2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

உலக T20 கிண்ண இறுதி: இலங்கை எதிர் இந்தியா; விரிவான அலசல்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 05 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு ஆனால் கிட்டத்தட்ட வெற்றிபெற்ற அணிகளாலே இலகுவாக வெல்லப்பட்ட இரண்டு அரையிறுதிகள் முடிந்து, புதிய வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதி 40 ஓவர்களை ஞாயிறு இரவு தரப்போகிறது.

மீண்டும் ஓர் இலங்கை எதிர் இந்தியா போட்டி...

மீண்டும் ஓர் இறுதி...


அதிலும் மீண்டும் 2011 (50 ஓவர்கள்) உலகக் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தை ஞாபகப்படுத்தும் இன்னொரு இறுதிப்போட்டி.

டெஸ்ட் போட்டிகள் தவிர அண்மைக்காலத்தில் இவ்விரு அண்டை நாடுகளும் சந்தித்துக்கொண்ட அளவுக்கு வேறெந்த அணிகளும் அதிகளவில் விளையாடியதில்லை.

அதிலும் ஒருநாள் போட்டிகள், இனிமேல் இவ்விரு அணிகளும் சந்திக்கவே கூடாது என்னும் அளவுக்கு அத்தனை அதிகம். மொத்தமாக 144 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்.

ஆனால், என்ன அதிசயமோ T20 போட்டிகள் மட்டும் இவ்விரு அணிகளும் ஐந்தே ஐந்து தடவைகள் தான் மோதியுள்ளன. அதிலே மூன்றில் இந்தியாவுக்கு வெற்றி, இரண்டில் இலங்கை வென்றுள்ளது.

ஆனால், நாளை நடைபெறவுள்ள இந்த ஆறாவது போட்டி அளவுக்கு முக்கியத்துவமான போட்டியில் இதுவரை இவ்விரு அணிகளும் விளையாடவில்லை.

இறுதியாக இவ்விரு அணிகளும் சந்தித்துக்கொண்ட T20 சர்வதேசப் போட்டி, ஆச்சரியப்படும் விதத்தில் கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு முன்பு 2012ஆம் ஆண்டு கண்டி, பல்லேகலையில் இடம்பெற்றது. இந்தியா அந்தப் போட்டியில் வெற்றி ஈட்டியிருந்தது.


IPL, Champions League என்று ஆண்டுக்கொருமுறை T20 உள்ளகப் போட்டிகள் நிரம்பி வழிவதால் T20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியா அதிகளவு அக்கறை காட்டுவதில்லை.

இதற்கு முன்னதாக 2010இல் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற உலக T20 போட்டிகளின் பிரிவு ரீதியிலான போட்டியொன்றில் இந்தியாவை இலங்கை வென்றிருந்தது.

எனவே, உலக T20 போட்டியில் இப்போது தான் இரண்டாவது தடவையாக இவ்விரு அணிகளும் சந்திக்கின்றன.

அடிக்கடி T20 வகைப் போட்டிகளில் இவ்விரு அணிகளும் சந்தித்திராவிட்டாலும் கூட, இரு அணிகளினதும் ஒவ்வொரு வீரர் பற்றியும், அணிகளின் பலம், பலவீனம் பற்றியுமே இரு பக்கமும் கொஞ்சமேனும் சந்தேகம் இல்லாமல் தெரியும்.

இந்த 2014 உலக T20 கிண்ணம் ஆரம்பிக்க முன்னர் இலங்கை, இந்திய அணிகள் மோதிய பயிற்சி ஆட்டத்தில் இலங்கை வென்றிருந்தது.


ஆனாலும் இலங்கை அணி 2007ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ICC கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாவதும் கிண்ணத்தை வெல்லாமல் தோற்பதும் (2007, 2011 உலகக் கிண்ணங்கள், 2009, 2012 உலக T20 கிண்ணங்கள் )தென் ஆபிரிக்காவின் அரையிறுதி வெளியேற்றம் போல வாடிக்கையான விஷயங்கள் ஆகியிருப்பதும், தோனியின் தலைமையிலான இந்திய அணி இதுவரை தாம் தெரிவான ICC கிண்ணங்களின் இறுதிப் போட்டிகள் எவற்றிலும் தோற்கவில்லை (2007 - உலக T20 , 2011 - உலகக் கிண்ணம்  2013 - சம்பியன்ஸ் கிண்ணம்) என்பதும், ஏனைய இரு ICC கிண்ணங்களின் நடப்புச் சம்பியனாகத் திகழும் இந்தியா, மூன்றாவது மகுடத்தையும் ஒரே நேரத்தில் தாங்கும் பெருமையைக் குறிவைப்பதும், நாளைய இறுதிப்போட்டியை மேலும் விசேடத்துவம் மிக்கதாக மாற்றுகின்றன.

அத்துடன், நாளை வெல்கின்ற அணிக்கு உலக T20 கிண்ணம் மட்டுமில்லாமல், சர்வதேச T20 தரப்படுத்தலின் முதலாமிடமும் கிடைக்கவுள்ளது.

இந்தத் தரப்படுத்தல் முதலிடத்துக்கான நெருக்கமான போட்டியானது உலகின் மிகச் சிறந்த T20 அணிகள் இரண்டுமே இறுதிப் போட்டிக்கு வந்திருப்பதை உறுதிப்படுத்தி நிற்கிறது.
----------------------

அரையிறுதி 1

இலங்கை அணி இன்னொரு இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு அசுர வேகத்தில் வென்று வந்த மேற்கிந்தியத் தீவுகள் என்ற தடையைத் தாண்டவேண்டி இருந்தது.

டரன் சமியின் அணியானது அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை வீழ்த்திய formஇல் எந்தவொரு அணியினாலும் அதை வீழ்த்த முடியுமா என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருந்தது.

நாணய சுழற்சியின் அதிர்ஷ்டமும் அங்கே தேவைப்பட்டது.

ஓட்டங்கள் பெறமுடியாத இக்கட்டான நிலையிலிருந்த சந்திமால் மீண்டும் ஒதுங்கிக்கொள்ள லசித் மாலிங்கவின் ராசி, நாணய சுழற்சியில் கைகொடுத்தது.

​இதேவேளை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மாலிங்க சரித்த இரு விக்கெட்டுக்களும் - லசித் மாலிங்கவை, உலக T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்கள் பெற்றிருந்த அஜ்மலின் சாதனையை முந்த வைத்துள்ளன.

ஆனால், குசலின் ஆரம்ப அதிரடியைத் தொடர்ந்து இந்த உலக T20யுடன் ஓய்வுபெறவுள்ள இரு சிரேஷ்டர்களும் பூஜ்ஜியம் மற்றும் 1 என்று ஆட்டமிழக்க, தடுமாறிய இலங்கையை டில்ஷான், மத்தியூஸ் மற்றும் முக்கியமாக கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் அணிக்குள் தன்னை நிரந்தரமாக்கி வரும் லஹிரு திரிமான்னே ஆகியோரின் பெறுமதியான ஓட்ட சேர்ப்புக்கள் மூலம் இவ்வாடுகளத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சவால் விடும் ஓட்ட எண்ணிக்கையை எட்ட உதவியிருந்தன.

முன்னரே நான் எதிர்வு கூறியிருந்ததைப் போலவே மேற்கிந்தியத் தீவுகளின் சுழல்பந்து வீச்சு இரட்டையர்களும் மார்லன் சாமுவேல்சும் இலங்கையின் ஓட்ட வேகத்தை மட்டுப்படுத்தி இருந்தார்கள்.

எனினும், உபாதைகள் மற்றும் உறுதியின்மை காரணமாக வழமையாக விக்கெட்டுக்கள் எடுக்கின்ற மேற்கிந்திய மிதவேகப் பந்துவீச்சாளர்கள் சமி, பிராவோ, ஸ்மித் ஆகியோர் ஓர் ஓவரைத் தானும் வீசவில்லை.

மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டம் ஆரம்பித்த முதல் இரு பந்துகளில் 10 ஓட்டங்கள், குலசேகரவின் முதல் ஓவரில் 17 ஓட்டங்கள். ஆனாலும் இதே வேகத்தைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல முடியாமல் இலங்கை அணியின் பந்துவீச்சு கட்டிப்போட்டது.

கிறிஸ் கெயில், இலங்கை அணியுடன் எப்போதும் போலவே இம்முறையும் ஓட்டங்கள் பெறுவதில் திணறியிருந்தார்.

ஆடுகளத் தன்மையும் இந்தத் தொடரின் முன்னைய போட்டிகளின் முடிவுகளினதும் படி இலங்கை அணி, திசர பெரேராவுக்குப் பதிலாக சுழல்பந்து வீசும் சகலதுறை வீரர் சீக்குகே பிரசன்னாவை அணிக்குள்ளே எடுத்திருந்தது.

மாலிங்கவின் முதல் ஓவரிலேயே இரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களும் ஆட்டமிழக்க, சீக்குகே தனது முதல் பந்திலேயே விக்கெட் ஒன்றைப் பெற்றிருந்தார்.

கெயில், சாமுவேல்ஸ் ஆகியோரின் தடுமாற்றகரமான துடுப்பாட்டம், மேற்கிந்தியத் தீவுகளுக்குத் தந்த அழுத்தத்தை தனது அடிப்பிரயோகங்கள் மூலமாக ட்வெய்ன் பிராவோ மாற்றியமைக்க முற்பட, அவரது ஆட்டமிழப்போடு போட்டி மீண்டும் இலங்கையின் பக்கமாக மாறியது.

அந்தவேளையில் யாரும் எதிர்பாராத இயற்கையின் குறுக்கீடு...

ஆலங்கட்டி மழையும் அடை மழையும்


மழையின் குறுக்கீடு இல்லாவிட்டாலும் இலங்கை வென்றிருக்கக் கூடிய ஒரு நிலை தான்.

37 பந்துகளில் 81 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இலங்கையின் துரும்புச் சீட்டுக்களான மாலிங்கவிடமும் சச்சித்ர சேனநாயக்கவிடமும் தலா இவ்விரு ஓவர்கள் இருந்ததானது மேற்கிந்தியத் தீவுகள் எப்படியும் சுருண்டிருக்கும் என்பதை உறுதியாக சொன்னது.

கொட்டும் மழை கோரத் தாண்டவம் ஆடி போட்டியை மழை விதியோடு முடித்து, இலங்கையை இறுதிப்போட்டிக்கு அனுப்பிவைத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் சமி, "மஹேல, சங்கக்கார ஆகிய இரு பெரும் கனவான் கிரிக்கெட் வீரர்கள். தங்கள் இறுதி T20 போட்டியை கிண்ணத்தோடு நிறைவு செய்யவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார் போலும்" என்று தனது வழமையான விளையாட்டுக் கனவான் தன்மையுடன் தெரிவித்திருப்பது இலங்கைக்கு கிடைத்துள்ள மற்றொரு தகுந்த வாழ்த்தாகும்.

முன்பிருந்தே இலங்கை கடைப்பிடித்துவரும் ஆடுகளத் தன்மைகள், எதிரணியின் பலம் - பலவீனங்களுக்கான வியூகங்கள், அதேபோல் மழை வரலாம் என்று அனுமானித்து, மேற்கிந்தியத் தீவுகளின் ஓட்ட வேகத்தை மட்டுப்படுத்திய தந்திரம் ஆகியன இம்முறையும் இலங்கைக்குக் கை கொடுத்துள்ளன.

அண்மைக்காலமாக போட்டிகளை மிக சிறப்பாக முடித்து வைக்கின்ற ஆற்றல் பொருந்தியவராக (finisher) மாறிவரும் மத்தியூஸ், போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
-------------------

அரையிறுதி 2

இலங்கைக்கு மத்தியூஸ் என்றால் இந்தியாவுக்கு கோளி...

இளைய இந்தியக் கட்டமைப்பிலிருந்து தேசிய அணிக்கு விளையாட ஆரம்பித்த காலம் முதல் கடந்த நான்கு வருடங்களாகவே அனேக தடவைகள் இந்தியாவுக்கு தனித்து நோன்று வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துவரும், அதிலும் பெரிய இலக்குகளைத் துரத்தியடிப்பதில் கில்லாடியான கோளி இருக்கும்வரை எந்த அணியையும் இந்தியா பந்தாடிவிடும் போலத் தெரிகிறது.

நேற்றைய அரையிறுதி வெற்றியானது T20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாகப் பெற்ற 7ஆவது வெற்றி. இது இந்தியாவின் தொடர் வெற்றிகளில் பெரியது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக எந்தவொரு அணியும் இப்படியொரு பெரிய இலக்கைத் துரத்திப் பெற்றதில்லை.

கோளியே தனது மிகச் சிறந்த T20 சர்வதேச இன்னிங்ஸ் என்று நேற்றைய ஆட்டமிழக்காத 72ஐக் கூறுகிறார்.

கொஞ்சம் விட்டால் 200 தாண்டக்கூடிய இலக்கைப் பெற்றுவிடும் பலம் வாய்ந்த தென் ஆபிரிக்காவிடம், நேற்று இத்தொடர் முழுதும் கலக்கிய மிஷ்ராவின் மாயாஜாலம் எடுபடவில்லை.

ஆனால், அஷ்வின் 3 முக்கிய விக்கெட்டுக்களை எடுத்து மடக்கிவிட்டார்.

அவுஸ்திரேலியாவை தன் 4 விக்கெட்டுக்கள் மூலம் மடக்கியவர், தென் ஆபிரிக்காவை சுழலுக்குள் சிக்க வைத்திருந்தார். இப்போது இத்தொடரில் பத்ரிக்கு அடுத்தபடியாக கூடுதல் விக்கெட்டுக்கள் பெற்றவர் அஷ்வின் தான்.

தென் ஆபிரிக்க அணியின் தலைவர் டூ ப்ளேசிஸ் மற்றும் டுமினி ஆகியோரின் பங்களிப்புடன் தென் ஆபிரிக்கா பெற்ற 172 ஸ்டெய்ன், தாஹிர் ஆகியோரின் பந்துவீச்சோடு இந்தியாவை வீழ்த்த போதுமாக இருக்கும் என்று அநேகர் நம்பியிருக்க, ரோஹித் ஷர்மா, ரஹானே (இலங்கையின் திரிமான்னே போல வாய்ப்புக்களை எல்லாம் வலுவாகப் பிடித்துக் கொள்கிறார்) ஆகியோரின் ஆரம்பத்தின் பின், முழுக்க முழுக்க கோளியின் கொண்டாட்டம் தான்.

திட்டமிட்டு தாக்கி ஓட்ட வேகத்தை கட்டுக்குள்ளே வைத்து இலக்கை அடைந்தார்.

ஓர் ஓட்டம் மட்டும் தேவைப்படும் நிலையில் அப்போது ஆடுகளம் வந்த இந்திய அணித்தலைவர் டோனி, தான் அந்த ஓட்டத்தைப் பெறாமல் கோளிக்கே அந்த பெருமையை வழங்கியது இன்னொரு மறக்க முடியாத அம்சம்.

எனவே, இந்தியா பழக்கமான இறுதிப்போட்டி ஒன்றுக்குள் வெற்றிநடை போடா, தென் ஆபிரிக்கா 90கள் முதல் தங்கள் வழக்கமான அரையிறுதியோடு வெறுங்கையுடன் வெளியேறுகிறது.

12 தடவைகளில் 10 தடவைகள் knock out போட்டிகளில் தோற்றுள்ள தென் ஆபிரிக்கா, இறுதியாக இவ்வாறான ஒரு ICC அரையிறுதி தாண்டியபோது கிண்ணம் வென்றது. அது 1998இல் அப்போதைய ICC Knock Out கிண்ணம்.

இப்போதைய தோல்வியானது தென் ஆபிரிக்க அணியுடன் ஒட்டிக்கொண்ட Chokers பட்டத்தைத் தொடர்ந்தே வைத்திருக்கும் அவமானச் சின்னம் ஆக்கியுள்ளது.

இந்தியா துரத்தியடித்த பெரிய இலக்குடன் இறுதிக்குள் செல்வதால், மிகுந்த நம்பிக்கை கிடைத்துள்ளது இலங்கையை விட.
----

இலங்கை எதிர் இந்தியா


உலகம் முழுதும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஒரு மோதல். சுழல் பந்துவீச்சுக்கு இடையிலான மோதல்.

அரையிறுதியில் சச்சித்திரவும் அஷ்வினும் பிரகாசித்தாலும் ஹேரத்தும் மிஷ்ராவும் சோடை போனார்கள். எனவே, மீண்டும் ஒரு சுவாரஸ்ய மோதல் காத்துள்ளது சுழல்களுக்கிடையில்.

மீண்டும் ஒரு மாலிங்க - கோளி மோதல்
அதிலும் இறுதிப் போட்டியிலும் மாலிங்கவே தலைவர் என்று உறுதியாகியுள்ள நிலையில், அண்மைக்காலமாக தனக்கெதிராக ஓங்கியுள்ள கோளியின் துடுப்பாட்டத்தை இம்முறை ஒடுக்க எப்படியாகிலும் பார்ப்பார்.

ஆனால், கோளி உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராகத் தெரிகிறார். அவராகவே ஆட்டமிழந்தால் ஒழிய, அவரைத் தடுப்பது இலங்கைக்கு பெரும்பாடாகவே இருக்கும்.

இரு அணிகளின் துடுப்பாட்டப் பலமும் அனுபவமும் ஆழமும் நிறைந்தது.

ஆனால், இத்தொடரில் இலங்கையின் துடுப்பாட்டத்தை விட, இந்தியாவின் துடுப்பாட்டம் சற்று உறுதியாகத் தெரிகிறது.

கோளி (இப்போது இவ்வாண்டு தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்) மட்டுமன்றி ரெய்னா, யுவராஜ், ரோஹித் ஷர்மா போன்றோரும் கூட...

இலங்கை இன்னமும் மத்தியூஸ், குசல் ஆகியோரைத் தான் வேகமாக ஓட்டங்கள் குவிக்க நம்பியுள்ளது.

டில்ஷான் தனது தடுமாற்றத்தைத் தெளிவாக்கிக் கொள்ளும் பட்சத்திலும், தங்கள் இறுதி T20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடப் போகும் இலங்கையின் இரு பெரும் நட்சத்திரங்கள் மஹேல, சங்கா தங்கள் முத்திரைப் பெறுபேறுகளை வழங்கி, இதுவரை காலமும் இவ்விருவருக்கும் கிடைக்காத ICC கிண்ணம் ஒன்றோடு விடைபெற்றால் அது இலங்கை கிரிக்கெட்டுக்கும் பெரும் பாக்கியமே.

இலங்கை கிரிக்கெட்டுக்கு தசாப்த காலத்துக்கு மேல் அற்புதமான சேவையாற்றி தங்கள் கிரிக்கெட்டின் அந்திம காலத்தை அடைந்துள்ள இவ்விருவரும் தங்கள் T20 சர்வதேசப் போட்டி ஓய்வில் கிண்ணத்தோடு செல்லாமல் விடைபெற்றால் அது பூரணமில்லையே.

இந்தியாவோடு எப்போதுமே பிரகாசிக்கும் திசர பெரேரா, நாளைய போட்டியில் மீண்டும் அணியில் இடம்பெறுவார் என நம்பலாம்.

இந்திய அணியின் ஒரேயொரு குறையாக இருக்கப் போவது அவர்களது வேகப்பந்துவீச்சாளர்கள் தான். எனினும் இந்தத் தொடரில் புவனேஷ்குமார் ஓரளவுக்கு சிறப்பாகவே செய்துள்ளார்.

விட்டுக்கொடுக்காமல் விளையாடும் அணிகளின் வெற்றி வாய்ப்புக்களை சிலவேளை தீர்மானிக்கும் சக்தியாக தலைமைத்துவம் திகழும் நேரத்தில் டோனியின் சாணக்கியத்துக்கு, தலைவராக மூன்றாவது போட்டியில் பங்கெடுக்கும் மாலிங்கவின் அனுபவக் குறைவுக்கு மஹேல, சங்கக்காரவின் அனுபவங்கள் கைகொடுக்கும்.

தற்செயலாக நாளை மழையினால் போட்டி முற்றாகக் கை விடப்பட்டால், 2002 ICC Champions Trophy போல கிண்ணம் பகிரப்படும்.

சுருங்கக் கூறின் நாளைய நாளில் ஆடுகளம், களநிலை ஆகியவற்றுக்கு ஏற்ப எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணி கிண்ணம் ஏந்தும்...

இலங்கை வென்றால் ஐந்தாவது உலக T20 கிண்ணம், ஐந்தாவது சாம்பியன்.

இந்தியா வென்றால் இந்தியாவுக்கு இரண்டாவது கிண்ணம், அதேபோல் அனைத்து ICC கிண்ணங்களையும் ஒரே நேரத்தில் வைத்துள்ள ஒரே அணி.

ஆனால், இன்னொரு சுவாரஸ்ய கோலமும் கிடைத்தது.

2009 முதல்...
2009இல் வெற்றியாளர் - பாகிஸ்தான்                 நடத்திய நாடு  - இங்கிலாந்து
2010இல் வெற்றியாளர் - இங்கிலாந்து               நடத்திய நாடு  - மேற்கிந்தியத்தீவுகள்
2012இல் வெற்றியாளர் - மேற்கிந்தியத்தீவுகள்  நடத்திய நாடு  - இலங்கை
2014இல் வெற்றியாளர் - ??                                    நடத்திய நாடு  - பங்களாதேஷ்

பார்க்கலாம் நாளை....
-------------------

மகளிர் கிண்ணத்தின் இறுதியில் மீண்டும் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா...

அதிக வாய்ப்புக்கள் இந்த Southern Stars எனப்படும் மஞ்சள் மகளிருக்குத் தெரிந்தாலும், இங்கிலாந்து மகளிரும் இலேசுப்பட்ட அணியில்லை.

கடந்த முறை இறுதிப்போட்டி அவுஸ்திரேலிய மகளிருக்கு இலகுவாகிப் போனது மேற்கிந்தியத்தீவுகளின் மகளிருடன்.

இம்முறை மகளிர் ஆஷஸ் தொடர் போல விறுவிறுப்பாக இருக்கும் என நம்பலாம்.

ஆடவர் இறுதிப்போட்டி நடைபெறுமுன், மகளிர் போட்டி இடம்பெறவுள்ளது.

கிண்ணங்கள் வென்ற அணிகளுக்கான வாழ்த்துக்களோடு மீண்டும் சந்திப்போம்.

www.arvloshan.com


You May Also Like

  Comments - 0

  • thar Saturday, 05 April 2014 05:29 PM

    super anna

    Reply : 0       0

    Rajagopal Saturday, 05 April 2014 06:36 PM

    ரொம்பவும் நல்லா இருந்தது உங்க பார்வை, வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    sudharahan Sunday, 06 April 2014 11:31 AM

    I think Lions were win :)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .