2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

விம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்

A.P.Mathan   / 2012 ஜூலை 10 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்னிஸ் விளையாட்டின் மிகப் பெரிய மகுடமாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் நிறைவுபெற்றன. டென்னிஸின் பாரம்பரியங்களோடு வெள்ளை ஆடைகள், கனவான் தன்மையான நடத்தை, ரசிகர்கள், புற்றரை என்று நூறாண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் விம்பிள்டன் போட்டிகள் டென்னிஸின் உலகக் கிண்ணம் என்றால் அது மிகையில்லை.

இரு வாரங்களாக லண்டனில் நடைபெற்று வந்த இந்த டென்னிஸ் சுற்றுப் போட்டி, ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் மகளிர் ஒற்றையர் பிரிவிலும் முன்னைய இரு சம்பியன்களை மீண்டும் முடி சூடவைத்து அழகு பார்த்துள்ளது.

ஆடவர் பிரிவில் ஏழாவது தடவையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர். இதன் மூலம் அமெரிக்காவின் பீட் சாம்ப்ராசின் ஏழு தடவை வெற்றியை சமப்படுத்தியுள்ளார்.

விம்பிள்டன் சக்கரவர்த்தி ரோஜர் பெடரர்

அத்துடன் இந்த வெற்றியானது பெடரரின் 17ஆவது கிராண்ட் ஸ்லாம் வெற்றியாகும்.

அடுத்த மாதம் 8ஆம் திகதி தனது 31ஆவது வயதைப் பூர்த்தி செய்யும் பெடரர் - தான் இழந்திருந்த தரப்படுத்தலின் முதலாம் இடத்தையும் இந்த வெற்றியுடன் மீண்டும் பெற்றிருப்பது மற்றொரு முக்கிய அம்சம்.

இந்த ஆண்டு விம்பிள்டன் மகுடமானது பெடரர், நடால், ஜோக்கோவிச் ஆகிய மூன்று முன்னணி வீரர்களுக்கும், பிரித்தானிய வீரரான அண்டி மரேக்கும் இடையிலான இழுபறியாக இருக்கும் என்று ஆரம்பத்திலேயே எதிர்வு கூறப்பட்டது.

நடால் அதிர்ச்சியடையும் விதமாக புதுமுக வீரர் ஒருவரால் கால் இறுதிக்கெல்லாம் முன்னதாவே தோற்கடிக்கப்பட்டார்.

இறுதிப் போட்டியில் அதற்குப் பிறகு பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இருவரான தரப்படுத்தலில் முதலாம் இடத்தில் இருந்த நோவாக் ஜோக்கொவிச்சும், விம்பிள்டன் சக்கரவர்த்தி பெடரரும் அரை இறுதியிலேயே சந்தித்துக்கொண்டார்கள்.

இறுதிக்கு முன்னதான இறுதிப் போட்டி என்று வர்ணிக்கப்பட்ட இந்தப் போட்டியில் பெடரர் இலகுவாக வெற்றிபெற்றார்.

அடுத்த அரை இறுதியில் பிரித்தானிய மக்களின் நீண்டகாலக் கனவான விம்பிள்டன் வெற்றியொன்றை நிறைவேற்றக் கூடிய வாய்ப்புடைய ஒரே ஒருவரான மரே, பிரான்சின் ஜோ வில்பிரெட் சோங்காவை வீழ்த்தி இருந்தார்.

76 வருடக் கனவை மீண்டும் நனவாக்க முடியாத அண்டி மறேயும், ஏழாவது தடவை வென்ற பெடரரும்

76 வருடங்களாக பிரித்தானிய மக்களின் கனவு தொடர்ந்தும் கனவாகவே இருக்கட்டும் என்று நேற்றைய பெடரரின் வெற்றி மீண்டும் காட்டியுள்ளது.

முதலாவது செட்டில் அண்டி மறேயிடம் தோற்ற பிறகு, அடுத்த மூன்று செட்களிலும் அபாரமாக ஆடி வெற்றியீட்டினார் பெடரர். இடையே மழையின் குறுக்கீடு அவருக்கு வாய்ப்பாக அமைந்ததோ தெரியாது.

ஆனால் இரண்டாவது செட்டினிடையே மரே களைத்துப்போனார்.

கூடி இருந்த பெருமளவு பிரித்தானிய ரசிகர்கள் மறேயின் தோல்வியினால் கவலையடைந்தாலும், பெடரர் என்ற பெருவீரனின் சாதனை வெற்றியைப் பெருமையோடு பாராட்டி மகிழ்வுற்றார்கள்.

மீண்டும் ஒரு மாத காலத்துக்குள் ஒலிம்பிக் டென்னிஸ் பதக்கத்தைக் குறிவைத்து இதே மைதானத்துக்கு வரப் போகிறார் இந்த ஜாம்பவான்.

இப்போதே வாழ்த்துக்களை சொல்லி வைப்போம்.

மகளிர் ஒற்றையர் ஆட்டம் சனிக்கிழமை இடம் பெற்றது.

காயம், உபாதைகள் என்று கொஞ்சக் காலம் முன்னணி வரிசையிலிருந்து விலகியிருந்த செரீனா வில்லியம்ஸ் தனது ஐந்தாவது விம்பிள்டன் வெற்றியைப் பெற்றார்.

வேகமும் வீராவேசமும் - செரீனா வில்லியம்ஸ்

இறுதிப்போட்டியில் போலந்தின் அக்னியெஸ்கா ரட்வன்ச்காவை வீழ்த்தினார் வில்லியம்ஸ்.

செரீனா அரை இறுதியிலும் மற்றொரு மகளிர் முன்னணி வீராங்கனை விக்டோரியா அசரென்காவை வீழ்த்தியிருந்தார்.

இதற்கு முதல் 2010ஆம் ஆண்டு விம்பிள்டனில் வென்றிருந்தார் செரீனா.

2000ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டுவரையிலான 13 விம்பிள்டன் போட்டிகளில் செரினாவும் அவரது சகோதரியான வீனசும் இதுவரை பத்து தடவை (தலா ஐந்து) விம்பிள்டன் பட்டங்களை வென்றேடுத்துள்ளார்கள்.

மீண்டும் ஜெயிக்க வந்திருக்கும் வில்லியம்ஸ் சகோதரிகள்

இவர்கள் இருவரும் சேர்ந்தே இம்முறை மகளிர் இரட்டையர் பட்டம் வென்றது மேலும் ஒரு சிறப்பு.

வில்லியம்ஸ் சகோதரிகள் மீண்டும் வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பது டென்னிஸ் உலகுக்குப் புரிகிறது.

ஆண்கள் இரட்டையர் பட்டம் இம்முறை பெரிதாக அறியப்படாத ஒரு ஜோடிக்குப் போனது.

பிரித்தானியாவின் ஜோனதன் மரே - டென்மார்க்கின் பிரெட்ரிக் நீல்சன் ஜோடி ஐந்து செட்கள் நீடித்த நீண்ட, விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் சுவீடனின் லீன்ட்ட்சட், ரோமேனியாவின் டேக்கவு ஜோடியை வெற்றி கொண்டது.

நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றொரு இறுதிப் போட்டியான கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் அமெரிக்காவின் மைக்கேல் பிரையன், லீசா ரேமன்ட் ஜோடி இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ரஷ்யாவின் எலேனா வெஸ்நினா ஜோடியை வெற்றிகொண்டது.

கலப்பு இரட்டையர் வெற்றியாளர்கள் - அமெரிக்க ஜோடி

இனி அடுத்து டென்னிஸைப் பொறுத்தவரை அனைவரது கண்ணும் பெடரர் மீதும் வில்லியம்ஸ் சகோதரிகள் மீதும் ஒலிம்பிக் போட்டிகளில் மொய்க்கும்.

ஆனால் நடால், ஜோக்கோவிச் போன்றோரும், நேற்று முன்தினம் தோற்றுக் கண்ணீருடன் விடைபெற்ற மறேயும் கூடத் தம் நாட்டுக்கு ஒரு பதக்கம் பெற ஆடவர் பிரிவிலும்,
அசரென்கா, மரியா ஷரப்போவா, ரட்வன்ச்கா, இவனோவிக் ஆக்கியோரும் பெண்கள் பிரிவிலும் போராட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது உறுதி.

காத்திருப்போம்...

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .