேர் நிச்சயம் விளையாடுவார்கள் என அடித்து சொல்ல முடியும். துடுப்பாட்ட வீர்களின் ஒழுங்கும் கூட அவ்வாறே அமைந்துள்ளது. முன்னால் வீரர் அன்று ஸ்ட்ரோஸ் விட்டுச்சென்ற இடம் என்பது மீள் நிரப்புகை செய்யவில்லை என்பது துடுப்பாட்டத்தில் பின்னடைவு. ஜோ ரூட் அதை இன்னும் சரியாக செய்யவில்லை. கெவின் பீற்றர்சன் மீண்டும் அணிக்குள் வந்திருப்பது நல்ல பலமாக அமைந்துள்ளது. அணித்தலைவர் அலிஸ்டயர் குக்கிற்கு மீள் வருகை அளித்தது ஆஷஸ் டெஸ்ட் தொடரே. ஜொனதன் ட்ரொட், இயன் பெல் போன்றவர்கள் ஓட்டங்களை  குவிக்கும் இயந்திரங்கள். வேகப் பந்து வீசும் சகலதுறை வீரர் இல்லை என்பது பெரும் குறை. வேகப் பந்துவீச்சாளர்களாக ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவோர்ட் ப்ரோட், ஸ்டீபன் பின் ஆகியோர் விளையாடுவர். தேவைப்படின் டிம் பிரஸ்னன் விளையாடுவர். சுழல்ப் பந்துவீச்சில் கிரேம் ஸ்வான் பலமானவர். இவர்கள் ஒருமித்து சிறப்பாக விளையாடினால் பலமான அணி. இலகுவாக அவுஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியும். ஆனால் இவர்களில் மாற்றங்கள் தேவை என்ற நிலை ஏற்படும் போது என்ன நிலை என்பதுதான் அணியன் சரியான நிலை தெரியும்.  

 
இதுவரையில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் 2500 ஓட்டங்களிற்கு மேல் துடுப்பாட்டத்தில் பெற்ற வீரர்கள்

(போட்டிகள், இன்னிங்க்ஸ், ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, சதங்கள், அரைச் சதங்கள், விளையாடிய காலப்பகுதி)
 
அவுஸ்திரேலியா 
 
இங்கிலாந்து 



(போட்டிகள், இன்னிங்க்ஸ், விக்கெட்கள், இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சு, போட்டியில் சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓட்ட வேகம், ஸ்ட்ரைக் ரேட், விளையாடிய காலப்பகுதி)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .