2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

உலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 17 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை முதல் ஆரம்பமாகவுள்ள ICC World Twenty20 என்று அழைக்கப்படுகின்ற Twenty 20 போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தொடர் பற்றிய பகுதி 2 இது.

ஐந்து பயிற்சிப் போட்டிகள் இன்றைய தினம் நடைபெற்றன. ஐந்தில் நான்கு போட்டிகள் தந்த விறுவிறுப்பும் எதிர்பாராத திருப்புமுனை முடிவுகளும் தொடர்ந்து வரவுள்ள பிரதான போட்டிகளுக்கான ஒரு முன்னோட்டம் என்றால் அது மிகையில்லை.

நாளை முதல் இடம்பெறும் முக்கியமான போட்டிகளில் ஒவ்வொரு அணிக்கும் சிலவேளை அவர்களது பங்குபற்றல் இரண்டு போட்டிகளோடு நிறைவுபெற்றுவிடும். முதல் சுற்றில் ஒவ்வொரு அணிக்கும் தலா இரண்டு போட்டிகள் தான்.

இரண்டாம் சுற்று பற்றிய குழப்பங்களை அடுத்த இரண்டு பிரிவு அணிகளைப் பார்த்த பிறகு பார்க்கலாம்.

இன்னொரு முக்கியமான விடயம் பிரிவு A மற்றும் பிரிவு B ஆகிய இரண்டிலும் விளையாடும் அணிகள் தங்கள் அனைத்து முதற்சுற்று போட்டிகளையும் கொழும்பிலேயே விளையாடப் போகின்றன. அத்துடன் இந்தப் பிரிவுகளில் விளையாடும் இந்தியாவும் (A2), அவுஸ்திரேலியாவும் (B1) அடுத்த சுற்றுக்குத் தெரிவானால் அவை தங்கள் எல்லாப் போட்டிகளையும் கொழும்பிலேயே விளையாடும்.

பிரிவு C
இலங்கை C1
தென் ஆபிரிக்கா C2
சிம்பாப்வே


சொந்த மண்ணில் விளையாடுவதால் இலங்கைக்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று சொல்லப்பட்டாலும் இலங்கையும் இந்தப் பிரிவுப் போட்டிகள் இடம்பெறும் ஹம்பாந்தோட்டை மைதானத்தில் அதிகளவில் போட்டிகளை விளையாடிப் பரிச்சயம் பெற்றதில்லை என்பதனால், காலநிலையைத் தவிர பெரிய அனுகூலங்கள் என்று இருக்கப்போவதில்லை. அத்துடன் பெரிய ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இதுவரை மூன்று உலகக் கிண்ணங்கள் நடந்தும் இலங்கை அணியும் தென் ஆபிரிக்காவும் இதுவரை எந்தவொரு சர்வதேச Twenty 20 போட்டியிலும் ஒன்றை ஒன்று எதிர்கொண்டதில்லை என்பது தான்.

சிம்பாப்வே முதலாவது உலகக் கிண்ணத்திலே முதலாவது போட்டியிலேயே அவுஸ்திரேலியாவை வென்று அதிர்ச்சி கொடுத்த அணி. சுழல் பந்துவீச்சாளர்களையும் அணியில் நிறைத்தே வைத்திருப்பதால் இம்முறையும் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த எண்ணியிருக்கும்.

இலங்கை

இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் அத்தனை போட்டிகளையும் வென்று, இறுதிப் போட்டிக்கு உற்சாகமாக சென்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற காயம் இன்னும் இருப்பதால், இம்முறை சொந்த மண்ணில் சாதகமான தன்மைகளைப் பயன்படுத்தி முதலாவது கிண்ணத்துக்குக் குறிவைக்கக் காத்துள்ள ஓர் அணி. அனுபவம் வாய்ந்த துடுப்பாட்டமும், முன்னணி T20 பந்துவீச்சாளர்களான மாலிங்கவும் மென்டிசும் மட்டுமன்றி அண்மைக்காலமாகத் தொடர்ந்து போட்டிகளைத் தனியாக வென்று கொடுக்க முடியும் என்று நிரூபித்துவரும் சகலதுறை வீரர்களான அஞ்சேலோ மத்தியூஸ், திசர பெரேரா ஆகியோரும் சேர்ந்த அணியைப் பெயர்ப்பட்டியலாகப் பார்க்கையில் மிகச் சிறந்த அணி தான்.

இன்னும் மேலதிகமாக நல்ல களத்தடுப்பும் குலசேகர, ஜீவன் மென்டிஸ் என்று சகலதுறை வீரர்களாக அவதாரம் எடுக்ககூடிய ஆற்றல் மிகுந்தவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் இதை வெற்றியாக மாற்றிக் கொள்வதில் இலங்கை இன்னும் சிறப்பாக இல்லை என்பது தான் இலங்கையின் பிரச்சினை. சரியான ஒரு சமபல அணி தெரிவு செய்வதில் தான் விளைவும் முடிவும் இருக்கிறது.

கவனிக்கக் கூடிய இளம் வீரர்கள் - சந்திமால், திரிமன்னே போன்றவர்களையும் இந்தப் பட்டியலில் சொல்லலாம். ஆனால் நான் இங்கே குறிப்பிடப்போகின்ற இருவரும் யாருமே எதிர்பாராத தெரிவுகளான அகில தனஞ்செய மற்றும் டில்ஷான் முனவீர ஆகியோர் வாய்ப்புக்கிடைத்தால் கலக்கலாம்.

தென் ஆபிரிக்கா

இன்னொரு சக்தி வாய்ந்த அணி. ஆனால் எதிர்பார்க்கின்ற பொழுதுகளில் சறுக்கி விடுவதால் Chokers பட்டத்தை சுமந்து திரியும் அணி. ஆனால் புதிய தலைவர் டீ வில்லியர்ஸ் தாங்கள் புதிய தலைமுறை அணி என்று சொல்கிறார். அவரும் அம்லாவும் டுமினியும் நம்பகமானவர்கள்.

அத்துடன் அடித்து நொருக்கக் கூடிய அதிரடி வீரர்களாக டூ ப்லெசிஸ், கடந்த வருடத்தின் சிறந்த T20 வீரர் என்ற விருதை வென்ற புதிய புயல் லீவி, அதிரடி சகலதுறை வீரர் அல்பி மோர்க்கல் என்று துடுப்பாட்டம் களை கட்டுகிறது.

பந்துவீச்சிலும் ஸ்டெய்ன், மோர்னி மோர்க்கல், சொத்சொபே என்று அச்சுறுத்தக் கூடியது தான். கூடுதல் பலமாக துல்லியமான களத்தடுப்பும் உள்ளது.

கவனிக்கக் கூடிய இளம் வீரர்கள் - ரிச்சர்ட் லீவி.

சிம்பாப்வே

தொடர்ச்சியாக வெற்றி பெறாவிட்டாலும் துடிப்பைக் காட்டும் ஒரு சகலதுறை அணி. தலைவர் பிரெண்டன் டெய்லர் தான் உயிர் நாடி. அவரது துடுப்பும் மசகட்சாவின் துடுப்பும் பேசினால் சிம்பாப்வேக்கு பெரியதொரு வாய்ப்பு. இந்த அணியின் சுழல்பந்து வீச்சும் மிகப்பெரிய ஒரு பலம்.

ரே ப்ரைஸ், உத்செயா, கிரீமர், வொல்லர் என்று விதவிதமாக சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

கவனிக்கக் கூடிய இளம் வீரர்கள் - பிரையன் விட்டோரி மற்றும் கைல் ஜார்விஸ்.

பிரிவு D
பாகிஸ்தான் D1
நியூசிலாந்து D2
பங்களாதேஷ்


இலங்கையில் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமான மைதானமான பல்லேகலையில் மோதிக்கொள்ளப்போகிற பிரிவு இது. இந்த மைதானத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்த இரு அணிகளே (பாகிஸ்தான் & நியூசிலாந்து 2011 உலகக் கிண்ணம்) மீண்டும் மோதப்போகின்றன. இரண்டு அணிகளிலும் உள்ள ஸ்விங், வேகப் பந்துவீச்சாளர்கள் சாதகத் தன்மையைப் பயன்படுத்திக்கொள்ள விளைவார்கள்.

இதிலே பாகிஸ்தான் எப்படியும் அடுத்த சுற்றுக்குத் தெரிவானால் கொழும்பிலேயே தனது போட்டிகளையும், நியூசிலாந்து பல்லேகலையிலும் தொடர்ந்து விளையாடவுள்ளன. ஆனால் இந்த இரு அணிகளுக்குமே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கக் கூடிய அணியாக பங்களாதேஷ் அணி சிலவேளைகளில் விளையாடக்கூடியது.

இன்று அயர்லாந்து அணியிடம் தோற்றது கொஞ்சம் இந்த அணி மீது சந்தேகம் தந்தாலும், ஆசியக் கிண்ணத்தில் இலங்கை, இந்திய அணிகளை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானையும் தடுமாற வைத்தது போல விளையாடினால் அச்சுறுத்தக் கூடிய அணி தான்.

பாகிஸ்தான்

கிரிக்கெட்டின் ஆச்சரிய அணி இது. திறமைகளுக்குக் குறைவே இல்லாத அணி. ஆனால் ஒற்றுமையும் இல்லை; தேவையான நேரங்களில் துடிப்பைக் காட்டுவதும் இல்லை. அப்படி ஒன்று பட்டு உயிர்த்தெழும்போது உலக சம்பியனாகிவிடும்.

இரண்டாவது T20 உலகக்கிண்ணம் வென்ற அணியின் பல வீரர்கள் இம்முறையும் மீண்டும் வெல்லும் எண்ணத்துடன் வருகிறார்கள்.

உலகளாவிய ரீதியில் தொழில்சார் T20 போட்டிகளில் விளையாடும் நட்சத்திரங்கள் அப்ரிடி, அப்துல் ரசாக், அக்மல் சகோதரர்கள், சோயிப் மாலிக், சொஹய்ல் தன்வீர், இம்ரான் நசீர், யசீர் அரபாத் என்று அனுபவம் வாய்ந்த ஓர் அணி.

தலைவர் ஹபீஸ் தொடக்கம் பல சகலதுறை வீரர்களும் உமர் குல் முதலிய துல்லியமான வேகப் பந்துவீச்சாளர்களும் உலகின் மிகச் சிறந்த சுழல்பந்து வீச்சாளராக இப்போது கொண்டாடப்படும் (ICC ஏற்காவிட்டாலும் கூட) சயீத் அஜ்மலும் சேர்ந்துகொள்ள உலகின் மற்றொரு மிகச் சிறந்த T20 அணி தயார்.

பாகிஸ்தானின் மிகப்பெரிய குறைபாடான மோசமான களத்தடுப்பு கடைசியாக இடம்பெற்ற சில போட்டிகளில் கொஞ்சம் (கொஞ்சமே கொஞ்சம் தான்) மெருகேறியிருந்ததை அவதானித்திருக்கலாம்.

கவனிக்கக் கூடிய இளம் வீரர்கள் - அசாத் ஷபீக் (வாய்ப்புக் கிடைத்தால்) மற்றும் நாசிர் ஜம்ஷெட்.

நியூசிலாந்து

எல்லாத் திறமைகளும் இருந்தும் குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கேற்ற சகலதுறை வீரர்களும், அடித்தாடக்கூடிய வீரர்களும் இருந்தும் ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேற முடியாமல் தடுமாறும் அணி.

இம்முறையும் இந்த அணிமேல் நம்பிக்கை வைப்போர் பெரிதாகக் கிடையாது. பிரெண்டன் மக்கலம், ரொஸ் டெய்லர், ஜேகப் ஓராம் என்ற மூவர் மீதே பெரிய எதிர்பார்ப்பு.

கூடவே டேனியல் வெட்டோரி, ஜேம்ஸ் பிராங்க்ளின், டிம் சௌதி போன்ற அனுபவஸ்தர்களும் தங்களை வெளிப்படுத்தி இந்த அணியைக் கரை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு இருக்கலாம்.

கவனிக்கக் கூடிய இளம் வீரர்கள் - டக் ப்றேஸ் வேல் மற்றும் ரொப் நிக்கோல்.

பங்களாதேஷ்

ஆசியக் கிண்ணத்தில் இறுதிப் போட்டியில் விளையாடியது நம்பிக்கையை உயர்த்தினாலும், இன்னும் சகலதுறை வீரர் ஷகிப் ஹசனிலேயே அதிகமாகத் தங்கி இருக்கவேண்டிய நிலை உள்ளது. எனினும் தமிம் இக்பாலின் அதிரடியும், அப்துர் ரசாக்கின் சுழலும், தலைவர் முஷ்பிக்குர் ரஹீமின் நம்பகமான துடுப்பாட்டமும் மேலும் சில வளர்ந்து வருகின்ற வீரர்களின் ஒத்துழைப்பும் சேர்ந்தால் பங்களாதேஷ் இரு பெரிய அணிகளில் ஒன்றை அல்லது இரண்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.

மறக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர்கள் அஷ்ரபுல்லும் மோர்தசாவும் தங்கள் திறமைகளை நிரூபிக்க இதைவிட வேறு பொருத்தமான இடம் கிடையாது.

கவனிக்கக் கூடிய இளம் வீரர்கள் - நசீர் ஹோசெய்ன் மற்றும் ஷபியுள் இஸ்லாம்.

Super Eight - இரண்டாம் சுற்று
இத் தொடர் ஆரம்பிக்க முதலே கடந்த உலகக் கிண்ணத்தில் அணிகள் பெற்ற இடங்களின் அடிப்படையில் அணிகளின் நிலைகள் தீர்மானிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 1, 2 ஸ்தானங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே முதல் சுற்றில் பெரும் வெற்றிபெற்ற அணிகள் இரண்டாம் சுற்றில் விளையாடப் போகும் ஏலவே தீர்மானிக்கப்பட்ட பிரிவுகளைப் பாதிக்காது.

ஆனால் ஸ்தானங்கள் வழங்கப்பட்ட அணிகளில் ஒன்றுக்குப் பதில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, சிம்பாப்வே, பங்களாதேஷ் ஆகிய அணிகளில் ஏதாவது தத்தம் பிரிவுகளில் இருந்து தெரிவானால் அவை எந்த அணிக்குப் பதிலாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவாகின்றனவோ அதன் இடத்தைப் பெறும்.

உதாரணமாக பிரிவு Aயில் இந்தியாவுக்குப் பதில் ஆப்கானிஸ்தான் அடுத்த சுற்றில் நுழைந்தால் ஆப்கானிஸ்தான் A2 என்ற ஸ்தானத்தைப் பெறும். அதேபோல இங்கிலாந்து வெளியேற்றப்பட்டு ஆப்கானிஸ்தான் Super Eight இற்குத் தெரிவானால் ஆப்கானிஸ்தான் A1 நிலையைப் பெறும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் கீழ்வரும் வகையில் மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.

பிரிவு 1                             பிரிவு 2
    A1                                         A2
    D2                                        B1
    C1                                        C2
    D2                                        D1

முதல் சுற்றில் பெறப்பட்ட எந்தவொரு புள்ளிகளும் இரண்டாம் சுற்றுக்குக் கொண்டு செல்லப்படா. அதன் பின் ஒவ்வொரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடும். இரு பிரிவுகளிலும் அதிக புள்ளிகளைப் பெறும் இரு அணிகள் அரையிறுதிகளுக்குத் தெரிவாகும்.

இதிலே இன்னொரு முக்கிய விடயம் பிரிவு 1இலே விளையாடப் போகின்ற அணிகளின் அத்தனை போட்டிகளும் பல்லேகலையிலும் பிரிவு 2 இன் போட்டிகள் அனைத்தும் கொழும்பிலும் இடம்பெறவுள்ளன.

மகளிர் அணிகளின் அத்தனை முதல் சுற்றுப் போட்டிகளும் காலி சர்வதேச மைதானத்தில் விளையாடப்பட்டு பின்னர் அரையிறுதிப் போட்டிகள் ஆண்கள் போட்டிகள் இடம்பெறும் அதே நாளில் ஆண்களின் அரையிறுதிப் போட்டிகள் இடம்பெற முதல் விளையாடப்படவுள்ளன.

பெண்கள் கிரிக்கெட்டையும் ரசிகரிடம் கொண்டு சேர்க்க சர்வதேச கிரிக்கெட் பேரவை செய்துள்ள இந்த ஏற்பாடு உண்மையில் வரவேற்கத்தக்கது.

இறுதிப் போட்டியும் அவ்வாறே... ஒரே நாளில் முதலில் மகளிர் இறுதிப் போட்டியும் பின்னர் ஆடவருக்கான இறுதிப் போட்டியும். ரசிகருக்குக் கொண்டாட்டம் தான்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் போல, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் போல இல்லாமல் மொத்தமே நான்கு மணி நேரத்தில் நாற்பது ஓவர்களில் விறுவிறு என்று நடந்தது முடிந்துவிடும் இவ்வகை T20 போட்டிகள் அண்மைக்காலமாகப் பெற்று வரும் அபரிமித வரவேற்பு இம்முறை உலகக் கிண்ணத்தோடு மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

என்ன தான் கணிப்புக்கள், அணிகளின் வீரர்களின் பலங்கள், சாதனைகளை நாம் பட்டியலிட்டாலும் ஓரிரு பந்துகளில் சடாரென முடிவுகள் மாறி, திருப்பங்கள் நிகழக்கூடிய இவ்வகையான போட்டிகள் எல்லோருடைய கணிப்புக்களையும் பொய்யாக்கி எதிர்பாராத வெற்றியாளர்களையும் தந்துவிடலாம்...

காத்திருப்போம், யாருக்கு நான்காவது வெற்றிக் கிண்ணம் கிடைக்கிறதென அறிந்து கொள்ள...

இலங்கைக்கு வந்துள்ள முதலாவது முழுமையான உலகக் கிண்ணத்தை (இதற்கு முதல் மினி உலகக் கிண்ணம் 2002இல் இலங்கையிலே இடம்பெற்றாலும்) முடியுமானவரை முழுமையாக ரசிப்போம்...

அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் முழுமையாக விற்றுத் தீர்ந்திருக்கின்றன என்பது இலங்கையிலே கிரிக்கெட் காய்ச்சல் எப்படிப் பரவி இருக்கிறது என்பதற்கான ஓர் உதாரணம்.

வாருங்கள் சேர்ந்து ரசிப்போம்... போட்டிகளின் ஒவ்வொரு கட்டங்களின் முடிவிலும் தமிழ்மிரரின் இப்பக்கத்துக்கு வாருங்கள்... உங்களுக்காக மேலும் விபரமான, சுவையான தொகுப்புக்களோடு நானும் காத்திருக்கிறேன்.


You May Also Like

  Comments - 0

  • prakalathan Tuesday, 18 September 2012 07:06 AM

    we r waiting for more.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .