2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

அரையிறுதிகள் அழைக்கின்றன: ICC உலக Twenty 20

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 03 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதி நான்கு அணிகளுடன் உலக T20 கிண்ணம் கொழும்பில் இடம்பெறவுள்ள இறுதி மோதல்கள் ஆறுக்குத் தயாராகிறது. (ஆண்கள் அரையிறுதிகள் மற்றும் இறுதிப்போட்டி + மகளிர் அணிகளின் அரையிறுதிகள், இறுதிப்போட்டி).

போட்டித் தொடரை நடத்துகின்ற அணி முதல் தடவையாக அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளது. அத்துடன் பாகிஸ்தான் இந்த உலக T20 கிண்ணத் தொடர் ஆரம்பித்ததில் இருந்து (2007) தொடர்ச்சியாக நான்காவது அரையிறுதியில் விளையாடவுள்ளது. அரையிறுதிகளுக்குத் தெரிவான அணிகளில் பாகிஸ்தான் தவிர ஏனைய அணிகள் இதுவரை உலக T20 கிண்ணம் வெல்லவில்லை.


இம்முறை மிக விறுவிறுப்பாக எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் 8 பிரிவான 2இல் எதிர்பார்த்ததைப்போல கடைசிப் போட்டி/போட்டிகள் வரை எந்த அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகப் போகின்றன என்ற எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் தந்திருந்தன.

இறுதியில் நேற்று நிகர ஓட்ட சராசரிப் பெறுமானத்தின் வித்தியாசத்தில் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட மூன்று அணிகளில் இந்தியா வெளியேற்றப்பட்டது. அவுஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் தாம் பெற்றுக்கொண்ட பெரிய வெற்றிகளால் அரையிறுதிகளுக்குத் தெரிவாகி இருக்கின்றன.

சறுக்கிய இந்தியா

இந்தியாவின் தலைவர் மகேந்திர சிங் டோணி சொன்னது போல "ஐந்து போட்டிகளில் நான்கை வென்றும் நாம் வெளியேற்றப்பட்டுள்ளோம்" என்பது இந்தத் தொடரின் முக்கியமான ஒரு விடயம். எத்தனை வெற்றிகளைப் பெறுகிறோம் என்பதை விட, எந்தப் போட்டிகளில் பெறுகிறோம் என்பதும் யாருக்கெதிராகப் பெறுகிறோம் என்பதுமே இந்த வகைப் போட்டிகளில் மிக முக்கியமானதாகிறது. 2007இல் இவ்வாறு தான் தென் ஆபிரிக்கா எல்லாப் போட்டிகளிலும் வென்று வந்து முக்கியமான Super 8 போட்டியில் இந்தியாவிடம் வாங்கிக்கட்டி வெளியேறியிருந்தது. இப்போது இந்தியாவுக்கு அப்படியான நிலை.

ஆனால் இந்தியா சூப்பர் 8இல் தனது முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் கண்ட பெரும் தோல்வி தான் அந்த அணியின் வெளியேற்றத்துக்கு அடிகோலிய முதலாவது விடயமாகி இருக்கிறது.

இந்தியாவின் வெளியேற்றமானது அதிர்ச்சியானதாக ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, அனுசரணையாளர் மத்தியிலும் மாறியுள்ளது. இந்தத் தொடருக்கு அநேகமாக எல்லாருமே இந்திய அனுசரணையாளராக இருப்பதும், தொலைகாட்சி ஒளிபரப்புகள், அதன் அனுசரணை, விளம்பரங்கள் என்று எல்லாமே இந்தியாவை மையம் கொண்டிருப்பதும் இதற்கான காரணங்கள்.

இந்தியா இனி இல்லை என்றவுடன் தர மதிப்பீட்டு புள்ளிகள் (Target rating point) என்று தொலைக்காட்சிகளால் பெரிதாக சொல்லப்படுகிற தொலைக்காட்சிக்கான ரசிகர்களின் பார்வைக்கான புள்ளிகள் குறையக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஆனால் இந்தியாவுக்கு டுவென்டி 20 போட்டிகளில் இது புதுசு அல்ல... இதுவரைக்கும் முதலாவது உலக T20 கிண்ணத்தை 2007இல் வென்றதன் பின்னர் ஒருதடவை தானும் அரை இறுதிக்குள் இந்திய அணி சென்றதில்லை. அதை விடுங்கள், சுப்பர் 8 போட்டிகளை 2007இற்குப் பிறகு வென்றதே இம்முறை தானே.

அடுத்த பெரிய அணி - தென் ஆபிரிக்கா. இந்த உலக T20 ஆரம்பிக்கும்போது தரப்படுத்தலில் முதலாவது இடத்தோடு வந்த தென் ஆபிரிக்கா - இலங்கையைப் பிரிவு ரீதியிலான போட்டிகளில் வீழ்த்தியிருந்தது.

பலமான அணியாகவே இரண்டாம் சுற்றுக்கு வந்த தென் ஆபிரிக்கா வழமை போலவே எதிர்பார்த்திருக்கும் வேளைகளில் கவிழ்ந்து மூன்று போட்டிகளிலுமே தோற்று (நேற்று ஓர் ஓட்டத்தினால்) மோசமான பெறுபேறுகளோடும் அவமானத்தோடும் வெளியேறியுள்ளது.

நாளைய தினம் இடம்பெறும் முதலாவது அரை இறுதியில் இலங்கை அணி பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.

வெள்ளிக்கிழமை ஏற்கெனவே பிரிவு ரீதியிலான போட்டிகளில் சந்தித்துக்கொண்ட அவுஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் மீண்டும் சந்திக்கவுள்ளன.

இந்திய - பாகிஸ்தான் பெரும் கிரிக்கெட் மோதலை ரசித்த ரசிகர்களுக்கு மற்றொரு பெரும் மோதலாக இருக்கப் போகிறது இந்த இலங்கை - பாகிஸ்தானிய மோதல்.

தாய்நாட்டு ரசிகர்களின் ஆதரவைப் பலமாகக் கொண்டுள்ள இலங்கை

இனி சுப்பர் 8 போட்டிகளின் பெறுபேறுகள், முடிவுகளை சற்று நோக்கினோமானால், பல்லேகலையில் மோதிய நான்கு அணிகளில் இலங்கை தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டி முழுமையான பலத்தோடு அரையிறுதிக்கு வருகிறது.

இலங்கை அணி இப்போதிருக்கும் நிலையில் எந்த அணியையும் வீழ்த்தக் கூடிய பலமுடையதாகத் தெரிந்தாலும் முக்கியமான தருணங்கள் சில அணிகளுக்கெதிராக சறுக்கும் வரலாறு ரசிகர்களுக்கு சற்று அச்சம் தருகிறது.

அப்படியான அணிகளில் ஒன்றான பாகிஸ்தானைத் தான் நாளை இலங்கை சந்திக்கவுள்ளது.

துடுப்பாட்ட வரிசை திடமாக இருக்கிறது. ஆனால், மந்திரவாதி அஜந்த மென்டிஸ் தான் எல்லோரையும் குழப்புகிறார். சிம்பாப்வேயையும், மேற்கிந்தியத் தீவுகளையும் உருட்டிய அவர், இங்கிலாந்து, தென் ஆபிரிக்காவுக்கு எதிராகத் தடுமாறி இருந்தார். மஹேல ஜெயவர்த்தன இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் சொன்னதன் படி பாகிஸ்தான் இவரது பந்துவீச்சைப் பதம் பார்க்கலாம் என்பதனால் ரங்கன ஹேரத் விளையாடலாம் என்கிறார். சின்னப் பையன் அகில தனஞ்செய விளையாடுவார் எனவும் நம்பலாம்.

ஆனால் கடந்த இங்கிலாந்துடனான போட்டியில் தலைவரையே மாற்றி இலங்கை அணி குழப்பி இருப்பதால் எதிரணிகள் மட்டுமல்ல, ரசிகர்களுமே குழம்பி இருக்கிறார்கள்.

ரகசியமாக வைத்திருந்த காரணம் பின்னர் கசிந்து இலங்கை முகாமாலும் உத்தியோகபூர்வமாக இல்லாமல் மழுப்பலாக ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் பல வாதப் பிரதிவாதங்கள். பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டமையினால் ஏற்கனவே எச்சரிக்கைக்குள்ளாகி இருக்கும் மஹேலவுக்கு போட்டித் தடை வராமல் இருக்கவே சங்கக்காராவை அன்றைய போட்டியில் 'பெயருக்கு'த் தலைவராக நியமித்திருந்தார்களாம்.

ஆனால் அரையிறுதியில் இந்த விளையாட்டெல்லாம் நடக்காது; சீரியசாகவே இருப்போம் என்று மஹேல ஜெயவர்த்தன மறைமுக உறுதியளித்திருக்கிறார். துடுப்பாட்டத்தில் தலைவர் மஹேல ஜொலித்திருக்கிறார். மற்ற மூத்தவர்களான டில்ஷான், சங்கக்கார ஆகியோரும் ஓட்டங்களைக் குறைவில்லாமல் குவித்துள்ளார்கள். இந்த மூவருமே இத்தொடர் நடக்கையில் டுவென்டி 20 சர்வதேசப் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களைத் தாண்டியுள்ளார்கள்.

பந்துவீச்சில் வழமை போல மாலிங்க, மென்டிஸ் முன்னிற்க, மற்றவர்கள் தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்கிறார்கள்.

இலங்கை அணி விளையாடிய பிரிவில் இருந்த அணிகள் பெரியளவில் இலங்கைக்கு சவால் வழங்கவில்லை. எனவே இலங்கை அணி உதாசீனமாக நாளைய போட்டியை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதையே அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

அதிரடியும் அசுரபலமும் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகள் அணி - இலங்கையிடம் திணறித் தோற்றது. இங்கிலாந்தை வென்றாலும் கடைசி நேரத்தில் கொஞ்சம் தடுமாறி இருந்தது.  நியூசிலாந்துடன் இடம்பெற்ற போட்டியில் மிகவும் தடுமாறி தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டது. வாழ்வா சாவா என்ற நிலையிலிருந்து இலங்கை அணி - இங்கிலாந்தை வென்றதால் தப்பித்து இப்போது அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. உலகின் அதிரடி வீரர்கள் பலரைத் தம் வசத்துள் வைத்திருப்பதால் பெரும் பலத்தோடு தெரிந்த மேற்கிந்தியத் தீவுகளை அநேகர் இம்முறை கிண்ணம் வென்றெடுக்கக் கூடிய அணியாகக் கருதியதில் தப்பேதும் இல்லைத் தான்.

ஆனால் முதலில் அவுஸ்திரேலியாவிடம் கண்ட தோல்வியும் சூப்பர் 8 சுற்றில் தடுமாறித் தப்பித்துக்கொண்ட விதத்தையும் பார்த்தால் மேற்கிந்தியத் தீவுகள் கெய்ல், சாமுவேல்ஸ், சுனில் நரேன் ஆகிய மூவரிலேயே அதிகமாகத் தங்கி இருக்கிறது. அரையிறுதியில் அவுஸ்திரேலியாவிடம் தப்புவது கஷ்டம் தான். ஆனால் இந்த மூவரும் விஸ்வரூபம் எடுத்தால் பழிவாங்கும் சாத்தியமும் உள்ளது.

அசத்தும் ஆளுமையுடன் அவுஸ்திரேலியா

நியூசிலாந்துடன் பெற்ற Super Over வெற்றியானது உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. டரன் சமி தோல்வியுற்றுக் கிடந்தது சோர்ந்து போய், ஒற்றுமை இல்லாமல் சிதறிக்கிடந்த அணியை இப்படி ஓர் அச்சுறுத்தும் அணியாக மாற்றியிருப்பதற்கு கிடைத்த பரிசாக இந்த அரையிறுதி வாய்ப்பைக் கருதலாம்.

துரதிர்ஷ்டம் துரத்தும் நியூசிலாந்து

நடப்பு சாம்பியன்களான இங்கிலாந்து - நியூசிலாந்தை வென்றாலும், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளிடம் கண்ட தோல்விகளோடு வெளியேறி இருக்கிறது. லூக் ரைட் பெரியளவில் ஓட்டங்களைக் குவிக்க, மோர்கனும் அலெக்ஸ் ஹேல்சும் சராசரியாக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தார்கள். இலங்கை அணியுடனான இறுதியாக இடம்பெற்ற போட்டியில் மட்டும் சமித் படேல் துடுப்பாட்டத்தில் கலக்கியிருந்தார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து ஸ்டீவ் பின்னையே அதிகம் நம்பியிருந்த இங்கிலாந்துக்கு தலைவர் ப்ரோட்டும் கிரேம் ஸ்வானும் விக்கெட்டுக்களை எடுத்திருந்தாலும் கூட, அணியின் வெற்றிக்கு இன்னும் அதிகமாகத் தேவைப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து அணிக்குத் திடமான ஓர் ஆரம்பமும், இன்னொரு சிறப்பான சுழல் பந்துவீச்சாளரும் தேவைப்படுகிறது. கெவின் பீற்றர்சனை மீண்டும் இங்கிலாந்துக் குழாமுக்கு அழைத்திருப்பதன் மூலம் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வரட்சி புலப்படுத்தப்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டசாலிகள் நியூசிலாந்துக்கு பூரணப்படுத்தல் என்பது தான் குறையாக உள்ளது. கிட்ட வந்தும் இரு போட்டிகளில் வெற்றி அவர்களை விட எட்டிப் போய் விட்டது. முடிவுகளின்படி அவர்கள் மூன்று போட்டியிலுமே தோற்றதாகத் தெரிந்தாலும், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்குமே நியூசிலாந்து கொடுத்த சவால்கள் அவர்கள் உண்மையில் அரையிறுதிக்கு வந்தே இருக்கவேண்டிய அணி என்று யாரும் பரிதாபப்படக்கூடிய அணி. இந்த அணியில் என்ன இல்லை? எது குறைபாடு என்று புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது.

ஓட்டங்களைக் குவித்துள்ளார் பிரெண்டன் மக்கலம்... அணித்தலைவர் ரொஸ் டெய்லர், ஜகொப் ஒராம் ஆகியோரும் நூறு ஓட்டங்களை இத்தொடரில் பெற்றுள்ளார்கள். பந்துவீச்சில் சௌதி விக்கெட்டுக்களை எடுத்திருந்தாலும், ஓட்டங்களை அதிகமாகவே கொடுத்திருந்தார் (இவரை Super over மற்றும் முக்கிய நேரங்களில் அதிகமாக டேலர் நம்பியது வீணாகிப் போனது). எதிர்பார்த்திருந்த வெட்டோரி, நேதன் மக்கலம் ஆகியோர் விக்கெட்டுக்களை எடுக்கமுடியாமல் போனது பெரும் குறையாகிப்போனது.

அதை விடத் தேவையான பொழுதுகளில் ஆதிக்கம் செலுத்தி முடித்துவைக்கக் கூடிய ஒருவர் இருக்கவில்லை என்பதே நியூசிலாந்து துரதிர்ஷ்டத்தோடு வெளியேறியுள்ளது.

Super Over ஐத் தவிர்த்தால், ஒரேயொரு தோல்வி (இரண்டு சமநிலை முடிவுகளைப்) பெற்றும் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்து செல்லும் நியூசிலாந்து அணி தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டி இருக்கும்.

கொலைவெறிப் பிரிவாகத் தென்பட்ட பிரிவு 2இல், எல்லாப் போட்டிகளுமே எதிர்பார்க்கப்பட்ட போட்டிகள். அதிலும் இரு பெரும் கிரிக்கெட் யுத்தங்கள் ஒரே நாளில் இடம்பெற்றன... இந்தியா எதிர் பாகிஸ்த்தான், அவுஸ்திரேலியா எதிர் தென் ஆபிரிக்கா...

ரசிகர்கள் அலைபாய்ந்த இந்த இரு போட்டிகளும் துரதிர்ஷ்டவசமாக வெற்றிபெற்ற அணிகளுக்கு மிக இலகுவாக வெற்றியாக முடிந்து போனது ரசிகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான்.

தொடரின் பலம் வாய்ந்த அணியாகத் தெரிந்த அவுஸ்திரேலியா, இந்தியாவையும் தென் ஆபிரிக்காவையும் வாரிச் சுருட்டிய மாதிரிக்கு அரையிறுதி என்ன இறுதிக்கே செல்வது நிச்சயமாகத் தெரிந்தது. ஆனாலும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய ஆட்டம் இவர்களிடமும் அடைக்க வேண்டிய சில ஓட்டைகள் இருப்பதைக் காட்டியுள்ளது.

இறுதியாக மூன்று அணிகள் தலா இரண்டு வெற்றிகளுடன் இறுகி நிற்கும் நிலையில், நிகர ஓட்ட சராசரிப் பெறுமானத்தில் முந்தவேண்டிய நிலையில் மைக்கேல் ஹசி தனியே நின்று போராடி கைகொடுத்தார்.

இப்போதே தொடரின் சிறப்பாட்டக்காரராகத் தன்னை உறுதிப்படுத்தி நிற்கும் ஷேன் வொட்சன்

தொடர் முழுவதும் கலக்கி, நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாகப் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை வென்று உலக சாதனை படைத்த ஷேன் வொட்சன் ஒரு மாற்றத்துக்காக நேற்று சறுக்கியிருந்தார்.

வொட்சன், வோர்னர், ஹசியுடன் அவுஸ்திரேலியத் துடுப்பாட்டம் நின்று விடுமோ என்ற அபாயம் நேற்றும் வெளிப்பட்டுள்ளது. அத்துடன் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறுவதும் நேற்று பாகிஸ்தானினால் மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டே ஓவர்களை மட்டும் வேகப்பந்துவீச்சாளருக்குக் கொடுத்து சுழலினால் அவுஸ்திரேலியாவைக் கட்டுப்படுத்திய விதம் மூலம் மொஹம்மத் ஹபீஸ் சுனில் நேரின், சாமுவேல் பத்ரி, மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோருக்கு ஒரு குறிப்பை வழங்கியிருக்கிறார்.

அவுஸ்திரேலியா இன்னமும் டேவிட் ஹசியை விளையாட விடாதது பெரும் மர்மமாகவே இருக்கிறது.

அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சும் வோட்சனை மையப்படுத்தியுள்ளது. ஆனால் மிட்செல் ஸ்டார்க்கும், சூப்பர் 8 இல் இருந்து அணியில் இடம்பிடித்துள்ள சேவியர் டோஹெர்ட்டியும் விக்கெட்டுக்களை எடுத்து வருகிறார்கள்.

இறுதி வாய்ப்புக்கள் உறுதியாக இருந்தாலும், கிண்ணம் வெல்ல இன்னும் செம்மை தேவை.

இந்தியாவுடனான வைரிப் போட்டியில் தோற்றதன் மூலம் இன்னமும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியொன்றில் இந்தியாவை வீழ்த்த முடியவில்லை என்ற நிலை தொடர்ந்தாலும், தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை சுழலின் மூலம் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பைத் தனதாக்கியுள்ளது பாகிஸ்தான்.

துடுப்பாட்டத்தில் முதல் மூன்று வீரர்களும் குறிப்பாக நம்பகமாக ஆடிவரும் நசிர் ஜம்ஷேட்டும், வேகமாக ஓட்டங்கள் குவிக்க அக்மல் சகோதரர்களும், பந்துவீச்சில் அஜ்மலும், அவருக்குத் துணையாகத் தேவையான போதுகளில் மற்றவர்களும் சேர்ந்து ஒரு முழுமையான சகலதுறை அணியாக பாகிஸ்தானை உருவாக்கியுள்ளார்கள்.

இவர் ஏன் அணியில் இல்லை என்று டேவிட் ஹசியைப் போலவே எதிர்பார்க்கப்பட்ட அப்துல் ரசாக் நேற்றைய போட்டியை மாற்றியதில் முக்கிய பாகம் வகித்தார். இலங்கையை நாளை அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடிய அணி இது.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திலும் பாகிஸ்தான் இதே மைதானத்தில் (பிரிவு ரீதியிலான போட்டியொன்றில்) இலங்கை ரசிகர்களின் மனதை உடைத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். ஆனால் இந்த அணியில் இருக்கும் பெரிய மர்மம் எப்போது இவர்களாகவே தோற்றுப்போவார்கள் என்பது தான்.

நியூசிலாந்து போல இன்னொரு துரதிர்ஷ்டம் வாய்ந்த அணி இந்தியா. ஒரேயொரு போட்டியில் தான் தோற்றது. அவுஸ்திரேலியாவிடம் வாங்கிய அந்தப் பாரிய தோல்வியும், நேற்று தென் ஆபிரிக்காவிடம் திணறி ஒரே ஓர் ஓட்டத்தினால் வென்றதும் நிகர ஓட்ட சராசரிப் பெறுமானத்தில் மூன்றாம் இடத்துக்குக் கொண்டு வந்து வெளியேற்றி விட்டது.

தலைவராக டோணி பல சமயங்களில் எடுத்த தவறான முடிவுகளும், விராட் கொஹ்லி, பாலாஜி, யுவராஜ் சிங் ஆகிய மூவர் தவிர மற்ற எவரும் பிரகாசிக்காததும் தான் இந்தியாவின் வீழ்ச்சிக்குப் பிரதான பங்காற்றின.

வீரர்களின் தனிப் பெறுபேறுகளைப் பார்த்தால் இந்த அணியின் வெளியேற்றம் சரி தான் எனத் தோன்றும்.

டோணி தெரிவு செய்த அணியும், துடுப்பாட்ட வரிசை மாற்றங்களும் நீண்ட காலம் விவாதிக்கப்படும்.

தென் ஆபிரிக்கா - இவர்களை Chokers என்று அழைப்பது பொருத்தமே என்று மீண்டும் நிரூபித்து மூன்று போட்டிகளிலும் தோற்று வெளியேறியுள்ளார்கள். முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வி... நேற்றைய போட்டியில் கூட வெல்லும் வாய்ப்பிருந்தும் ஓர் ஓட்டத்தால் தோற்றத்தை என்னவென்பது?

துடுப்பாட்டத்தில் டுமினி ஒருவரே மொத்த ஓட்டங்கள் நூறைத் தாண்டினார் என்பதும் அதிக விக்கேட்டுக்கலான ஏழினை கலிஸ் தான் பெற்றுக்கொண்டார் என்பதும் தென் ஆபிரிக்கா முழுமையாகத் தடுமாறியதைக் காட்டி நிற்கிறது. திறமை இருந்தும் வெளிப்படாதவிடத்து அது வீணே.

Super 8 இன் பின்னே

கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்
ஷேன் வொட்சன் - அவுஸ்திரேலியா  242
பிரெண்டன் மக்கலம் - நியூசிலாந்து  212
லூக் ரைட் - இங்கிலாந்து   193
விராத் கொஹ்லி - இந்தியா 185
மஹேல ஜெயவர்த்தன - இலங்கை 168

அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியோர்
ஷேன் வொட்சன் - அவுஸ்திரேலியா 11
லக்ஷ்மிபதி பாலாஜி - இந்தியா 9
அஜந்த மென்டிஸ் - இலங்கை 9
மிட்செல் ஸ்டார்க் 9

களைகட்டப் போகும் ஆண்களுக்கான அரையிறுதிகள் இடம்பெற முதல் அதே நாட்களில் அதே மைதானத்தில் இடம்பெறப் போகின்ற மகளிர் அரை இறுதிப் போட்டிகளும் சுவாரஸ்யமானவை...

ஆசிய அணிகள் மூன்றுமே வெளியேறி இருக்கின்றன.

நாளை இங்கிலாந்து எதிர் நியூசிலாந்து. எந்தவொரு போட்டியிலும் தோற்காத இங்கிலாந்து மகளிர் அணி முன்பு வென்ற கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றும் எண்ணத்துடன் வருகிறது.

வெள்ளிக்கிழமை இரவு மோதிக்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் - அவுஸ்திரேலியா ஆண்களுக்கு முன்னதாக, இதே நாடுகளின் மகளிர் அணிகள் மோதிக்கொள்ளும் அரையிறுதி. இதில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா அண்மைக்காலத்தில் துரித வளர்ச்சி கண்டுவரும் மேற்கிந்திய மகளிரின் சவாலை எப்படி முறியடிப்பர் எனப் பார்க்கலாம்.

You May Also Like

  Comments - 0

  • S.Ananthan Wednesday, 03 October 2012 11:34 PM

    இறுதி போட்டி இலங்கை எதிர் மேற்கிந்தியத்தீவுகள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .