2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஐந்தாவது உலக T20 கிண்ணம் யாருக்கு?: முழுமையான அலசல்

A.P.Mathan   / 2014 மார்ச் 21 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


உண்மையான உலக கிண்ணம் இனித் தான் ஆரம்பிக்கப்போகிறது...

சுவாரஸ்யமான ஆட்டங்களை ஆரம்பித்து வைக்க இன்றிரவின் முதல் போட்டியே இந்திய - பாகிஸ்தான் பெரும் மோதல் என்பது எந்த ரசிகனையும் உசுப்பிவிடக்கூடியது.

முதன் முதலாக இடம்பெற்ற உலக Twenty 20 இறுதிப்போட்டியில் மோதிக்கொண்ட அணிகள். இனி வரப்போகின்ற போட்டிகளின் விறுவிறுப்புக்கு இன்றிரவு தான் கட்டியம்.

ஆனால் முன்னைய கட்டுரையில் ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருந்ததைப் போல, பிரிவு A, பிரிவு B ஆகியவற்றின் முதல்போட்டிகளே அடுத்த சுற்றுக்கான இரு அணிகளையும் தெரிவு செய்யும் முக்கிய போட்டிகளாக அமைந்ததால் ஏனைய போட்டிகள் அந்தந்த அணிகளுக்கான திறமை வெளிப்பாட்டு போட்டிகளாகவும், சர்வதேச அரங்கில் தங்கள் இருப்புக்களை உறுதிப்படுத்தும் போட்டிகளாக மட்டுமே அமைந்து போயின என்று நினைத்திருக்க, நேற்றும் இன்றும் நடந்த நான்கு போட்டிகள் ஒரு cliamx போல தலைகீழான முடிவுகளைத் தந்தன் விறுவிறுப்போ விறுவிறுப்பு.

நேற்றைய போட்டிகள் இரண்டுமே தலைகீழ் முடிவுகளைத் தந்த (upset) போட்டிகளாக அமைந்தது Twenty 20 போட்டிகளுக்கே உரிய குணாதிசயம்.

பத்து டெஸ்ட் விளையாடும் அணிகளுக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் முதல் தடவையாக உலகக் கிண்ணம் கண்ட நேபாள அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டதை அடுத்து ஆப்கானிஸ்தானிய அணிக்கான வாய்ப்பு அற்றுப்போக, யாரும் எதிர்பாராவண்ணம் நேபாள அணிக்கு ஒரு மயிரிழை வாய்ப்பு ஏற்பட்டது.

இரண்டாவது போட்டியில் டெஸ்ட் விளையாடும் அணியான போட்டிகளை நடத்துகின்ற பங்களாதேஷுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஹொங்கொங் அணி 13.2 ஓவர்களில் அந்த வெற்றி இலக்கை அடையாததால் உள்ளூர் ரசிகர்களுக்கு மனமுடைவு ஏற்படாமல் பங்களாதேஷ் அணியே தெரிவானது.

எனினும் ஹொங்கொங் மற்றும் நேபாளம் ஆகியன ரசிகர்களின் வாழ்த்துக்களோடும் மிகுந்த நம்பிக்கையோடும் தத்தம் நாடுகளுக்குத் திரும்புகின்றன.

பிரிவு B க்கான இன்றைய போட்டிகளில் நேற்றைய அதிர்ச்சிகள் போல ஏதும் நிகழ வாய்ப்பில்லை என்றபடியால் அயர்லாந்து அடுத்த அணியாக பிரிவு 1க்குத் தெரிவாகும் என்று நம்பியிருக்க,
முதலாவது போட்டியில் சிம்பாப்வே எதிர்பார்த்தது போல ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தை இலகுவாக வீழ்த்தியது.

இதனால் அயர்லாந்து அணி வென்றால் அயர்லாந்து உள்ளே, அயர்லாந்தை நெதர்லாந்து வீழ்த்தினால் சிம்பாப்வேஉள்ளே, வேகமாகத் துரத்தியடித்தால் நெதர்லாந்து உள்ளே என்று மும்முனைப்போட்டியாக மாறியது.

இன்றைய பாகிஸ்தான் - இந்திய முதல் பெரும் போட்டியை விட விறுவிறுப்பாக அமைந்த இறுதித் தகுதிகாண் போட்டி ஒரு சிக்சர் மழைப்போட்டியாக மாறியது.

அயர்லாந்து அடித்த 11 சிக்சர்களை, துரத்தியடித்த நெதர்லாந்து 19 சிக்சர்களைப் பெற்றது.

அதிர்ச்சியான வெற்றியுடன் நெதர்லாந்து பெருமையோடு super 10 க்குள் நுழைகிறது.

தகுதிகாண் சுற்றுக்கள் பல அதிர்ச்சிகளை வழங்கியுள்ளன...
இனி முக்கியமான சுற்று??



இனி பத்து அணிகளும் தத்தமது பிரிவுகளில் சமராடி அரையிறுதிக்கான நான்கு அணிகளை வழங்கவுள்ளன.


கடந்த நான்கு உலக T20 போட்டிகளினதும் முக்கிய பெறுபேறுகள்...

பாகிஸ்தான் நான்கு தடவையுமே அரையிறுதிக்கு தெரிவாகி இருந்த அதேவேளை, இலங்கையும் அவுஸ்திரேலியாவும் தலா மூன்று தடவைகள் அரையிறுதிக்கு வந்தன.


இனி இம்முறை Super 10 சுற்றில் விளையாடவுள்ள பத்து அணிகள் மற்றும் அவற்றின் பலம், பலவீனங்களை சுருக்கமாகப் பார்க்கலாம்.

இனித் தொடரவுள்ள ஆட்டங்களில் மகளிர்க்கான போட்டிகள் அனைத்தும் சில்ஹெட்டிலும், ஆடவர் பிரிவின் பிரிவு 1 போட்டிகள் சிட்டகொங்கிலும், பிரிவு 2இன் போட்டிகள் டாக்கா - மிர்பூரிலும் இடம்பெறும்.

பிரிவு 1

இலங்கை


தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள அணி.

தலைவர் தினேஷ் சந்திமாலின் துடுப்பாட்டத் தடுமாற்றம் தவிர அணி முழுப் பலமும் சகலதுறையிலும் சம பலமும் பொருந்திய அணியாகத் தெரிகிறது.

2012இல் வெல்லக்கூடிய நூறு வீத வாய்ப்புடைய அணியாக இருந்தும், சொந்த மண், சொந்த மைதானம், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இவை இருந்தும் கூட மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் பரிதாபமாக கிண்ணத்தை இழந்த வரலாறு, இம்முறை எப்படியாவது கிண்ணம் வெல்லவேண்டும் என்ற உத்வேகத்தை அனுபவமும் ஆற்றலும் வாய்ந்த இந்த அணிக்கு வழங்கும்.

அதைவிட இலங்கையின் முக்கிய சிரேஷ்ட துடுப்பாட்டத் தூண்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார ஆகியோர் இந்தத் தொடருக்குப் பின்னர் Twenty 20 சர்வதேச போட்டிகளிலிருந்து  ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்துள்ளதால் இவர்களுக்கு சிறப்பான விடைகொடுக்கவாவது இந்த உலகக் கிண்ணத்தை வென்று வழங்கவேண்டும் என்று காத்துள்ளது இலங்கை.

அண்மைய ஆசியக்கிண்ண வெற்றியும் பங்களாதேஷ் ஆடுகளங்கள், காலநிலை ஆகியவற்றின் பரிச்சயமும் இலங்கை அணிக்கு மேலும் சாதகத் தன்மைகள்.

இது தவிர மேலே தரப்பட்ட மூன்று இணைப்புப் படங்கள் மூலமாகவும் கடந்த நான்கு உலக Twenty 20 கிண்ணங்களிலும் இலங்கையும் பாகிஸ்தானுமே தொடர்ச்சியாக பிரகாசித்த அணிகளாக விளங்குகின்றன.

2012 உலக Twenty 20இற்குப் பிறகும் இவ்விரு அணிகளும் தென் ஆபிரிக்காவுமே தொடர்ந்து பிரகாசித்தவை.

நடப்பு வெற்றியாளர்கள் மேற்கிந்தியத்தீவுகள் கூட அயர்லாந்திடமும் தோற்றது.

இந்தப் பிரிவில் இலங்கை அணிக்கு சவால் விடுக்கக்கூடிய அணிகள் என்று எவையும் தென்படாததால், அரையிறுதி உறுதி.

அதற்கு மேல் இலங்கையின் பயணம் form இலுள்ள இலங்கை வீரர்களின் தனிப்பட்ட, ஒன்றுபட்ட சாகசங்களில் தங்கியுள்ளது.

சங்கா, டில்ஷான், மஹேல, மாலிங்க, மத்தியூஸ், ஹேரத், மென்டிஸ் ஆகியோரின் அனுபவம் கைகொடுக்கும்.

குசல் ஜனித் பெரேரா, சச்சித்திர சேனநாயக்க, (வாய்ப்பு வழங்கப்பட்டால்) சீக்குகே பிரசன்ன ஆகியோர் பிரகாசிப்பார்.

இங்கிலாந்து


ஏற்கெனவே 2010இல் உலக T20 கிண்ணம் வென்ற அணி.

அம்முறை தலைவராக இருந்த போல் கொல்லிங்வூடையும் பயிற்றுவிப்புக் குழுவில் இணைத்துக்கொண்டு உற்சாகம் + உத்வேகமான இளமையான அணியாக வந்திருக்கிறது.

சகலதுறை வீரர் ஸ்டுவர்ட் ப்ரோடின் தலைமையில் சமபலம் பொருந்திய ஓர் அணியாகத் தெரிகிறது.

ஆரம்பத் துடுப்பாட்டம் அதிரடி, அதற்குப்பின்னர் நம்பகமான மத்திய வரிசை...

ஒயின் மோர்கன், சில ஆண்டுகளின் பின்னர் அணிக்கு வந்துள்ள இயன் பெல், ரவி போபரா இவர்களோடு இன்னொரு டீ வில்லியர்ஸ் ஆக உருவெடுத்து வரும் அதிரடி ஆட்டவீரரும் விக்கெட் காப்பாளருமான ஜோஸ் பட்லர் என்று துடுப்பாட்டத்தில் காத்திரமான அணியாகத் தெரியும் இங்கிலாந்தின் முக்கிய இரு பலவீனங்கள், சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறும் துடுப்பாட்டம் (பங்களாதேஷின் மெதுவான ஆடுகளங்கள் நிச்சயம் சோதிக்கும்), நம்பியிருக்க முடியாத பந்துவீச்சு.

ஆனால், புத்தம்புதிதாக அணிக்குள் வந்திருக்கும் மூவர் - துடுப்பாட்ட வீரர் மொயின் அலி, சுழல் பந்துவீச்சாளர் ஸ்டீவ் பர்ரி, அடித்தாடக் கூடிய வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர்.

அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு பட்லர், ப்ரோட், போபரா, ப்ரெஸ்னன் ஆகிய நான்கு B களில் தங்கியுள்ளது.

தென் ஆபிரிக்கா


இந்த அணியிடம் என்ன இல்லை?

ஒரு சர்வதேச உலகக் கிண்ணம் வெல்லக் கூடிய ஆற்றல் உடைய அத்தனை கூறுகளும் கொண்ட அணி.

தனித்து நின்று போட்டிகளை மாற்றக்கூடிய சாகச அதிரடி வீரர்கள் உள்ள அணி.

டீ வில்லியர்ஸ், அம்லா, அல்பி மோர்க்கல், மோர்னி மோர்க்கல், அணித் தலைவர் டூ ப்ளேசிஸ், ஸ்டெய்ன், ஏன் ஓரளவு புதிதாக சர்வதேச அரங்கினுள் வந்துள்ள மில்லர், டி கொக் போன்றோரும் கூட ஒரு Twenty 20 போட்டியை தனித்து வென்று கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள் தாம்.

ஆனால், துரதிர்ஷ்டமோ அல்லது முக்கிய வேளைகளில் அணியாகவே சேர்ந்து சறுக்கிவிடும் தன்மையோ இதுவரை ஒரு தடவை தானும் இறுதிப் போட்டிக்குச் செல்லக்கூட முடியவில்லை. ஒரேயொரு தடவை அரையிறுதிக்கு வந்தது.

எனினும் இம்முறை எப்படியாவது கிண்ணம் வென்று விடவே வேண்டும் என்று முனைப்பாக இருக்கும் தென் ஆபிரிக்க அணி, இளமை + அனுபவம் + அதிரடி என்று அனைத்தும் கலந்த ஒரு அற்புத கலவையாகவே தெரிகிறது.

ஆனாலும் துரதிர்ஷ்டம் என்பது விடாமல் தொடர்வது போலவே தெரிகிறது.

முதலாவது போட்டி இலங்கைக்கு எதிராக ஆரம்பிக்குமுன்பே அணித் தலைவர் டூ ப்லேசிசும், முக்கிய வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்னும் உபாதைக்குள்ளாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதியவர்களின் பெறுபேறுகள் + அனுபவம் வாய்ந்தவர்களின் அதிரடிகள் அரையிறுதிக்கு அழைத்துச் செல்லலாம்.

நியூஸிலாந்து


அநேகர் இந்த அணியை கிண்ணத்தை மற்ற எல்லா Favorites இடமிருந்தும் தட்டிச் செல்லக் கூடிய அபாயகரமான அணி என்று வர்ணிப்பதில் தப்பேயில்லை.

எந்த உலகக்கிண்ணம் ஆக இருந்தாலும் அந்த நேரம் அதிரடியாட்டம் வெளிப்படுத்தும் ஓர் அதிர்ஷ்டம் நியூஸிலாந்துக்கு வந்துவிடும். அதிலும் மற்ற அணிகளை விட சகலதுறை வீரர்கள் அள்ளி நிறைந்து கிடக்கும் ஓர் அணி.

Twenty 20 சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள் குவித்துள்ள அதிரடி வீரர் பிரெண்டன் மக்கலம் தலைமையில் களமிறங்கும் நியூஸிலாந்து அணியில் ரொஸ் டெய்லர், வில்லியம்சன், கப்டில் என்று நம்பியிருக்கக்கூடிய துடுப்பாட்ட வீரர்களுக்கு சமனாக எந்த எதிரநியாக இருந்தாலும் அவர்கள் பந்துவீச்சைக் கிழித்துத் தள்ளக் கூடிய கோரி அன்டர்சன், லூக் ரொங்கி, ஜிம்மி நீஷம் போன்ற அதிரடிகளும் இருக்கிறார்கள்.

களத்தடுப்பில் கலக்கும் இந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்களும், மித வேகப்பந்துவீச்சாளர்களும் நிறைந்துள்ளார்கள். இவர்கள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான பங்களாதேஷ் ஆடுகளங்களில் எப்படி உசிதமாக பந்துவீசுவார்கள் என்பதையும் விட, அண்மைய தொடர்களில் நியூஸிலாந்தை அசைத்துப் பார்த்த இந்த ஆடுகளங்களில் பழைய அனுபவங்களை எப்படி மாற்றிக்கொள்வார்கள் என்ற கேள்வி தான் சுவாரஸ்யமானது.

கோரி அன்டர்சன் இந்த வருடத்தின் முதல் நாளில் அடித்த அதிவேக ஒருநாள் சர்வதேச சதம் போல Twenty 20 போட்டிகளில் நியூஸிலாந்துக்கு என்ன கொடுப்பார் என்பதும் ஆர்வத்தைத் தரக்கூடிய கேள்வி.

பெயர்களைத் தாண்டி பெறுபேறுகள் பேசுவதே நியூஸிலாந்துக்கு பெரிய உதவியாகும்.

நெதர்லாந்து


பெரிய அணிகளுக்கு அடுத்தபடியாக, டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகளில் பெரிய அணியாக விளங்கிய அயர்லாந்தை வீழ்த்தி, டெஸ்ட் அந்தஸ்த்துள்ள சிம்பாப்வேயையும்  வெளியேற்றி  உள்ளே நுழைந்துள்ள அசகாய அணி.

'பெரிய அணிகளை மண் கவ்வ வைக்கக் கூடிய ஆற்றல் கொண்ட அணி.

சர்வதேசத் தரம் வாய்ந்த சகலதுறை வீரர் டென் டோஸ்கட், மற்றும் வேகப்பந்துவீச்சாளர் டேர்க் நன்னஸ் இல்லாவிடினும் ஆர்வமும் கடும் முயற்சியும் திறமையும் கொண்ட அணி.

தலைவர் போரேன், அவுஸ்திரேலியாவில் முதல் தர கிரிக்கெட் விளையாடும் டொம் கூப்பர், பரேசி, அடித்தாடும் பலசாலி மைபேர்க் என்று குறிப்பிடக்கூடிய பல வீரர்கள்.

பந்துவீச்சு வெகு சராசரியாக தெரிந்தாலும் அதை ஈடுகட்டும் அபாயகரமான துடுப்பாட்டம். இன்றைய நாள் அதற்கு உதாரணம்.

ஏதாவது ஒரு அணி தடுமாறும் நாளில் ஆப்படிக்கும் அபாயகரமான அணி.

ஏற்கெனவே 2009இல் இங்கிலாந்தில் இடம்பெற்ற இரண்டாவது உலக T20 இல் இங்கிலாந்தை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியது.
இப்போது அதே தரம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மற்ற அணிகள் கவனமாகவே இருக்கவேண்டும்.


பிரிவு 2

மேற்கிந்தியத் தீவுகள்


நடப்புச் சம்பியன்கள்.

உலகின் அச்சுறுத்தக்கூடிய அதிரடி துடுப்பாட்ட வீரர் - கிறிஸ் கெய்ல், மிகச் சிறந்த மூன்று சகலதுறை வீரர்கள் - ப்ராவோ, ட்வேய்ன் ஸ்மித், சமி, உலகின் மிக மர்ம சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான சுனில் நரேன், இன்னும் உலகம் முழுதும் உள்ள Twenty 20 லீக் அணிகள் விரும்பி வாங்கும் சாமுவேல்ஸ், பத்ரி என்று வரிசையாக படைகளை அடுக்கி வைத்துள்ள பயங்கரமான அணி.

ஆனால் கடந்த உலக Twenty 20 கிண்ணம் வென்ற பிறகு Twenty 20 போட்டிகளில் தொடர்ச்சியான தன்மை ஒன்றைப் பேண முடியாமல் தடுமாறுகிறது. தரப்படுத்தலில் இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம் வரை வீழ்ச்சி.

வீரர்களின் காயங்களும் இதற்கான காரணமாக இருக்கலாம். ஆனால் எந்தவேளையிலும் மீண்டும் எழுச்சிபெற்று இன்னொரு கிண்ணத்தை வெல்லும் சாத்தியம் உள்ளது.

எந்த ஆடுகளத்திலும் பந்துவீச, துடுப்பெடுத்தாடக் கூடியளவு அனுபவமும் ஆற்றலும் நிறைந்த ஓர் அணி.

அதிலும் அனேக வீரர்கள், குறிப்பாக கெயில் பங்களாதேஷில் BPL போட்டிகளில் விளையாடிய அனுபவம் வேறு அவர்களுக்குக் கைகொடுக்கும்.

எதிரணி ரசிகர்களும் இந்தக் கோலாகல அணியை ரசிக்கக் கூடியளவு உற்சாகமாக விளையாடும் அணி. மேற்கிந்தியத்தீவுகள்: கொண்டாடப்படவேண்டிய கோலாகலச் சாம்பியன்கள்

சவாலான பிரிவு என்பதால் ஆற்றல், அதிரடி என்பவற்றோடு அதிர்ஷ்டமும் சேர்ந்தாலே அரையிறுதி.

இந்தியா


Twenty 20 என்றாலே இவர்களுக்கானது என்று 2007இன் வெற்றியும் IPL போட்டிகளும் சொன்னாலும் கடந்த உலக Twenty 20க்குப் பின்னர் இவர்கள் விளையாடியது வெறும் ஐந்தே ஐந்து போட்டிகள் தான் என்பது கொஞ்சம் உறுத்தலான விடயம் தான்.

ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து IPL, Champions League என்று பலவிதமாக Twenty 20 போட்டிகளில் விளையாடியிருக்கும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட அணி.

அதிலும் டோனி தலைவர், வெளுத்து வாங்கும் வீராப்புள்ள விராட் கோளி நல்ல formஇல், போதாக்குறைக்கு அதிரடி ஆட்டம் ஆடக் கூடிய யுவராஜ், ரெய்னா, தவான், ரோஹித் ஷர்மா (இவரது நிலை இப்போது கொஞ்சம் சிக்கல் தான்), ஜடேஜா என்று உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வரிசைகளில் ஒன்று.

வேகப்பந்துவீச்சு தடுமாறினாலும் அஷ்வின், மிஷ்ரா, ஜடேஜா என்று மூன்று வித முக்கிய சுழல்கள். பங்களாதேஷ் ஆடுகளங்களில் பனி சிக்கல் தராவிட்டால் இவர்கள் எதிரணிகளை உருட்டித் தள்ளுவார்கள்.

ஆனால் களத்தடுப்பும், அண்மைக்காலமாக சிலநேரங்களில் தளம்பும் குணமும், முதலில் துடுப்பெடுத்தாடினால் பந்துவீசுகையில் பதறுகிற மனோபாவமும் கப்டன் கூலான டோனியையே டென்ஷன் ஆக்கும் விடயங்கள். ஆனால் துரத்தியடிப்பதில் விண்ணர்கள்.

உலகின் மிகச் சிறந்த Twenty 20 அணிகளில் ஒன்று சொல்லக் கூடிய அணியில் சில ஓட்டைகள் இருப்பதால் இம்முறை வாய்ப்புள்ள முக்கிய அணிகளில் ஒன்றாகக் கணிக்க முடியாமல் உள்ளது. அதிலும் மிக சிக்கலான பிரிவு என்பதால் அந்தந்த ஆட்டங்களின் பொழுதுகளே முடிவுகளைத் தீர்மானிக்கும்.

இன்றைய முக்கிய விறுவிறு போட்டியின் வெற்றி/தோல்வி அடுத்த கட்டங்களைத் தீர்மானிக்கும்.

பாகிஸ்தான்


ஒருநாள் பார்த்தால் உலகின் மிகச் சிறந்த Twenty 20 அணி. இன்னொரு நாள் அதே வீரர்கள் இருந்தாலும் நம்ம ஊரில் விளையாடும் பையன்களின் சிறு அணியிடம் கூட தோற்கும் அளவுக்கு மோசமாக விளையாடுவார்கள்.

இது தான் பாகிஸ்தானின் மாற்ற முடியாத இயல்பு.

அதிரடி ஆரம்ப வரிசை - இப்போது மீண்டும் கம்ரன் அக்மல் வேறு வந்து சேர்ந்திருக்கிறார். பாகிஸ்தானின் கோளி அஹமத் ஷெசாத் நம்பிக்கை தரக்கூடியவர். நம்பகமான மூன்றாம் இலக்கத்தில் தலைவர் ஹபீஸ்.

மத்திய வரிசையில் அண்மைக்காலமாக மிகத் தொடர்ச்சியான ஓட்டக் குவிப்பில் சிறந்து விளங்கும் உமர் அக்மல் இருக்கிறார், ஷோயிப் மலிக், போதாதற்கு ஆசியக் கிண்ணத்தில் form ஆகியுள்ள அப்ரிடி, பந்துவீச்சில் உலகின் எந்தவொரு துடுப்பாட்ட வரிசையும் நடுங்கும் உமர் குல், சொஹைல் தன்வீர், உலகின் மிகச் சிறந்த Twenty 20, குறுகிய வகைப் போட்டிகளின் மாயாஜால சுழல் பந்துவீச்சாளரான அஜ்மல்...

இனியென்ன வேண்டும் உலகக் கிண்ணம் ஒன்றை வெல்ல?

ஆனால் பாருங்கள் திடீரென்று சறுக்கி விழுந்து ரசிகர்களுக்கு மாரடைப்பைக் கொடுக்கும் இந்த அணி. இம்முறையும் பயிற்சிப் போட்டிகளில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 71 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்த அணியைப் பார்க்கையில் இறுதிவரை பயணிக்கும் என்று சொல்லத் தோன்றினாலும் ஏதோ ஒன்று தடுக்கிறது.

இவ்வணியின் நம்ப முடியாத விக்கெட் காப்பும் (எந்த அக்மலாக இருந்தாலும்) மோசமான களத்தடுப்பும், அதைவிட மோசமான ரன் அவுட் ஆட்டமிழப்புக்களும் குறைகளாகத் தெரிகின்றன.

இன்றைய வெற்றி/தோல்வி இந்தியாவைப் போல இவர்களது உலக Twenty 20 பயணத்தையும் தீர்மானிக்கும்.

அவுஸ்திரேலியா


இம்முறை உலக Twenty 20 கிண்ணம் வென்றெடுக்க அதிக வாய்ப்புள்ள இரு அணிகளில் மற்றையது.

43 வயதான பிரட் ஹொக், 40 வயதான பிரட் ஹொட்ஜ், இருபதே வயதான மியுர்ஹெட் என்று ரகளையான கலவையோடு இதுவரை தங்கள் கைவசப்படாத கிண்ணத்தை வெல்லவேண்டும் என்ற வேட்கையோடு வந்துள்ள அணி.

இத்தொடரில் வந்துள்ள அணிகளில் பிஞ்ச் - வோர்னர் ஜோடியை விடப் பயங்கரமான அதிரடி ஆரம்ப ஜோடி வேறெந்த அணியிலும் இருப்பதாய்த் தெரியவில்லை.

தொடர்ந்து வொட்சன், ஹொட்ஜ், பெய்லி, வைட். மக்ஸ்வெல், ஹடின் என்று வரிசை நீண்டதும் உறுதியானதும்.

மிட்செல் ஜோன்சனின் காயமும் விலகலும் அவுஸ்திரேலியாவுக்கு இப்போது அவர் இருந்த அதியுச்ச விக்கெட் உடைக்கும் formஐப் பொறுத்தவரையில் இழப்பு எனினும், ஸ்டார்க், போலின்ஜர், போல்க்னர் ஆகியோரே பலமாகத் தான் தெரிகின்றனர்.

சுழல்பந்துவீச்சு அவுஸ்திரேலியாவின் குறையாகத் தென்படுகிறது.

எனினும் இதை மக்ஸ்வெல்லின் பகுதிநேரப் பந்துவீச்சும், அவுஸ்திரேலியாவின் உறுதியான களத்தடுப்பும், பெய்லியின் சாதுரியமான தலைமைத்துவமும் சமன் செய்துவிடும் என்ற நம்பிக்கையுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மற்றொரு பலம் இவர்களது சகலதுறை வீரர்கள்.

இதுவரை வெல்லாத ஒரு கிண்ணம் என்பதுவும், Twenty 20 போட்டிகளில் அவுஸ்திரேலியா தரப்படுத்தல்களிலும் கீழே கிடப்பதாலும் உத்வேகத்தோடு அரையிறுதியில் நிச்சயம் இடம்பிடிக்கும்.

பங்களாதேஷ்


இன்னொரு பாகிஸ்தான்.

முதலிரு தகுதிகாண் போட்டிகளில் புயல்வேகத்தில் ஆடி, வெற்றிபெற்று, இறுதிப் போட்டியில் நேற்று மிகப் பலவீனமான ஹொங்கொங் அணியிடம் தோற்றுள்ள அணி.

ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், தமீம் இக்பால் போன்ற சர்வதேசத் தரம்மிக்க வீரர்கள் இருந்தும், அனாமுல் ஹக், நாசிர் ஹொசைன் போன்ற இளம் திறமையான வீரர்கள் உருவாகி வந்தும் தொடர்ச்சியாக ஒரு தரத்தைப் பேண முடியாமல் தடுமாறும் அணி.

சொந்த மைதானம், வெறித்தனமாக நேசிக்கும் உள்ளூர் ரசிகர்கள் இருந்தும், ஆடுகளத் தன்மைகளை தமது பலமாக்கக்கூடிய வாய்ப்பு இருந்தும் இவ்வணியின் அண்மைக்கால தொடர்ச்சியான ஏற்றமும் இறக்கமும் இவ்வணியின் மீது நம்பிக்கை வைக்கப் போதுமானதாக இல்லை.
-----------------

அணிகளின் வீரர்கள், மற்றும் அண்மைக்கால பெறுபேறுகளை வைத்து நாம் உணரும் ஊகிக்கும் வகையில் கணிப்புக்களைத் தந்தாலும் Twenty 20 போட்டிகள் ஒரே ஓவரில், இரண்டு, மூன்று பந்துகளில் மாறிவிடக்கூடும்.

ஒரு எதிர்பாராத வீரர் போட்டியின் முடிவைத் தலைகீழாக மாற்றிவிடக்கூடும்.

என்ன தான் கணிப்புக்கள், அணிகளின் வீரர்களின் பலங்கள், சாதனைகளை நாம் பட்டியலிட்டாலும் ஓரிரு பந்துகளில் சடாரென முடிவுகள் மாறி, திருப்பங்கள் நிகழக்கூடிய இவ்வகையான போட்டிகள் எல்லோருடைய கணிப்புக்களையும் பொய்யாக்கி எதிர்பாராத வெற்றியாளர்களையும் தந்துவிடலாம்...

காத்திருப்போம், யாருக்கு ஐந்தாவது வெற்றிக் கிண்ணம் கிடைக்கிறதென அறிந்து கொள்ள...

ஒவ்வொரு போட்டியினதும் சுவாரஸ்யமான, சூடான தருணங்களை எதிர்பார்த்து, திறமையான அணி வெற்றிகள் பெறட்டும் என்று வாழ்த்தி இப்போதைக்கு விடைபெறலாம்.

அடுத்த அரையிறுதி சுற்றுக்கு முன்னதாக இடையிலே ஒரு சுவையான தொகுப்போடு சந்திக்கிறேன்.

(இன்று (21) காலை முன்னதாக பிரசுரிக்கப்பட்ட கட்டுரை, இன்றைய போட்டிகள் ஏற்படுத்திய மாற்றங்களின் பின்னர் திருத்தப்பட்டு இங்கே பிரசுரிக்கப்படுகிறது)

www.arvloshan.com

You May Also Like

  Comments - 0

  • sharmilan Friday, 21 March 2014 11:59 AM

    Intha murai 80% cup #Australia ku than

    #T20 WC power full #Australia team

    1:Aaron Finch
    2:David Warner
    3:Shane Watson
    4:George Bailey
    5:Brad Hodge (Cameron White)
    6:Glenn Maxwell
    7:Brad Haddin
    8:Mitchell Starc
    9:James Faulkner
    10:Nathan Coulter-Nile :miss Mitchell Johnson
    11:Brad Hogg

    Reply : 0       0

    prasa Friday, 21 March 2014 12:49 PM

    Ilankai

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .