2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

உலகக்கிண்ணம் 2014: முட்டி மோதும் அணிகளில் முதற்சுற்றுத் தாண்டுபவை எவை?

A.P.Mathan   / 2014 ஜூன் 12 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


​32 நாடுகளின் மோதலில் இன்று முதலாவது போட்டி...
 
5 தடவை உலகக்கிண்ணத்தை வென்றிருக்கும் சாதனை அணி இன்று சொந்த மண்ணில் இந்த 20ஆவது உலகக்கிண்ணத்தை ஆரம்பித்து வைக்கும் போட்டியில் விளையாடப்போகிறது. 
 
இறுதியாக பிரேசில் உலகக்கிண்ணத் தொடரை நடத்தியது 1950இல். அந்த முறை பிரேசில் இறுதிப்போட்டியில் உருகுவே அணியிடம் 2-1 எனத் தோற்று, கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
 
அதன் பின்னர் வந்த 64 ஆண்டுகளில் தான், பிரேசில் 5 உலகக்கிண்ணங்களையும் வெற்றிகொண்டு தன்வசப்படுத்தியிருக்கிறது.
 
வழமை போலவே 8 பிரிவுகளாக 32 நாடுகள் உள்ளடக்கப்பட்டிருக்கும் இவ்வுலகக் கிண்ணத்தில், ஒவ்வொரு முறையும் பிரிவு Aயில் போட்டிகளை நடத்தும் நாடு உள்ளடக்கப்படும்.
 
அதேபோல இரண்டாம் சுற்றுக்குத் தெரிவு செய்யப்படக்கூடிய அணிகள் தகுதியுடையவையாக இருக்கவேண்டும், போட்டியும் விறுவிறுப்பாக அமையவேண்டும் என்பதற்காக அணிகளைப் பிரிவுகளாக வகைப்படுத்தும்போதே 8 பிரிவுகளிலும் தரப்படுத்தலில் முன்னணியான ஒவ்வொரு அணிகள் சேர்க்கப்பட்டிருந்தன.
 
ஏனைய அணிகள் அதிர்ஷ்டக் குலுக்கல் மூலமாக உள்ளிடப்பட்டன.
 
இம்முறை பொஸ்னியா - ஹெர்சகோவினா அணி மட்டுமே முதலாவது உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடுகின்ற அணிகள்.
நடப்பு உலகச் சம்பியனான ஸ்பெய்ன் அணி

நடப்பு உலகச் சம்பியனான ஸ்பெய்ன் அணி கூட இம்முறை தகுதிகாண் சுற்றுப்போட்டிகளில் விளையாடியே பிரேசிலுக்கு வந்துள்ளது.
 
FIFA தரப்படுத்தலில் முதல் 25 அணிகளில் 16ஆம் இடத்திலுள்ள உக்ரெய்ன் அணியும், 23ஆம் இடத்திலுள்ள டென்மார்க் அணியும் மட்டுமே பிரேசில் உலகக்கிண்ணத்துக்குத் தகுதி பெறாத இரு முக்கியமான அணிகள். 
 
முதற் சுற்றுப் போட்டிகள் knock out ஆக இல்லாவிட்டாலும் கூட, ஒவ்வொரு போட்டியிலும் பெறப்படும் ஒவ்வொரு புள்ளிகள் கூட அடுத்த சுற்றுக்கான வாய்ப்பைத் தீர்மானிப்பதாக அமையும்.
 
வெற்றிக்கு 3 புள்ளிகள்; வெற்றி தோல்வியற்ற போட்டிக்கு 1 புள்ளி.
 
இப்பொழுதே கால்பந்து முன்னாள், இந்நாள் நட்சத்திரங்கள், விமர்சகர்கள், பந்தயக்காரர்கள் என்று பலரும் உலகக்கிண்ணத்தை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணிகள் என்று சில அணிகளைக் குறிப்பிட்டு வைத்துள்ளனர்.
 
இவர்களின் தெரிவு வரிசைப்படி,
பிரேசில் 
ஆர்ஜென்டீனா 
ஸ்பெய்ன்
ஜேர்மனி  
பெல்ஜியம் 
ஃபிரான்ஸ் 
இத்தாலி 
இங்கிலாந்து 
உருகுவே 
போர்த்துக்கல் 
என்று அமைகின்றன.

பிரேசில் ரசிகர்கள்
 
இதிலே வீரர்களின் பலம், பலவீனங்கள் மட்டுமன்றி, அணிகள் அடங்கியுள்ள குழுக்கள், அடுத்த சுற்றில் எதிராக விளையாடப்போகும் அணிகள் என்பவையும் காரணிகளாக அமையும்.
 
ஆனாலும் மேலே குறிப்பிடப்பட்ட 10 அணிகளை வீழ்த்தி புதிய புயலாக ஏதாவது ஓர் அணி புறப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
 
காரணம் உலகக்கிண்ணம் என்பது பெயர் பெரிதாக அறியப்படாத வீரர்களை நட்சத்திரங்கள் ஆக்கியது மட்டுமல்ல, கடந்த காலங்களில் ஸ்வீடன், துருக்கி, தென் கொரியா போன்ற 'குட்டி' அணிகளையும் பெரிய அணிகளாக மாற்றியது வரலாறு.
 
இனி 8 பிரிவுகளையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.
 
இரண்டாம் சுற்றுக்கு 16 அணிகள் தெரிவாகிய பிறகு அணிகள் மற்றும் வீரர்களின் விபரங்களை விரிவாகப் பார்க்கலாம்.
 
பிரிவு A 
பிரேசில், மற்ற மூன்று அணிகளையும் விட மிகப் பலமானதாகவும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகமாகக் கொண்டதுமாகத் தெரிகிறது.

பிரேசில் அணி
 
சொந்த மைதானங்கள், ஆரவாரிக்கும் மஞ்சள் சமுத்திரமான உள்நாட்டு ரசிகர்கள் என்று மேலதிகப் பலம் உளரீதியாக ஊக்குவிக்க, மறுபக்கம் உலகத்தின் மிகச் சிறந்த பல வீரர்கள் அணியிலே வியூகம் வகுத்து நிற்கின்றனர்.
 
நெய்மார், ஹல்க், டேவிட் லூயிஸ், தியாகோ சில்வா, டனி அல்வஸ், ஒஸ்கார் என்று ஏராளமான நட்சத்திரங்கள்.
 
கிண்ணம் பெறுகிற வெறியில் இருக்கிற அணிக்கு இரண்டாம் சுற்று அவ்வளவு பெரிய வேலையில்லையே.
 
இன்று முதலாவது போட்டியில் விளையாடவுள்ள குரோஷிய அணி தான் பிரேசிலுக்கு இந்த A பிரிவில் சவால் விடக்கூடிய அணியாகக் கொஞ்சமாவது தெரிகிறது.
 
அனுபவமும் திறமையும் வாய்ந்த அணிகளில் ஒன்று இந்த குரோஷியா.
 
எனினும் மெக்சிக்கோ அணியும் ஆபிரிக்காவின் வலுவான அணியான கமேரூனும் உலகக்கிண்ணப் போட்டிகள் என்று வந்துவிட்டால் சளைக்காமல் விளையாடக்கூடியவை.
 
முக்கியமான போட்டிகளில் நெருக்கமான கணங்களின் நிமிட மாற்றங்கள் பிரிவுகளின் நிலையை மாற்றிவிட்டால், அடுத்த சுற்றுக்களின் நிலைகளும் மாறிவிடும்.
 
எனினும் பிரேசில் மற்றும் குரோஷியா ஆகியவை முதல் இரு இடங்களைப் பெற்று அடுத்த சுற்றுக்குச் செல்லும்போல தெரிகிறது.
 
பிரிவு B 
தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற கடந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்ட இரு அணிகளுமே இந்தப் பிரிவின் முதல் ஆட்டத்தில் நாளை (13) மோத இருக்கின்றன.

நடப்புச் சம்பியன் ஸ்பெய்ன்
 
நடப்புச் சம்பியன் ஸ்பெய்ன், நெதர்லாந்து ஆகிய இவ்விரு அணிகளுமே இந்தப் பிரிவிலிருந்து அடுத்த சுற்றுக்குள் செல்லும்போலத் தெரிகிறது.
 
இரு அணிகளிலும் நிறைந்து கிடக்கும் நட்சத்திரங்கள் ஒரு பக்கம், முக்கிய போட்டிகளில் விளையாடிய அனுபவம் மறுபக்கம்.
 
உலகத்தின் அத்தனை அணிகளிலும் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயின், வேறெந்த அணியிலும் இல்லாத அளவுக்கு அனுபவம் வாய்ந்த, அதே சமயம் நல்ல form இலுள்ள வீரர்களை உள்ளடக்கியுள்ளது.
 
உலகக்கிண்ணத்துடன் சேர்த்து மூன்று முக்கிய கிண்ணங்களை வென்று சரித்திரம் படைத்துள்ள அணி இது.
 
எனவே தற்செயலாக நெதர்லாந்து சறுக்கினாலும் கூட அடுத்த சுற்று ஸ்பெயினுக்கு உறுதி.
 
இவ்விரு அணிகளுக்கு அடுத்தபடியாக, ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய சிலி அணி, தென் அமெரிக்க நாடுகளில் இன்னொரு புதிய புயல்.
 
இவர்களது அதிவேகமான ஆட்டம் ரசிக்கத் தக்கது.
 
இரு 'பெரிய' அணிகளும் எங்காவது அசந்தால் சிலி ஆட்டம் காட்டிவிடும்.
 
சிலி அணியின் எடுவார்டோ வர்கஸ் என்ற வீரரைக் குறித்து வையுங்கள். அற்புதமான ஆட்டக்காரர்.
 
அவுஸ்திரேலியா அணி தான் இவ்வுலகக்கிண்ணத்துக்குத் தெரிவாகியுள்ள அணிகளில் தரப்படுத்தலில் மிகக் கீழே உள்ள அணி.
 
கடந்த உலகக்கிண்ணங்களில் ஓரளவு சிறப்பாகப் பிரகாசித்த அவுஸ்திரேலியா இம்முறை சிக்கலான பிரிவில். எனவே அடுத்த சுற்று வாய்ப்பில்லை என்றே சொல்லிவிடலாம்.
 
பிரிவு C
பார்த்தால் ​'​​பெரிய​' அணிகள் எவையும் இல்லாத பிரிவு போல் தோன்றினாலும் ஆர்ஜென்டீனா, பிரேசில் ஆகியவற்றுக்கு சவால் விடுக்கும் மற்றொரு உறுதியான அணியான கொலம்பிய அணி கால் இறுதி வரை பயணிக்கும் வல்லமை கொண்ட அணியாகும்.

கொலம்பிய அணி
 
ஆபிரிக்காவின் ​மற்றொரு பலமான அணியான ஐவரி கோஸ்டடும் ஆசிய கால்பந்து வல்லரசு ஜப்பானும் இரண்டாவது இடத்துக்கு போட்டியிடக்கூடும்.
 
ஆனால், பொதுவாக ஆக்ரோஷ ஆட்டம் ஆடாமல், எதிரணியை பொறியில் விழுத்தி போக்குக் காட்டும் கிரீஸ் அணியும் ஆபத்தான அணியே.
 
கொலம்பிய அணியின் சீருடை மட்டுமன்றி அவர்களது ஆட்டப் போக்கும் பிரேசிலை ஞாபகப்படுத்தும்... கவனித்துக்கொள்ளுங்கள்.
 
என் பார்வையில் கொலம்பியா, ஜப்பான் ஆகியன இரண்டாம் சுற்றுக்குப் பயணமாகும்.
 
பிரிவு D
மிக இறுக்கமான பிரிவுகளில் ஒன்று இது.
 
மூன்று முன்னாள் சம்பியன்களோடு மத்திய அமெரிக்க வலயத்தில் இம்முறை தெரிவுப்போட்டிகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய கோஸ்ட்டா ரிக்கா அணியும் இடம்பெற்றுள்ளது.
 
எனினும் கோஸ்ட்டா ரிக்கா மற்ற மூன்று பெரும் அணிகளை மண் கவ்வச் செய்யும் அளவுக்கு பலமானதாக இல்லை.
 
இவற்றுள் இங்கிலாந்து அணி என்ன தான் உலகம் முழுதும் அறியப்பட்ட பிரபலமான வீரர்களைக் கொண்டிருந்தாலும், அணியாக விளையாடும்போது அவர்கள் நாட்டு ரசிகர்களுக்கே தங்கள் அணி மீது நம்பிக்கை வருவதில்லை.
 
ஆனால் ரூனி, ஜெரார்ட் போன்ற மூத்த வீரர்களுடன் ஸ்டரிஜ், வில்ஷெயர், வெல்பெக் போன்ற வீரர்கள் கவனிக்கப்படவேண்டியவர்கள்.
 
1966இன் பின்னர் ​உலகக்கிண்ண எதிர்பார்ப்பு இம்முறையும் பூர்த்தி அடையும் எனத் தோன்றவில்லை.
 
இன்னொரு தென் அமெரிக்க நாடாக இருப்பதால் பெரிய அண்ணன்கள் வழியில் உருகுவே தனது பழம் பெருமையை மீண்டும் நிலைநாட்டுவதற்கான சரியான வாய்ப்பு இது.
 
லூயிஸ் சுவாரெஸ், டீகோ ஃபோர்லன், லுகானோ போன்ற நட்சத்திரங்களுடன் முக்கிய அணிகளை மண்கவ்வச் செய்யக்கூடிய அணி.
 
இதனால் இந்த அணியும் இரண்டாம் சுற்றையும் தாண்டக்கூடிய அணி என்று உருகுவேயைப் பலர் குறிப்பிடுகின்றனர்.
 
இறுதியாக 1950இல் பிரேசிலில் நடந்த உலகக்கிண்ணத்தை வென்றெடுத்த சரித்திரப் பின்னணியும் உருகுவேக்கு உற்சாகம் கொடுக்கிறது.
 
2006ஆம் ஆண்டு சம்பியன் இத்தாலி.

2006ஆம் ஆண்டு சம்பியன் இத்தாலி
 
கால்பந்து உலகில் எப்போதுமே வல்லரசாகக் கருதப்படக்கூடிய 5 அணிகளில் ஒன்று.
 
அனுபவமும் இளமையும் வேகமும் உறுதியும் கொண்ட கலவை.
 
புஃபொன், பிர்லோ, கசானோ என்று அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் இம்முறை மீண்டும் ஒரு வெற்றிக்காக களம் காண்கின்றனர்.
 
உருகுவேயுடன் சறுக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தாலும் கூட, இத்தாலி இந்தப் பிரிவில் முதலிடம் பெறும் என நம்புகிறேன்.
 
Group of Death ஆகிய இப்பிரிவில் இருந்து இரண்டாம் சுற்றுக்கு வரும் இத்தாலி, உருகுவே ஆகிய இரு அணிகளுமே காலிறுதிக்குப் பயணிப்பது உறுதி.
 
போட்டி அட்டவணைகளில் உங்கள் விருப்ப அணிகள் எப்போது, எத்தனை மணிக்கு விளையாடுகின்றன என்பதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
 
நாளை இதே பகுதியில் ஏனைய 4 பிரிவு அணிகளையும் பற்றி அலசலாம்.
 
www.arvloshan.com

You May Also Like

  Comments - 0

  • ihsas Thursday, 12 June 2014 06:16 PM

    brazil,crotia
    spain,chilie
    ivory cost, columbia
    uruguay,italy

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .