2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

உலக T20 கிண்ணம் 2014: அதிரடிகள், ஆச்சரியங்கள், அசத்தல்கள்... இப்போது அரையிறுதிகள்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


32 போட்டிகள் எவ்வாறு இத்தனை விரைவாகப் பறந்து முடிந்தன என்று யோசித்து முடிக்க முதலே, அரையிறுதிப் போட்டிகள் வந்துவிட்டன.

16 அணிகளோடு ஆரம்பித்த இந்த 20 ஓவர்கள் பரபர யுத்தத்தில் பலவான் அணிகள், அந்தந்தக் கணங்களின் பலமான தருணங்களை சாதகமாகப் பயன்படுத்திய 4 முக்கிய அணிகள் இப்போது அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

பங்களாதேஷ் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான தகுதிகாண் போட்டியுடன் ஆரம்பித்த முதல் கட்டத்தின் கடைசிப் போட்டி தந்த விறுவிறுப்பும் நெதர்லாந்து அணி அடித்த நெருப்படியும் அடுத்த சுற்றின் சரவெடி போட்டிகளுக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.

ஐந்து, ஐந்து அணிகளாக இரு பிரிவுகளிலும் விளையாடிய 10 அணிகளுமே தங்கள் Super Ten தெரிவுகளை நியாயப்படுத்தி ஒவ்வொரு போட்டியையுமே உயிராய்க் கொண்டு விளையாடியிருந்தன.

ஒரு போட்டியில் தோற்றாலும் அரையிறுதி இடம் ஊசலாடும் என்பதால் மிகக் கவனமாக விளையாடிய அணிகள் நான்கு, கஷ்டமான கண்டம் தாண்டி அரையிறுதிக் கட்டங்களுக்கு வந்துள்ளன.
பெரிதாய் எதிர்பார்த்த, ஆனால் எதிர்பார்த்த 'பெரிய' அளவுக்கு சோபிக்காத அணிகள் மூட்டை, முடிச்சுக்களோடு பயணம் தொடங்கியுள்ளன.

முன்னைய எனது விரிவான அலசலில் அதிக வாய்ப்புள்ள அணிகளில் நான் குறிப்பிட்ட ஒரேயொரு அணி எல்லோரையும் ஏமாற்றி அதிர்ச்சித் தோல்விகளோடு வெளியேறியுள்ளது. அது அவுஸ்திரேலியா.

அவுஸ்திரேலியா பற்றி, "இம்முறை உலக Twenty 20 கிண்ணம் வென்றெடுக்க அதிக வாய்ப்புள்ள இரு அணிகளில் மற்றையது. இதுவரை வெல்லாத ஒரு கிண்ணம் என்பதுவும், Twenty 20 போட்டிகளில் அவுஸ்திரேலியா தரப்படுத்தல்களிலும் கீழே கிடப்பதாலும் உத்வேகத்தோடு அரையிறுதியில் நிச்சயம் இடம்பிடிக்கும்” என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இரு மிக நெருக்கமான தோல்விகளும், இந்தியாவுக்கு எதிராக மிக மோசமாக விளையாடியதும் வாய்ப்புள்ள அணியாக இருந்த அணியை ஐந்தாவது தடவையாகவும் வெறும் கையோடே அனுப்பிவைத்து விட்டது.

இறுதியாக இடம்பெற்ற போட்டி வரை அரையிறுதி வாய்ப்பைத் தன் வசம் வைத்திருந்த பாகிஸ்தான், இவ்வணி பற்றி எலோருமே வைத்துள்ள அபிப்பிராயம் போலவே, எந்த நேரத்தில் எப்படி விளையாடும் என்பதை ஊகிக்க முடியாதவாறே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 82 ஓட்டங்களுக்கு சுருண்டு வெளியேறியது.

இதற்கு முன்னர் நடைபெற்ற நான்கு உலக T20 போட்டிகளினதும் அரையிறுதிகளில் இடம்பிடித்த பாகிஸ்தான் இம்முறை வெளியே.

"ஒருநாள் பார்த்தால் உலகின் மிகச் சிறந்த Twenty 20 அணி. இன்னொரு நாள் அதே வீரர்கள் இருந்தாலும் நம்ம ஊரில் விளையாடும் பையன்களின் சிறு அணியிடம் கூட தோற்கும் அளவுக்கு மோசமாக விளையாடுவார்கள். இது தான் பாகிஸ்தானின் மாற்ற முடியாத இயல்பு. இந்த அணியைப் பார்க்கையில் இறுதிவரை பயணிக்கும் என்று சொல்லத் தோன்றினாலும் ஏதோ ஒன்று தடுக்கிறது" என்று பாகிஸ்தான் பற்றி எனது முன்னைய அலசலில் குறிப்பிட்டிருந்தேன்.

சொன்னது போலவே சொதப்பியது முக்கிய கணங்களில் பாகிஸ்தான்.

மற்றைய பிரிவில் குறிப்பிடத்தக்க, பலபேர் எதிர்பார்த்த அணியாக விளங்கிய நியூஸிலாந்து பற்றி, "இதுவரை வெல்லாத ஒரு கிண்ணம் என்பதுவும், Twenty 20 போட்டிகளில் அவுஸ்திரேலியா தரப்படுத்தல்களிலும் கீழே கிடப்பதாலும் உத்வேகத்தோடு அரையிறுதியில் நிச்சயம் இடம்பிடிக்கும். பெயர்களைத் தாண்டி பெறுபேறுகள் பேசுவதே நியூஸிலாந்துக்கு பெரிய உதவியாகும்" என்று குறிப்பிட்டிருந்தேன்.

டேல் ஸ்டெய்ன் இறுதி ஓவரில் தட்டிப்பறித்த வெற்றியும் இலங்கை அணியின் ரங்கன ஹேரத் சுழற்றித் தள்ளிய போட்டியும் இந்த அபாயகரமான அணியை அம்போ ஆக்கிவிட்டது. அரையிறுதி உறுதி என்று ஆரம்பம் முதலே சொல்லி வைத்த மூன்று அணிகளோடு தென் ஆபிரிக்காவும் சேர்ந்துள்ளது.

பிரிவு 1இலிருந்து இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளும், பிரிவு 2இலிருந்து இந்தியா மற்றும் நடப்புச் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளும் அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளன.

இதுவரைக்கும் நடந்த நான்கு உலக Twenty 20 தொடர்களிலுமே நான்கு சம்பியன்கள்.

ஏற்கெனவே கிண்ணம் வென்றுள்ள இரு அணிகளோடு இதுவரை கிண்ணம் வெல்லாத இலங்கையும் தென் ஆபிரிக்காவும்.

கடந்த இரு வாரங்களாக நடந்த போட்டிகள், பெறுபேறுகள், வீரர்களின் விளையாட்டுக்களை வைத்துப் பார்க்கும்போது சுழல் பந்துவீச்சாளர்களும் அதிவேகமாக அடித்தாடக் கூடிய துடுப்பாட்ட வீரர்களும் கிண்ணம் யாருக்கு என்பதை இறுதியாகத் தீர்மானிப்பார்கள் என்று தோன்றுகிறது.
-------

முதல் சுற்றின் 12 தகுதிகாண் போட்டிகளுக்குப் பிறகு இரு பிரிவுகளாக நடந்த 20 Super 10 போட்டிகளில் தான் எத்தனை விறுவிறுப்பு. எத்தனை பேரை மாரடைப்பு வரை கொண்டுபோயிருக்குமோ?

7 போட்டிகள் இறுதி ஓவரில் முடிந்தன.

இன்னும் 3 போட்டிகள் 18ஆவது ஓவரில் இன்னும் பதற்றமாக முடிந்தன.

ஆனால், இவை இந்தப் போட்டித்தொடரை நெருக்கமான ஒரு தொடராகக் காட்டினால் போட்டித் தொடரின் அத்தனை போட்டிகளையும் தொடர்ந்து அவதானித்தவர்கள் நகைப்பார்கள். காரணம், சிலபோட்டிகளில் சில அணிகள், அவற்றில் சில 'பெரிய' அணிகளும் கூட, நூறு ஓட்டங்களுக்குள்ளேயே சில்லறை ஓட்டங்களுக்குள் சுருண்டு போயிருந்தன.

தகுதிகாண் சுற்றில் அயர்லாந்து, சிம்பாப்வே அணிகளையே தாண்டி உள் வந்த நெதர்லாந்து, இலங்கை அணியிடம் 39 ஓட்டங்கள் என்ற சர்வதேச Twenty 20 போட்டிகளின் குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்கு சுருண்டது.

பின்னர், நியூஸிலாந்து வாழ்வா சாவா என்ற நிலையில் இலங்கையை சந்தித்த முக்கிய போட்டியில் 60 ஓட்டங்களுக்கு உருட்டப்பட்டது.

இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா 86.

இதை விட அதிர்ச்சியாக நெதர்லாந்து அணியினால் இங்கிலாந்து 88 ஓட்டங்களுக்கு மடக்கப்பட்டு மிகப்பெரிய அவமானத்தோடு நாடு திரும்பியது தான் இத்தொடர் பற்றி இனி வரும் காலத்திலும் ஞாபக அடையாளமாக இருக்கப்போகிறது.

இறுதியாக பாகிஸ்தானின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 82 ஓட்ட சரணடைவு.

இந்திய அணி

இத்தொடர் ஆரம்பிக்கும் நேரம் தடுமாறக்கூடிய அணியென்று கருதப்பட்ட இந்தியா, அனைத்துப் போட்டிகளையும் வென்று அசத்தல் அணியாக நிற்கிறது. (ஆனால் உலக T20 வரலாறின் படி, முதல் சுற்றில் அனைத்துப் போட்டிகளையும் வென்று அரையிறுதிகளுக்குள் நுழையும் எந்த அணியும் இதுவரை கிண்ணம் வென்றதில்லை... உதாரணம், இலங்கை 2009, தென் ஆபிரிக்கா 2009, அவுஸ்திரேலியா 2010, அவுஸ்திரேலியா 2012. தோனி தலைமை தாங்கும் இந்தியா, வரலாறுகளை மாற்றும் அணி தான்... இம்முறை?)

ஏனைய மூன்று அரையிறுதி அணிகளும் தலா 3 போட்டிகளை வென்றுள்ளன.

இந்த நான்கு அணிகளிலும் உள்ள முக்கிய பலம் இவ்வணிகளின் சுழல் பந்துவீச்சாளர்கள் தான்.

இந்திய, மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர்கள் உறுதியாகத் தெரிய, தென் ஆபிரிக்காவின் பஃப் டூ ப்ளேசிஸ் ஒரு போட்டித் தடைக்குள்ளானார்.

அவருக்குப் பதிலாகத் தலைமை தாங்கிய டீ வில்லியர்ஸ் கலக்கியிருந்தார்.

இலங்கை அணியின் தலைவர் சந்திமால் துடுப்பாட்டத்தில் தடுமாறும் அதேவேளை, ஒரு போட்டித் தடை லசித் மாலிங்கவை திடீர் - பெயரளவுத் தலைவராக மாற்றியிருந்தது. (ஆனால் இறுதியாக நடந்த போட்டியில் மஹேல ஜெயவர்த்தன தான் ஆடுகளத்தில் தலைவராக செயற்பட்டார் என்பது ஒன்றும் மூடுமந்திரமில்லை).

இதே நிலை தான் அரையிறுதியிலும் நடக்கப்போகிறதா என்று ஆர்வத்துடன் அனைவரும் எதிர்பார்த்திருக்க, அப்படி நடப்பது இலங்கை அணியின் நன்மைக்கே என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

சிலவேளைகளில் விடயத்தை இலகுவாக்கவும் எதிர்காலத்துக்கான நிரந்தர மாற்றமாகவும் இலங்கை அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு இப்போது தலைமை தாங்கும் மத்தியூசை இன்று (முதல்) தலைவராக மாற்றினாலும் ஆச்சரியமில்லை.

இந்தவேளையில், இலங்கையில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக T20 தொடரிலும் இதேபோல சாமர்த்தியமாக இலங்கை அணி தலைமைத்துவ மாற்றங்களை மஹேல - சங்கக்காரவுக்கு இடையில் பரிமாற்றியது உங்களுக்கும் நினைவிருக்கலாம்.

இவை ஒரு பக்கம் இருக்க, இந்தத் தொடரில் இதுவரை எந்த அணியும் 200 ஓட்டங்களைப் பெறவில்லை. எனினும் 6 தரம் 180 ஓட்டங்கள் தாண்டப்பட்டன.

இந்த ஓட்ட எண்ணிக்கைகளுக்குள் அடிக்கப்பட்ட மொத்த சிக்ஸர்கள் இருநூறை விட அதிகம்.

கோளி, சமி, நெதர்லாந்தின் மைபேர்க், மக்ஸ்வெல், ஹேல்ஸ், அம்லா, டீ வில்லியர்ஸ், ஷெசாட் என்று ஓட்டக் குவிப்பாளர்கள் மத்தியில் மேற்கிந்தியத்தீவுகளின் தலைவர் டரன் சமி உச்ச பட்ச தன்னம்பிக்கையுடன் அடித்தாடக்கூடிய ஆபத்தான துடுப்பாட்ட வீரராகத் தெரிகிறார்.


சமி போன்ற சில வீரர்கள் ஒரு சில பந்துகளில் போட்டிகளின் போக்கை மாற்றிக் காட்டிய அதிரடி வீரர்கள்.

மறுபக்கம் பந்துவீச்சாளர்களில் தகுதிகாண் தொடர் முதல் கலக்கி வந்த நெதர்லாந்தின் மிதவேகப் பந்துவீச்சாளர்களான அஹ்சான் மாலிக், குட்டன், பங்களாதேஷின் அல்அமின் தவிர, தனித்துப் பிரகாசித்து விக்கெட்டுக்களையும் சரித்து, எதிரணிகளைத் தடுமாறவைத்த டேல் ஸ்டெய்ன் மற்றும் நுவான் குலசேகர ஆகியோர் மட்டுமே பங்களாதேஷின் ஆடுகளங்களில் பிரகாசித்த வேக, மிதவேகப் பந்துவீச்சாளர்கள்.

இந்தியாவின் புவனேஷ்குமார் மிகக் குறைவான ஓட்டங்களையே கொடுத்த சிக்கனமான இன்னொரு வேகப்பந்துவீச்சாளர்.

மற்றும்படி இத்தொடர் முழுவதும் சுழல்பந்து வீச்சாளர்களின் ராஜாங்கம் தான்...

அதிலும் இரட்டையராகவே கலக்கிய வீரர்கள் அதிகம்...

இந்தியாவுக்கு அஷ்வின், மிஷ்ரா - இருவரும் நான்கு போட்டிகளில் தலா இவ்விரு போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதுகளை வென்றுள்ளார்கள். போதாக்குறைக்கு ஜடேஜா & ரெய்னா.

இலங்கைக்கு ஹேரத் & சச்சித்ர சேனநாயக்க - மென்டிஸ் கிடைத்த வாய்ப்புக்களைக் கோட்டைவிட்டு இடத்தை நிரந்தரமாக இழந்துள்ளார்.

டில்ஷான் இத்தொடரில் இதுவரை பந்துவீச அழைக்கப்படவில்லை.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு நரைன் & பத்ரீ. இதில் எதிர்பார்த்ததற்கு மாறாக பத்ரீ தான் நரைனை விட அதிக விக்கெட்டுக்களை எடுத்திருக்கிறார் என்பது இன்னொரு ஆச்சரியம். மேலதிகமாக சாமுவேல்சும் இருப்பது மேற்கிந்தியத் தீவுகளை மேலும் பலப்படுத்துகிறது.

தென் ஆபிரிக்காவுக்கு இவ்வாறு இரட்டையர் என்று இல்லாவிட்டாலும் இம்ரான் தாகிர் தான் இப்போது அதிக விக்கெட்டுக்களை எடுத்துள்ளார். (தகுதிகாண் சுற்று இல்லாமல்). தேவையான பொழுதில் டுமினியும் சுழற்றக் கூடியவர்.

எனவே நான்கு அணிகளுமே சுழல் வியூகம் வகுக்கத் தேவையான இரட்டைச் சுழலை வைத்துள்ளன.

ஆனால், அடித்தாடும் வீரர்களின் அசகாய பலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா மற்ற இரு அணிகளையும் விஞ்சி மேலோங்கி நிற்பதாகப்படுகிறது.

இந்திய அணியின் துடுப்பாட்டமும் பலமாகவும் தொடர்ச்சியான ஓட்டக் குவிப்பில் இருந்துவந்தாலும் ஆரம்பத் துடுப்பாட்டம் தடுமாறுகிறது.

கோளி, ரெய்னா, ரோஹித் ஷர்மா ஆகியோரின் தொடர் பெறுபேறுகளுடன் யுவராஜ் சிங் போர்முக்குத் திரும்பியிருப்பது இந்தியாவின் பெரும் பலம்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கோ சராசரியாக ஒன்று முதல் ஏழு வரை துடுப்பாட்ட வரிசை உறுதி. அதிலும் தலைவர் சமியின் இறுதிக்கட்ட அதிரடி அவர்களின் துரும்புச் சீட்டு.

தென் ஆபிரிக்காவின் டீ வில்லியர்சின் சாகச அதிரடியும் தனித்துப் போட்டியை மாற்றும் திறனும் அனைவரும் அறிந்த விடயமாக இருந்தாலும், டுமினி, அம்லா போன்ற தரமான துடுப்பாட்ட வீரர்கள் இருந்தாலும் கூட அரையிறுதிகள் போன்ற முக்கிய கணங்களில் அவர்கள் சொதப்புவதும், சுழல் பந்துவீச்சுக்கள் அவர்களை சோதிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி
மீண்டும் ஓர் அரையிறுதி. கடந்த முறை இதே போன்றதொரு இக்கட்டான தருணத்தில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியைக் கடக்க ஹேரத்தை துரும்புச் சீட்டாக மஹேல பயன்படுத்தியிருந்தார். இம்முறை மேற்கிந்தியத் தீவுகளிடம் ஹேரத் மந்திரம் எடுபடுமா? இலங்கையின் துடுப்பாட்டம் நம்பகமான தொடர்ச்சியானதாக இல்லை.

அதிரடியாக ஆடும் குசல் ஜனித் பெரேராவுக்கு இரண்டு போட்டிகளில் தவறான ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட துரதிர்ஷ்டம். (நல்ல காலம் அரையிறுதியில் அலீம் டார் நடுவரில்லை).

டில்ஷான், மஹேல, சங்கா ஆகிய மூன்று சிரேஷ்ட வீரர்களின் ஓட்டக் குவிப்பிலும், மத்தியூஸ், திசர பெரேரா ஆகியோரின் இறுதிக்கட்ட அதிரடியிலும் வெகுவாகத் தங்கியுள்ளது.

சந்திமால் தொடர்ந்து ஓய்விலேயே இருக்க, தொடர்ந்து ஓட்டங்கள் பெற்றுவரும் திரிமன்னே அணியில் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது.
 
இதுவரை இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும் விளையாடியுள்ள 5 Twenty 20 சர்வதேசப் போட்டிகளில் முதல் நான்கில் இலங்கை அணி வென்றது. ஆனால் மிக முக்கியமான 2012 இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றிருந்தது.

இம்முறை தொடர் ஆரம்பிக்கும் முன்னர் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகளே வென்றுள்ளது.

எனவே இது இன்றைய முதலாவது அரையிறுதியிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு உளவியல் ரீதியில் அதிக வாய்ப்பை இலங்கையை விட மேலோங்கி நிற்கும் உற்சாகத்தை வழங்கும்.

இலங்கை அணிக்கு இறுதிப் போட்டிக்கு செல்வதோடு, T20 தரப்படுத்தலில் இந்தியாவை முந்த ஒரு வாய்ப்பையும் இன்றைய வெற்றி வழங்கும்.

இவையெல்லாவற்றையும் விட பங்களாதேஷின் பனி பல போட்டிகளிலும் இரண்டாவதாகப் பந்துவீசும் அணிகளுக்கு சிரமம் கொடுத்ததைக் கண்டிருக்கிறோம்.

எனவே, இனி வரும் முக்கியமான இந்த மூன்று போட்டிகளுக்கும் நாணய சுழற்சியும் மிக முக்கியமான ஒரு காரணியாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

தென் ஆபிரிக்காவின் துடுப்பாட்ட சவாலை இந்தியா நாளை தன் சுழல் வித்தை மூலம் மிக இலகுவாக முறியடிக்கும் என்று பெரும்பாலோனோர் நம்பியிருக்க, தென் ஆபிரிக்காவின் லெக் ஸ்பின் பந்துவீசும் தாஹீரும், அதிவேகப் பந்துவீசும் ஸ்டெய்ன் மற்றும் அவர்களது அசராத அதிரடி துடுப்பாட்டமும், மிக முக்கியமாகக் களத்தடுப்பும் இந்தியாவை தென் ஆபிரிக்கா அதிர்ச்சியுடன் வெற்றிகொள்ள உதவும் என்று சிலராவது நம்புகிறார்கள்.

இதுவரை வென்ற அணிகள் இரண்டில் ஒன்றா அல்லது புதிய வெற்றியாளர்களா என்பதை இன்றும் நாளையும் நடக்கும் அரையிறுதிகள் சொல்லும்..

---இதுவரை நடந்த திருப்பங்கள் தாண்டி இனி இந்தப் போட்டிகள் கொண்டுவரப்போகின்ற த்ரில்லுக்காகக் காத்திருப்போம்.
----

மகளிர் உலக T20 போட்டிகள்

அவுஸ்திரேலிய - மேற்கிந்தியத்தீவுகள் மகளிர் முதலாவது போட்டியிலும், இங்கிலாந்து - தென் ஆபிரிக்கா இரண்டாவது போட்டியிலும் இதே நாட்களில் விளையாடவுள்ளன.

அவுஸ்திரேலிய மகளிரும் இங்கிலாந்து மகளிரும் உறுதியான அணிகளாகத் தெரிவதால், ஒரு மினி ஆஷஸ் இறுதிப்போட்டி மகளிர் பிரிவில் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

www.arvloshan.com​

You May Also Like

  Comments - 0

  • Arafath Thursday, 03 April 2014 06:16 AM

    Srilanka didnt win all the 1st round matches in 2012.... They lost against south africa...

    Reply : 0       0

    agm.riyas Thursday, 03 April 2014 07:38 AM

    ilankai ani inru vetri perum... enave valthukal.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .