2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ஐரோப்பியக் கிண்ணம் 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...

A.P.Mathan   / 2012 ஜூன் 30 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தின் இறுதியாட்டம் முதலாம் திகதி இரவு...
உலகமே எதிர்பார்த்துள்ள ஐரோப்பிய கால்பந்து சாம்பியனாக தற்போதைய நடப்பு சம்பியனா? இல்லாவிட்டால் ஸ்பெய்னுக்கு ஈடுகொடுத்து சவாலாக விளையாடி வந்த ஜேர்மனியா? என்ற கேள்விகளையெல்லாம் தாண்டி, ஜேர்மனிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது இத்தாலி அணி.

ஸ்பெய்ன் அணியைப் பொறுத்தவரை நடப்பு ஐரோப்பியக் கிண்ண வெற்றியாளர்கள் & உலகக்கிண்ண வெற்றியாளர்கள். ஆனால் அணியின் தற்போதைய கட்டமைப்பு பலரால் சந்தேகமாகவே நோக்கப்படுகிறது. இம்முறை ஐரோப்பியக் கிண்ணத்தை வென்றால் ஸ்பெய்ன் மூன்றாவது தடவையாக ஐரோப்பிய முடிசூடும். இத்தாலி 1968ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐரோப்பியக் கிண்ணத்தை மீண்டும் வெல்வதற்காகக் காத்திருக்கிறது.

இத்தாலி பாரம்பரியமாகவே பலமான அணி. ஆனால் நம்பமுடியாத அணி... எப்போது வெல்லும்; எப்போது கவிழ்க்கும் என்று ஊகிக்க முடியாத ஓர் அணி.

இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டியில் சந்திப்பது, சில வரலாற்று சுவாரஷ்யங்களைப் பார்ப்பதற்கு முதல், அரையிறுதிகளை சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

அண்டை நாடுகள் மோதிக்கொண்ட முதலாவது அரையிறுதி நடப்பு சாம்பியனான ஸ்பெய்னுக்குக் கடும் சோதனையாக அமைந்தது. ரொனால்டோவின் தலைமையிலான போர்த்துக்கல் அணி 120 நிமிடங்களுக்கு கோல்களை ஸ்பெய்ன் அணிக்குக் கொடுக்காதது மட்டுமன்றி, எந்த வேளையிலும் கோல் ஒன்றை அடித்துவிடும் அபாயத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

உலகக் கிண்ணம் வென்றபோது டேவிட் வியா, பெர்னாண்டோ டொரெஸ் மற்றும் சில நேரங்களில் செஸ்க் பாப்ரேகாஸ் ஆகியோர் முன்கள வீரர்களாக கோல்களைப் பெற்றுக் கொடுத்திருந்தார்கள். ஒரு சமநிலைப் பலமுடைய அணியாக ஸ்பெய்ன் விளையாடி இருந்தது. ஆனால் இப்போது முன் கள வீரர்களை பயிற்றுவிப்பாளர் டெல் பொஸ்கே பெரிதாக நம்புவதாக இல்லை. தடுப்பாட்ட வீரர்களையும் மத்திய கள வீரர்களைக் கொண்டுமே நகர்த்துகிறார். இதனால் கோல்கள் பெறும் வாய்ப்புக்கள் மிகக் குறைந்துள்ளன.

போர்த்துக்களுடனும் இதே தான் நடந்தது. பந்து அதிகளவான நேரம் ஸ்பானிய வீரர்களிடமே இருந்தாலும், கோல்களை அடிப்பதற்கான கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டது போர்த்துக்கல் தான். மேலதிக நேரத்திலும் கோல்களை இரு அணிகளும் பெறாததால் பெனால்டி உதைகளுக்குப் போட்டி சென்றது.

நிச்சயமாக கோல்களைப் பெறக் கூடியவர்களை வரிசையாக அனுப்புகின்ற நேரத்தில் ஸ்பெய்னின் சபி அலோன்சோ (காலிறுதியின் ஹீரோ) தனது இலக்கைத் தவறவிட்டார். ஆனால் ஏனைய நால்வரும் இலக்குத் தவறாமல் கோல்களைப் பெற்றுக்கொடுத்தார்கள்.

போர்த்துக்கல் இந்த விடயத்தில் பெரிய கோட்டை விட்டது. அவர்களின் நட்சத்திர கோல் அடிப்பாளரும் தலைவருமான ரொனால்டோ இறுதிவரை பெனால்டி உதைக்கு வரவேயில்லை. அவர் ஐந்தாவது உதைக்காகக் காத்திருந்தாரோ? ஆனால் அவரது கால்கள் பந்தைத் தொட முதல் போர்த்துக்கல் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

இரண்டாவது அரையிறுதியில் ஜேர்மனி இலகுவாக வெற்றிபெறும் என்று அனைவருமே எதிர்பார்த்திருந்தார்கள். ஆனாலும் முக்கியமான போட்டிகளில் இத்தாலியை ஜேர்மனி வென்றதில்லை என்ற வரலாறும் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டது.

பிரிவு ரீதியிலான போட்டிகளிலிருந்து எல்லாவற்றையுமே நூறு சதவீத வெற்றியுடன் முன்னேறிவந்த ஜேர்மனி அணியை இத்தாலி தோற்கடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தாலியின் மரியோ பலோடேல்லி இரு கோல்களை முதல் பாதியிலேயே பெற்றுக்கொள்ள ஜேர்மனி அந்த இரு கோல்களின் தாக்கத்திலிருந்து விடுபட கடுமையாகப் போராடியது.

பந்தை அதிகமான நேரம் தாங்களே வைத்திருந்து. அடிக்கடி கோல்களுக்கு முயற்சி செய்தாலும் இத்தாலிய கோல்காப்பாளர் புபோனுக்கு முன்னால் இந்த முயற்சிகள் பலிக்கவில்லை. போட்டி நிறைவு பெறும் நேரத்தில் பெனால்டி மூலமாக ஒசில் ஜேர்மனிக்கு ஒரு கோலைப் பெற்றார். உலகத்தின் பலம் வாய்ந்த நான்கு அணிகளில் ஒன்றாக படிப்படியாக எழுந்து வந்த ஜேர்மனிக்குப் பேரதிர்ச்சி.

எனினும் அனுபவம், இளமை என்ற கலவையைக் கொண்டிருக்கும் இத்தாலிக்கு அவர்களது தொடர்ச்சியான முயற்சிகளுக்கு வெற்றி.

இறுதிப்போட்டி ஸ்பெய்ன் எதிர் இத்தாலி

இவை இரண்டும் முதலாவது சுற்றில் ஏற்கெனவே பிரிவு Cஇல் மோதிக்கொண்டவை. கடுமையாக மோதி சமநிலையில் அந்தப் போட்டி முடிவடைந்திருந்தது. முதல் சுற்றில் சந்தித்துக்கொண்ட அணிகள் ஐரோப்பியக் கிண்ண இறுதிப்போட்டியில் சந்தித்துக்கொள்ளும் நான்காவது சந்தர்ப்பம் இது.

ஸ்பெய்ன் - இத்தாலி அணிகள் இதுவரை சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் தடவைகள் சந்தித்துள்ளன. இதில் இத்தாலி 10 வெற்றிகளையும், ஸ்பெய்ன் 8 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 12 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன.

முக்கியமான போட்டிகளில் இத்தாலி ஸ்பெய்னிடம் பெனால்டிகள் இல்லாமல் நேரடியாகத் தோற்றதும் கிடையாது. ஆனாலும் இறுதியாக 2008ஆம் ஆண்டு ஐரோப்பியக் கிண்ணக் காலிறுதியில் ஸ்பெய்ன் இத்தாலியை பெனால்டி உதைகளால் 4-2 என்ற கணக்கில் வென்று பின்னர் கிண்ணத்தையும் கைப்பற்றியது.

இந்த ஐரோப்பியக் கிண்ணத்தின் முன்னதாக இவ்விரு அணிகளும் சந்தித்துக்கொண்ட சிநேகபூர்வ போட்டியொன்றில் இத்தாலி 2-1 என ஸ்பெய்னை வென்றிருந்தது.

2008ஆம் ஆண்டு ஐரோப்பியக் கிண்ணக் காலிறுதிப் போட்டியிலிருந்து முக்கியமான போட்டித் தொடர்களில் இதுவரைக்கும் ஸ்பெய்ன் எந்தவொரு கோலையும் எதிரணிகளுக்குக் கொடுத்தது கிடையாது.

இவ்விரு அணிகளும் பிரதான போட்டிகளின் இறுதிப் போட்டி வரலாற்றைப் பார்த்தால்...

ஸ்பெய்ன் தான் விளையாடியுள்ள நான்கு இறுதிப் போட்டிகளில் மூன்றை வென்றுள்ளது. இத்தாலி ஒன்பதில் ஆறு.

இவ்விரு அணிகளும் சந்தித்துக்கொள்ளும் முதலாவது இறுதிப் போட்டி இதுவென்பது மேலும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

இவ்விரு அணிகளும் ஐரோப்பாவின் கால்பந்து செல்லப் பிள்ளைகள். தங்கள் வித்தியாசமான, விறுவிறுப்பான ஆட்டங்கள் மூலமாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கும் அணிகள்...

ஆனால், இத்தாலியின் அண்மைக்கால வேகமான ஆட்டத்தோடு ஸ்பெய்ன் அணியின் தடுப்பாட்டம் தான் மோதப் போகிறது என்ற எண்ணம் வருகிறது. ஸ்பெய்ன் பயிற்றுவிப்பாளர் தனது கடைசி சில போட்டிகளின் வியூகங்களை மாற்றி முன் கள வீரர்களை இறக்கினால் ஒழிய ஸ்பெய்ன் உலகக் கிண்ணம் வென்றபோது விளையாடிய அதிரடி ஆட்டத்தைப் பார்க்க முடியாது இருக்கும்.

ஆனாலும் உலகின் தலைசிறந்த இரு பக்க வீரர்களையும் பார்க்க உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ரசிகர்கள் கூடியிருக்கும் நிலையில், இந்த இறுதிப் போட்டி உலகின் மிகச் சிறந்த இரு கோல் காப்பாளர்களான ஸ்பெய்ன் அணியின் ஈக்கர் கசியாஸ், இத்தாலியின் கியாலுக்கி புபோன் ஆகியோரின் பந்து தடுக்கும் திறன் தான் போட்டியின் போக்கையும் கிண்ணம் வெல்பவர் யார் என்பதையும் தீர்மானிக்கும் விடயமாகவும் அமையவுள்ளது.

ஸ்பெய்ன் அணி தொடர்ச்சியான மூன்றாவது கிண்ணத்தை (2008 ஐரோப்பியக் கிண்ணம், 2010 உலகக் கிண்ணம்) வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்று கருதுவோர் பலர் இருந்தாலும், இத்தாலி இலேசுப்பட்ட அணி அல்ல...

இறுதிப் போட்டியை ஞாயிறு நள்ளிரவு தாண்டி ரசித்த பின்னர், திங்கள் கிண்ணம் வென்றவர்களுக்கு வாழ்த்துக்களுடன் இன்னொரு அலசலில் சந்திக்கலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .