
உலகக்கிண்ணம் 2014 இன்னும் இரண்டு போட்டிகளோடு நிறைவுக்கு வருகிறது.
.jpg)
அந்த இரண்டு போட்டிகளில் இந்த உலகத்தின் புதிய கால்பந்து சம்பியன் யாரென்று உலகம் அறிந்துகொள்ளும்.
இந்த ஞாயிறு நள்ளிரவு தாண்டி, திங்கள் அதிகாலைவேளையில் இடம்பெறும் இறுதிப்போட்டியில் மோதவுள்ள ஆர்ஜென்டீன - ஜேர்மனி அணிகளில் எந்த அணிக்குக் கிண்ணம் என்பது தெரிய வரும்.
இந்தப் பகுதியில் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பிக்கு முன் குறிப்பிட்டிருந்ததைப்போல...
அதிலும் இம்முறை 1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக பிரேசிலுக்குத் திரும்புகின்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் எப்படியாவது வென்று பெருமைமிகு கிண்ணத்தைத் தங்கள் நாட்டிலேயே வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்படும் பிரேசில் ரசிகர்கள் ஒரு பக்கம், இதற்கு முதல் இறுதியாக தென் அமெரிக்காவில் நடந்தபோது சொந்தமண்ணில் சம்பியனான ஆர்ஜென்டீனாவும் இம்முறை தனது கண்டத்திலே நடக்கும் போட்டியை எதிர்பார்த்துள்ளது.
இந்த ஆண்டின் உலகக்கிண்ண இறுதியில் பிரேசிலும் ஆர்ஜென்டீனாவும் விளையாடும் என்று உலகக்கிண்ணத்துக்கான குழுக்கள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் விமர்சகர்கள் தெரிவிக்கும் அதே நேரம், பந்தயக்காரர் இப்போதே ஜேர்மனியும் ஆர்ஜென்டீனாவும் இறுதியில் சந்திக்கும் என்று ஆரூடம் கூறுகிறார்கள்.
ஜேர்மனி தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஐரோப்பிய கால்பந்து வல்லரசு. எப்போதுமே உலகக்கிண்ணம் என்று வந்தால் ஜேர்மனி அசுர பலம் கொண்டுவிடும்.
ஐரோப்பிய பாரம்பரிய கால்பந்து வல்லரசு ஜேர்மனியும் தென் அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து கால்பந்தில் முன்னணியில் திகழும் ஆர்ஜென்டீனாவும் இறுதிப்போட்டியில் மோதக் காத்துள்ளன.
கடந்த கட்டுரையில் எழுதியிருந்ததைப் போலவே அதிக வாய்ப்புள்ள இவ்விரு அணிகளும் மோதுவதானது எதிர்பார்க்கப்பட்டதே.
ஐரோப்பிய - தென் அமெரிக்க இறுதி மோதல் சுவாரஸ்யத்தை எப்போதும் தரவல்லது.
இறுதியாக 2002ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் ஜேர்மனியும் பிரேசிலும் மோதியிருந்தன.
ஆனால் தென் அமெரிக்கக் கண்ட நாடுகளில் இதுவரை ஓர் ஐரோப்பிய அணியும் கிண்ணம் வென்றதில்லை.
இறுதியாக 1978இல் ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற உலகக்கிண்ணத்தையும் இறுதிப்போட்டியில் நெதர்லாந்தைத் தோற்கடித்து ஆர்ஜென்டீனா கைப்பற்றியிருந்தது.
இன்னொரு பக்கம், இம்முறை பலபேர் ரசிக்கக் காத்திருந்தது போட்டிகளை நடத்தும் நாடும் ஐந்து தடவை உலகக்கிண்ணத்தை வென்ற நாடுமான பிரேசில் - ஆர்ஜென்டீனாவை சந்திக்கும் இறுதிப்போட்டி (இதுவரை வரலாற்றில் இவ்விரு அணிகளும் ஒரே உலகக்கிண்ணத்தின் அரையிறுதிக்குத் தெரிவானதே இம்முறை தான் முதன் முறை).
ஆனால் ஆர்ஜென்டீனா எதிர் ஜேர்மனி உலகக்கிண்ண இறுதிப்போட்டி 3ஆவது தடவையாக இடம்பெறுகிறது.
1986 - மெக்சிக்கோவில் - ஆர்ஜென்டீனா 3-2 என வெற்றிகொண்டு கிண்ணத்தை வசப்படுத்தியது.
1990 - இத்தாலியில் - ஜேர்மனி (அப்போது மேற்கு ஜேர்மனி)1-0 என்று வென்றது.
இப்போது மூன்றாவது இறுதிப்போட்டி.
இறுதியாக இடம்பெற்ற இரு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் ஆர்ஜென்டீனா அணி காலிறுதிப் போட்டிகளில் ஜேர்மனியினாலேயே தோல்விகண்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இம்முறை சந்திக்கும் இவ்விரு அணிகளில் ஜேர்மனி வென்றால் ஜேர்மனிக்கு இது 4ஆவது உலகக்கிண்ணம். ஆர்ஜென்டீனா வென்றால் 3ஆவது உலகக்கிண்ணம்.
எப்படியோ முன்பே உலகக்கிண்ணம் வென்ற எட்டு அணிகளில் ஒன்றுக்கே உலகக்கிண்ணம் மீண்டும் செல்வது உறுதியாகின்றது.
இவ்விரு அணிகளும் தத்தம் அரையிறுதிப் போட்டிகளில் பிரேசிலையும் நெதர்லாந்தையும் ஒன்றுக்கொன்று மிக வித்தியாசமான விதத்திலே தோற்கடித்திருந்தாலும் இறுதிப்போட்டி இறுக்கமானதாக, இறுதிவரை போராட்டம் நிறைந்ததாகவே அமையும் என விற்பன்னர்கள் கருதுகின்றனர்.
ஆர்ஜென்டீனா - நெதர்லாந்து போட்டி மிக விறுவிறுப்பான இறுதி நிமிடம் வரை முடிவுகளுக்காக மோதும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டதே.
அதேபோலவே ஜேர்மனி - பிரேசில் போட்டியும் அமையலாம் என்று அநேகர் நம்பியிருந்தனர்.
நெய்மார், தியாகோ சில்வா ஆகியோரின் இன்மை பிரேசில் அணியைப் பெரிதாகப் பாதிக்கும் என்று சொல்லியிருந்தேன். ஆனால் ஜேர்மனி கோல்களை மழையாகப் பொழிய, பொழிய நம்பிக்கையீனத்துடன் இப்படி பலமாக அடிவாங்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
ஜேர்மனி 7 -1 என வெற்றி பெற்று சாதனை படைத்த போட்டியானது பல புதிய சாதனைகளை நிகழ்த்தியது.
பிரேசில் இப்படியான பெரிய தோல்வியை 80 ஆண்டுகளுக்கு கண்டதே இல்லை.
அரையிறுதியில் ஓர் அணியால் பெறப்பட்ட அதிக கோல்கள்.
பிரேசில் அணி இதற்கு முதல் 1920இல் உருகுவே அணிக்கெதிராக 6-0 எனத் தோற்றதே பெரிய வித்தியாசமாக இருந்தது.
இடைவேளை நேரத்தின்போதே 5-0 என பின்னணியில் இருந்த பிரேசிலினால் அதற்குப் பிறகு மீள முடியாது என்பது தெரிந்தே இருந்தது.
ஜேர்மனியின் அசகாய சூரத்தனமான அதிரடி விளையாட்டு எந்த வகையிலும் பிரேசிலுக்கு இடம் கொடுக்கவில்லை.
முல்லரின் ஆரம்பம், மிரோஸ்லாவ் க்லோசேயின் உலகக்கிண்ண சாதனை முறியடிப்பு (16ஆவது உலகக்கிண்ண கோலைப் பெற்றதன் மூலம் பிரேசிலின் ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்), அதன் பின் 4 நிமிடங்களில் இரு கோல்களைப் பெற்ற டோனி க்ரூஸ் என்று கோல்களை அதிரடியாகப் பெற்றுக்கொள்ள பிரேசில் அணி சிதைந்து போனது.
90ஆவது நிமிடத்தில் பிரேசில் அணியின் இளைய வீரர் ஒஸ்கார் பெற்ற கோலானது ஆறுதல் கோலாக அமைந்தாலும் இந்தத் தோல்வி தந்த சோகம் பிரேசிலின் தேசிய சோகம் போலானது.
வீரர்களும் ரசிகர்களும் அழுத காட்சிகள் உலகம் முழுவதும் இன்னும் பேசும்படங்கள் ஆகியிருக்கின்றன.
இந்த அவமானகரத் தோல்வியானது பிரேசிலின் மிக நீண்டகால வடுவாக விளங்கப்போகிறது.
இதிலிருந்து மீளவும் மீண்டும் ஒரு பலமான அணியாக வளம் வரவும் பிரேசிலுக்கு நம்பிக்கையும் மனத்திடமும் அதிகம் தேவைப்படுகிறது.
இன்று இடம்பெறவுள்ள (எமது நேரப்படி அதிகாலை 1.30) 3ஆம் இடத்துக்கான போட்டியிலும் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளும் வேளையில் கூட வீரர்கள் நிச்சயம் 7-1 ஐப் பற்றி மனதில் அழுத்தத்தோடு தான் விளையாடுவர் என்பது நிச்சயம்.
-----------
ஆர்ஜென்டீனா அணியானது நெதர்லாந்தை எதிர்கொண்டாடிய அரையிறுதி இரு அணிகளுமே எச்சரிக்கையாக விளையாடிய போட்டி.
மெஸ்ஸி ஒரு பக்கம், ரொப்பென் மறுபக்கம் என்பதனால் இரண்டு அணிகளுமே மிக நிதானமாக கோல்கள் தமக்கு எதிராக அடிக்கப்படாமல் இருப்பதற்கு முதலில் வியூகங்களை வகுத்த பின்பே கோல்கள் பெற முயற்சித்தன.
ஆர்ஜென்டீன அணிக்கு ஒப்பீட்டளவில் வாய்ப்புக்கள் அதிகம் வந்தாலும் நெதர்லாந்து சிறப்பாகத் தடுத்து ஆடியது.
75ஆம் நிமிடத்துக்குப்பின் நெதர்லாந்து கொஞ்சம் வேகமான விளையாட்டைக் காட்டப் பார்த்தது...
ஆனால் ஆர்ஜென்டீன பின் காப்பு அரணும் கோல் காப்பாளர் செர்ஜியோ ரொமெரொவும் சிறப்பாக அவற்றைத் தடுத்தனர்.
90 நிமிடங்களுக்குப் பிறகு மேலும் மேலதிக 30 நிமிடம்... அதிலும் கோல்கள் இல்லை.
அதன் பின்னர் தான் பலருக்கும் இதயத் துடிப்புக்களையே நிறுத்தக்கூடிய பெனால்டி உதைகள்.
பலரும் எதிர்பார்த்த கோல் காப்பாளர் மாற்றத்தை ஏனோ இந்த முக்கியமான போட்டியில் நெதர்லாந்து நிகழ்த்தவில்லை.
ஆர்ஜென்டீனா 4 கோல்களையும் குறிபார்த்து சரியாக அடித்துத் தள்ள, நெதர்லாந்தின் இரு கோல்களை ஆர்ஜென்டீனிய கோல் காப்பாளர் ரொமெரொ அநாயசமாகத் தடுத்து அன்றைய நாளின் கதாநாயகன் ஆனார்.
இதன் மூலம் 5ஆவது உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது ஆர்ஜென்டீனா. ஜேர்மனிக்கு இது எட்டாவது உலகக்கிண்ண இறுதி.
நாளைய இறுதிப்போட்டிக்கான அலசலுக்கு முன்பாக மூன்றாமிடத்துக்காக இன்று மோதும் அணிகள் பற்றி.
பிரேசில் அணி 3ஆம் இடத்துக்கான போட்டியில் விளையாடும் என்று பலரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
இதுவரை தான் வென்ற 5 உலகக் கிண்ணங்களைத் தவிர பிரேசில் இரு தடவைகள் (இறுதியாக 1978இல்) மூன்றாம் இடத்தையும் 1974இல் நான்காம் இடத்தையும் பெற்றது.
இதுவரை உலகக்கிண்ணம் வெல்லாத நெதர்லாந்து (மூன்று தடவை இறுதிப் போட்டிகளில் தோற்றுள்ளது) இதுவரை ஒரே ஒரு தடவை 4ஆம் இடத்தை 1998இல் பெற்றது.
மிக எதிர்பார்க்கப்பட்டு அரையிறுதியில் தோற்றுப்போன இந்த அணிகள் இரண்டுமே அந்தத் தோல்வியின் கனதியைப் போக்க இன்று எப்படியாவது 3ஆம் இட வெற்றியைப் பெற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்திலுள்ளன.
அதிலும் குறிப்பாக நெதர்லாந்து...
வான் பேர்சி, ரொப்பன், ஸ்னைடர், டீ யொங் போன்ற மூத்த வீரர்களுக்கு இது இறுதி உலகக்கிண்ணமாகக் கூட அமையலாம் என்பதால் இந்த கௌரவத்தை வழங்க அந்த அணி முயலும்.
மறுபக்கம் அவர்களது பயிற்றுவிப்பாளர் வான் கால், மன்செஸ்டர் யுனைட்டட் அணியைப் பொறுப்பேற்க முதல் இனி இந்த ஆறுதல் வெற்றியையாவது பெற்றுக்கொண்டு செல்ல விரும்புவார்.
ஆனால், செம்மஞ்சள் அணியை விட போட்டிகளை நடத்தும் மஞ்சள் அணிக்கு தங்கள் நாட்டின் பெருமையைப் பேண ஒரு வெற்றி வேண்டும்.
இந்த பிரேசில் அணியை எதிர்காலத்துக்கான அணியென்று நிறுவி விடைபெறும் தறுவாயில் இருக்கும் பயிற்றுவிப்பாளர் ஸ்கொலாரி இறுதியாக ரசிகர்களின் வாழ்த்துக்களோடு விடைபெற ஆசைப்படுவார். (அரையிறுதியின் பின்னர் ரசிகர்கள் இவர் மீது தம் வெறுப்பை வெளிக்காட்டியது குறிப்பிடத்தக்கது).
அடுத்து காயமுற்றுள்ள நெய்மாருக்காக ஒரு வெற்றி.
ஒஸ்கார், வில்லியன் போன்ற இளைய வீரர்களுக்கு மட்டுமல்ல அவமானமான தோல்வியோடு நோந்துபோயுள்ள ரசிகர்களுக்கும் இன்றைய வெற்றி ஓர் அவசியத் தேவை.
செம்மஞ்சளா மஞ்சளா என்பது இவ்விரு அணிகளும் தத்தமது தோல்விகளை மனதில் எடுத்துக்கொண்ட விதங்களிலும் இன்றைய போட்டியை எதிர்கொள்ளும் நிலையிலும் தங்கியிருகிறது.
இதையெல்லாம் விட மிக முக்கியமான உலகக்கிண்ண இறுதிப்போட்டி பற்றிய விரிவான, விவரமான அலசல் இன்னும் சில மணி நேரங்களில் சுவாரஸ்யமான புதிய தரவுகள் + தகவல்களுடன், இதே பகுதியில்...
சந்திப்போம்.
அதுவரை 3ஆம் இடம் பற்றி மட்டும் சிந்தித்திருங்கள்...
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.