
உலகக்கிண்ணப் போட்டிகளின் 60 போட்டிகளின் நிறைவில் 28 அணிகள் தங்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிப் போய்விட, நான்கே நான்கு அணிகள் எஞ்சி நிற்கின்றன.
இரண்டு லத்தீன் அமெரிக்க நாடுகள், இரண்டு ஐரோப்பிய நாடுகள்.
.jpg)
அரையிறுதியில் மோதுகின்ற இந்த அணிகளில் உலகக்கிண்ணத்தை இதுவரை ஒரு தடவை தானும் வெல்லாத நெதர்லாந்து அணியோடு, தமக்குள்ளே பத்து தடவைகள் உலகக்கிண்ணத்தை வசப்படுத்தியுள்ள பிரேசில், ஆர்ஜென்டீனா, ஜேர்மனி ஆகிய அணிகளும் அரையிறுதிக்குத் தெரிவாகியிருக்கின்றன. (இதுவரை நடைபெற்ற 19 உலகக்கிண்ணங்களில் பிரேசில் - 5 தரம், ஜேர்மனி - 3 தரம், ஆர்ஜென்டீனா - 2 தரம்)
'பெரிய' அணிகள் என்று கால்பந்தாட்ட விற்பன்னர்களால் அழைக்கப்படும் நான்கு அணிகளுமே அரையிறுதிகளுக்குத் தெரிவாகியிருப்பது, கால்பந்து ரசிகர்களுக்குப் பெருவிருந்து.
இதன் மூலம் ஒரு ஐரோப்பிய லத்தீன் அமெரிக்க இறுதி யுத்தம் அல்லது ஒரே கண்டத்தைச் சேர்ந்த அணிகள் இரண்டு இறுதிப்போட்டியில் மோதும் சுவாரஸ்யமான வாய்ப்பு ஏற்படுள்ளது.
இந்த உலகக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாக முதலே கூடுதல் வாய்ப்புடைய நாடுகளாகக் கருதப்பட்ட முதல் ஐந்து நாடுகளில் நடப்புச் சாம்பியனாக விளங்கிய ஸ்பெய்ன் அணியைத் தவிர ஏனைய நான்கு அணிகளும் அரையிறுதிகளுக்குத் தெரிவாகியுள்ளமை சிறப்பம்சம்.
காலிறுதிப் போட்டிகள் நான்கும் நான் முன்னரே எதிர்வு கூறியிருந்தபடியே முடிவுகளைத் தந்திருந்தன.
ஆனால், எல்லாப் போட்டிகளுமே மிக நெருக்கமானவையாகவும் மிகுந்த விறுவிறுப்பை வழங்கியனவாகவும் அமைந்திருந்தன.
1986ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒவ்வொரு உலகக்கிண்ணமும் போலவே இம்முறையும் ஒரு காலிறுதிப் போட்டி பெனால்டி உதைகளால் தீர்மானிக்கப்பட்டது. ஏனைய மூன்று போட்டிகள் ஒரே ஒரு கோல் வித்தியாசத்துடன் முடிந்தன.
முதலாவது காலிறுதிப் போட்டியில் ஜேர்மனி அணி ஒற்றை கோலினால் பிரான்ஸ் அணியை வெற்றிகொண்டது.
உலகக்கிண்ணத்தின் முதல்போட்டி முதல் கோல்களை அநாயசமாக அடித்துத் தள்ளிய பிரான்ஸ் அணியை ஜேர்மானியப் பயிற்றுவிப்பாளர் ஜோக்கிம் லோ, தனது வேகக் குறைப்பு வியூகத்தின் மூலமாக பொறிக்குள் வீழ்த்தினார்.
எவ்வளவு முயன்றும் பிரான்ஸ் அணியினால் ஜேர்மானியத் தடையைக் குறிப்பாக பலமான ஜேர்மனியின் பின் வரிசை மற்றும் உலகின் தலைசிறந்த கோல் காப்பாளர் மனுவல் நூயர் ஆகியோரைத் தாண்ட முடியவில்லை. ஜேர்மனி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பிரேசில் - கொலொம்பிய அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்பார்த்ததை விடவும் அதிக உக்கிரம் நிறைந்ததாகவும் நடுவருக்கு வேலை வைப்பதாகவும் அமைந்தது. இரு பக்கத்திலும் சேர்த்து மொத்தமாக 56 foulகள் (முறையற்ற வீழ்த்தல்கள்) இடப்பட்டன.
ஆனால், நடுவர் கொஞ்சம் மென்போக்கு உடையவராக இருந்ததால் நான்கே நான்கு மஞ்சள் அட்டைகள் மட்டுமே இப்போட்டியில் வழங்கப்பட்டன. இது ஸ்பானிய நடுவர் கார்லோஸ் கார்பல்லோ மீது இன்று வரை பலர் குறை சொல்லக் காரணமாக உள்ளது.
ஆனால், அவர் வழங்கிய 4 மஞ்சள் அட்டைகளில் ஒன்று அரையிறுதியில் இன்று பிரேசிலிய அணித்தலைவர் தியாகோ சில்வாவை விளையாட விட முடியாது செய்துள்ளது.
2-1 என்று மிக விறுவிறுப்பாக நடந்த அந்த ஆட்டத்தில் பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மார், முதுகெலும்பில் ஏற்பட்ட சிறுமுறிவு காரணமாக தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்தார். (அந்த மோசமான உபாதைக்குக் காரணமாக அமைந்த கொலொம்பிய வீரர் ஹுவான் சுனீகாவுக்குத் தண்டனை நடுவராலும் வழங்கப்படவில்லை; மேன்முறையீடு FIFAவிடம் முன்வைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது).
இவ்விரு சம்பவங்களும் பிரேசிலின் வெற்றியை விடவும் பெரிய பாதிப்பை பிரேசிலுக்கு ஏற்படுத்தியுள்ளன.
இறுதிவரை ஆக்ரோஷமாகப் போராடிய கொலொம்பிய அணி, நாடு திரும்பியபோது அவ்வீரர்களுக்கு பொகொட்டா நகரமே திரண்டு மரியாதை செலுத்தியிருந்தது.
கொலொம்பிய வீரர் ஜேம்ஸ் ரொட்ரிகுவேசே இன்னமும் 6 கோல்களுடன் அதிக கோல் குவித்தவராக முதலிடத்தில் இருக்கிறார் என்பது அவ்வணிக்குப் பெருமை.
ஆர்ஜென்டீன அணிக்கும் பெல்ஜியத்துக்கும் இடையிலான போட்டியும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டாலும், ஜேர்மனிய - பிரான்ஸ் போட்டி போலவே முதல் 10 நிமிடங்களுக்குள் பெறப்பட்ட கோலின் பின்னர் (ஜேர்மனி 5ஆம் நிமிடத்திலும், ஆர்ஜென்டீனா 8ஆம் நிமிடத்திலும்) போட்டியில் மேலதிக கோல்கள் இல்லை.
ஆனாலும் இரு அணிகளின் முயற்சியும் இறுதிவரை ஓயவில்லை.
ஆர்ஜென்டீன அணிக்கும் இந்தப் போட்டியில் ஒரு முக்கிய வீரரின் இழப்பு ஏற்பட்டது. டீ மரியா, இனி இந்த உலகக்கிண்ணத்தில் விளையாடுவது முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஜேர்மனியைப்போலவே ஆர்ஜென்டீனாவும் வென்றாலும் - எதிர்பார்த்த இலகுவான, ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் குறிப்பிடத்தக்க வெற்றியைப்பெற முடியவில்லை.
நான்காவது காலிறுதிப் போட்டி தான் மிகவும் விறுவிறுப்பானதும் நீண்ட நேரம் முடிவற்றுத் தொடர்ந்ததுமாக நடந்தது.
நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தி தனது உலகப்புகழ்பெற்ற வீரர்கள் மூலமாக கோல்களைப் புகுத்த முனைந்தாலும், அன்றைய நாளின் கதாநாயகன் கோஸ்ட்டா ரிக்காவின் கோல்காப்பாளர் கெய்லோர் நவாசினால் தடுக்கப்பட்டன.
ரொப்பேன், வான் பேர்சி, ஸ்னைடர் என்று மும்முனைத் தாக்குதலையும் கோஸ்ட்டா ரிக்கா வீரர்கள் அபாரமாக முறியடித்தனர்.
இறுதியாக பெனால்டி உதைகள் போட்டியின் முடிவைத் தீர்மானிப்பதாக அமையும் நேரத்தில் நெதர்லாந்தின் இன்னொரு கோல் காப்பாளர் ஹீரோவாக மாறினார்.
நெதர்லாந்தின் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் வான் கால், பெனால்டி உதைகளின் முன்பதாக யாரும் எதிர்பாராத வகையில் அந்த 120 நிமிடங்கள் கோல் காப்பில் சிறப்பாக ஈடுபட்ட ஜாஸ்பெர் சிலஸ்ஸனை மாற்றி, டிம் க்ரூல்லை கோல் காப்பில் ஈடுபடச் செய்தார்.
அவர் எடுத்தது பெரியதொரு ரிஸ்க். ஆனால், க்ரூல் இரு பந்துகளை அற்புதமாகத் தடுத்து வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இது, வான் காலையும் ஒரு மாபெரும் தந்திரவாதியாக மாற்றிவிட்டுள்ளது.
இந்த பிரதியீடு ஏற்படுத்திய தாக்கம், கோஸ்ட்டா ரிக்கா அணியை வெளியேற்றி நெதர்லாந்தை அரையிறுதிக்குக் கொண்டு வந்துள்ளது. கொலொம்பியா போலவே கோஸ்ட்டா ரிக்காவும் தனது தடத்தை ஆழமாகப் பதித்துப்போயுள்ளது.
முதல் சுற்று ஆட்டங்களில் அசைக்க முடியாத வலம் வந்த நெதர்லாந்து மிகத் தடுமாறியே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஆனாலும் கடந்த உலகக்கிண்ணத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய நெதர்லாந்து மீண்டும் இம்முறையும் அரையிறுதிக்கு வந்திருப்பது அதன் தொடர்ச்சியான திறமையைக் காட்டுகிறது. நெதர்லாந்தின் பிரபல வீரர்கள் அத்தனை பேரும் எந்தப் பெரிய அணியையும் சில நிமிடங்களில் உடைத்துப்போடக் கூடியவர்கள்.
பிரேசில் அணி, போட்டிகளை நடத்தும் நாடு என்ற பெரிய வாய்ப்பும், சொந்த நாட்டு ரசிகர்களின் மிகப் பெரிய ஆதரவுப் பின் புலத்தொடும் களமிறங்கும் அணி.
2002ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது பிரேசில். அந்த ஆண்டு தான் பிரேசில் இறுதியாக உலகக்கிண்ணம் வென்றுள்ளது.
ஜேர்மனி நான்காவது தொடர்ச்சியான அரையிறுதியில். இதில் 2002இல் இரண்டாமிடம். ஏனைய இரு தடவைகள் மூன்றாமிடம். ஜேர்மனி இறுதியாக உலகக்கிண்ணம் வென்ற ஆண்டு 1990.
ஆர்ஜென்டீனா 1986ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை இதுவரை இறுதியாக வென்றுள்ளது. 1990இற்குப் பிறகு 24 ஆண்டுகால இடைவெளியின் பின்னர் அரையிறுதியில்.
இந்த நான்கு அணிகளின் பலப்பரீட்சையில் வீரர்கள் மட்டுமில்லாமல் அணியின் பயிற்றுவிப்பாளர்களின் வியூகம் வகுத்தலும் முக்கிய பங்காற்றப்போகிறது.
நாளை புதன்கிழமை அதிகாலை 1.30க்கு, அதாவது இன்று இரவு, பிரேசில் எதிர் ஜேர்மனி.
கால்பந்தாட்ட உலகின் இரு மிகப்பெரும் வல்லரசுகள், இதற்கு முதல் ஒரேயொரு தடவையே சந்தித்துள்ளன என்பது ஆச்சரியமே... அது 2002 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில். பிரேசில் அந்தப்போட்டியில் வென்றது.
எனினும் இம்முறை ஜேர்மனி அதிக பலமும் அனுபவமும் கூடுதலான முழுமைத் தன்மையுடைய அணியாகவும் தெரிகிறது.
கோல் பெறுவதற்கு, பந்துகளை சரியாகப் பரிமாறுவதற்கு, எதிரணியின் சவால்களைத் தடுக்கத் தனித்தனியாக சிறப்புத் தேர்ச்சி பெற்ற வீரர்களுடன் கோல் காப்பாளர் நூயர் என்று இந்த அணி உலகக்கிண்ணத்தை வெல்லக்கூடிய அணி என்று பலர் அடித்துக் கூறக் கூடிய அணி.
பிரேசில் அணி நெய்மாரை அதிகமாக இந்தப் போட்டியில் இழக்கும். கோல் அடிப்பதற்கு ஒஸ்கார், பிரெட், ஜோ ஆகிய மூவரில் ஒருவர் இன்னும் போராடவேண்டி இருக்கும்.
மறுபக்கம் ஜேர்மனியில் முல்லர், க்லோசே, ஒசில், ஹம்மெல்ஸ் என்று வரிசையாகப் பலர். பின் களம் பிரேசிலை விட உறுதி.
இதை விட பயிற்றுவிப்பாளர்களின் அந்தந்தக் கண முடிவுகள் தான் தீர்மானிப்பவையாக அமையும்.
ஸ்கொலாரி எதிர் லோ என்று இப்போது பார்த்தால் டென்ஷனாகத் தெரியும் ஸ்கொலாரியை விட அமைதியாக சாணக்கியம் காட்டும் லோ முந்தி நிற்கிறார்.
ஆனாலும் ரசிகர்களின் ஆதரவுப்பலமும் சொந்த மண்ணில் முக்கிய வீரர்களை இழந்து நிற்கும் பரிதாபமும் பிரேசிலுக்கு இன்று மேலும் சாதிக்கும் ஆற்றலை வழங்கலாம்.
----------------
ஆர்ஜென்டீனா எதிர் நெதர்லாந்து. இன்னொரு தென் அமெரிக்க - ஐரோப்பிய மோதல்.
இவ்விரு அணிகளும் உலகக்கிண்ணத்தில் சந்திக்கும் ஆறாவது தடவை.
இறுதியாக சந்தித்த 2006 உலகக்கிண்ணப் போட்டியின் பிரிவு ரீதியான போட்டியில் கோல்கள் அற்ற வெற்றி தோல்வியற்ற முடிவு. 1998ஆம் ஆண்டு காலிறுதியில் கடுமையான மோதல்கள், எக்கச்சக்க சச்சரவுகளுடன் பெனால்டி உதைகளில் நெதர்லாந்து வென்றது யாருக்கும் மறக்காது.
1978இல் ஒரேயொரு தடவை ஆர்ஜென்டீனா வென்றது. ஆனால் அது உலகக்கிண்ணத்தின் இறுதி ஆட்டம்.
இன்னொரு தீர்க்கமான போட்டி. இம்முறை இரு அணிகளிலும் பல நட்சத்திரங்கள்.
ஆனால் ஆர்ஜென்டீன அணியில் மெஸ்ஸி தான் அணியாகத் தெரிகிறார்.
கடைசி இரு வெற்றிகளில் மெஸ்ஸி தனித்துத் தெரியாவிட்டாலும் அவரது பங்களிப்பு அதிலும் இருந்தது.
நெதர்லாந்திலோ வான் பேர்சி மற்றும் ரொப்பென் ஆகியோர் எதிரணிகளின் சிம்மசொப்பனங்கள். ஆனால் ஸ்னைடர் டீ பேய் போன்றோரும் உறுதியாகத் தெரிகின்றனர்.
ஆர்ஜென்டீன அணிக்கு கடந்த போட்டியில் ஹிகுவெய்ன் பிரகாசித்ததும், மஸ்சரானோ உறுதியாக இடைக்களத்தை வைத்திருப்பதும், அகுவேரோ காயத்திலிருந்து மீண்டிருப்பதும் பெரிய நம்பிக்கை எனினும் டி மரியாவின் இன்மை பெரியதொரு இழப்பே.
கோல் காப்பாளர்களின் ஒப்பீட்டில் ஆர்ஜென்டீனாவின் ரோமெரோ சற்றுப் பின் தங்கியே தெரிகிறார்.
இங்கேயும் நெதர்லாந்து பயிற்றுவிப்பாளரின் தீர்க்கமான சாதுரியம் ஆர்ஜென்டீனாவின் பயிற்றுவிப்பாளர் சபேல்லாவின் உணர்சிவசப்படலை முந்தித் தெரிகிறது.
ஆனால், ரசிகர்களைப் பொறுத்தவரை தீர்மானிக்கும் சக்திகளாக அமையப்போவது சூப்பர் ஸ்டார்கள் மெஸ்ஸியும் வான் பெர்சியும் தான்.
போதாக்குறைக்கு அயல்நாடான ஆர்ஜென்டீனாவிலிருந்து வந்து குவிந்துள்ள ரசிகர்கள் பிரேசிலை நாளை ஆர்ஜென்டீனா ஆக்குவார்கள். இதுவும் ஆர்ஜென்டீனாவுக்கு சாதகத்தன்மையே.
இதுவரை உலகம் காணாத இரு தென் அமெரிக்க வல்லரசுகள் மோதும் உலகக்கிண்ண இறுதியாக 2014ஆம் ஆண்டு பிரேசில் இறுதிப்போட்டி அமையும் என்று எதிர்வு கூறப்பட்டுக் கொண்டிருந்தாலும், இன்னும் அநேகர் 1986, 1990ஆம் ஆண்டுபோல மூன்றாவது தடவையாக ஆர்ஜென்டீனா எதிர் ஜேர்மனி இறுதி ஒன்றுக்கான வாய்ப்புக்களே அதிகம் என்று கூறுகிறார்கள்.
ஆனால், அதுவே 1974ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப்போட்டி போல ஜேர்மனி எதிர் நெதர்லாந்தாக நடக்கும் வாய்ப்பும் இல்லாமல் இல்லை. போட்டிகளை நடத்தும் நாடு பிரேசில் தான் இன்றைய அரையிறுதியைத் தாண்டும் வாய்ப்பை அருக விட்டிருப்பதாகத் தெரிகிறது.
நான்கில் வென்று 13ஆம் திகதி இறுதியில் மோதும் அணிகளோடு மீண்டும் சந்திப்போம்.