2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

உலககிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் (19 வயதிற்குட்பட்டோர்): ஒரு மீள் பார்வை

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 31 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

19 வயதிற்குட்பட்டவருக்கான உலகக் கிண்ண போட்டி தொடரின் முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. அதன் அடிப்படையில் 8 அணிகள் காலிறுதிச் சுற்று தொடருக்கு தெரிவாகியுள்ளன. 16 அணிகள் இந்த தொடரில் களமிறங்கியிருந்தன. நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதி தொடருக்கு தெரிவாகின. மற்றைய இரு அணிகளும் வெளியேற்றப்பட்டன.

குழு A
குழு A இல் அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்து, அயர்லாந்து, நேபால் அணிகளை வெற்றி கொண்டு 6 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியிடம் மாத்திரம் தோல்வியை சந்தித்து 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. அயர்லாந்து அணி நேபால் அணியை மாத்திரம் வெற்றி கொண்டு மூன்றமிடத்தைப் பிடித்தது. நேபால் அணிக்கு ஒரு வெற்றி தானும் கிடைக்கவில்லை.

குழு B
குழு B இல் பாகிஸ்தான் அணிக்கு இலகுவான வெற்றிகள் கிடைக்க, இலகுவாக மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தெரிவானது. நியூசிலாந்து அணி - ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து அணிகளை வெற்றி கொண்டு நான்கு புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றது. ஆப்கானிஸ்தான் அணிக்கு ஸ்கொட்லாந்து அணியிடம் கிடைத்த வெற்றி மூன்றாமிடத்தை கொடுத்தது. ஸ்கொட்லாந்து அணி மூன்றுபோட்டிகளிலும் தோல்வியை சந்தித்து இறுதி இடத்தை பெற்றுக்கொண்டது. 

குழு C
குழு C இல் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று போட்டிகளிலும் இலகுவாக வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் காலிறுதிப் போட்டிக்கு தெரிவாக, மேற்கிந்திய தீவுகளிடம் தோல்வியடைந்த இந்திய அணி மற்றைய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு நான்கு புள்ளிகளுடன் தெரிவானது. இந்த இரண்டு அணிகளுக்கும் கிடைத்த மற்றைய அணிகளும் இலகுவாக போய்விட அந்த இரண்டு அணிகளும் வெளியேற்றப்பட்டன. இதில் சிம்பாவே அணிக்கு ஒரு வெற்றி கிடைத்தது. சகல அணிகளிடமும் தோல்விகளை சந்தித்த அணியாக பப்புவா நியூகினியா அணி மாறிப்போனது. 
 
குழு D
இந்தக் குழு ஓரளவு இறுக்கமான குழுவாக அமைந்துள்ளது. இலங்கை அணி இந்தக் குழுவில் இருந்து வெளியேற்றபட்டுள்ளது. தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் அணிகளே இந்தக் குழுவில் இருந்து தெரிவான அணிகள் ஆகும். தென் ஆபிரிக்கா அணி மூன்று போட்டிகளும் வெற்றி பெற்றுக் கொண்டு ஆறு புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தனதாக்கிக் கொண்டது. பங்களாதேஷ் அணி இலங்கை, நபிபியா அணிகளை வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்று காலிறுதிப் போட்டிக்கு தெரிவானது. இலங்கை அணிக்கு நபிபியா அணியுடன் மாத்திரமே வெற்றி கிடைத்தது. 2 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தைப் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இலங்கை அணி இழந்தது. நபிபியா அணிக்கு மூன்று போட்டிகளிலும் தோல்வி.

காலிறுதிப் போட்டிகள்
முதல் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் குழு A இல் முதலாம் இடத்தைப் பிடித்த அவுஸ்திரேலிய அணி குழு D இல் இரண்டாமிடத்தைப் பிடித்த பங்களாதேஷ் அணியை முதல் காலிறுதிப் போட்டியில் சந்தித்தது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 43 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்த அவுஸ்திரேலிய அணி 45.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. இரண்டாவது காலிறுதிப் போட்டி குழு C இல் முதலிடத்தை தனதாக்கிக் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், குழு B இல் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்ட நியூசிலாந்து அணிகளுகிமிடையில் இருபதாம் திகதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்த நியூசிலாந்து அணி இறுதிப்பந்தில் வெற்றியை  தனதாக்கியது. மூன்றாவது காலிறுதிப் போட்டி குழு C இல் இரண்டாமிடத்தைப் பிடித்த இந்திய அணிக்கும், குழு B இல் முதலாமிடத்தைப் பிடித்த பாகிஸ்தான் அணிக்குமிடையில் நடைபெற்றது. மீண்டும் ஓர் இந்திய - பாகிஸ்தான் யுத்தம் கிரிக்கெட்டில் நடைபெற்றது. இந்த மோதலில் இந்திய அணி மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 45.1 ஓவர்களில் 136 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. பதிலளித்த இந்திய 48 ஓவர்களில் 9 விக்கட்களை இழந்து வெற்றி பெற்றது. நான்காம் காலிறுதிப் போட்டி குழு D இல் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட தென் ஆபிரிக்காவிற்கும், குழு A இல் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்ட இங்கிலாந்து அணிக்கும் இடையில் 19ஆம் திகதி நடைபெற்றது. தென் ஆபிரிக்க அணி 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய தென் ஆபிரிக்க அணி 50 ஓவர்களில் 244 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலளித்த இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்தப் போட்டிகளில் அடிப்படையில் அவுஸ்திரேலிய, தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையில் ஓர் அரை இறுதிப் போட்டியும், இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இன்னுமொரு அரை இறுதிப் போட்டியும் நடைபெற்றன.

அரை இறுதிப் போட்டிகள்
தென் ஆபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 50 ஓவர்களில் 08 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. மரே கொட்சி 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். மார்க் ஸ்டெகெட்டி 3 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். பதிலளித்த அவுஸ்திரேலிய அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. இதில் 66 ஓட்டங்களை கமேரோன் பன்க்ரோப்ட் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் லிசார்ட் வில்லியம்ஸ் 3 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார். 

இரண்டாவது அரை இறுதிப் போட்டி இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இதில் இந்திய அணி 9 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பிரசாந்த் சோப்ரா 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் பென் ஹோர்ன் 3 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது. சந்தீப் சிங்க், ஹர்மீத் சிங்க், ரவிகாந்த் சிங்க் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர்.


இறுதிப் போட்டி
முதலில் அவுஸ்திரேலிய அணி துடுபெடுத்தாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அணித்தலைவர் வில்லியம் போஸிஸ்டோ ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். அஸ்டன் டேர்னர் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சந்தீப் சிங்க் 4 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். பதிலளித்தாடிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றியை தனதாக்கியது. பெற கஷ்டமான இலக்கு. 100 ஓட்டங்களிற்குள் 4 விக்கெட்களை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெறுவது கஷ்டம் என எதிர்பார்க்கப்பட்ட போதும் ஐந்தாவது விக்கெட் இணைப்பாட்டம் மிக சிறப்பாக அமைந்தது. முறியடிக்கபடாத 130 ஓட்டங்களை அணித்தலைவரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான உன்மக்ட் சந்த் மற்றும் விக்கெட்காப்பாளர் சமித் பட்டேல் ஆகியோரும் இணைந்து பெற்றுக் கொடுத்தனர். இதில் உன்மக்ட் சந்த் 111 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சமித் பட்டேல் 64 ஓட்டங்கள். 

இந்திய அணி ஆறு விக்கெட்களினால் வெற்றி பெற்று சம்பியன் ஆனது. மூன்றாவது தடவையாக இந்திய அணி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. அவுஸ்திரேலியா அணி ஏற்கனவே மூன்று தடவைகள் கைப்பற்றி இருந்ததே ஓர் அணி, கூடுதலான உலககிண்ணத்தை கைப்பற்றியது என்ற சாதனை இருந்தது. இந்திய அணி அதை சமப்படுத்தியது. இரு அணிகளும் தலா நான்கு தடவைகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் நாயகனாக உன்மக்ட் சந்த் தெரிவான அதேவேளை, போட்டி தொடர் நாயகனாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் வில்லியம் போஸிஸ்டோ தெரிவானார். இவர் விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே ஆட்டமிழந்து இருந்தார். 276 ஓட்டங்களை துடுப்பெடுத்தாட்டத்தில் பெற்றுக் கொண்டார்.

தடுமாறி வரும் அவுஸ்திரேலிய அணிக்கு வீரர்களை உள்வாங்க நல்ல வாய்ப்பாக இந்த உலகக்கிண்ணம் அமையும். எதிர்கால அவுஸ்திரலிய அணி கேள்வியான நிலையில் மாற்றங்கள் வர வாய்ப்புக்கள் உள்ளன. இந்திய அணித் தலைவர் உன்மக்ட் சந்த் ஐபிஎல் போட்டிகளில் ஏதிர்பார்க்கப்பட்ட வீரர். பெரியளவில் சாதிக்கவில்லை. ஆனால் இறுதி போட்டி துடுப்பாட்டம் அவரை நட்சத்திரம் ஆக்கிவிட்டது. டெல்லி டெயா டெவில்ஸ் அணியில் உள்ள இவர் அதிகம் கவனிக்கப்படுவார். எதிர்கால ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்று சொல்லலாம். காரணாம் நிதானமாகவும், தேவையான நேரங்களில் அடித்தாடும் பங்கும், மறுபுற வீரர்களை வழி நடத்தும் விதம் சச்சின் டெண்டுல்கரை பார்ப்பது போல இருந்தது. 

இந்திய அணிக்குள் யுவர்ஜ் சிங்க், விராத் கோலி ஆகியோர் வந்த வழியில் உன்மக்ட் சந்த் வருவாரா? சேவாக் அணியால் வெளியேற அந்த இடம் அவருக்கு கிடைக்குமா? பொறுத்து இருந்து பார்க்கலாம்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் லஹிறு மதுசங்க சிறப்பாக பந்து வீசியுள்ளார். போட்டிகளில் 15 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். ஒரு போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். ஆனால் இவர் இலங்கை அணியிலும் பார்க்க தரம் குறைந்த அணிகளுடனேயே அதிகம் விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளர் அனாமல் கக் இந்த தொடரில் கூடுதலான ஓட்டங்களை குவித்துள்ளார். 6 போட்டிகளில் 365 ஓட்டங்கள். இலங்கை, பாகிஸ்தான் அணிகளுடன் சதங்களை பெற்றுக்கொண்டார். மூன்றாம் இடத்தில் துடுப்பாடுகிறார். இவர் கூட பங்களாதேஷ் அணிக்குள் வர வாய்ப்புக்கள் உள்ளன. ஆனாலும் துடுப்பாட்ட வீரராக அணிக்குள் வரலாம். ஏற்கனவே அணித்தலைவர் விக்கெட் காப்பாளர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .