Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவை வீழ்த்தக் கூடியது இலங்கை அணியே
அவுஸ்திரேலிய, இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியாவில் இலங்கை அணி அண்மைக் காலமாக லாபகரமாக அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி வருகிறது. அந்த வரிசையில் இந்த போட்டியும் கூட அமைந்தது. இந்த தொடரில் இலங்கை அணி - அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்ற இரண்டாவது வெற்றி இது. முதலில் அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடியது. பீற்றர் போரஸ்டின் (104) முதல் சதத்துடன் அவுஸ்திரேலிய அணி வலுவான வெற்றி பெறக் கூடிய ஓட்ட இலக்கைப் பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் 27 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தாலும் நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக பீற்றர் பொரஸ்ட், மைக்கல் கிளார்க் (72) ஆகியோருடைய இணைப்பாடம் 157 ஓட்டங்களை தந்தது. டேவிட் ஹஸ்ஸி ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்கள். பந்து வீச்சில் அஞ்சலோ மத்தியூஸ் 2 விக்கெட்டுகள். இறுதியில் அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 280 ஓட்டங்களைப் பெற்றது. பதலளித்த இலங்கை அணி 4 பந்துகள் மீதமிருக்க 283 ஓட்டங்களைப் பெற்றது. மஹேல ஜெயவர்தன, தினேஷ் சந்திமால் ஆகியோருடைய துடுப்பாட்டம் பெரிதும் இலங்கை அணிக்கு கை கொடுத்தது. மஹேல 85 ஓட்டங்களையும், சந்திமால் 80 ஓட்டங்களையும் பெற்றனர். சந்திமால் இந்த தொடரில் இரண்டாவது 80 ஓட்ட பெறுதி. சதமாக மாற்றக் கூடிய வாய்ப்பு இருந்தது இரண்டு தடவைகளும். இப்படியான நேரத்தில் வீரர்கள் கொஞ்சம் சுயநலமாக விளையாடலாமே என்று எண்ணத் தோன்றுகிறது. அணிக்கும் அது கை கொடுக்கும். அவர்களுக்கும் அது நல்லதே. விறு விறுப்பான போட்டி. 60 பந்துகளில் 57 ஓட்டங்கள் என்ற நிலையில் 4 விக்கெட்டுகள் வீழ்ந்திருந்தன. அவுஸ்திரேலிய அணி போகப்போக நன்றாகவும் இறுக்கமாகவும் பந்து வீச - பந்துகளை விட ஓட்டங்கள் அதிகரிக்க தொடங்கின. இந்த நிலையில் சந்திமால் ஆட்டமிழக்க, 6 ஓவர்களில் 39 ஓட்டங்கள் என்ற நிலையில் போட்டி இன்னும் விறு விறுப்பாக மாறியது. அடுத்த ஓவரில் மஹரூப் ஆட்டமிழக்க - திசர பெரேரா களமிறங்கினார். அவரின் அதிரடி கை கொடுத்தது. 9 பந்துகளில் 14 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் மத்தியூஸ் ஆட்டமிழந்தார். இவருக்கு இது ஒரு பிரச்சினையாக உள்ளது. போட்டிகளை நிறைவு செய்யாமல் ஆட்டமிழப்பது. சிலவேளைகளில் பொறுப்பில்லாத துடுப்பாட்ட பிரயோகம் போன்று கூட தென்படும். மத்தியூஸ் அதை திருத்திக் கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு பந்துகளில் 10 ஓட்டங்களை திசர பெரேரா பெற வெற்றி இலகுவானது. இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் வென்றது. சகலதுறை வீரர்கள் அணிக்குள் இருப்பது நன்று என்பது இந்த போட்டியின் மூலம் மிகத் தெளிவானது. போட்டியின் நாயகனாக மஹேல ஜெயவர்தன தெரிவானார். இந்த வெற்றியின் மூலமாக இலங்கை அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்தது. 15 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
இந்திய அணிக்கு தோல்வி; சர்ச்சையான ஆட்டமிழப்புகள்
மீண்டும் ஓர் அவுஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி. சர்ச்சைகளை தந்த போட்டி. இந்திய அணிக்கு எதிராக போட்டி அமைந்தது என்ற முறைப்பாடுகள் நிறைந்தனவாக அமைந்தது. ஆட்டமிழப்பு வழங்க முடியுமா அல்லது வழங்க முடியாதனவா என்ற வாத - பிரதி வாதங்கள் நிறைந்தனவாக அமைந்தன. இந்த போட்டியில் தோல்வியடைந்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட முழுமையாக இழக்க வேண்டும் என்ற நிலையில் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டி நிச்சயம் என்ற நிலையில் அவுஸ்திரேலிய அணியும் களமிறங்கின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 252 ஓட்டங்களைப் பெற்றது 9 விக்கெட் இழப்பிற்கு. டேவிட் வோர்னர் 68 ஓட்டங்கள். டேவிட் ஹஸ்ஸி 54 ஓட்டங்கள். மத்தியூ வடே 56 ஓட்டங்கள். டேவிட் ஹஸ்ஸியின் ஆட்டமிழப்பில் ஒரு சர்ச்சை உருவானது. ஓட்டம் ஒன்றை பெற எத்தனித்த போது ரெய்னா களத் தடுப்பில் ஈடுபட்டு பந்தை எறிய, நடுவர் பக்கமாக ஓடிச் சென்ற ஹஸ்ஸி பந்தை கையால் தடுத்தார். ஆட்டமிழந்ததாக கோர, நடுவர்கள் கலந்தாலோசித்து விட்டு மூன்றாவது நடுவரின் தீர்ப்புக்கு விட்டனர். தன்னை பாதுகாக்கவே அவ்வாறு செய்தார் என்ற அடிப்படையில் ஆட்டமிழப்பு இல்லை என்ற தீர்ப்பளிக்க - டோனி நடுவர்களுடன் மீண்டும் விவாதித்தார். ஆட்டமிழப்பு வழங்கப்படவில்லை. இந்த ஆட்டமிழப்பு பற்றி இரு பக்க வாதங்களும் கிரிக்கெட் விற்பனர்களிடம் இருந்து வந்துள்ளன. விதிமுறை அவ்வாறு செய்தால் ஆட்டமிழப்பு என்று சொன்னாலும், காயமடையாமல் பாதுகாக்க தடுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இங்கே வாதம் அவர் பாதுகாப்புக்காக தடுத்தார அல்லது ஆட்டமிழப்பை தடுக்க தடுத்தார என்பதே.
இந்திய அணியின் பந்து வீச்சில் விரேந்தர் சேவாக் 3 விக்கெட்டுகளையும், பிரவீன் குமார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இறுதிப் பத்து ஓவர்களில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசி ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்த வெற்றி பெறலாம் என்ற நிலை உருவானது. ஆனால் துடுப்பாட்டம் வழமை போன்று கைவிட 165 ஓட்டங்களுக்கு 39.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மீண்டும் ஒரு சர்ச்சை. சச்சின் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தது. வேகமான ஓர் ஓட்டத்தை பெற எத்தனித்து சச்சின் பந்து வீச்சு முனையில் இருந்து ஓட, அந்த பந்தை ப்ரெட் லீ எடுக்க முனைந்து ஓடி இடையில் நின்றுவிட சச்சினுக்கு நேராக ஓட முடியாமல் தடுமாறி அவரிடமிருந்து தப்பித்து ஓட விக்கெட்டுகள் தகர்க்கப் பட்டு ஆட்டமிழந்தார். அதிருப்தியை வெளிப்படுத்தி வெளியேறினார். இந்த ஆட்டமிழப்பும் சர்ச்சையை கிளப்பியது. விதி முறைகளின்படி ஆட்டமிழப்பு என்றாலும் ப்ரெட் லீ குறுக்க ஓடியது தவறு என்ற பேச்சுக்கள் வந்தன. இலங்கை அணியுடனான போட்டியில் நடந்த சம்பவம் போன்று ஏன் இங்கே நடைபெறவில்லை? நடுவர்கள் ஏன் நேரடியாக ஆட்டமிழப்பு வழங்கினர்? ஏன் அவுஸ்திரேலிய அணித்தலைவரிடம் பின் வாங்குமாறு கோரவில்லை? இப்படி பல கேள்விகள் உருவாகின. அதுவும் சச்சின் - இலங்கை அணியுடனான போட்டியில் ஆட்டமிழப்பை பின் வாங்க காரணமானவர். அண்மைக் காலமாக இந்திய அணி இவ்வாறான விட்டுக்கொடுப்புகளை செய்துள்ள நிலையில் இந்த கேள்விகளில் நியாய தன்மை உள்ளதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இந்த கனவான் தன்மை (ஸ்பிரிட்) பேணப் படுகிறதா? விதி முறைகளை மட்டுமே பின் பற்றினால் இந்த பிரசினைகள் இல்லாமல் போக வாய்ப்புகளும் உள்ளன. இந்திய அணி சார்பாக கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர் அஷ்வின். 26 ஓட்டங்கள். பந்து வீச்சில் ஷேன் வொட்சன், பென் ஹில்பான்ஹோஸ், சேவியர் டோஹர்ட்டி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக டேவிட் வோர்னர் தெரிவானார். இந்த வெற்றியின் மூலமாக அவுஸ்திரேலிய அணி போனஸ் புள்ளியுடன் 5 புள்ளிகளைப் பெற்று 19 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
இலங்கை அணியை தோற்கடித்து தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் இந்திய அணி
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான குழுநிலை கடைசிப் போட்டி ஆரம்பமாக முன் இந்திய அணி பெறுவதற்கு கஷ்டமான ஓர் இலக்கு வைக்கப்பட்டது. இலங்கை அணி பெறும் ஒட்ட எண்ணிகையை 40 ஓவர்களில் பெற வேண்டும். அப்படியானால் போனஸ் புள்ளியுடன் 5 புள்ளிகள் கிடைக்கும். இந்திய அணி புள்ளிகளை இலங்கை அணியுடன் சமப்படுத்தும். இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியுடன் தோல்வியை சந்தித்தால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும். இந்த நிலை இப்போது உருவாகி விட்டது.
28ஆம் திகதி அவுஸ்திரேலிய ஹோர்படில் நடைபெற்ற போட்டியில் முதலில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அபாரமான இணைப்பாட்டத்தை குமார் சங்ககரா, திலகரத்ன டில்ஷான் ஆகியோர் வழங்கினர். 200 ஓட்டங்களை இருவரும் மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றனர். இந்த இணைப்பாட்டம் இலங்கை அணிக்கு வலுவான நிலையை தந்தது. அண்மைக் காலத்தில் இருவரும் போர்ம் இழந்து பெரிய ஓட்ட எண்ணிக்கைகளை பெற கஷ்டப் பட்டவர்கள். தேவையான நேரத்தில் செய்து காட்டினார்கள். இதில் குமார் சங்ககார 105 ஓட்டங்களையும், திலகரத்ன டில்ஷான் ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணிக்கு எதிராக சங்ககரா, டில்ஷான் ஆகியோர் பெற்ற நான்காவது சதங்கள் இவை ஆகும். இந்திய அணிக்கு எதிராக சனத் ஜெயசூரியா 7 சதங்களையும், ரிக்கி பொன்டிங் 5 சதங்களையும், நேதன் அஸ்டில், சல்மான் பட் ஆகியோர் தலா 5 சதங்களைப் பெற்றுள்ளனர். இலங்கை அணி 320 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் பெரியளவில் எவருமே செய்யவில்லை இந்திய அணி சார்பாக. உபாதை காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடாத சகீர் கான் இந்த போட்டியில் விளையாடினார். அவருக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. பிரவீன் குமார், ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்கள்.
50 ஓவர்களிலேயே இந்த ஓட்ட எண்ணிகையை துரத்தி அடிப்பது கடினம். இது 40 ஓவர்களில் அடிப்பது என்பது நினைத்து பார்க்க முடியுமா? அதுவும் அவுஸ்திரேலிய ஆடுகளத்தில்? எல்லோரும் கேள்வி கேளுங்கள்? எங்களுக்கு வந்த விமர்சனங்கள், அழுத்தங்கள் எல்லாத்துக்கும் இதோ பதிலடி என்று அடியோ அடி அடித்து இந்திய அணி. 40 ஓவர்கள் தேவை இல்லை 36.4 ஓவர்களில் முடித்துக் காட்டுகிறோம் என்று வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இன்னும் தக்க வைத்துக் கொண்டது. உண்மையில் இந்த நம்பிக்கை, எதையும் செய்யலாம் என்ற நம்பிக்கையோடு, விட்டுக் கொடுக்காமல் போராடிய விதம் பாராட்டுக்குரியது. இந்திய அணி களமிறங்கியதுமே தனது அதிரடியை ஆரம்பித்தது. ஷெவாக், சச்சின் ஆகியோர் ஓட்ட சராசரி வேகத்தை 9 இல் வைத்து இருந்தனர். ஷெவாக் ஆட்டமிழந்ததும் 40 ஓவர்களில் இலக்கு என்ற நிலை மாறியது. பின் சச்சின் ஆட்டமிழக்க, வெற்றி பெற முடியுமா என்ற நிலை வந்தது. ஆனால் கம்பிர், கோளி ஆகியோருடைய இணைப்பாட்டம் இழந்த எல்லாவற்றையும் பெற்றுக் கொடுத்தது. 18.1 ஓவர்களில் 115 ஓட்டங்கள். ஓட்ட வேகத்தை குறையவிடாமல் 9 இலையே தொடர்ந்தனர். கம்பிர் 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, டோனி வருவார் என்று பார்த்தால் ரெய்னா களமிறங்கினார். அந்த நேரத்தில் ஏன் ரெய்னா என்ற கேள்வி நிச்சயம் எல்லோர் மனதிலும் வந்து இருக்கும். டோனியால் எப்படி இப்படி சரியா யூகிக்க முடிகிறது என்பது கேள்வியே? அதனால்தான் அவர் வெற்றிகரமான தலைவர்.
வந்த ரெய்னாவும் விராத் கோளி போன்றே வேகமாக அடித்தாடினார். இவர்களுடைய இணைப்பாட்டம் 120. இதற்கு எதிர் கொண்டது 55 பந்துகள் மாத்திரமே. இந்த இணைப்பாட்டம் தான் வேகமான 100 ஓட்டங்களை தாண்டிய இந்திய இணைப்பாட்டம். இந்த இன்னிங்ஸ் மூலமாக அடுத்த தலைமுறை வீரர் என்ற பெயரையும் கோளி தனதாக்கி கொண்டார். 86 பந்துகளில் 133 ஓட்டங்கள். இது அவருடைய ஒன்பதாவது சதமாகும். குறிப்பாக அவருடைய துடுப்பாட்ட பிரயோகம், அழுத்தமில்லாமல் விளையாடும் பாணி என்பன அவருக்கு இந்த பெயரைக் கொடுக்கின்றன. நம்பகரமாக இந்தியாவின் அடுத்த டெண்டுல்கர் என சொல்லலாம். கடந்த காலத்தில் துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒருவர் இந்திய அணியில் இருப்பார். கவாஸ்கர், பின் சச்சின். சச்சினுக்கு அடுத்தது யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது போலவே தென்படுகிறது. ஆனாலும் அவசரப்படக்கூடாது. இப்படி நிறைய இளம் வீரர்கள் நல்ல ஆரம்பங்களை தந்து இல்லாமலே போன கதையும் உண்டு சர்வதேச அளவில். ரெய்னா 24 பந்துகளில் 40 ஓட்டங்கள்.
மறு பக்கம் இலங்கை அணிக்கு என்ன நடந்தது? உண்மையில் இலங்கை அணி மீது குறை கூறக் கூடிய அளவில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இந்திய அணி சிறப்பாக விளையாடியது. பந்து வீச்சு மாற்றங்களை இன்னும் கொஞ்சம் நன்றாக மஹேல செய்திருக்கலாம். மஹரூப் பந்து வீசியது 3 ஓவர்கள் மட்டுமே. ரங்கன ஹேரத் 5 ஓவர்கள். லசித் மாலிங்கவிற்கு அடி விழ தொடர்ந்து பந்து வழங்கியது மிகப் பெரிய பிழை. இதன் மூலம் பெறக் கூடாத சாதனையைப் பெற்று விட்டார். 7.4 ஓவர்கள் பந்து வீசி 96 ஓட்டங்கள். 5 ஓவர்களுக்கு மேல் பந்து வீசியவர்களில் கூடுதலான ஓட்ட வேகத்தை கொண்டவர் தற்போது இவரே. ஒரு ஓவருக்கு 12.52 என்ற ஓட்ட வேகம். மஹேல இடையில் குழம்பிப் போய் விட்டார். என்ன செய்வது என்பது புரியவில்லை, ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயம்தான். பல புள்ளி விபரங்களை தந்து சாதனைகளை உருவாக்கிய, மைல்கற்களை தாண்டிய போட்டியாக இந்த போட்டி மாறிப்போனது.
முன்னூறுக்கு மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கையை 40 ஓவர்களுக்குள் துரத்தியடித்த இரண்டாவது சந்தர்ப்பம் இது. முதலில் இலங்கை அணி 37.3 ஓவர்களில் 324 ஓட்டங்களை இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்றுக் கொண்டது. 250 ஓட்டங்களுக்கு மேல் பெறப்பட்ட துரத்தியடித்த வெற்றிகளில் இது இரண்டாவது வேகமான வெற்றி. முதல் வெற்றி தென் ஆபிரிக்க அணி - அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 438 ஓட்டங்களால் பெற்ற வெற்றி.
இந்திய அணி 300 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற 56ஆவது தடவை இது. இது ஒரு சாதனை. இலங்கை அணி - இந்திய அணிக்கு எதிராக ஒன்பது தடவைகள் 300இற்கு மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ள போதும் 5 தடவைகள் தோல்வியடைந்துள்ளது.
புள்ளிகள் சமநிலை என்றாலும் ஓட்ட சராசரிவேகம் இலங்கை அணிக்கு இந்திய அணியிலும் பார்க்க அதிகம் என்றாலும் இலங்கை அணியை இந்திய அணி இரு தடவைகள் வெற்றி பெற்றுள்ளது என்ற நிலையிலேயே இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்கான வாய்ப்புக்கள் இன்னும் உள்ளன. இலங்கை அணி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது. எனவே இரண்டாம் திகதி நடைபெறவுள்ள இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியின் முடிவிலேயே, அவுஸ்திரேலிய அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடப் போவது இலங்கை அணியா? இந்திய அணியா? என்பது உறுதியாகும்.
நியூசிலாந்தை வென்று இரண்டாமிடத்துக்கு சென்றது தென் ஆபிரிக்கா
தென் ஆபிரிக்க - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடர் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமானது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 253 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பிரென்டன் மக்கலம் 56 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 55 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களுடைய மூன்றாவது இணைப்பாட்டமான 79 ஓட்டங்களை தவிர மற்ற இணைப்பாட்டங்கள் நல்ல முறையில் அமையவில்லை. தென் ஆபிரிக்க அணியின் பந்து வீச்சில் சொர்த்சொபி, மோர்னி மோர்க்கல், ஜாக்ஸ் கலிஸ், றொபின் பீற்றர்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பதிலளித்த தென் ஆபிரிக்க அணி இலகுவாக வெற்றி பெற்றது. 45.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப விக்கெட்டுகள் வேகமாக வீழ்த்தப்பட 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்கள் என்ற இக்கட்டான நிலையில் தென் ஆபிரிக்க அணி இருக்க ஜேபி டுமினி (46), ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் 90 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். பின் வில்லியர்ஸ், பஅப் டு ப்லேசிஸ் (66) ஆகியோர் முறியடிக்கப்படாத 129 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதில் தலைவர் ஏபி டி வில்லியர்ஸ் தனது 13ஆவது சதத்தைப் பெற்றார். போட்டியின் நாயகனும் அவரே. இந்த வெற்றியின் மூலமாகவும், இந்திய அணியின் தோல்வியின் மூலமாகவும் தரப்படுத்தல்களில் தென் ஆபிரிக்க அணி இரண்டாம் இடத்துக்கு செல்ல, இந்திய அணி மூன்றாமிடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - இங்கிலாந்து 20 - 20
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 20-20 போட்டி தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலமாக இந்த தொடரில் 2 - 1 என்ற ரீதியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி 23ஆம் திகதி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சொய்ப் மலிக் 39 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் மிஸ்பா உல் ஹாக் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் கிரேம் ஸ்வான் 4 ஓவர்கள் பந்து வீசி 13 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பதிலளித்த இங்கிலாந்து அணி 2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரவி போபர 39 ஓட்டங்களையும், கெவின் பீற்றர்சன் 33 ஓட்டங்களையும் பெற்றனர். வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு இருந்த போதும் பாகிஸ்தான் அணியின் சிறந்த பந்து வீச்சு ஓட்டங்களைப் பெற வாய்ப்புக்களை வழங்கவில்லை. பந்து வீச்சில் உமர் குள் 4 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள். மொஹம்மத் ஹபீஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக உமர் குள் தெரிவானார்.
அடுத்த போட்டி 25ஆம் திகதி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜொனி பெயர்ஸ்டோவ் 60 ஓட்டங்களையும். கிரைக் கியூஸ்வெட்டார் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் உமர் குள் இரண்டு விக்கெட்டுகள். பதிலளித்த பாகிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் சஹிட் அப்ரிடி 25 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் ஸ்டீபன் பின் 3 விக்கெட்டுகள். ஸ்டுவோர்ட் பரோட், கிரேம் ஸ்வான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள். போட்டியின் நாயகன் ஜொனி பெயர்ஸ்டோவ்.
மூன்றாவதும் இறுதியுமான போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கெவின் பீற்றர்சன் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் கிரைக் கியூஸ்வெட்டார் 17 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சைட் அஜ்மல் 23 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். பெறக் கூடிய இலக்கு என்றாலும் பாகிஸ்தான் அணியால் முடியாமல் போனது. இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீச்சில் செயற்ப்பட்டமையே காரணமாக மாறியது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் கெவின் பீற்றர்சன் தெரிவானார்.
அவுஸ்திரேலியாவின் சிறந்த வீரர் கிளார்க்
அவுஸ்திரேலிய அணியின் கடந்த ஒரு வருடத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான அலன் போர்டர் பதக்கத்தை அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் தனதாகியுள்ளார். அதேவேளை சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதும் அவருக்கே கிடைத்துள்ளது. சிறந்து ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதும், சிறந்த 20 - 20 வீரருக்கான விருதும் அவுஸ்திரேலிய அணியின் உபதலைவர் ஷேன் வோட்சனுக்கு கிடைத்துள்ளன.
மைக்கல் கிளார்க் இந்த விருதைப் பெறுவது இது மூன்றாவது தடவையாகும். ஏற்கனவே 2005ஆம் ஆண்டு, 2009ஆம் ஆண்டு இந்த விருதை அவர் பெற்றுள்ளார். கடந்த விருது வழங்கலிற்கு பிறகு அவர் விளையாடிய போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டமையும், அண்மையில் இடம்பெற்ற இந்திய அணியுடனான தொடரில் தனது முதல் முச் சதத்தைப் பெற்ற அதேவளை இரட்டைச் சதத்தையும் பெற்றார். அதேவேளை சதத்தையும் பெற்றார். எனவே இந்த ஓட்ட எண்ணிக்கைகள் அவருக்கு விருது கிடைக்க அதிகமான வாய்ப்புக்களை தந்தன. இவருக்குப் போட்டியாக அடுத்த இடங்களில் இருந்தவர்கள் மைக்கல் ஹஸ்ஸி, ஷேன் வொட்சன், ரிக்கி பொன்டிங் மற்றும் ஜேம்ஸ் பட்டின்சன்.
231 வாக்குகளை பெற்று கிளார்க் விருதைப் பெற்ற அதேவேளை இரண்டாம் இடத்தைப் பெற்ற மைக்கல் ஹஸ்ஸி 174 வாக்குகளைப் பெற்றார். இந்த விருதுக்கான காலப் பகுதியில் 1167 ஓட்டங்களை 68.64 என்ற சராசரியில் அவர் குவித்திருந்தார். இதில் கூடுதலான ஓட்டங்கள் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கிடைத்தவை ஆகும். ஷேன் வொட்சன் அண்மைக் காலமாக விளையாடா விட்டாலும் அவரின் உலகக் கிண்ண பெறுதிகள், பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்கிடையிலான பெறுதிகள் என்பன இந்த விருதைப் பெற கை கொடுத்தன. மைக்கல் கிளார்க் இலும் பார்க்க மூன்று அதிகமான வாக்குகளால் அவர் இந்த விருதைப் பெற்றார். இந்த காலப் பகுதியில் 833 ஓட்டங்களை 55.53 என்ற சாராசரியில் பெற்றுள்ளார். அதேவேளை 11 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றி இருந்தார்.
20 - 20 போட்டிகளில் ஷேன் வொட்சன், மத்தியூ வடே ஆகியோருக்கிடையிலேயே போட்டி அதிகமாக இருந்தது. இந்த விருதுகளுக்கான காலப் பகுதியில் கூடுதலான ஓட்டங்களான 119 ஓட்டங்களை வோட்சனும், இரண்டாவது கூடுதலான ஓட்டங்களை மத்தியூ வடே உம் பெற்று இருந்தனர். வொட்சன் 2 விக்கெட்டுகளையும், 2 பிடிகளையும் எடுத்து இருந்தார். மத்தியூ வடே ஒரு பிடி, ஒரு ரன் அவுட் ஆட்டமிழப்பு. எனவே வொட்சன் அந்த விருதை தட்டிக் கொண்டார்.
சிறந்த இள வயது வீரருக்கான டொனல்ட் பிரட்மன் விருது டேவிட் வோர்ணருக்கும், சிறந்த உள்ளூர் வீரருக்கான விருது ரொப் குயினிக்கும் கிடைத்தன. இந்த விருதுகளுக்கான காலமாக பெப்ரவரி 06, 2011 தொடக்கம் இந்த வருடம் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வரை ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago